Sunday, November 28, 2010

நொந்தலாலா - உயிர்மையில் வரவே வராத கட்டுரை

நந்தலாலா பற்றி வந்த எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டேன்.இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாக இரண்டு மணி நேரம் ஓடிய கிகுஜிரோ படத்தை இரண்டரை மணி நேரம் பின்னால் முன்னால் நகர்த்தி பார்த்து வேண்டிய மட்டும் குறியீடுகளைக் குறித்து கொண்டேன். விமர்சனங்களை வைத்து பார்த்தாலே நிறைய காட்சிகளை ஓப்பிட முடிகிறது.எண்பதுகளில் மணிரத்னம் செய்ததை மிக லாவகமாக மிஷ்கின் செய்கிறார்.(எப்படி என்றால் இரண்டு மூன்று படத்தை பிராய்ந்து எடுத்து திறம்பட ஒட்ட வைக்கும் நேர்த்தியால் நாயகன் டைம்ஸ் பத்திரிக்கை முதல் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக வந்தது.) ஆப்பிரிக்காவில் பெண்கள் லுங்கி அணியார்கள்,வீடு உயரத்திலிருக்கும் அது எப்படி யோகியில் வந்தது என்று கேள்வி மேல் கேள்வி வைத்த சாரு இதை கொண்டாடுகிறார். கிகுஜிரோ படத்தில் தலையில் இலைகளைத் தொப்பியாக இருந்தது நந்தலாலாவில் கையில் பனையோலையாக வைத்திருப்பது போல மாற்றி விட்டால் உலகத்தில் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக ஆகி விடுமா.


 அமீரிடம் சாரு வைத்த கேள்வியையே(பருத்தி வீரனை அப்படியே வங்காள மொழியில் சுட்டு எடுத்து விட்டு இயக்கம் சாரு என்று போட்டால் விடுவீர்களா) திரும்ப சாருவிற்கு வைக்கலாம்.ஜீரோ டிகிரியை கொஞ்சம் நகாசு வேலை பார்த்து எழுதியவர் மிஷ்கின் என்று போட்டால் விட்டு விட முடியுமா. கடைசி காட்சியில் மிஷ்கினின் கதாபாத்திரத்தின் பெயர் தெரிகிறதாம்.பார் யூவர் கைண்ட் இன்பர்மேஷன்,லோஷன், மோஷன் ஜப்பானிய படத்திலும் கடைசியில் தான் தெரிகிறது.இன்னும் பிற ஒற்றுமைகள்

1.டேட்டிங் போகும் ஜோடி - நந்தலாலாவில் தேனிலவிற்கு போகும் ஜோடி.(லிவிங் டூ கெதர் என்று சொன்னாலே தமிழகத்தில் போராளியாக மாறி விடுவார்களே.அதனால் இதிலும் நேட்டிவிட்டி.

2.லாரிக்காரனுடன் சண்டை இதில் கிகுஜிரோ ஜெயிக்கிறார் - அதில் லாரி டிரைவர் மிஷ்கின் பற்றி உண்மையை அறிந்து கொள்கிறார்.

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

பழங்காலத்திலிருந்தே தாசியின் மீது நமக்கு அடங்காத ஆர்வமிருக்கிறது.மாறி வரும் தமிழ்ச்சமூகத்தால் சமீப காலமாக வந்த திரைப்படங்களில் நாயகியை அப்படி ஒரு கதாபாத்திரங்களில் பார்த்தால் அது சொல்லப்படாத ஈர்ப்பாக மாறுகிறதோ என்ற எண்ணம் வராமலில்லை.வேதம் படத்தில் அனுஷ்கா ஏற்றுக் கொண்ட வேடமது.தப்புத்தாளங்களில் சரிதா,அரங்கேற்றம் படத்தில் பிரமீளா என்று பாலசந்தர் ஆடி முடித்த எழுபதுகளின் ஆட்டம் திரும்ப ஒரு சுற்று வருகிறது.

பையனின் அம்மாவை தேடி சென்று அவளுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை அறியுமிடம் தான் கிகுஜிரோ படத்தில் இடைவேளை.அதை மிஷ்கின் ஆர்டர் மாற்றி இறுதி காட்சிக்கு பக்கத்தில் வைத்திருப்பார். ஜப்பானிய படத்தில் ஹோமில் இருக்கும் அம்மாவை நந்தலாலாவில் மிஷ்கின் கொண்டு ஹோமில் சேர்த்தால் அது அட்டக்காப்பியில் இருந்து தழுவல் என்று ஆகி விடும் ஆக்கி விடுவார்கள் போல.

அமீர் சாருவின் புத்தகம் வெளியிடும் போது நான் புத்தகமே படிப்பதில்லை என்று சொன்னார்.அவரும் மிஷ்கின் போல லத்தீன் அமெரிக்க புத்தங்களைப் படித்திருந்தால் யோகியை சரியாக தமிழ்ப்படுத்தியிருப்பார்.அவருக்கும் ஒரு அம்பாஸிடர் கார் கிடைத்திருக்கும்.

நந்தலாலா விமர்சனமே இப்ப தான் வருதாம்.வெரி ஸ்லோ.நான் யுத்தம் செய் பார்த்துட்டேன்.திருட்டு என்பது அடுத்தவன் கற்பனையைத் திருடுவதும் தான்.என்றாவது யாராவது எழுதிய மாஸ்டர் பீஸ் கதையை நான் திருடி கொஞ்சம் மாற்றி எழுதி பெயர் வாங்கினால் யாரும் வந்து கேக்காதீங்க.நானும் அடிச்சி விடுவேன்.என் அண்ணன் வாழ்க்கையில் நடந்தது என்று.மிஷ்கினுக்கு மட்டும் தான் அண்ணன் இருக்கிறாரா என்ன.

நவம்பர் பதினைந்தாம் தேதி எழுதியது.

ஒரிஜினல் யுத்தம் செய் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.இதை பார்த்து விட்டு நான் பார்த்த திரில்லர்களிலேயே முதல் ஆயிரம் படத்தில் இதுவும் ஒன்று என்று சாரு சொல்லலாம்.மூலத்தில் (இருபத்தியொரு வயதில் துணை இயக்குனருக்கு மூலம் வந்தால் இப்படு உட்கார்ந்து யோசிப்பானா என்று மிஷ்கின் அடுத்து தரப் போகும் பேட்டியில் சொல்லலாம்.ஏற்கனவே வேட்டி கழன்று விட்டது.அது மாதிரி நிலை எனக்கு வரணுமா.அதனால் தெளிவாக) மூலப்படத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகளுமே ஆண்கள். இதில் சேரனுக்கு துணையாக தீபா என்ற புதுமுகம் தான் பெண் போலீஸ் அதிகாரி.வில்லன் கடைசி வரை பிடிபடவில்லை. மிஷ்கின் அந்த குழந்தையே நீங்க தான் என்பது போல சக போலீஸ் அதிகாரி தான் அந்த வில்லன் என்று சொல்லலாம்.ஏன் சக என்று சொல்ல வேண்டும் சேரன் தான் அந்த வில்லன் என்று சொல்லலாம். நாமும் ஆகா இதுக்கு ஆஸ்கார் கிடைக்காதா ஆம்பாஸிடர் கார் கிடைக்காதா என்று மூச்சுத் திணற திணற அசராமல் பேசுவோம்.

இன்னும் மிச்சமிருக்கிறது.ஸ்டே டியூண்ட்.

Monday, November 22, 2010

பழைய கணக்கு

மிஷ்கின் - அமீர் ஆப்பிரிக்கப் படத்தைத் தழுவி எடுத்தார்.இவர் மட்டும் ஜப்பானிய படமான கிகுஜிரோ தழுவாமலா எடுத்து இருக்கிறார்.அமீரின் திருட்டு என்று வெளுத்து எடுத்து இருக்கிறார்.லுங்கியைக் கூட சரியாக கவனித்து இருக்கிறார்(ஞானி "பாசம்").ஆனால் மிஷ்கினை ஒன்றுமே சொல்லவில்லை.

அஞ்சாதே வெளியான சமயத்தில் மிஷ்கினின் பேட்டியில் இருந்து சில வரிகள் - "சித்திரம் பேசுதடி படம் முடிந்தப் பிறகு எனக்கு அடுத்தப் படம் கிடைக்க ஒரு வருடம் ஆனது.அந்த கோபத்தில் நான் முதலில் எடுத்த காட்சி படத்தின் க்ளைமேக்ஸான கறும்பு காட்டில் எடுத்த காட்சிகள் தான்.

ஏற்கனவே அஞ்சாதே படம் பார்த்து வாயை பிளந்து இருந்ததால் அவர் மேல் ஒரு மரியாதையைக் கூட்டியது இந்த பேட்டி.சுப்ரமணியபுரம் படத்தை விட இது சிறந்த படம் என்று இன்று வரை சொல்லி வருகிறேன்.இப்படி படம் கிடைக்காத சமயம் - போராடும் குணமும்.படம் கிடைத்தப் பிறகு அடுத்தவன் கற்பனைத் திருடும் இல்லை தழுவும் குணமும் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.

சமீபத்தில் ஆனந்த விகடன் படித்தப் போது அவர் சொன்ன பதில்கள் அவர் மேலிருந்த மரியாதையை முற்றிலும் குறைத்து விட்டது.

ரசிக்கும் எதிரி - ஜப்பானிய இயக்குனர் கிடானோ.(யார் என்று பார்த்தால் கிகுஜிரோ படத்தின் இயக்குனர்).அவரோடு சேர்ந்து நந்தலாலா பார்க்க வேண்டும் என்பது தான் ஆசை என்று சொல்லியிருக்கிறார்.

என் ஆசையும் அதேதான்.அவருடன் பார்த்தால் அவர் இப்படித்தான் சொல்வார் - இந்த படத்திற்கு நந்தலாலா என்ற பெயரை விட கிகுஜிரோ தான் பொறுத்தமாக இருக்கும்.(கண்ணதாசன் பரிசளிக்கப் போன கவிதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கவிதை அவர் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.காரணம் அது அவருடைய கவிதை.முயலுக்கு மூன்று கால் என்று தலைப்பு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அந்த நபரிடம் சொன்னாராம்.)

அடுத்த கேள்வி யாருக்கும் இதுவரை தெரியாத உண்மை - நந்தலாலா படம் என் சொந்த வாழ்வின் பதிப்பே என்று அளந்து விட்டது.

திருடுங்க,தழுவுங்க தப்பேயில்லை - ஒரு டைட்டில் கார்டு போட்டு சொல்லுங்கள்.அதுதான் உண்மையான படைப்பாளிக்கு கொடுக்கும் மரியாதை.

கிகுஜிரோவின் கதை - ஒரு சிறுவன் கோடை விடுமுறையில் தாயைத் தேடி செல்லும் கதை.துணைக்கு ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட முதியவன்.

நந்தலாலாவின் கதை - முதியவனுக்கு பதில் வாலிபன் என்று போடுங்கள்.அட என்ன மாற்றம்.

எழுத்து என்பது எழுத்தாளனின் இரத்தம் என்று சொல்லும் மிஷ்கின் கிகுஜிரோ படம் என்ன ஜப்பானிய இயக்குனரின் கழிவா.(இரத்தம் நமக்கு போனால் தான் இரத்தம்.மற்றவனின் முகத்தில் வழிந்தால் அது தக்காளி சாஸ் போல.)

உங்களுக்காக இரண்டு படங்களின் புகைப்படங்கள்.அட ஜப்பான் படத்தில் சிறுவன் வலதுப்பக்கம் நிற்கிறான்.நந்தலாலாவில் இடதுப்பக்கம் நிற்கிறான்.(யோவ் விளக்கெண்ண..நம்ம ஊர்ல கீப் லெப்ட்.)

அட ஜப்பான் படத்தில் பேண்ட் இடுப்பில் நிற்கிறது.நந்தலாலாவில் இடுப்பில் நிற்கவில்லை கையில் பிடித்திருக்கிறார்.

அட ஜப்பான் படத்தில் நாயகனின் முகம் பார்க்கிறான்.நந்தலாலாவில் திரும்பி நம்மை பார்க்கிறான்.

அட ஜப்பான் படத்தில் வெட்டவெளி.நந்தலாலாவில் ஒரு மரம் இருக்கிறது.

அட ஜப்பான் படம் வண்ணத்தில் இருக்கிறது(புகைப்படம்).நந்தலாலாவில் கறுப்பு வெள்ளையில் இருக்கிறது.(ஒவியம்).

ஆறு வித்தியாசம் கண்டுப்பிடிச்சி சொல்லாமல் இருந்தால் குமுதம் நடுப்பக்கம் என் கனவில் வராதே.

அட ஜப்பான் படம் வெளிவந்து விட்டது.நந்தலாலா இன்னும் வரவில்லை.சரி இது வேண்டாமா அது ஜப்பான்.இது தமிழ்.இதுவும் சரியில்லையா இளையராஜாவின் பெயர் மிஷ்கின் பெயருக்கு முன்னால் வருகிறது.

ஒரு புகைப்படத்தில் இவ்வளவு வித்தியாசம் காட்டும் மிஷ்கின் படத்தில் எவ்வளவு காட்டியிருப்பார்.காப்பி அடிப்பவன் அதிக மார்க் வாங்குவது தான் உலக நியதி.அவன் சரக்கையும் சேர்த்து விடுவான்.அதற்காக காப்பி அடிக்கவில்லை என்று அர்த்தமா.

இளையராஜா - சீனிகம் படத்தின் தரத்தையும்,நான் கடவுள் படத்தின் தரத்தையும் இளையராஜா இசை தான் குறைத்து விட்டது என்று சாரு சொல்லியிருக்கிறார்.

இசைக்கு இளையராஜாவை குற்றம் சொல்வதில் எனக்கு உடன்பாடே கிடையாது.காரணம் அவரிடம் சேர்ந்து பணியாற்றும் இயக்குனரை தான் குறை சொல்ல முடியும்.

இளையராஜாவால் தான் என்னால் இந்தி பேசும் மக்களைப் பகடி செய்ய முடிந்தது.சீனிகம் பாடல்களை எல்லோரும் விரும்பி கேட்டப் போது நான் சொன்னேன்.இதெல்லாம் நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்னால் கேட்டது என்று நக்கல் செய்ய முடிந்தது.

நான் கடவுள் பாடல்களை விட,பா படத்தின் பாடல்களை விட நந்தலாலா படத்தின் பாடல்கள் தரம் குறைந்தது தான்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான சாபக்கேடு - லூசு பசங்க பாடும் போது மட்டும் கருத்துள்ள பாடல்கள் பாடுகிறார்கள்.

"தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்..
தாய் உன்னை காண தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்.."

இப்படி ஒரு பாட்டு இளையராஜாவின் குரலில்.

நான் என் அம்மாவை வருடத்தில் இருபது நாள் தான் பார்க்கிறேன்.பார்த்ததும் இப்படி பாடல் பாட நான் ஒரு லூஸாக மாறத் தயார்.

என்னை கவர்ந்த ஒரே பாட்டு - நரிக் குறவர்கள் பாடல்.

மிஷ்கின் படம் என்பதால் இசை உலகத்தரமாகி விடாது.

இருந்தாலும் இந்தப் படத்தை நான் பார்க்க விரும்பும் காரணங்கள்.

ட்ரைலர் ஜோசியம் - அந்த பையன் மிஷ்கினை விட நன்றாக நடித்து இருக்கிறான்.அப்ப மிஷ்கின் - அமீரை விட நன்றாக நடித்து இருக்கிறார்.

கடைசி இருபது நிமிடங்கள் - வசனம் கிடையாது பிண்ணனி இசை மட்டும் தான்.

ரோகினி - மொட்டை அடித்துக் கொண்டு மிஷ்கினின் தாயாக நடித்து இருக்கிறார்.(இது மிஷ்கினின் இடைச்செருகலாக இருக்கும் என்பது சர்வ நிச்சயம்.)

இளையராஜா காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் கொடுத்தார் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது பாரதிராஜா,பாலு மகேந்திரா மற்றும் மணிரத்னம் தான்.அப்படி நந்தலாலா பாடல்கள் நிற்காது என்பது மட்டும் உறுதி.

Tuesday, November 16, 2010

பேக் டிராக்கிங்

லேப்டாப் பேக்கை காணவில்லை.பாஸ்போர்ட்,விசா போயிருந்தாலும் பரவாயில்லை. ஆபிஸ் லேப்டாப் போய் விட்டது.அதை நினைத்தால் இன்னொரு பெக் அடிக்கலாமா என்று யோசித்தேன். பல கோடி மதிப்புள்ள பிராஜக்ட் போன மாதிரி பில்டப் குடுப்பானுங்க.இத்துப் போன லேப்டாப் போனதற்கு இவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்கீங்களே உங்களால எப்படி ஒரு டீமை லீட் பண்ண முடியும்னு சரியா அங்கேயே ஆப்பு வைப்பாங்க.இருந்தாலும் இவ்வளவு குடித்திருக்கக்கூடாது.எல்லாம் அவளால வந்தது. யாரா சரியா போச்சு.எல்லாரும் சேர்ந்து என் தலையிலே கட்டி வைச்சாங்களே அந்த ராட்சஸி தான் காரணம்.

ஏதோ என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஆபிஸ்ல பார்ட்டி.எனக்கு பிரமோஷன் கிடைக்கும்னு சொன்னாங்க. வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல வாயிலே ஊத்திட்டாங்க.இதை இவக்கிட்ட சொன்னா ஆமா இவரு பச்சமண்ணு பீடிங் பாட்டில்ல ஊத்தி வாயிலே வைச்சுட்டாங்கன்னு என்னைத் திட்டுறா. இதுக்கும் கொஞ்சம் தாங்க அடிச்சிருந்தேன். அதுவும் வாரத்துக்கு ரெண்டு நாள் அடிச்சிக்கலாம்னு இவ தான் சொன்னா.இப்போ இவளே மீறினா எப்படி.கண்ணம்மா அப்படின்னு கொஞ்சினா கம்முன்னு கிடன்னு சொல்றா.கண்ணாம்மான்னு கெஞ்சினா கம்முன்னா கம்மு கம்முனாட்டு கோன்னு சொல்வா. நான் என்ன இவ வைச்ச ஆளா வர்றதுக்கும் போறதுக்கும். இதுக்கெல்லாம் காரணம் என் அப்பா அம்மா தான். போன் போட்டு இரண்டு ஏறு ஏறலாம்னு பாத்தா ஏண்டா நீ தானே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க அடம் பிடிச்சேன்னு சொல்றாங்க.நான் எப்போ சொன்னேன்.இருங்க தண்ணியடிக்கிறதுக்கு முன்னாடி பார்சல் வாங்க இந்த கடைக்கு தான் வந்தேன்.கேட்டா அப்படி எதுவும் இல்லையேன்னு சொல்றான். தண்ணியடிச்சா எல்லாத்துக்கும் இளக்காரமா போச்சு.

சரி லேப்டாப் பேக் போய் தொலையுது.கல்யாணம் பண்ணிக்கிட்டா பர்த்டே விஷ் பண்ணலை,பிறந்த நாளுக்கு கோயிலுக்கு வரலன்னு எல்லாம் சண்டைக்கு வரக்கூடாதுன்னு சொல்லி தான் கல்யாணம் பண்ணினேன்னு நினைக்கிறேன்.அதுவும் சரியா ஞாபகமில்லை.ஆ வந்துரிச்சி. அவ கூட சண்டை போட்டுட்டு பிரபு கூட தான் அவன் கார்ல தண்ணியடிக்க வந்தேன்.அவன் கார்ல விட்டுப்பேன்னு போன் பண்ணினா மச்சான் ஏண்டா என் பொண்டாட்டி கூட சந்தோஷமாயிருந்தா பொறுக்காதா உனக்குன்னு சொல்றான். படுபாவி இதுக்குத்தான் என் கூட வந்து பெப்ஸி குடிச்சியா.ஏண்டான்னு கேட்டா விரதம்னு சொல்றான்.பேக் பத்தி கேட்டா நாளைக்கு சொல்றேன்னு சொல்வான்.

ஆங் எங்க விட்டேன்.பிறந்த நாள்,கல்யாண நாள் எல்லாம் மறந்துறக்கூடாதுன்னு தான் அவ பிறந்த அன்னிக்கே அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.தண்ணியடிச்சிட்டு போனா திட்டுவான்னு தான் நேரா பாத்ரூம் போனேன்.அங்க வந்து வழிய மறைச்சிக்கிட்டு நின்னா ஒருத்தனுக்கு எரிச்சல் வராதா. "இன்னைக்கு என்ன நாள்.." இப்படி சம்பந்தமேயில்லாம கேட்டா புதன் கிழமை அதுக்கு என்ன.. வாரத்துல இன்னைக்கு தண்ணியடிக்கலாம்னு நீயே பெர்மிஷன் குடுத்தே தானே.." இப்படி பதில் சொன்னா இதெல்லாம் நல்லா தெரியுமே.. இன்னைக்கு எங்கப்பாவுக்கு கல்யாண நாள்னு சொன்னேனே அது மறந்துரிச்சா.." என்ன சொல்ல ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும். என் கல்யாண நாளே எனக்கு ஞாபகத்துல இருக்காது.பிரபு கார்ல ஏறுறதுக்கு முன்னாடி இங்க இருந்து சிகரெட் பிடிச்சேன்.கடையையும் பூட்டிட்டான்.

கொஞ்சம் தெளிய ஆரம்பித்திருந்தது.ரொம்ப தூரம் நடந்து விட்டேன்.கால் வலி.ஆபிஸ்ல இருந்து வரும் போது இருந்திச்சி.இங்க மறந்து விட்ட மாதிரியும் இல்ல.வீட்டுக்கு போய் தூங்கிட்டு நாளைக்கு தேடுவோம்.ரெண்டாவது தடவை அடிச்சேன்னு தெரிஞ்சா திரும்பவும் சாமியாடுவா.பாத்ரூம் போய் குளிச்சிட்டு சைலண்டா தூங்கிருவோம்.பாத்ரூம் போனா அங்க லேப்டாப் பேக் தொங்குது.

பிரபு கிட்ட சொல்ல போனை அடிச்சேன்."மச்சான் எப்படியா பேக் டிராக் பண்ணிக் கண்டுப் பிடிச்சிட்டேன்.." சொல்லிட்டு திரும்பினா இவ நிக்குறா.

இதை தான் மூக்க சுத்தி காதை தொடுறதுன்னு நக்கல் விடுறா.கோபம் வந்தாலும் அடக்கிட்டேன். இன்னொரு பேக் டிராக்கிங் எல்லாம் என்னால முடியாது.

"உங்கப்பா கல்யாண நாளை நான் மறப்பேனா செல்லம்.." எல்லார் மாதிரியும் நானும் பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.வேற ஒண்ணுமில்ல பாரை மூடிட்டான்.அங்க போக முடியாது.

முக்கிய குறிப்பு : இந்த கதையில் வரும் எல்லா சம்பங்களும் கற்பனை.அதையும் மீறி யாரையாவது இந்த கதை நினைவு படுத்துற மாதிரி இருந்தா ரப்பர் வைச்சி அழிச்சிருங்க.ரப்பர் இல்லன்னா எச்சில் தொட்டு அழிச்சிருங்க.

Sunday, November 14, 2010

அர்ஜூனனின் முட்டாள்த்தனம்

சுபத்ரை அபிமன்யூவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள்.அர்ஜூனன் சுபத்ரையுடன் மாலை பொழுதில் மகிழ்ச்சியாக இருக்கிறான்.யட்சன் ஒருவன் பதற்றத்துடன் ஓடி வருகிறான்.அர்ஜூனா என்னை நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல அர்ஜூனனும் பிரச்சனையை கேட்காமல் மாளிகைக்குள் அழைத்து செல்கிறான்.அந்த நேரத்தில் கிருஷ்ணன் வந்து "அர்ஜூனா நீ அடைக்கலம் குடுத்து வைத்திருப்பது என் எதிரிக்கு..அவனை வெளியே அனுப்பு.." என்று கத்த

"வா கிருஷ்ணா..உள்ளே வா.." அர்ஜூனன் ஆரத்தழுவ வருகிறான்.

"எதிரி இருக்கும் வீட்டில் என் பாதம் படாது.." தழுவ வந்த கைகளை கிருஷ்ணன் தட்டி விடுகிறான்.

"கிருஷ்ணா அவர்கள் என் விருந்தினர்கள்..அனுப்ப முடியாது.." என்று அர்ஜூனன் சொல்ல

"என் எதிரியை ஒளித்து வைப்பனும் என் எதிரியே..வா சண்டைக்கு..நீ ஜெயித்தால் அவனை நான் விட்டு விடுகிறேன்..நான் ஜெயித்தால் நீ அவனை வெளியே அனுப்ப வேண்டும்.." என்று கிருஷ்ணன் சொல்ல

"சுபத்ரா..என் காண்டீபத்தை எடுத்து கொண்டு வா.." என்று மனைவியிடம் சொல்ல

"அண்ணா என்ன விளையாட்டு இது.." சுபத்ரை கிருஷ்ணனைப் பார்க்கிறாள்.

ஒன்றுமாகாது என்பது போல கிருஷ்ணன் தலையை ஆட்ட காண்டீபத்தோடு வருகிறாள் சுபத்ரை.

துவந்த யுத்தம் நடக்கிறது.சுற்றியிருக்கும் மாடமாளிகையின் காரை எல்லாம் பெயர்ந்து விழுகிறது.மூன்று நாட்கள் விடாமல் வெற்றி தோல்வி என்று முடிவே வராமல் கொஞ்சம் கொஞ்சமாக சண்டை போராக நடக்கிறது.இருவர் மேனியும் அம்புகள் பாய்ந்து குருதியின் நிறமாக மாறியிருக்கிறது.

"அண்ணா போதும் விளையாடியது.." என்று சுபத்ரை குறுக்கே வர சண்டை முடிவுக்கு வருகிறது.

"என்ன விளையாட்டா..உன் விளையாட்டை என்னிடமும் ஆரம்பித்து விட்டாயா கிருஷ்ணா.." அர்ஜூனன் பொய்க்கோபத்துடன் கேட்கிறான்.

"அண்ணன் பலராமனிடமே விளையாடுபவன்..உன்னிடம் விளையாட மாட்டேனா.." கிருஷ்ணன் சிரிக்க

"எதற்காக இந்த சண்டை.."

"அர்ஜூனா இது வெறும் முன்னோட்டம்..நாளை நானே உன்னை எதிர்த்து நின்றாலும் நீ மனம் கலங்கி விடக்கூடாது..அதற்காகவே இந்த விளையாட்டு.."

"கிருஷ்ணா புரியவில்லையே.."

"புரியும்..நாளையே உன் உறவுகளை எதிர்த்து போர் புரிய வேண்டி வரும்..அதற்குத்தான் இந்த ஒத்திகை.."

விருந்துண்டு விட்டு நடந்த விளையாட்டு போரில் அர்ஜூனன் செய்த தவறுகளை பட்டியலிடும் கிருஷ்ணன் அப்படி பத்ம வியூகம் பற்றி சொல்கிறான். சுபத்ரை லேசாக கண்ணயர, அர்ஜூனன் அவளை எழுப்பாமலிருக்க வெளியே செல்ல முயல்கிறான்.

"அர்ஜூனா..எதையும் பாதி கதையில் விடக்கூடாது..முழுதாக கேள்.." கிருஷ்ணன் அர்ஜூனன் கையைப் பிடித்து இழுக்கிறான்.

"அவள் தூங்கட்டும்..பத்ம வியூகத்தை உடைக்க எனக்கு தெரியும் கிருஷ்ணா..வா வெளியே செல்லலாம்.." என்று கிருஷ்ணரை அழைத்து செல்கிறான்.

கிருஷ்ணன் புன்னகை செய்கிறான்."எதற்கும் தினமும் பயிற்சி எடு..ஒரு ஆண்டு காலம் வெளியே போய் வா..தவமிரு.."

"சுபத்ரா கர்ப்பமாகயிருக்கிறாள்..அவளை நான் விட்டு செல்வதா.." போக மறுக்கும் அர்ஜூனனிடம் "என் மருமகனை நான் பார்த்துக் கொள்கிறேன்..போய் வா.." என்று கிருஷ்ணன் சொல்ல போக அர்ஜூனன் மறுக்கிறான்.கிருஷ்ணன் விஷமமாக சிரிக்கிறான்.

தர்மர் சூதாட போகிறார்.எல்லாம் தோற்று காட்டிற்கு போகிறார்கள்.அர்ஜூனன் விடாமல் பயிற்சி எடுக்கிறான்.கர்ணனை நினைத்து கொள்கிறான்.இலக்கை அம்பால் அடிக்கும் போது இலக்கே இல்லாமல் செய்கிறான்.

சமாதானம் தோற்றுப் போய் மகாபாரத யுத்தம் தொடங்குகிறது. பீஷ்மர் தலைமையில் கௌரவ சேனை. அவருக்கு வலப்பக்கம் துரோணர்.இடப்பக்கம் கிருபர்.அர்ஜூனன் தயங்குகிறான். கர்ணன் பீஷ்மருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் பீஷ்மர் இருக்கும் வரை களமிறங்க மாட்டேன் என்று சபதம் எடுக்கிறான்.

"அர்ஜூனா அன்று நாம் செய்தோமே முன்னோட்டம் அதன் முடிவு தானிது..சண்டையிடு அர்ஜூனா.."

"என்னால் முடியாது கிருஷ்ணா..தாத்தா,குரு,நண்பர்கள்,சகோதரர்கள் எல்லோரும் இருக்கிறார்கள்.. என்னால் முடியாது.."

"அவர்கள் நீங்கள் துரியனின் அரசவையில் அவமானப்படும் போது எங்கே போனார்கள்..உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இடத்தை தர மறுத்த எங்கே போனார்கள்.சண்டையிடு அர்ஜூனா..நீ சண்டையிடாவிட்டால் உன் சகோதர்களும் தயங்குவார்கள்..முதல் அம்பை விடு" என்று கிருஷ்ணன் சொல்கிறான்.

"முடியாது கிருஷ்ணா..நீ எத்தனை சமாதானம் செய்தாலும் என் கால்களிலும்,கைகளிலும் பலமில்லை.." அம்பை நழுவ விடுகிறான்.

"இப்போது அங்கே பார்.." என்று எல்லோரும் கர்ணனாக தெரிகிறார்கள்.பீஷ்மர் வெண்தாடி கர்ணனாக, துரோணர் குடுமி வைத்த கர்ணனாக என்று எல்லோரும் கர்ணனாக தெரிகிறார்கள்.

"கிருஷ்ணா..உன் விளையாட்டை நிறுத்து..கர்ணன் பீஷ்மர் இருக்கும் வரை களமிறங்க மாட்டான்..அவன் பாசறையில் இருக்கிறான்.."

"நீ கர்ணனை காணாமல் தயங்குகிறாய்..அதனால் எல்லோரையும் கர்ணனாக காட்டினேன்..அம்பை விடு.." என்று கிருஷ்ணர் சொன்னதும் முதல் அம்பை விடுகிறான்.அது பீஷ்மர் காதோரமாக போய் வணக்கம் வைக்கிறது.

பத்தாம் நாள் முடிவில் பீஷ்மர் சாய்க்கப்படுகிறார்.கர்ணன் பீஷ்மரை காண போர்க்களத்திற்கு ஓடோடி வருகிறான்.

"நீ என்னை விட சிறந்த வீரன்..எப்படியும் துரியோதனன் தோற்று விடுவான்..எனக்கு பிறகு அவனை பாதுகாக்கவே உன்னிடம் வாக்குவாதம் செய்து உன்னை ஒதுங்க செய்தேன்..நீ தான் அவனை இனி காப்பாற்ற வேண்டும்.." என்று உறுதிமொழி வாங்குகிறார்.கர்ணன் களமிறங்குகிறான்.

பதிமூன்றாவது நாள் போர்.பத்ம வியூகம் அபிமன்யூ அதை உடைத்து பாதி வரை மீதி பாதியை உடைக்க முடியாமல் உள்ளேயே கௌரவ சேனையை கலங்கடித்து சூழ்ச்சியால் கொல்லப்படுகிறான். போர்க்களத்தின் வேறு மூலையில் இருக்கும் கிருஷ்ணன் சங்கேடுத்து ஊதுகிறான். அர்ஜூனன் அந்த சங்கின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு யார் என்று கேட்க கிருஷ்ணன் அர்ஜூனைப் பார்க்காமலே ஊதிக் கொண்டிருக்கிறான்.தோளைத் திருப்பினால் கிருஷ்ணனின் கண்கள் கலங்கியிருக்கிறது. "யார் அபிமன்யூவா.." என்று அர்ஜூனன் கேட்கிறான்.பேச முடியாமல் தலையை அசைக்கும் கிருஷ்ணனிடம் "நீ பார்த்துக் கொள்வாய் என்று நம்பினேனே..நான் ஒரு முட்டாள்.." என்று கிருஷ்ணனிடம் கோபம் கொள்ளும் அர்ஜூனனிடம் "உன் முட்டாள்தனத்தால் அபிமன்யூ இறந்தான்..நான் அன்றே சொன்னேனே..எதையும் முழுதாக கேள் என்று..இன்று பத்ம வியூகத்தில் சிக்கிக் கொண்டு அபிமன்யூ இறந்ததிற்கு நீ ஒரு காரணம் என்றால் ஜயத்ரதன் இன்னொரு காரணம்..இனி ஒரு முட்டாள்தனமும் செய்யாதே.." என்று சொல்லி முடிக்கும் முன் "நாளை சூரியன் மறைவதற்குள் ஜயத்ரதனை கொல்வேன்..இல்லை நாளை நெருப்பில் பாய்ந்து உயிரை விடுவேன்.." என்று சொல்லி மயக்கமாகிறான்.அர்ஜூனனின் மூடத்தனத்தை எண்ணி கிருஷ்ணன் திரும்ப சங்கேடுத்து ஊதுகிறான்.கண்கள் கலங்கியிருக்கிறது. பதிமூன்றாவது நாள் போர் முடிவடைகிறது

இந்த சங்கோலியைக் கேட்டு கௌரவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.ஜயத்ரதனை கௌரவர்கள் ஒளித்தாலும் கிருஷ்ணன் சூழ்ச்சியால் ஜயத்ரதன் மற்றும் அவனது தந்தையும் சாய்க்கப்படுகிறார்கள். கிருஷ்ணர் திரும்ப சங்கு ஊதிய காரணம் புரியாதவர்களுக்கு இரவு போரில் முடிவில் கடோத்கஜன் கொல்லப்பட்டதும் காரணம் புரிகிறது.கடோத்கஜனின் மரணத்தோடு அன்றைய போர் முடிவடைகிறது.அர்ஜூனை காக்க இன்னும் எத்தனை பேரை பலி வாங்குவானோ என்று நினைத்துக் கொண்டே சூரியன் உதிக்கிறான்.

Saturday, November 13, 2010

மைனாக்குஞ்சு

மைனா - ஜூராஸிக் பார்க் படத்தில் வேன் விபத்தில் சிக்கி முன் பக்க கண்ணாடியில் விழுந்து கிடக்கும் பெண்ணை காப்பாற்றும் போது கொஞ்சம் கொஞ்சமாக கீறல் விழும். கடைசியில் பையைப் பிடித்து தப்பி விடுவார். இந்த காட்சியை எல்லாம் சுந்தர்.சி சின்னா படத்தில் சுட்டு விட்டார்.பிரபு சாலமன் லேட்டஸ்டாக அதை சுட்டிருக்கிறார்.இதை உலக சினிமாவின் வரிசையில் கண்டிப்பாக சேர்த்து விட வேண்டும்.

பிரபு சாலமனின் வழக்கமான கிளிஷே தான் மைனா.கொக்கி,லீ,லாடம் என்ற அவர் முந்தைய படங்களில் படத்தின் இறுதி காட்சியில் கொத்து கொத்து ஆட்களை சாகடிப்பார்.இந்த படமும் விதிவிலக்கல்ல.

கொக்கி,லீ,லாடம் படம் எல்லாம் நான்கு முதல் அதிகபட்சமாக பதினாறு நாட்களிலேயே முடிந்து விடும்.இதிலும் அதே தான்.இரண்டு நாட்கள்.

போன டிசம்பரில் எழுதியது மூன்று வருஷத்துக்கு ஒரு தடவை அதே சாயலில் இருக்கும் படங்களை எடுத்தால் மக்களுக்கே புரியாது.உதாரணத்திற்கு நாவரசு கொலையில் தண்டனை பெற்ற ஜான் டேவிட் எங்கே என்றால் தெரியாது.அந்த சமயத்தில் படம் சூடாக இருக்க வேண்டும்.புது மாதிரியான படம் என்று ஆதரவு தருவார்கள்.

உதாரணத்திற்கு ஆண்-பெண் இவர்களுக்கு நடுவில் இருக்கும் ஈகோ இதை வைத்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை படம் எடுத்து வெற்றி பெறலாம்

2000 - விஜய்,ஜோதிகா நடித்த குஷி.ஸ்கீரின் இத்து போகும் அளவுக்கு எக்கோ இல்ல அகம் பிடிச்ச கழுத இல்ல ஏதோ ஒண்ணு.இதை நூல் பிடிச்சி எடுத்தது தான் அதற்கு பிறகு வந்த படங்கள்.

2003 - திருடா திருடி.

2005 கடைசியில் லைலா பிரசன்னா நடித்த கண்ட நாள் முதலாய்.

2009 தொடக்கத்தில் சிவா மனசுல சக்தி.

2012 இந்த உலகம் அழியும் முன்னாடி எந்த படம் வரும் என்று பார்ப்போம்.


இப்போதும் அதே மூன்று வருட இடைவெளி தான்.2007 - பருத்தி வீரன்.2010லில் - மைனா. கொஞ்சம் தான் வித்தியாசம் இங்கு நாயகிக்கு படிப்பு வருகிறது. இரண்டு குடும்பத்திற்கும் முதலிருந்தே பகையில்லை. ஆனால் ஒரு இத்துப் போன பிளாஷ்பேக் இருக்கிறது. இதற்கு எல்லாம் தீர்வாக 2013லில் மைனாவின் நீட்சியாக பருத்தி வீரனால் பாதிக்கப்பட்ட விஜய.டி.ராஜேந்தர் எடுக்கும் ஒரு தலை காதல் அல்லது கருப்பனின் காதலி இருக்கும்.அதோடு இந்த உலகம் அழிந்து விட வேண்டும்.

இப்படி எழுதி நண்பருக்கு எழுதி படித்து காட்டினால் "பருத்தி வீரன் படத்தில் தலையில் ஆணி பாயும்.இதில் காலில் பாய்ந்து விட்டது..அதுல ரேப்..இதுல அடி உதை ஆனா அதே நாலு பேர் எண்ணிக்கை என்று சொல்கிறார்.அடிங்க நீ எல்லாம் ஏண்டா விமர்சனம் எழுதாமல் இருக்கே.

இன்னும் டைனமோ வெளிச்சத்தில் படிப்பு,பூ மலர்வது எல்லாம் சொல்லணும்னு ஆசை தான்.வேணாம் எல்லோருக்கும் பிடிச்சதை பிடிக்கலைன்னு சொல்லக்கூடாதாம்.அதனால விட்டுருவோம்.

எனக்கு சினிமாவின் சூட்சுமம் தெரியவில்லை என்று சொல்லி என் அண்ணன் சினிமாவெல்லாம் உனக்கு லாயக்குப்படாது என்று சொல்லி விட்டார்.ப்ளீஸ் ஒரு உதவி இயக்குனர் சான்ஸ் கொடுங்க.நல்லா டி.வி.டி பார்த்து சினிமா எடுக்கிறது எப்படி என்று தெரிந்து கொள்கிறேன்.

நண்பர் ஒருத்தர் சாட்டில் வந்து ரஜினியே சொல்லி விட்டார்.இந்த படம் நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல பதிலுக்கு ரஜினி கேடி படத்தையும் அருமை என்று சொன்னவர் என்று நான் சொல்ல இன்னும் ஆளை காணவில்லை.கண்டுப்பிடித்து தருபவர்களுக்கு பிரபு சாலமனின் அடுத்த கதை என்னவாகயிருக்கும் என்று சரியாக சொல்லி விடுகிறேன்.

இந்த மாதிரி அசட்டுத்தனங்களையும் மீறி படம் பிடித்து விட ஒரு காரணம் போதும்.அது என்ன என்று யோசித்தால் எனக்கு தெரிந்த காரணம் மேக்கப் இல்லாமல் இயல்பான அழகோடு இருக்கும் நாயகிகளாக இருக்கலாம். பருத்திவீரன் பிரியாமணியும்,மைனாவின் அமலா பாலும் வசீகரிக்கிறார்கள். இன்னும் கருப்பனின் காதலி படத்தின் நாயகி மட்டும் தான் மிச்சம்.அதை எல்லாம் பார்க்கும் முன் இந்த உலகம் 2012லில் அழிந்து விட வேண்டும்.

Wednesday, November 10, 2010

அர்ஜூனனின் சந்தேகம்

"நாங்கள் ஐவரும் உனக்கு அத்தை மைந்தர்கள் தான்.ஏன் அவர்களை எல்லோரையும்  விட்டு விட்டு நீயும் நானுமே அதிகம் நட்பு பாராட்டுகிறோமே.உன் தங்கையின் கணவன் என்ற கூடுதல் சலுகையாலா.." என்று கிருஷ்ணருடன் அர்ஜுனன் கேட்கிறான்.

"ஒரு காரியம் நிறைவேறாமலே இருக்கிறது.அதை செய்யவே நீயும் நானும் இங்கு வந்திருக்கிறோம்.நீயும் நானும் ஒன்றே. நானில்லாமல் நீ ஒரு காரியமும் செய்ய முடியாது.." என்று கிருஷ்ணன் விஷமமாக சிரிக்கிறான்.

"நாம் எப்படி ஒன்று ஒரு உதாரணம் தர முடியுமா.."  என்று அர்ஜுனன்  கேட்க

"பெண்கள் விஷயம் ஒன்று போதாதா.." என்று கிருஷ்ணன் சொன்னதும் ஒவ்வொரு முறையும் பெண்கள் விஷயத்தில் காதலில் சிக்கும் பொது கிருஷ்ணன் தான் உதவியிருக்கிறான் என்று நினைத்து பார்க்கிறான். கிருஷ்ணனோ  வேறு கதையை நினைத்து கொண்டிருக்கிறான்.

கர்ணனின் கதையை நினைத்து கொள்கிறான். சஹஸ்ர கவசன் என்றொரு அசுரன் வழக்கம்போல் தவங்கள் செய்து தன் உடலை ஆயிரம் கவசங்கள் காக்கவேண்டும் எனக் கேட்க அவ்வாறே அவன் உடலுக்கு ஆயிரம் கவசங்கள் ஏற்பட்டன. அதனாலேயே அவனுடைய உண்மையான பெயர் நமக்கு இன்னும் தெரியவில்லை. சஹஸ்ர கவசன் என்ற பெயராலேயே தெரிந்து கொள்கின்றோம்.  ஆயிரம் கவசங்களைப் பெற்றது மட்டுமில்லாமல், தன்னை எவராலும் கொல்லவோ, வெல்லவோ முடியாது. கடுந்தவம் இயற்றிக் கொண்டு போர் புரிபவர் யாரோ அவர்கள் மட்டுமே கொல்ல முடியும், வெல்ல முடியும் என்றும் வரம் வாங்கிக் கொண்டு விட்டான். யாராலும் ஒன்று தவம் செய்யமுடியும், அல்லது போர் புரிய முடியும். இரண்டும் ஒருசேர யாரால் செய்ய இயலும்? அதுவும் ஒரே நபரிடத்தில்? இனி நம்மை வெல்ல இப்பூவுலகில் மட்டுமில்லை, ஈரேழு பதிநாலு லோகங்களிலும் யாரும் இல்லை என்று இறுமாப்புடன் இருந்தான் சஹஸ்ரகவசன்.

அனைவரும் காக்கும் கடவுள் ஆன மஹாவிஷ்ணு தான் இதற்கு உதவவேண்டும் என அவரை வேண்ட அவரும் தன்னை இருவேறு வடிவங்களாக மாற்றிக் கொண்டார். ஒரு வடிவம் நரன், மற்றொரு வடிவம் நாராயணன்.

நாராயணன் தவத்தில் ஆழ்ந்திருக்க, நர வடிவில் இருந்த விஷ்ணு சஹஸ்ர கவசனோடு சண்டை போடுவார். பின்னர் நரன் தவம் செய்ய ஆரம்பிக்கும்போது நாராயணன் சண்டை போடுவார்.  இப்படியே தவமும், போரும் மாறி மாறி நடந்து 999 கவசங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. கடைசியாய் ஒரு கவசமும், காது குண்டலங்கலும் இருந்தன. அப்போது நரன் போருக்கு வர, சஹஸ்ர கவசன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி சூரியனிடம் தஞ்சம் அடைந்தான்.  அவனின் உண்மையான எண்ணம் புரியாமல் சூரியன் அவனைக் காப்பதாய் வாக்களிக்கப்பின்னர் உண்மை தெரிந்து அவனிடம்,இப்போ உன்னை ஒப்புக் கொடுத்துவிட்டால் உன் உயிர் அணுக்களைப் பாதுகாத்துத் தக்க சமயத்தில் பூமியில் பிறக்க வைப்பேன் என்று சொல்வார். அந்த உயிர் அணுக்களோடு தன் சக்தியையும் சேர்த்தே குந்திக்குக் கொடுப்பதால் சூரிய அம்சமாகவே பிறப்பான் கர்ணன்.  தன்னுடைய பரிசாகக் அந்த குண்டலங்களையும் அளிக்கிறார். மிகுந்திருந்த இந்த கவசத்தோடும் குண்டலங்களோடும் குழந்தையாய்ப் பிறந்தவனே கர்ணன் ஆவான். நரன் அர்ஜுனன் ஆகவும், நாராயணன் கண்ணனாகவும் பிறந்தனர்.

மிச்சமிருந்த ஒரு கவசத்தையும் குண்டலத்தையும் இந்திரன் தந்திரமாக கர்ணனிடம் இருந்து பறித்து விடுகிறான்.

பதினேழாவது நாளின் போர் முடிவில் கர்ணன் சாய்க்கப்படுகிறான். பதினெட்டு நாள் போர் முடிந்ததும் தேரை விட்டு இறங்கி ஓட சொல்லும் கிருஷ்ணனை ஒன்றும் புரியாமல் பார்க்கிறான் அர்ஜூனன்.காண்டீபத்தை எல்லாம் எடுத்து கொண்டு வரும் பொது தேர் தீப்பிடித்து எரிகிறது.

எப்படி இப்படி ஆனது என்று கேட்கும் அர்ஜூனனிடம் கர்ணன்,பீஷ்மர், துரோணர் எல்லாம் உன்னை விட வில் வித்தையில் சிறந்தவர்கள்.நானும் அனுமனும் உன் தேரில் இல்லாமலிருந்தால் அவர்கள் விட்ட அம்பு எல்லாம் தேரை  எரிந்திருக்கும் என்று சொல்ல அர்ஜூனனால் நம்ப முடியவில்லை.

காந்தாரியின் சாபத்தாலும்,துர்வாசரின் சாபத்தாலும் துவாரை எரிகிறது.எல்லோரும் அடித்து கொள்கிறார்கள். கிருஷ்ணன் அமைதியாக காட்டில் படுத்திருக்கிறான்.வேடன் மான் என்று நினைத்து அம்பு விடுகிறான். அர்ஜூனன் துவாரகையின் பெண்களை அழைத்து செல்ல வருகிறான். வரும் வழியில் மாடுகளையும் பெண்களையும் திருடர்கள் கவர காண்டீபத்தைக் காட்டி அவர்களை மிரட்டுகிறான்.அவர்கள் அவனை பொருட்படுத்தாமல் போக சண்டை நடக்கிறது.கிருஷ்ணன் இறந்து விட்டதால் காண்டீபம் வேலை செய்யவில்லை.மிக எளிதாக அர்ஜூனன் தோற்கடிக்கப் படுகிறான். கிருஷ்ணன் போன்ற உற்ற நண்பன் இறப்பையும் தாண்டி தோல்வி அவனுக்கு கிருஷ்ணன் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற  உண்மையை உரைக்கிறது.அச்தினாப்புரம் வந்து சேர்கிறான்.இந்த உலகத்தை விட்டு போக வேண்டிய நாள் வந்து விட்டது என்று இமயமலை நோக்கி பாண்டவர்களும் திரௌபதியும் நடக்கிறார்கள். கூடவே ஒரு நாயும் சேர்ந்து கொள்கிறது.அது தர்மனின் தந்தையான யமதேவன்.

Tuesday, November 9, 2010

கண்ணில் தெரிந்த(தெறித்த) வானம் - எட்டு

விடியகாலை ஆறு மணிக்கே மொபைல் அடித்து தள்ளியது.ஆறு முறை எடுக்காமல் அமர்த்தி விட்டேன். இது இடைவெளி குறைகின்ற தருணம் என்ற ரிங்டோனிற்கு ஏற்ப ஒரு வழியாக இடைவெளியை குறைத்து கண்ணைத் திறக்காமலே எடுத்து பேசி விட்டேன்.
 
"காலங்காத்தாலே எதுக்குடா என் உயிரை வாங்குறீங்க.." கத்தினால் "உன்னை உடனே பாக்கணும் வா.. கோவிலுக்கு வா.." பதிலுக்கு ஒரு கத்தல்.
 
செமஸ்டர் ரிசல்ட் எதுவும் வந்து விட்டதா அரியர் எதுவும் விழுந்து விட்டதா என்று வயிற்றில் லேசாக புளியைக் கரைத்தது.
 
யாருக்கும் தெரியாமல் தொண்ணூறுகளின் மிச்சமான டிவிஎஸ் சுசூகியை நகர்த்தினால் "என்ன ஆறு மணிக்கே வண்டி எடுக்கிற..ரிசல்ட் வந்துரிச்சா.." உள்ளே இருந்து குரல் வருகிறது.
 
"இல்ல பால் வாங்கிட்டு வர்றேன்.." என்று பதிலுக்கு காத்திருக்காமல் வண்டியை எடுத்தால் "அரியர் வைச்சிட்டு ரீ வால்யூவேஷன் காசு வாங்க எங்கிட்ட வராதே.."
 
"அட ராமா..சும்மாயிருங்க..நேத்து தான் எக்சாம் எழுதியிருக்கிறேன்..அதுக்குள்ள ரிசல்ட் வந்துரப் போகுது.."
 
அங்கே போய் கோவில் வாசலில் பிங்க் கலர் சுடிதாரில் நிற்கும் பிகரை சைட் அடித்து கொண்டிருந்தால் "கூப்பிட்டது நான்..பாக்குறது அங்கேயா.." குரல் கேட்டது.
 
"அதெல்லாம் இல்லயே.." மேலும்கீழுமாய் ஒரு மாதிரி தலையை ஆட்டி சைட் அடித்ததை உறுதி படுத்தினேன்.
 
"சரி இன்னைக்கு என்ன நாள்.."
 
"சனிக்கிழமை..இது கேக்கத்தான் வர சொன்னியா.."
 
"வேற ஒரு நாளும் இல்லையா.."
 
"இல்லையே..என்ன நாள்.."
 
"என் பிறந்த நாள்..ஒரு கிப்ட் தான் தரல..போன் பண்ணி சொன்னாத்தான் என்ன கேடு.." கோவில் அர்ச்சனையும் மீறி இவ அர்ச்சனை தான் காதில் நிரம்பி வழிந்தது.
 
"சொல்லவேயில்ல.."
 
"சரி வர சொன்னா..நேத்து போட்ட ஷாட்ஸ்,சட்டையில பட்டன் இல்ல..குளிக்கல சரி அட்லீஸ்ட் மூஞ்சு கழுவிட்டு வந்தா தான் என்ன.."
 
"நீ தானே அவசரமா வர சொன்ன.."
 
"இதெல்லாம் நல்லா சமாளி..பிறந்தநாள்னு சொன்னப்பின்னாடியும் வாயைத் திறந்து பதில் ஹேப்பி பர்த்டேன்னு சொல்ல மாட்டியா..எல்லாம் கேட்டு வாங்கணுமா.."
 
"பல்லு தேய்க்கலையேன்னு பாத்தேன்.."
 
"நீ எல்லாம் வேஸ்ட்..என் ஸ்கூல் பிரண்டு பனிரெண்டு மணிக்கு போன் பண்ணி சொன்னான் தெரியுமா.."
 
"சரி நான் வேஸ்ட் தான் விடு.."
 
"கோபம் மட்டும் பொத்துக்கிட்டு வந்துரும்..அவன் கிப்ட் எல்லாம் தந்தான் தெரியுமா.."
 
சும்மாவே நாக்குல சனி புட் போர்ட்ல டிராவல் பண்ணும்.பல்லு வேற தேய்க்கலையா சம்மணம் போட்டு உட்கார
 
"போய் அவனையே கல்யாணம் பண்ணு..என்னை ஆளை விடு.."
 
கோபத்துல இந்த பொண்ணுங்களுக்கு எப்படித்தான் இங்கீலிஸ் வருமோ தெரியல.என்ன என்னமோ திட்டிட்டு கடைசியா மூணு வார்த்தை சொன்னா.
 
"என் மூஞ்சிலே முழிக்காதே.."
 
"சரி.."  என்று சொன்னதும் கோபித்து கொண்டே போனவளிடம் குடுக்க வைத்திருந்த கிப்டை தேடினால் காணவில்லை.
 
கொஞ்ச நேரம் கழித்து இது இடைவெளி குறைகின்ற தருணம் என்று மொலைல் சிணுங்க வண்டியோட்டிக் கொண்டே எடுத்தால் "ஐ ஹேட் யூ.." என்று போனில் கத்துகிறாள்.

தொடரும்..