Sunday, December 27, 2009

கவனிக்கப்படாமலே போன சில தமிழ்(ப்)படங்கள்

சில நல்ல தமிழ்ப்படங்கள் கவனிக்கப்படாமலே போய் விடுகிறது.ஆங்கிலப் படங்களை சுட்டு இது புது மாதிரியான முயற்சி என்று சொல்பவர்களுக்கு மத்தியில் இது மாதிரி படங்கள் எடுப்பதே பெரும் முயற்சி தான். தனி மனிதனாக சண்டையில் இருவரை கூட சமாளிக்க முடியாத நம்மால் நூறு பேரை பறக்க விடும் நடிகர்களுக்கு மத்தியில் இது மாதிரி படங்கள் வருவதே பெரும் முயற்சி தான். கரகாட்டகாரன் மாதிரியான படங்கள் இன்றும் பார்க்க நன்றாக இருந்தாலும் கிராமத்தில் கரகாட்டக்கம் ஆடும் பெண்ணின் ஜாக்கெட்டில் குத்த போராடும் கைகளின் எண்ணிக்கைகள் தான் உண்மையான நிதர்சனம்.அப்படி எல்லாம் உண்மைகளை கொஞ்சம் கூட காட்டாத படங்களின் மத்தியில் இது மாதிரி உண்மையை சொல்லும் படங்களின் வெற்றி என்பது பெரும் முயற்சி தான்.அப்படி வந்த படங்கள் சில.

முகம் - நாசர்,ரோஜா,தலைவாசல் விஜய்,விவேக்,மௌனிகா நடித்த படம்.வெளியான உடனே இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன்னில் ஒளிப்பரப்பான படம். அவலட்சணத்தின் மொத்த உருவமாக இருக்கும் நாசர் பார்ப்பவர்களிடம் அசிங்கப்படுகிறார்.சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு அசிங்கப்படுத்தப் படுகிறார். முகமூடி கிடைத்து நெருப்பின் அருகில் வைத்து பார்க்கும் போது அது முகத்தில் ஒட்டிக் கொள்ள அவர் அழகாக மாறுகிறார்.விளைவு ஒரு நாயகன் உதயமாகிறான்.ரோஜா உண்ணாவிரதம் இருந்து கைப்பிடிக்கிறார் அழகிய முகத்திற்காக.ரசிகர்கள் கையில் நாசரின் முகத்தை பச்சை குத்திக் கொள்கிறார்கள்.கணவரின் கையில் இருக்கும் பச்சையை பார்த்து விட்டு மௌனிகா தடுமாறுகிறார்.உண்மையான முகத்திற்கு ஏங்கும் நாசர் முகமூடியை கழற்ற,பழைய முகத்தோடு பரவசப்பட,ரோஜா கதவை தட்ட,அவசரத்தில் முகமூடி ஜன்னல் வழியாக வெளியே விழுகிறது.ரோஜா உண்மையான முகத்தை பார்த்து அலற,வீட்டில் இருப்பர்கள் அடிக்க வெளியே வந்து விழுகிறார் நாசர்.திரும்ப முகமூடியை மாட்டிக் கொள்ள ரசிகர்களின் ஆரவாரத்தோடு படம் நிறைவடைகிறது.

படத்தின் கல்லா கட்டவில்லை.காரணம் இந்த படத்தில் குத்தாட்டம் இல்லையோ.

தயா - ஈ படத்தின் முன்னோடி.யாருக்குகாவும் சமரசம் செய்யாத நாயகன்.பிராமணரின் வீட்டு பூஜையறையில் கன்றுக்குட்டியை வெட்டி அறிமுகம் ஆகும் நாயகனாக பிரகாஷ்ராஜ். திருத்த பார்த்து முடியாமல் ஏமாந்து போகும் நாயகியாய் மீனா.பள்ளி நடத்தும் லட்சுமி.சின்னப் பெண்ணைக் கெடுத்து விட்டு சிறைக்கு சென்று விட்டு திரும்பிய அவரின் கணவராக ரகுவரன்.லட்சுமியை கொல்ல பிரகாஷ்ராஜை அனுப்பும் ரகுவரன் அதற்காக நல்லவனாக நடிக்க சொல்கிறார்.நல்லவனாக நடிக்கும் பிரகாஷ்ராஜை நம்பும் லட்சுமி, அதை நம்பாத மீனா.லட்சுமியின் நம்பிக்கையை பெற்று அவருக்கு பின் பள்ளியை நடத்த போகும் வாரிசாக ஆகும் நேரத்தில் லட்சுமிக்கு விஷம் வைக்கிறார்.மருத்துவமனையில் உண்மை தெரிந்து எல்லோரும் அடித்து துரத்த சுடுகாட்டில் சுயபரிதோதனை செய்து கொள்ளும் பிரகாஷ்ராஜை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் லட்சுமி என்று இறுதி காட்சியில் சொதப்பிய படம்.பிரகாஷ்ராஜ் தயாரித்த முதல் நேரடி தமிழ்ப்படம்.(உடனே தப்பு என்று யாரும் சொல்ல வேண்டாம்.அந்தப்புரம் தெலுங்கு படம்.தமிழில் பார்த்திபன்,மன்சூர் அலிகான் காட்சிகள் மட்டும் மீண்டும் படமாக்கப்பட்டது).இந்த படத்தை ஜெயா டிவியில் பார்க்கலாம்.

நாம் - பிரகாஷ்ராஜின் அடுத்த தயாரிப்பு.பிரகாஷ்ராஜ்,இளவரசு,கலாபவன் மணி,பிரகாஷ்ராஜின் மைத்துனர் ஜெயவர்மா நடித்த படம்.பிரகாஷ்ராஜ் தீவிரவாதி.அவரை பிடிக்க அலையும் கலாபவன் மணி. வாழ்க்கையில் முன்னேற முடியாமல் அதன் போக்கிலும் போகவும் பணம் தேவை படும் நாலு நிஜமான யூத் + ஒரு பெண்.போலீஸ் வேலையில் சேர லஞ்சக் காசு இல்லாமல் தவிக்கும் முன்னாள் காவலரின் மகன்.அவர்களின் தேவை ஐம்பது லட்சம்.அதற்காக பிரகாஷ்ராஜை கடத்துகிறார்கள்.எதற்கெடுத்தாலும் பயப்படும் ஒரு பையன்.(தமிழில் மிகப் பெரிய காமெடியனாக வந்திருக்க வேண்டியவர் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை.) கடத்தி கடத்தல் கும்பலிடம் பணம் கேட்கிறார்கள்.வெடிகுண்டோடு பணமும் தருகிறார்கள். மனம் மாறி ஒவ்வொருவராக இறங்கி கொள்ள வண்டி வெடிக்கிறது.கலாபவன் மணி பிரகாஷ்ராஜை கைது செய்கிறார்.வீட்டுக்கு சோர்வோடு வருபவர்கள் வீட்டில் ஒரு மூட்டையைப் பார்த்து பயந்து பதுங்குகிறார்கள்.பயம் தெளிந்து எடுத்து பார்த்தால் ஐம்பது லட்சம் பரிசு பணம்.இந்த படத்தை ராஜ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

அன்புடன் - அருண்குமார் என்ற அருண் விஜய்,ரம்பா,கறுப்பாக இருக்கும் நிஜமான நாயகி.நாயகனை காதலிப்பதாக கடிதம் எழுதும் நாயகி அதை நம்பி அவளைத் தேடி அலையும் நாயகன். பேருந்தில் இருக்கும் எல்லோரிடமும் கேட்டு விட்டு ஒரு பெண்ணை மட்டும் கேட்காமல் நிராகரிக்கிறார்கள். நாயகியின் சர்வ லட்சணங்களையும் உடைத்த படம்.நாயகன் அசிங்கமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளும் தமிழ் சினிமா பார்க்கும் தமிழ் சமூகம் இந்த படத்தை நிராகரித்ததில் எந்த வியப்பும் இல்லை.கடைசி வரை நாயகியின் முகம் பார்க்காத நாயகன் அவள் முகம் பார்க்க சுடுகாட்டுக்கு ஓடுகிறான்.அங்கு அவள் எரிவதை பார்க்கிறான்.இதை அப்படியே அம்மா என்று மாற்றினால் தனுஷ் நடித்த கன்னட ரீமேக் கிடைக்கும்.இதையும் ராஜ் டிவியில் பார்க்கலாம்.

ஆறு தான் எனக்கு ராசியான நம்பர் என்பதால் இன்னும் இரண்டு வித்தியாசமான படங்கள்.

பிடிச்சிருக்கு - அசோக்,விசாகா நடித்த்து.வித்தியாசமான காதல் படம்.ஊர் சுற்றாமல் பொறுப்பாக இருக்கும் ஒருவனுக்கும் கல்லூரி நாயகிக்கும் வரும் காதல்.இடைவேளை வரும் திரைக்கதை ஈ படத்திற்கு பிறகு ஒரு வித்தியாசமான திரைக்கதை.இடைவேளைக்கு பிறகு அ..ய்..யோ அ..ம்..மா. (மொக்கை என்று சொல்லவில்லை தேவையில்லாத அளவுக்கு இழுத்து விட்டார்கள்.) தூத்துக்குடியில் ஆரம்பித்து பூனாவில் முடிகிறது. மோதலில் ஆரம்பித்து காதலில் விழும் இருவரின் கதை.படம் கலைஞர் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.நாயகி பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறார். (விவெல் சோப் விளம்பரத்தில் பளிச்சென்று ஆகும் பெண்)

ஆழகிய அசுரா - வித்தியாசமான ஒன்லைன்.நாயகியை காதலிக்கும் நாயகன் அவள் முன் அவள் தோழியை காதலிப்பதாக நடிக்கிறான்.அவள் போலிகளை மிரட்ட சேர்த்து வைக்க சொல்லி அவளை மிரட்டி அவளிடம் நெருங்குகிறான்.அவள் அவனை நல்லவன் என்று தெரிந்து கொள்கிறாள். நாயகியை காதலிப்பதாக சொல்ல அவள் மறுத்து நிச்சயதார்த்ததிற்கு தயாராகிறாள்.பிறகு என்ன நடந்த்து என்று கொட்டாவியோடு சொல்லும் கதை.அவ்வ்வ்வ்.கதையின் நாயகிக்காக பார்த்த படம்.அவளுடைய உண்மையான பெயரும்,கதாபாத்திரத்தின் பெயரும் என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்தவர்களின் பெயர்.அதுக்காவே இந்த படம் பார்த்தேன்.கே டிவியில் இந்த படத்தை பார்க்கலாம்.சங்கீதாவின் (ஆமா பிதாமகன் சங்கீதா) கணவர் பாடகர் கிருஷ் நடித்துள்ள படம்.நாயகனின் நண்பனாக நடித்துள்ளார்.

டிஸ்கி - ரமணா,உமா,சீதா நடித்த ரைட்டா தப்பா என்ற படத்தை இதுவரை பார்க்கவில்லை.வித்தியாசமான கதை.ஈவ்டீசிங்கால் பாதிக்கப்பட்டவர்களின் கதை.வந்ததே தெரியவில்லை.தெரிந்தவர்கள் சொல்லவும்.படம் நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.அனேகமாக ஜீ டிவியில் போடுவார்கள் என்று நினைக்கிறேன்.

இதில் குறைந்த பட்சம் இதில் ஒரு நான்கு படத்தையாவது பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.நாம் எந்த படத்திற்கு முக்கியத்துவம் குடுக்கிறோம் என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.இந்த படங்களின் தோல்விக்கு காரணம் என்ன தொப்புள் காட்சிகள் நிறைய இல்லாமல் போனதா.இல்லை அந்தரத்தில் பத்து பேரை பறக்க விடாததா.இல்லை ஆங்கிலப் படத்தை அடித்து விட்டு ஒரு முயற்சி என்று காதில் பூ சுத்தாமல் இருப்பதா.இல்லை உண்மைக்கு வெளியே நிற்பதாலா.
நல்ல படங்கள் என்று நான் தலைப்பில் போடவில்லை.காரணம் அப்படி சொல்ல இந்த படங்களை நான் திரையரங்குகளில் பார்க்கவில்லை.அப்படி சொல்ல அருகதை எனக்கு இல்லாத காரணத்தால் அந்த வார்த்தை விடுபட்டு விட்டது.

8 comments:

தர்ஷன் said...

முதல் நான்குப் படங்களையும் பார்த்திருக்கிறேன்.
முகம் ஞானராஜசேகரன் படம் புறத்தோற்றத்திற்கு மாத்திரம் கொடுக்கும் முக்கியத்துவம் மட்டுமின்றி ரசிகர் மன்றங்களின் முகத்திரையையும் கிழித்தப் படம்.
தயா நல்லப் படம் என்ற போதும் நிறைய லாஜிக் இல்லாத வர்த்தக சமரசங்கள் உண்டு
அன்புடன் விஜய்,அஜித் காதல் செய்து கொண்டிருந்த தொன்னூறுகளில் வந்திருந்தால் வெற்றிப் பெற்றிருக்கலாம். (ஒரு நல்ல ஹீரோவுடன்)

priyamudanprabu said...

முகம்
///

நான் பார்த்து ரசிட்ஹ்த படம்

Anonymous said...

நல்ல அலசல்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//படத்தின் கல்லா கட்டவில்லை.காரணம் இந்த படத்தில் குத்தாட்டம் இல்லையோ.//

கருத்துச் சொல்வதாக கலையை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு தனிமனித தாக்குதலை மிக அதிகமாக தந்த படம்.


அழகிய முகம் கொண்டவரின் உண்மையான முகம் போலி என்பதை ஏற்க தயாராக யாரும் இல்லை. ஏனென்றால் அழகிய முகம் கொண்டவர் யாரென்று மிகத் தெளிவாக சொல்லியிருப்பார்கள்.


அங்கே நாசரின் முகத்திற்குப் பதிலாக வேறொருவரின் முகம் தென்பட்டுவிட்டது..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நாம் - பிரகாஷ்ராஜின் அடுத்த தயாரிப்பு//


நல்லாத்தானே போச்சு...,

thiyaa said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

பிரசன்னா கண்ணன் said...

ஞானராஜசேகரனின் "முகம்" படத்தைப்பற்றி சொல்லும்போது, அந்தப் படத்தின் உயிர்நாடியான இளையராஜாவின் இசையை பற்றியும் ஒரு வரி எழுதியிருக்கலாம்.. குறிப்பாக, படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த டைட்டில் மியூசிக் எனக்கு மிகவும் பிடிக்கும்..

//கடைசி வரை நாயகியின் முகம் பார்க்காத நாயகன் அவள் முகம் பார்க்க சுடுகாட்டுக்கு ஓடுகிறான்.அங்கு அவள் எரிவதை பார்க்கிறான்.இதை அப்படியே அம்மா என்று மாற்றினால் தனுஷ் நடித்த கன்னட ரீமேக் கிடைக்கும்.இதையும் ராஜ் டிவியில் பார்க்கலாம்.
டி.ராஜேந்தரின் மோனிகா என் மோனலிசா படத்தின் முடியும் இதே மாதிரிதான் இருக்கும்..

"ஆழகிய அசுரா" - அந்த பொண்ணு பேரு ரெஜினா .. CSC Computer Educations விளம்பரத்துல கூட வருவாங்க.. எனக்கு ரொம்ப பிடிக்கும்..

Unknown said...

தல.., நீங்க எழுதி இருக்கிற எல்லா படத்தையும் பார்த்தவன் நான்... நீங்கள் குறிப்பிட்டதில் முகம் சிறத படம் தமிழ்சினிமாவில் வெற்றி பெற தேவையான எந்த அம்சமும் இல்லாமல் தோல்வி அடைந்தது...

அடுத்து நாம் ஆனால் அதில் ஒரு சிறிய பிரச்சனை ஏனெனில் விக்னேஷ் நடித்த "வேலை" என்ற படம் எப்போதாவது ராஜ் டி.வியில் போடுவார்கள் பாருங்கள் .., அந்த படத்தை ஜெயம் ராஜா ரேஞ்சுக்கு சுட்டு இருப்பார்கள் அப்படியே திருப்பி எடுக்க பட்ட படம் ஆகவே ஆங்கில படத்தை காபி அடிக்காமல் தமிழ் காப்பி அடித்ததற்கு வேண்டுமானால் பாராட்டலாம்...
அழகிய அசுரா படத்தை எப்படி இதில் சேர்திர்கள் எப்போது கே டி.வியில் போட்டாலும் பார்ப்பவன் நான் அவளவு காமெடியா இருக்கும்.அதிலும் ஏகப்பட்ட சுட்ட காட்சிகள்..., உதாரணம்..,"ஒரு ஐஸ் க்ரிமே ஐஸ் கிரீம் சாப்பிடிகிறதே " அப்டின்னு ஹீரோ கவிதளம் சொல்லுவர்...
நான் போட்டதிலேயே மிகபெரிய பின்னோட்டம் இது தான்... இதுக்கு எதாவது விருது உண்டா???