Thursday, December 3, 2009

வள்ளியூர் - சித்ரா,அருணா,ஈர்ப்பு

வள்ளியூர் - இந்த ஊரில் இருந்தது நாலரை வருடம் என்றாலும் இந்த ஊரை என் சொந்த ஊராக சொல்வதில் தான் எனக்கு சந்தோஷமே.என்னை பொறுத்த வரை ஒரு இரவு ஒரு ஊரில் தங்கி விட்டால் ஏதோ அறுக்க முடியாத பந்தம் இருக்கிறது என்றே நினைப்பேன்.எந்த ஊரின் மேல் இல்லாத அளவுக்கு பிடிப்பு. அப்படி ஒரு மாறாத காதல் அந்த ஊரின் மீது மட்டும்.காரணம் பால்யம்,சினிமா,ரெஜினா.

என்னை விட என் தம்பி மூன்று வயது சிறியவன்.அவன் பிறந்த போது ஒரு போட்டியாளனாக மட்டுமே பார்த்து இருக்கிறேன்.இரண்டு வயதிலேயே என்னை மிக சரியாக புரிந்து கொண்டவன் என்றே நினைக்கிறேன்.நான் வீட்டில் இருந்தால் அம்மாவை தூக்க கூட சொல்ல மாட்டான் என்று பிறர் சொல்ல பின்னாளில் தெரிந்து கொண்டேன்.மிக சுருக்கமாக பேசுவான்.பேசுகிறான் இன்று வரை.இப்போது உள்ள நெருக்கம் அப்போது இல்லை என்றாலும் கோல்மால் செய்யும் போது கூட்டுச் சேர்ந்து கொள்வான்.(மதியம் பின்வாசல் கதவைத் திறந்து வெயிலில் விளையாட செல்வது,யாரிடமாவது வம்பு இழுத்து அடி வாங்கியோ இல்லை கொடுத்தோ கமுக்கமாக வீட்டுக்கு வந்தாலும் காட்டிக் கொடுக்காமல் இருப்பது).இருவருமே அம்மா கிட்ட சொல்வேன்,அப்பா கிட்ட சொல்வேன் என்ற நச்சுப்பிச்சு செய்ய மாட்டோம்.அக்கா தங்கை இருந்திருந்தால் இதெல்லாம் இருந்திருக்கும்.எல்லாமே நேரான டீலிங்கு தான்.காட்டியே கொடுக்க மாட்டோம்.இல்லை மிகச் சரியாக ஆப்பு வைத்துக் கொள்வோம்.

அப்போதெல்லாம் கமல்,ரஜினி ரசிகனாகவே வளர்ந்தோம்.ரஜினி,கமல் படங்களைத் தவிர எந்த படமும் பார்க்க மாட்டோம்.விதிவிலக்கு கரகாட்டக்காரன் . ரஜினியை கலாய்த்தாலும் சிரித்து வைப்பேன்.கமலை கலாய்த்தாலும் அதே சிரிப்பு தான்.நோ வக்காலத்து அது இன்று வரை தொடர்கிறது.கமலின் நல்லப் படங்களை மட்டும் தான் பார்ப்போம்.ரஜினியின் நல்லப் படங்களைப் பார்க்க மாட்டோம்.

அருணா ஊருக்குள் இருந்தாலும் பெரும்பாலும் கமல் படங்கள் தான் வெளியாகும்.சித்ரா ஊருக்கு வெளியே ரஜினி படங்கள்.மாலை காட்சிக்கு அடம் பிடித்து போவோம்.அங்கிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து வர வேண்டும்.இருட்டாக இருக்கும்.அம்மா சின்ன பசங்களான எங்களைப் பிடித்துக் கொண்டு வேகமாக நடந்து வருவார்.தப்பித்தவறி கூட பின்னால் திரும்பி கூட பார்க்க மாட்டோம்.வரும் வழியெல்லாம் திட்டு வாங்கி கொண்டு வருவோம்."இப்படி படம் பாக்கணும் என்ன.." என்று திட்டு விழும்.வீட்டுக்கு வந்து ரஜினி படத்தை சிலாகிக்க கூட வழி இல்லாமல் தூங்கி விடுவோம்.அடுத்த நாள் சுத்தமாக மறந்து இருக்கும்.எவ்வளவு யோசித்தாலும் ஞாபகம் வராது.பார்த்த படங்கள் பக்கா கமர்ஷியல் தான் - பணக்காரன்,அதிசியப் பிறவி.

கமல் படங்கள் அப்படியே எதிர்.பேச நேரம் இருந்தாலும் ரஜினி படம் அளவுக்கு விவாதிக்க ஆர்வமும் இல்லை.வயதும் இல்லை.பெரும்பாலும் வீடு வந்து சேரும் முன்னே தூங்கி விடுவோம்.கொஞ்சம் அடிகள் வாங்கி கொண்டு சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவோம்.பார்த்த படங்கள் - எல்லாம் கமல் கஷ்டப்பட்டு நடித்தாக இருக்கும் - அபூர்வ சகோதரர்கள்,தேவர் மகன்.

தேவர் மகன் பார்த்தப் போது தான் உள்ளே இருந்த ரசிகன் விழித்து கொண்டான்.படம் ஆரம்பித்த பிறகு தான் போய் சேர்ந்தோம்.போக வேண்டாம் என்று வீட்டில் தடுத்தும் நானும் ஒரு ரஜினி ரசிகனும் போய் இருந்தோம்.ஆரம்பம் பார்க்கவில்லை முதல் முறையாக எரிச்சல் வந்தது.அடுத்த நாளும் படத்திற்கு போய் முதலில் இருந்து பார்த்து வீட்டில் திட்டு வாங்கியது தனி கதை.கமல் படங்கள் என்றுமே முதல் நாள் தான் - ரஜினி ரசிகன் என்று சொல்லி கொண்டாலும் கமல் படத்திற்கு தான் முதல் நாள் போவோம்.அது இன்று வரை தொடர்கிறது.

வைரம் படம் என்னையும் என் தம்பியையும் ரொம்ப பாதித்த படம்.கவர்ச்சியில் கதகளி ஆடிய படம்.பள்ளிக்கு செல்லும் போது ஆளுக்கொரு டப்பா எடுத்து செல்வோம்.பள்ளி முடிந்து வரும் போது பக்கத்தில் லாரி செட்.கண்ணாடி எல்லாம் உடைந்து கிடக்கும்.வைரம் என்று சொல்லி நானும் அவனும் பொறுக்கி வருவோம்.கையில் கீறல் விழுந்தாலும் கவலையே படாமல் எடுத்து வருவோம்.விளையாடி விட்டு புதைத்து விடுவோம்.அடுத்த நாள் எங்கே புதைத்தோம் என்று தெரியாமல் திரும்ப டப்பா,பொறுக்கல்,புதைத்தல்.

இரண்டு முறை உயிர் பிழைத்து இருக்கிறோம்.முதல் முறை பள்ளி கூரை எறிந்தது.பிறகு ஒரு மழை நாளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டோம்.அது அப்போது திரில்லாக இருந்தது.

ரெஜினா - நாலு வயது பெரியவள்.பள்ளி நேரம் தவிர அவள் வீட்டில் தான் இருப்போம்.சினிமா கதையை கதாசிரியரை விட திறமையாக சொல்வாள்.பள்ளி நேரத்தில் பிரிந்து இருப்பதால் நான்கு வருடம் முன் பிறந்து இருந்தால் அவளுடன் படித்து இருக்கலாம் என்று என் அப்பா அம்மா மேல் கோபம் வரும்.

பிறகு அந்த ஊரை விட்டு வந்தப் பிறகு கேள்விப்பட்டேன்.சித்ராவை மூடி விட்டார்களாம்.ரெஜினா வீட்டில் காலி செய்து விட்டார்களாம்.

சில வருடங்களுக்கு கழித்து திரும்ப சித்ராவைத் திறந்து விட்டார்கள் என்று தெரிந்து கொண்டேன்.ரெஜினா,அவளுடைய அப்பா,அம்மா இவர்களையும் பார்க்க வேண்டும்.அவர்களோடு சித்ராவில் படம் பார்க்க வேண்டும்.

டிஸ்கி :

கற்றது தமிழ் படத்தில் எனக்கு பிடித்தது இந்த பாடல் மட்டும் தான்.

"பறவையே எங்கு இருக்கிறாய்..
பறக்கவே என்னை அழைக்கிறாய்.."

அந்த ஊருக்கு போய் பறக்க கற்றுத் தந்த எல்லோரையும் பார்க்க வேண்டும்.ரெஜினாவின் குழந்தையிடம் கதை கேட்க வேண்டும்..திரும்ப பறக்க முயற்சிக்க வேண்டும்..

15 comments:

நையாண்டி நைனா said...

why feelingsu?

அகல்விளக்கு said...

//அந்த ஊருக்கு போய் பறக்க கற்றுத் தந்த எல்லோரையும் பார்க்க வேண்டும்.ரெஜினாவின் குழந்தையிடம் கதை கேட்க வேண்டும்..திரும்ப பறக்க முயற்சிக்க வேண்டும்.//

செம பீலிங்கா இருக்கு தல...

அகல்விளக்கு said...

//அந்த ஊருக்கு போய் பறக்க கற்றுத் தந்த எல்லோரையும் பார்க்க வேண்டும்.ரெஜினாவின் குழந்தையிடம் கதை கேட்க வேண்டும்..திரும்ப பறக்க முயற்சிக்க வேண்டும்.//

செம பீலிங்கா இருக்கு தல...

Baski.. said...

hi, my native is vallioor... nice post...

வெண்ணிற இரவுகள்....! said...

பால்யம் அவ்வளவு அழகானது ..............................நானும் வெயிலோடு விளையாடிய நாட்களை நினைக்கிறன் ...........நம் வாழ்வு பதினைனைந்து வயதுடன் முடிகிறது ,......

Unknown said...

//
அந்த ஊருக்கு போய் பறக்க கற்றுத் தந்த எல்லோரையும் பார்க்க வேண்டும்.ரெஜினாவின் குழந்தையிடம் கதை கேட்க வேண்டும்..திரும்ப பறக்க முயற்சிக்க வேண்டும்.//

முடித்த விதம் தான் அருமை..,

வெண்ணிற இரவுகள்....! said...

நான்கு வருடம் முன்னாடி பிறந்திருக்கலாம் ரசித்தேன் அரவிந்த் ....ஏதோ இலக்கிய கட்டுரை படித்ததை போல் இருந்தது .....

Raju said...

\\என்னை விட என் தம்பி மூன்று வயது சிறியவன்\\

யோவ்..தம்பின்னா சின்ன வயசாதான்யா இருக்கனும்..!

இந்த மாதிரி அடிக்கடி இந்த பதிவை படிக்கும்போதுமனசுக்குள்ளே கவுண்டமாணி வந்தார்.

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு தல.

தேவன் மாயம் said...

.கமல் படங்கள் என்றுமே முதல் நாள் தான் - ரஜினி ரசிகன் என்று சொல்லி கொண்டாலும் கமல் படத்திற்கு தான் முதல் நாள் போவோம்.அது இன்று வரை தொடர்கிறது.
//

ஆச்சரியமாக இருக்கிறது!

அமுதா கிருஷ்ணா said...

ஹே,,நல்லாயிருக்கு அரவிந்த்...

ஊர்சுற்றி said...

அரவிந்த்,

வள்ளியூரின் வடக்கிலிருந்து தெற்கு வரை, அடி அடியாக நானும் அளந்திருக்கிறேன். சித்ராவிலும் அருணாவிலும் படம் பார்த்திருக்கிறேன்.

படிக்கும்போதே உங்கள் உணர்வுகள் புரிந்தன. :)

ஒரு மின்னஞ்சல் அனுப்புங்களேன்.
oorsutrijonson@gmail.com

ezhil said...

me too from val sir...did u study in indra school

இரும்புத்திரை said...

aamaa ezhil from 1989-1993 in indhira school first std to fourth std