Wednesday, December 23, 2009

சாணிக்குழி - காதலுக்கு வந்த எச்சரிக்கை

முன்னோட்டம் : மினி உதவியுடன் ஜெயாவும்,குமாரும் காதலிக்கிறார்கள்.குழந்தைகள் உதவியுடன் கையாட்டல்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. அதட்டலான குரல் கேட்கிறது. மேலும் படிக்க முதல் பாகம்..இனி..

குமார் குரலை கேட்டு அதிர்ந்து போய் திரும்பி பார்த்தால் சித்தி கோபத்தில் நின்றுக் கொண்டிருப்பது தெரிந்தது.எப்படி தெரிந்திருக்கும்,யார் சொல்லியிருப்பார்கள் என்று யோசித்து பார்த்தால் மூத்த புள்ளப்பூச்சியின் தலை மட்டும் தெரிந்தது. காசு குடுக்காமல் வந்தது நினைவுக்கு வந்தது.

"சித்தி..ஒண்ணுமில்ல..சும்மா தான் உக்காந்திருந்தேன்.." குமார் எச்சில் கூட்டி விழுங்கலாம் என்று பார்த்தால் எச்சில் சுரப்பி வேலை செய்யவில்லை.

"என்னடா ராத்திரி எல்லாம் பிள்ளத் தூங்காம இருமுதேன்னு பாத்தா..இதான் காரணமா.." திட்டும் சித்தியை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியமால் கண்ணு முழி பிதுங்கியது.திரும்பி பார்த்தால் ஜெயா காணாமல் போயிருப்பது தெரிந்தது.

"சித்தப்பா கிட்ட எல்லாம் சொல்ல வேண்டாம் சித்தி.." கெஞ்சி கொண்டிருந்தான் குமார்.

"சொல்லிட்டா மட்டும் கண்டிக்கவா போறாங்க..சேர்ந்து தண்ணியடிக்கமாக இருந்தா சரி..அப்படியே அப்பன்மாரு புத்தி..என் புள்ளைய கெடுத்துராத.." சொல்லி விட்டு குழந்தையை வாங்கி கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

கொஞ்ச தூரம் போனவுடன் திரும்பி பார்த்து "அங்க என்ன வாய் பாக்குற..வா வெரசா நட.." கூடவே இழுத்து செல்லாத குறை தான்.

"அந்த பொண்ணு பேரென்ன..அவ எல்லாம் நமக்கு சரிப்பட மாட்டா..அவங்க வேற நாம வேற..புரியுதா..எம்புட்டு சொன்னாலும் புரிஞ்ச மாதிரி தெரியலயே.."

"சித்தி..அது வந்து அவ ரொம்ப நல்லப் பொண்ணு.."

"ஆனா அவ அப்பன் எல்லாம் அது மாதிரியில்ல..தெரியுமில்ல சாணிக்குழி கத..டேய் மூத்தவன நீயும் அண்ணன் மாதிரி ஆயிராதே.."

"சரி யம்மா.." கோபத்தில் மூத்த வாண்டை முறைத்தான்.குமார் கண்களுக்கு அவன் ஒரு குட்டி சாத்தான் மூக்கு வடித்து கொண்டு நடந்து வருவது மாதிரி தெரிந்தது.சாரத்துக்குள் அவனை விட்டு தலையில் கொட்டும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.

பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும்,புதிதாக சேர்ந்திருந்த பதினொராம் வகுப்பு மாணவர்களுக்கும் ஒரு பெண் விவகாரத்தில் சண்டை மூள,நடந்த அடிதடியில் இரண்டு பக்கமும் தலா மூன்று பேருக்கு ரத்த காயம்.

ஆசிரியர்களும் புதிதாக சேர்ந்தவர்களுக்கு வக்காலத்து வாங்க,ராத்திரியோடு ராத்திரியாக பள்ளிக் கொடிக் கம்பத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. ஏற்றியது குமார் கோஷ்டி தான் என்று சில பேர் சொல்ல, விசாரணை செய்ய ஒரு முரட்டு ஆசாமியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

"டேய் வாயத் தொறங்கடா..யாருடா கொடி ஏத்துனது.."

"நாங்க இல்ல சார்.."

"அப்புறம் என்ன உங்க பொண்டாட்டி வந்து ஏத்துனாளா..ஏண்டா எந்தாலிய அறுக்குறீங்க..அப்படியே சுவத்தோட வைச்சி ஒரு எத்து எத்தின்னா எப்படி இருக்கும் தெரியுமில்ல.." அடிக்க கை ஒங்கிக் கொண்டு வர,ஐந்து பேரும் சேர்ந்து புரட்டு எடுத்து விட, அது தற்காலிக நீக்கத்திற்கு வழி கோலியது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சாணிக்குழி பக்கத்தில் இருந்த திண்டில் துண்டை விரித்து படுத்திருக்க, சித்தப்பா வந்து எழுப்பிய பிறகு தான் சுய நினைவே வந்தது.

"எழுந்திருடா..உனக்கு படுக்க இடமே கிடைக்கவில்லையா..இந்தா தண்ணி அடி.."

"என்ன சித்தப்பா நேரம் காலம் தெரியாம விளையாடிக்கிட்டு.."

"பின்ன என்ன..உங்கூட சேந்து வாத்திய அடிச்சவன் எல்லாம் மன்னிப்பு கேட்டுக்கிட்டு பரிட்ச்சை எழுதப் போறான்.."

"நான் போகல சித்தப்பா.."

"நீ போய் மன்னிப்பு கேளு..எல்லாம் முடிஞ்சப் பொறவு அவன சாணிக்குழியில் புதைச்சிருவோம்..யாருக்கும் தெரியாது..இதுக்கு முன்னாடி செஞ்சது தானே.."

"தண்ணியப் போட்டுக்கிட்டு சலம்பாதீங்க..போய் படுங்க.."

குமார் மட்டும் எழுதாத பொதுத்தேர்வு வேகமாக முடிந்திருந்தது.முடிவுகள் வந்தவுடன் அடுத்த அதிர்ச்சி முதல் மதிப்பெண் வாங்கும் ஜெயா பார்டரில் பாஸ். ஜெயா குமாரை பார்க்க வந்திருந்தாள்.

"வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க..என்ன பண்றதுன்னே தெரியல.."

"என்னை கேட்டா நான் என்ன சொல்ல..நீ தானே முடிவு எடுக்கணும்.."

"சரி வீட்ட விட்டு ஓடிரலாம்..நகை எல்லாம் நிறைய இருக்கு எடுத்துட்டு வர்றேன்.."

"ஜெயா முட்டாள் மாதிரி பேசாதே..நான் இப்ப எங்க அப்பன் காசுல திங்குறேன்..இதுல இன்னொரு அவமானம் வேறத் தேடிக் குடுக்கணுமா.."

"அப்ப நான் சாவறது எல்லாத்துக்கும் முடிவு.." இப்படி சொன்னதும் அதிர்ச்சியில் குமாரின் வாய் அனிச்சையாக முணுமுணுத்தது. "சரி.." என்று நடக்க காத்திருக்கும் விபரீதம் தெரியாமல்.

பல நாள் கழித்து வானத்தை நிமிர்ந்து பார்த்தால் தேய்பிறை நிலா மர்மமாக சிரித்தது தெரியாமல் வீடு வந்து சேர்ந்தான்.பின்னால் நிலாவும் நகர்ந்தது இன்னும் சிறிது தேய்ந்து..

(தொடரும்..)

2 comments:

Unknown said...

அப்படி என்ன தல அந்த குழி குள்ள இருக்கு..., நல்ல இருக்கு .., ஒரு 100 எபிசொட் போடுவீங்களா.. இன்னும் அவுங்கள காணும் நோ மைனஸ்...

துபாய் ராஜா said...

//குழந்தைகள் உதவியுடன் கையாட்டல்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.//

//குமார் எச்சில் கூட்டி விழுங்கலாம் என்று பார்த்தால் எச்சில் சுரப்பி வேலை செய்யவில்லை.//

//"என்னடா ராத்திரி எல்லாம் பிள்ளத் தூங்காம இருமுதேன்னு பாத்தா..இதான் காரணமா.." //

//ஒரு குட்டி சாத்தான் மூக்கு வடித்து கொண்டு நடந்து வருவது மாதிரி தெரிந்தது.சாரத்துக்குள் அவனை விட்டு தலையில் கொட்டும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.//

//"அப்புறம் என்ன உங்க பொண்டாட்டி வந்து ஏத்துனாளா.. ஏண்டா எந்தாலிய அறுக்குறீங்க..//

//பல நாள் கழித்து வானத்தை நிமிர்ந்து பார்த்தால் தேய்பிறை நிலா மர்மமாக சிரித்தது தெரியாமல் வீடு வந்து சேர்ந்தான்.பின்னால் நிலாவும் நகர்ந்தது இன்னும் சிறிது தேய்ந்து..//

வார்த்தைகளும், வர்ணனைகளும் அருமை தம்பி. இது,இது, இதைத்தான் எதிர்பார்த்தோம் உன்கிட்ட...

கொஞ்சம் நிறுத்தி, நிதானமா மித வேகத்துல கதையை கொண்டு போனீங்கன்னா இன்னும் நல்லாயிருக்கும்.

அடுத்து வரும் பாகங்கள் இன்னும் அருமையாயிருக்க வாழ்த்துக்கள்.