Monday, May 31, 2010

நர்சிம் என்ன பாரதியும் அதே ஜாதி தான்

காமராஜின் பதிவின் ஆரம்பத்தில் பாரதியின் வரிகளோடு ஆரம்பித்தது.ஆனால் அவருக்கு தோதுபடும் வரிகளை மட்டும் அவர் எடுத்துக் கொண்டுள்ளார். எனக்கு எதிர்வினை செய்ய ஏற்ற வரிகள் இது தான்.

"ஜாதிகள் இல்லையடி பாப்பா.." என்று அதே பாப்பான் பாரதி தான் சொன்னார்.பாண்டிச்சேரியில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களில் நிறைய பேருக்கு பெயரே பாரதிதான்.அவர் எங்களில் ஒருவர் என்று தான் சொல்லியிருக்கிறார்கள்.இதுவரை தெரியாத நர்சிமின் ஜாதியும்,சந்தன முல்லையின் ஜாதியும் இந்த பதிவின் மூலமாகத் தான் எல்லோருக்கும் தெரிந்தது என்பது காமராஜிற்கு இப்போதாவது தெரிந்தால் நான் கொஞ்சமாவது சந்தோசப்படுவேன்.

நர்சிமின் முகத்திரையைக் கிழிக்கிறேன் என்று சொல்லி கிழிக்க ஆரம்பித்த உடன் கூடவே மாதவராஜின் முகத்திரையும் சேர்ந்தே கிழிந்து விட்டது.பதிவில் சொல்லியிருக்கிறார்."அவன் இவன் என்பது இனி எந்த பதிவு எழுதினாலும் மாறாது என்று." பின்னூட்டத்தில் அது அந்த பதிவிற்கு மட்டும் என்று சொல்லியிருக்கிறார்.

நர்சிம் பதிவை எடுத்து விட்டார்.அதற்கு காரணமான பதிவும்,பிற்கு வந்த எதிர்வினைகளும் இன்னும் துருப்பிடித்த இரும்பாக துருத்திக் கொண்டே தான் இருக்கிறது.

கார்க்கி - இவரோடு அரிதாகத்தான் நான் ஒத்துப் போவேன்.அப்படி ஒத்துப் போகும் இடங்களில் ஒன்று நர்சிம்.கக்கூஸ் என்று இவருக்கு அடைமொழி தந்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.சாக்கடை புழுக்கள்,கக்கூஸ் என்று சொல்லி விட்டு ஏன் போன வருடத்தில் இருந்து குத்திக் கொண்டே இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

நர்சிம் புனைவில் வந்த வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டுயிருக்கிறார்.பதிவையும் நீக்கியிருக்கிறார்.நர்சிம் பாத்திரக் கொலை செய்தார் என்று வைத்து கொண்டாலும் கொலை செய்ய தூண்டியது யார்.மாதவராஜ் இதற்கு பதில் சொன்னால் நன்றாகயிருக்கும்.

விஜியின் பதிவில் - இந்த பதிவை நீக்குவதற்கா இங்கு கொண்டு வந்து போட்டோம் என்று சந்தனமுல்லை சொன்னது எங்க டாடி குதிரில் இல்லை என்று சொல்வது போலிருந்தது.இதற்கு காமராஜ் பதில் சொன்னால் நன்றாகயிருக்கும்.

எனக்கு கோபமெல்லாம் நர்சிம் மீது தான்.

உங்களுக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை தான் நர்சிம்.

போன வருடம் குட் டச் பேட் டச் வெற்றிக்கு காரணம் தீபா தான் என்று உங்கள் பதிவில் புகழ்ந்தீர்கள்.ஜூலை மாதம் அதற்கு பரிசு கிடைத்தது.

டாக்டர் ஷாலினியைக் கிண்டல் செய்து வரிகள் லதானந்த் பதிவில் இருந்தது யாருமே கேட்கவில்லை.விஜி சொன்னார்.எதுவும் நடக்கவில்லை.நர்சிம் ஒரு கண்டனப் பதிவு எழுதினார்.அந்த வரிகள் நீக்கப்பட்டது.அதற்கு பின்னூட்டத்தில் கிண்டல் செய்தவர்களையும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பெண் பதிவர்களிடம் இருந்து கோரிக்கை வந்தது.அதர்கு கைமாறு உங்களுக்கு அதே விஜி மூலம் உங்களுக்கு கிடைத்ததா நர்சிம்.

எண்ணங்களில் அம்மாக்கள் வலைப்பூவில் சந்தனமுல்லையில் செயல்பாடு குறித்து பாராட்டியிருந்தார்.அதற்கு சேர்த்து டிவிட்டரில் இணைத்து தேரை தெருவில் விட்டார்களே.

டி.ஆர்.அஷோக் கண்டித்து நீங்கள் ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள்.பெண்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் உங்கள் குரல் வேண்டும்.உங்கள் எழுத்து வேண்டும்.டி.ஆர்.அஷோக் யூ டூ நர்சிம் என்று வலியோடு கேட்டாலும் மன்னிப்பு கேட்டார் என்றால் அது உங்களுக்காக மட்டும் தானிருக்கும்.

தீண்டாமை ஒழிக்க சென்றதாக மாதவராஜ் சொன்னார்.முதலில் உங்கள் நண்பர் காமராஜிடம் இருக்கும் சாதி வேற்றுமை எண்ணத்தை ஒழியுங்கள் தோழரே.முதலில் வீடு அப்புறம் நாடு.இல்லையென்றால் ஊருக்கு உபதேசம் சொல்வது போல் ஆகி விடும்.

இனி எந்த பெண் பதிவர்களின் பங்களிப்பும் யாவரும் கேளிரில் வராது.உங்களுக்கு எதிர்வினை வராது.எழுதவே போவதில்லை என்று சொல்லி விட்டீர்களே நர்சிம்.

நர்சிமின் முகத்திரையை கிழிக்கிறேன் என்று யாரும் உங்கள் முகத்திரையையும் கிழித்து கொள்ள வேண்டாம்.உங்களுக்கு தோதான வரிகளை சொல்லாமலிருந்தால் பாரதியையும் பாப்பான் என்றே சொல்லியிருப்பீர்கள்.

Friday, May 28, 2010

ஜோசியம் இஃப் எல்ஸ் காதல்

பத்தாவது பொதுத் தேர்வின் போது ஏதோ ஒரு பரிட்சையை முடித்து விட்டு தேறுமா தேறாதா என்று எல்லோருமே பார்த்துக் கொண்டிருந்தோம்.நண்பன் ஒருவன் மட்டும் சோகமாக இருந்தான்."என்னடா சிவகுமார் பேப்பர் காட்ட மாட்டேன்னு சொல்லிட்டானா..அவனுக்கும் எனக்கும் ஒரு கணக்கு இருக்கு..இதையே காரணமா வைச்சு அடிச்சிரலாம்..பாஸ் மார்க் வந்துரும் தானே.." என்று ஆறுதல் படுத்தினேன்."அது இல்லடா..இது வேற.." இன்னும் சோகமாக சொன்னான்.

"என்ன அக்கா அடிச்சிட்டாளா..அவள எல்லாம் நீ தாண்டா சமாளிக்கணும்..அவள் அடிக்க எல்லாம் ஆள் செட் பண்ண முடியாது.." நிலைமையை மாற்ற அவனை கடித்து கொண்டிருந்தேன்.

"அதுவும் இல்ல..இது வேற.."

"_____ சொல்லித் தொலடா _____..நானும் பாக்குறேன்..அது இல்ல..இது இல்லன்னு உயிர வாங்காத.."

கெட்ட வார்த்தை வேலை செய்தது."சொன்னா அடிக்க கூடாது.." சொல்லும் போதே சட்டையை மடித்து விட்டு கொண்டேன்."எங்க வீட்டுக்கு ஒரு ஜோசியக்காரன் வருவான்..அவன் சொன்னான்.."

"என்னடா சொன்னான்..உனக்கு நாளைக்கு கல்யாணம் ஆயிரும்னு சொன்னானா..நல்ல விஷயம் தானே..நீயும் உன் பையனும் இன்னும் பதினைந்து வருஷம் கழிச்சி ஒண்ணா பிட்டடிச்சி டென்த் பாஸ் பண்ணலாம்.."

"இல்லடா டெண்டுல்கர் செத்துப் போயிருவான்னு சொன்னான்டா.."

"இந்த வருஷம் இங்கிலாந்துல வேர்ல்ட் கப் இருக்கு..அதெல்லாம் எப்படிடா நடக்கும்..அவன் சொன்னான்னு நீயும் ஏண்டா.." எனக்கு பரிட்சை பயம் போய் இந்த விஷயம் என்னை ஆக்ரமித்திருந்தது.

"நீ நம்பலையா..அவன் சொன்னது எல்லாம் நடந்து இருக்கு.."

"என்ன அவன் சொல்லி தான் ஆடு மாடு எல்லாம் நடக்குதா..ஒன்பதாம் தேதி படையப்பா ரீலிஸ்..பதிமூணு சோசியல்..இரண்டரை மணி ஷோ ஒகேவா.." பேச்சு படையப்பாவிற்கு மாறியிருந்தது.நானும் டெண்டுல்கர் விஷயத்தையும் மறந்து விட்டேன்.

முதல் போட்டி சவுத் ஆப்ரிக்காவிடம் மவுத் ஆகி விட்டோம்.காலையில் தூங்கி கொண்டிருக்கும் போதே போன்."அவன் சொன்ன மாதிரியே நடந்திரிச்சி..டெண்டுல்கர் இறந்துட்டானாம்..வயசுல மட்டும் தான் இடிக்குது.."

விசாரித்த போது தான் தெரிந்தது.அது ரமேஷ் டெண்டுல்கர் என்று.சச்சின் இந்தியா வந்து விட்டார்.ஜிம்பாபேயுடனான மேட்ச்சில் சச்சின் இல்லாத காரணத்தால் மூன்று ரன்னில் காலி.இப்படியே போனால் அடுத்த போட்டியிலும் கென்யாவுடன் தோற்று விடுவோம் என்ற நிலைமை.சச்சின் வந்து அடித்தவுடன் தான் வெற்றி.ஜிம்பாபேவுடன் தோற்றதால் சூப்பர் சிக்ஸில் எல்லா போட்டியையும் ஜெயிக்க வேண்டிய நிலைமை.அதோடு வெளியே வந்து விட்டோம்.

அதிலிருந்து ஜோசியம் பார்ப்பதென்றால் ஒரு அலாதி பிரியம் தான்.என்னைக்கு என் வேலை விஷயத்தில் குறி சொன்னார்களோ அதில் இருந்து ஒரு பயம் கலந்த வெறுப்பு.நல்லதாக சொன்னால் ஏற்றுக் கொள்ளும் மனதிற்கு கெட்டதாக சொன்னால் ஏற்க கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறது.பல வருடங்கள்,பல நாட்கள் ஆன நிலையில் என் கையை பார்ப்பேன் என்று அடம் பிடித்து சொன்னவை இங்கே.போல்ட் பாண்டில் அவர் சொன்னது.

"நீ ஒரு புத்திசாலி..ஆனால் அதை வெளியே சொன்னால் அது மற்றவர்களுக்கு தெரியும்.. ஏன் வெளியே சொல்வதேயில்லை.."

"நான் ஒரு புத்திசாலின்னு நானே சொன்னா மட்டும் தான் உண்டு.என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே.." - வெளியே சொல்லவில்லை.

"நீ இன்னும் ஐம்பது வருஷம் உயிரோடு இருப்ப.."

"இன்னும் அத்தனை நாள் பதிவு படிக்கிறவன் நிலைமை தான் மோசம் இல்ல மோஷன்.."

"உன் கையில பணம் தங்காது.."

"தங்கிட்டாலும்..சின்ன வயசிலேயே தெரியும் என் கை ஓட்டக்கை என்று.கையை குமித்து தண்ணீரை அள்ள சொல்வார்கள்.தண்ணீர் உள்ளங்கையில் தேங்கி நின்றால் பணம் நிற்கும் என்றும் இல்லை என்றால் நிற்காது என்றும் சொல்வார்கள்.."

"உன் இதயத்தை மட்டும் பத்திரமா பார்த்துக்கோ.."

"உண்மை தான்..அடிக்கடி துடிக்குது.." என் எண்ணம் அவருக்கு தெரிந்து விட்டது என்று நினைக்கிறேன்.உடனே

"உனக்கு இன்னும் ஒரு வருஷத்துல கல்யாணம் ஆயிரும்.."

"விளங்கும்..குழந்தை திருமணம் தப்பில்ல.." என்று நினைத்து கொண்டேன்.

"உனக்கு ஒரு காதல் இருந்தது.அதுவும் பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுகளில்..சற்றே யோசித்து விட்டு தீவிரமான காதல் நீயில்லாமல் நானில்லை என்று உருகி இருப்பீர்களே.."

சொல்லும் போது நான் இடைமறித்தேன்."அதி தீவிரமான காதல்.." என்று சொல்லி விட்டு நினைத்து கொண்டேன்."நான் அந்த சமயத்தில் மூன்று பெயரை காதலித்தேன்.ஜோசியத்துல எந்த பொண்ணு என்று சொல்ல முடிந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.மூணு பேர்ல ஒருத்திக்கு கல்யாணம் ஆகவில்லை.என்னை விட அதிக சம்பளம் வேற வாங்குறாளாம்.மனதிற்குள் இஃப் எல்ஸ் ஓடிக்கொண்டிருந்தது."

இஃப் (நான் காதலித்த பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தால்) தென்

    இஃப் (அவள் கணவனிடம் கேட்டுப் பாக்கலாம்) தென்

        இஃப் (அவள் தொல்லை பொறுக்காமல் சரி என்றால்) தென்

            சும்மா சொன்னேன் என்று சமாளிக்கலாம்

      எல்ஸ் இஃப் (என்ன கொழுப்பா என்றால்) தென்

            வீட்டில் பெண் பார்க்க சொல்லலாம்.

    எண்ட் இஃப்

  எல்ஸ் இப் (அவளிடமே கேட்டுப் பாக்கலாம்) தென்

       இஃப் (என் புருஷன் கிட்ட கேட்டு சொல்றேன் என்று சொன்னால்) தென்

          வீட்டில் பெண் பார்க்க சொல்லலாம்.

       எல்ஸ் இஃப் (சரி என்று சொன்னால்) தென்

         சும்மா சொன்னேன் என்று சிரிக்கலாம்.இன்னைக்கு ஏப்ரல் ஒண்ணு   இல்லையா என்று கேட்கலாம்

        எண்ட் இஃப்

      எண்ட் இஃப்

எல்ஸ் இஃப் (நான் காதலித்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகாமலிருந்தால்) தென்

      இஃப் (அவளுக்கும் விருப்பமிருந்தால்) தென்

           கிவ் மீ எ சான்ஸ் என்று சொல்லாம்.

       எல்ஸ் இஃப் (திரும்பவும் நீயா என்று சொன்னால்) தென்

       வீட்டில் பெண் பார்க்க சொல்லலாம்.

      எண்ட் இஃப்

எண்ட் இஃப்

இதை அம்மாவிடம் சொன்னால் திட்டு விழும்."ஆமா எந்த வேலையை தான் ஒழுங்கா செஞ்சிருக்க..சாப்பிடும் போது படிச்சுக்கிட்டே டிவி பாக்குறது.எதுலையும் உருப்படி இல்ல.." அதே பதினெட்டு வயதில் அம்மா கத்தியது ஏனோ நினைவுக்கு வந்தது.

திரும்பவும் சோசியம் மீது லேசாக நம்பிக்கை வந்தது.

Thursday, May 27, 2010

அவழ் ஒளு லேவலை

நாலாயிரத்தி எழுநூற்றி சொச்சத்திற்கு வேலைக்கு சேர்ந்திருந்தேன்.சென்னையில் இருந்து நண்பர்கள் காறித் துப்பிக் கொண்டிருந்தார்கள்."என்ன ______க்குடா அங்க போன..எங்க கூட இருந்தா என்ன..அதை விட கூட முன்னூறு ரூபாய் வாங்குறோம்.." என்று ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் வறுத்து எடுத்தார்கள்.இதற்கு பயந்தே அவர்களுக்கு மெயில் கூட அனுப்புவதில்லை. சி.டி.எஸ் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளாமல் போனது இன்னும் கோபத்தைக் கிளறியிருந்தது.பட்டமளிப்பு விழாவில் கூட கலந்து கொள்ளாமல் இருந்து விட்டேன் என்னை விட திராபையானவர்கள் எல்லாம் நல்ல வேலையில் இருந்ததோடு மட்டுமில்லாமல் "நீ எவ்வளவுடா வாங்குற.." என்று எல்லார் முன்னால் கேட்டு வைப்பார்கள்.ஒரு காலத்தில் மதித்த சாதாமணிகள் கூட அலட்சியம் செய்வது போலிருக்கும்.இதெல்லாம் தேவையா.

நாற்பத்தி ஜந்து நாட்கள் வேலை பார்த்தால் அந்த நாலாயிரத்தி சொச்சத்தை கண்ணிலே பார்க்க முடியும்.அப்படி பார்த்தால் என் தினக்கூலி நூறு ரூபாய் தான்.தினமும் கிடைத்திருந்தால் பத்தாவது நாளில்அடுத்த வண்டி பிடித்து எங்காவது என்ன எங்காவது சென்னைக்கே ஓடி வந்து விடலாம் என்று விடாமல் தோன்றும்.தம்பி படித்து கொண்டிருந்தான்.நான் வாங்கும் சம்பளம் வீட்டிற்கு தேவையாகயிருந்தது.வெறுப்பின் விளிம்பில் இருந்த காலத்தில் தான் அவள் வந்தாள்.

தற்காலிகப் பணியாளர்களுக்கு எல்லாம் பயிற்சி தருகிறேன் என்று மூன்று நாட்கள் உயிரை வாங்குவார்கள்.நான் வழக்கம் போல கடைசி இருக்கை.அங்கு இருந்தால் தான் மொபைலில் விளையாட முடியும்.திடீரென ஏய்ஹோ ஒரு சத்தம்.ஒரு பையனை அவள் அடி வெளுத்துக் கொண்டிருந்தாள்.அவள் இடத்தில் உட்கார்ந்து விட்டானாம்.அவள் சண்டையிடும் பாணி மொபைலை விட சுவாரஸ்யமாகயிருந்தது.அவள் இருந்த இடம் என்ன செய்தாலும் மற்றவர்களுக்குத் தெரியும்.நான் கேம் விளையாடுவதைக் கவனித்திருக்கிறாள்.அடுத்த நாள் நான் இருந்த இடத்தைப் பிடித்திருந்தாள்.நான் போனவுடன் "உட்காருகிறாயா.." என்று கேட்டாலும் அவளுக்கு விட மனமில்லை."ம்..ம்.." தலையாட்டிய எனக்கு நேற்று அடி வாங்கிய பையனின் முகம் ஞாபகம் வந்து சிரித்து விட்டேன்.காரணம் தெரிந்தவுடன் இருவருக்குமிடையில் ஒரு நட்பு இருந்தது.

மெயில் அனுப்பி கொண்டேயிருப்பாள்.எல்லாம் பார்வேர்ட் மெயிலாகத்தானிருக்கும்.முதலில் நானும்,அடுத்து அவளும் நிரந்தரப் பணியாளர்களாக சேர்ந்திருந்தோம்.அவள் பீருடன் வோட்காவும் அது இல்லாத பட்சத்தில் பீரையோ வோட்காவையோ அடிப்பவளாக மாறியிருந்தாள்.அதுவும் அவள் மேல் ஈர்ப்பு மட்டுமில்லாமல் பயமும் வர காரணமாயிருந்தது.வாங்கி கொடுத்தே எனக்கு மாளாதே என்று நினைத்து கொண்டேன்.ஆறு மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியிருந்தேன்.அருள் படம் ஓடிக் கொண்டிருந்தது.ஜோதிகாவும் விக்ரமும் பிரியாணி கணக்குப் போட்டுப் பார்ப்பார்கள்.வடிவேலு அதை கட்டிக்கப் போறவன் தானே பீல் பண்ணனும் இவன் ஏன் பண்றான் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.நான் மட்டும் சிரித்துக் கொண்டிருந்தேன்.தம்பி நினைத்திருப்பான்."இங்கு இருக்கும் போது நல்லாத்தானே இருந்தான்..".அம்மாவிற்கு மட்டும் வீட்டிற்கு வந்தால் தான் உனக்கு சிரிக்கவே தெரிகிறது என்று சந்தோஷம்.அம்மாகளுக்கு மட்டும் எப்பவுமே குழந்தைகள் தான்.

அவள் மேல் ஈர்ப்பு ஏற்பட அது மட்டும் காரணமாக இருக்காது என்று உள்மனது அடிக்கடி சொல்ல எதையோ எங்கோ கிண்டிக் கிளறி அவள் பிறந்த தேதியைக் கண்டுப்பிடித்திருந்தோம்.என்னை விட கொஞ்சம் பெரியவள்.அதெல்லாம் அப்போது தெரியவில்லை. இந்த விஷயத்தில் சச்சினோடு மகேஷ் பாபுவையும் சேர்த்துக் கொண்டது.ஆணிகள் - சின்னது,பெரியது என்று வித்தியாசமில்லாமல் பிடுங்க வைத்தார்கள்.நேரமின்மை,எரிச்சம்,கோபம் எல்லாம் சேர்த்து அவளை மறக்கடித்திருந்தன.ஏதோ ஒரு மழை நாளில் அவளிடம் பேசிக் கொண்டிருந்த சமயம் ஏதேச்சையாக அவள் ஆடையை சரி செய்ய நம்மை போய் தப்பாக நினைத்து விட்டாளே என்று கோபத்தில் பேசுவதேயில்லை.கல்லூரி கால வீராப்புகளும் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.காதல் எங்கே இருக்கிறது மனதிலா இல்லை வேறு எங்குமா என்று கேட்டு கேட்டே காதலித்தவனை எல்லாம் சாகடித்த காலம். அப்படியிருந்தவன் இப்படி ஆகி விட்டானே என்று மன்சாட்சி எல்லாம் தனியாக பிரிந்து கேள்வி கேட்காத வரை தப்பித்தேன்.

எங்காவது பார்த்தால் காற்றில் பெரிதாக கை ஆட்டுவாள். அப்போதெல்லாம் நீர்க்குமிழி போல வைராக்கியங்கள் எல்லாம் பட்பட்டென உடையும்.கடைசி வைராக்கியம் உடைவதற்குள் அவள் பார்வையில் இருந்து மறைந்திருப்பேன்.அவளிடன் பேசுவதற்கு பின்னாடியே அலைந்து கொண்டிருந்த ஒருவன் அவளுடன் இருக்கும் போது அதை போல காற்றில் ஏதோ வரைய என் முதுகே புண்ணாகி விடும் அளவிற்கு முறைத்தான்.ரொம்ப நாள் கழித்து ஒரு பேரூந்தில் தான் அவளை பார்த்தேன்.

உடனே ஆயிரம் வயலின்,கிதார் கொண்டு வாசித்தது போல "தேவதை தேவதை தேவதை..அவள் ஒரு தேவதை.." என்று பிண்ணனியில் பாடல்கள் கேட்பது போல ஒரு பிரமையிருந்தது.ஒரு வில்லன் வரும் வரை.எந்த நேரத்தில் காதல் கொண்டேன் பாடல் ஒலித்ததோ அவன் வந்தவுடன் இருவரும் அந்த படத்தில் வருவது போல இயர்போன்களை ஆளுக்கொன்றாக மாற்றிக் கொண்டு கேட்க ஆரம்பித்தார்கள்.பிண்ணனியில் இசைத்த ஆயிரம் வயனின்,கிதார் இழைகளும் ஒன்றாக அறுந்து பாடலே மாறி விட்டது."அவழ் ஒளு லேவலை.." இப்படி கேட்க ஆரம்பித்து விட்டது.நல்லவேளை "அவள் தேவையில்லை.." என்று கேட்பதற்குள் வயலின் வாசித்தவர்களை எல்லாம் துரத்தி விட்டேன்.

எப்போது பார்த்தாலும் அவள் அப்படியே இருக்கிறாள்.காற்றில் படம் வரைகிறாள்.வோட்காவோடு பீர் கலந்து அடிக்கிறாள்,மேக்கப் எட்டு கோட்டிங் அடிக்கிறாள்.அடுத்த வேலை கிடைத்ததும் அவளிடம் சொன்னேன்.ஏதோ அவளுக்கே கிடைத்தது போல் ஒரு சந்தோஷம்.

ஊருக்கு வரும் முன் சேனலை மாற்றி கொண்டேயிருந்தேன்.சிவசந்திரன் ஸ்ரீபிரியாவிற்காக பாடிக் கொண்டிருந்தார்.

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்..

திரும்பவும் அடுத்த வேலை,ஆரம்பகால எண்ணிக்கை போல ஏதோ ஒரு சம்பளம்,நண்பர்கள்,திட்டு,தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்று தெரியாத வேலை,தம்பி,அம்மா,இன்னொரு அவள்,ஆணி,வயலின்,அறுந்த இழை,தேவதை,புனைவு,புண்ணாக்கு,ப்ளாக்,பிராடு பட்டம் என்று போகும்.

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்..

Thursday, May 13, 2010

ஐ.சி.சி செய்த பித்தலாட்டம்

கிரிக்கெட் வெள்ளையர்கள் விளையாட்டு என்பதாலோ என்னவோ ஆங்கிலேயர்கள்,ஆஸ்திரேலியர்கள்(இங்கிலாந்தில் குற்றவாளிகளை அடைக்க இடம் இல்லாமல் அங்கு கொண்டு விட்டார்களாம் அப்படி உருவானவர்கள் தான் இவர்கள்.அதனால் கிரிமினல் புத்தி என்பது இரத்தத்தில் ஊறி இருக்கிறது),தென் ஆப்பிரிக்கர்கள்,நியுசிலாந்து அணியினர் இவர்களுக்கு சாதகமாகவே நடப்பார்கள்.ஆசிய அணியினருக்கு வழங்கப்படும் தண்டனையும்,நடுவர்களின் தீர்ப்புகளும் எல்லாம் அவர்களுக்கு எப்படி சாதகமாக இருக்கிறது என்று காண்பிக்கும்.ஆனால் இந்த அளவிற்கு பிராடுத்தனம் செய்வார்கள் என்று நானே எதிர்பார்க்கவில்லை தான்.

இந்தியா இடம் பெரும் பிரிவில் இடம் பெற வேண்டிய இங்கிலாந்து எப்படி இடம் மாறி அடுத்த பிரிவிற்கு சென்றது என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.அதாவது ஏ1(ஆஸ்திரேலியா),பி2(ஸ்ரீலங்கா),சி1(இந்தியா),டி2(இங்கிலாந்து) என்று வர வேண்டிய பிரிவில் எப்படி வெஸ்ட் இண்டீஸ் வந்தது.டி பிரிவில் அவர்கள் தான் இரண்டு போட்டிகளையுமே வென்று விட்டார்களே.அப்படி என்றால் டக்வோர்த் முறைப்படி கொடுத்த வெற்றி செல்லாதா.

படங்களை பார்க்க

முதல் சுற்று ஆட்டத்திற்கு  முன்


முதல் சுற்று ஆட்டத்திற்கு பின்

இங்கிலாந்து அரையிறுதிக்கு வர வேண்டும் என்றே செய்யப்பட்ட மாற்றம் இது.கண்டிப்பாக இந்த பிரிவில் அந்த அணி விளையாடி இருந்தால் ஆஸ்திரேலியாவும்,இலங்கையும் துவைத்து எடுத்து இருக்கும்.இந்து கூட இலங்கை வெல்வதற்கு தான் வாய்ப்பு அதிகம்.சரியான அட்டவணையின் படி இந்தியா ஆறாம் தேதியே ஆடியிருக்க வேண்டும்.அடுத்த போட்டி எட்டாம் தேதியும் கடைசி ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டி பத்தாம் தேதியே முடிந்து இருக்க வேண்டும்.இந்தியாவில் ஆட்டத்தைப் பார்க்க அட்டவணையை வலிந்து திருத்தியிருந்தாலும் இங்கிலாந்து எப்படி அந்த பிரிவிற்கு போனது.

ஏன் இந்த பித்தாலாட்டம் என்று பார்த்தால் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இறுதியில் மொத வேண்டும் என்பதே.அது ஒரு காலும் நடக்காது என்று இலங்கை இன்று நிரூபிக்கலாம்.ஒரு வேளை அதே அட்டவணைப்படி ஆடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்குமா என்றால் அது ஐ.பி.எல் பார்ட்டிக்கே வெளிச்சம்.தோனியின் திட்டங்களைப் பற்றி தனிப்பதிவே போட வேண்டும்.

Wednesday, May 12, 2010

உங்களுக்கு திவாகர் வாசுவை தெரியுமா

திவாகர் வாசு - சென்னை வந்த புதிதில் சென்னை சி.ஐ.டி நகரில் இருக்கும் டெலிபோன் குவாட்டர்சில் குடியிருந்தோம்.விஜய் போன்ற திராபை நடிகர் எல்லாம் கொஞ்சமே கொஞ்சம் தெரிந்த காலத்தில் எங்கள் குடியிருப்பின் அத்தனை பசங்களுக்கும் திவாகர் வாசு தான் ஹீரோ.இன்னும் தெரியவில்லையா(விஜய் போன்றோர் கொண்டாடப்படும் சமூகத்தில் இது தான் பிரச்சனையே இதற்கு தான் கேரளாவில் பிறந்திருக்க வேண்டும் - நன்றி சாரு மற்றும் சாறு சங்கர்)

ராபின் சிங் எல்லாம் அவர் வீட்டிற்கு அடிக்கடி வருவார்.ராபின் சிங் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்திருந்த காலம்.ரன்னிங் பெட்வின் தி விக்கெட்ஸ் அடிக்கடி அவர் ஆடும் போது உச்சரிப்பார்கள்.எதிர் முனையில் ஜடேஜா ஓடிக் கொண்டிருப்பார்.அது திவாகர் வாசு ஓடியிருக்க வேண்டிய இடம். காலையில் டென்னிஸ்,மாலையில் கோல்ப் மட்டையோடு திவாகர் வாசு அடிக்கடி தென்படுவார்.கொஞ்சம் ஏறி அடித்தால் அவர் வீட்டு ஜன்னல் உடையும். உடைத்திருக்கிறோம்.அவர் எதுவுமே சொன்னதில்லை.

ரஞ்சி ஆடும் தமிழக அணியில் திவாகர் வாசு ஆடும் போதெல்லாம் அவர் பெயர் நாளிதழில் வராத நாட்கள் குறைவு தான்.என்றாவது காரை வெளியே எடுக்கும் போது எங்களுக்காக மூன்று பந்துகள் வீசி விட்டு செல்வார்.அதை ஆடுவதற்கு தான் அடிதடி நடக்கும்.ரஞ்சி போட்டிகள் இல்லாத நாட்களில் பர்ஸ்ட் டிவிஷன் போட்டிகள் நடக்கும்.அணியின் பெயர்களே வித்தியாசமாக இருக்கும்.மாம்பலம் மஸ்கிட்டோஸ்.அவர் செம்பிளாஸ்ட் அணிக்காக விளையாடியதாக ஞாபகம்.அந்த அணி எல்லா முறையும் குறைந்தது அரையிறுதியை தொடாமல் வந்ததில்லை.

ஒரு மாலை வேளையில் திவாகர் வாசுவைப் பற்றிய பேச்சு எழுந்தது.அவருக்கு இங்கிலாந்து அணியில் ஆட வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் ஆடினால் இந்திய அணிக்கு மட்டும் தான் இல்லை சும்மா இருப்பேன் என்று மறுத்து விட்டாராம்.அவர் மேல் ஒரு மதிப்பு எழுந்தாலும் அவர் ஒரு ஏமாளி என்ற எண்ணம் எழாமலில்லை. (அதற்கு முந்தைய வருடத்தில் தான் இங்கிலாந்தில் ஆடிய போட்டிகளில் இருந்து அணிக்கு இரண்டு திறமையான வீரர்களை கண்டுப் பிடித்திருந்தோம்.அது கங்குலி மற்றும் டிராவிட்.)

இங்கிலாந்து இப்படி செய்வது ஒன்றும் புதிதல்ல.தற்போது இருக்கும் அணியில் கீஸ்வெட்டர்,லம்ப்,பீட்டர்சன், ஜோனதன் டிராட் என்று தென் ஆப்பிரிக்க வீரர்களை வைத்தே அவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார்கள்.திவாகர் வாசுவும் இங்கிலாந்து அணியில் ஆடியிருந்தால் தெரிந்திருக்கும் செய்தி.அப்போது இந்திய அணி கர்நாடக லெவனாக இருந்தது.கும்பிளே,ஸ்ரீநாத்,பிரசாத்,ஜோஷி,சுஜித் சோமசுந்தர்,விஜய் பரத்வாஜ்,தோடா கணேஷ் மற்றும் டேவிட் ஜான்சன் என்று படு திராபையாக இருந்தது.உள்ளூர் ரஞ்சியிலேயே ஜெயிக்க முடியாத அணி இந்திய அணியில் விளையாடினால் எப்படி இருக்கும்.

திவாகர் வாசுவிற்கு தற்சமயம் வயது நாற்பதை தாண்டி விட்டது.இப்பொழுதும் குவைத் அணிகளில் ஒரு அணியின் சார்பாக விளையாடி கோப்பையை வென்று உள்ளார்.இன்னும் அவர் ஆட்டத்திறனை இழக்கவில்லை என்று பேசிக் கொண்டார்களாம்.

ஸ்ரீநாத்,அகர்கர்,பதான்,சுக்லா தான் கபில்தேவிற்கு அடுத்தபடியாக அணிக்கு கிடைத்த ஆல்ரவுண்டர் என்று சொல்வார்கள்.அவர்களே ஆல்ரவுண்டர் என்றால் திவாகர் வாசுவை என்ன சொல்வது.தற்போது வாசு பெங்களூரில் இருக்கும் நேஷனல் கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெரும் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.கிரிக்கெட்டுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு அழியவே அழியாது.

சென்னையில் என் பதின்ம வயதின் முதல் எதிர் வீட்டு ஜன்னலே திவாகர் வாசு தான்.அந்த வீட்டை காலி செய்யும் போது திவாகர் வாசு அவர் வீட்டை இடித்து புதுப்பித்து கொண்டிருந்தார். அந்த வீடு இருந்த நிலை இந்திய அணியின் தேர்வாளர்கள் அவர் வாழ்கையில் விளையாடியது போலிருந்தது.

Wednesday, May 5, 2010

கதை நாயகனின் சாதாமணிகள் - கென்னின் சாந்தாமணியின் மறுபதிப்புகள்

கதை நாயகன் - முட்டாள் என்று மற்றவர்களிடம் பெயர் வாங்க விரும்பும் அதி புத்திசாலி."கொஞ்சமே கொஞ்சம்" கோபம் வரும்.எல்லாம் புரிந்து கொள்ளும் வயது வரை கிராமத்தில் இருந்ததால் வயது,படிப்பு என்று பாரபட்சம் காட்டாமல் எல்லோரையும் வம்புக்கு இழுப்பவன்.வாரத்திற்கு குறைந்தபட்சம் ஏழு சண்டையாவது இழுத்தால் தூக்கம் பொத்துக் கொண்டு வருமளவிற்கு நல்லவன்.மின்னலே படத்தின் தீவிர ரசிகன்.ராஜ் டிவியில் போடுவதால் அந்த படம் பார்ப்பதை தவிர்ப்பவன். அதில் வரும் ராஜேஷ் சிவகுமாரை ஆதர்ஷமாக கொண்டிருந்தாலும் மெக்கானிக்கல் இஞ்சினீயரிங் கிடைக்காமல் ராஜீவ் சாமுவேல் போல கணினி படித்து அமெரிக்காவில் _____ கழுவ ஆசைப்பட்டவன்.மின்னல் வெளிச்சத்தில் யாரையும் பார்க்க முடியாமல் டியூப் லைட் வெளிச்சத்தில் கூட டிம்மாக இருந்த சாதாமணிகளை காதலித்த கதையை இனி பார்ப்போம்.

கதை நாயனுக்கு ஏதாவது பெயர் வைக்க வேண்டுமே.இணையத்தில் இந்த பக்கங்களுக்கு சாவே இல்லாத காரணத்தால் அவனை அமர் என்று அழைப்போம்.இனி..

"அமர் இன்னைக்கு இ.டி கிளாஸ் இருக்கு..தெரியும் தானே..டிராப்டர் கொண்டு வரலையா.." பஸ்ஸில் ஏறும் போதே ஒரு குண்டுப் போட்டு விட்டு தான் அடங்கினான்.பெயர் விக்ரம்.பெண்களை வசியப்படுத்துவது போல் பேசுவான்.எதிர் எதிர் துருவங்கள் முதல் சந்திப்பிலேயே ஈர்த்து கொண்டது ஒன்றும் அதிசயமாக தெரியவில்லை.கல்லூரியில் பெண் தோழிகளை வைத்தே மதிப்பு.முடித்தப்பின் வைத்திருக்கும் பணத்தை வைத்து மதிப்பு.அதனால் அவனுக்கு ஒரு மதிப்பு உண்டு.

"பாக்கலாம்..இன்னும் அதுக்கு நாலு மணி நேரம் இருக்கு.." இடியே இடித்தாலும் சாதாரணமாக எடுத்து கொள்ளும் வழக்கமிருப்பதால் அதை மிக சாதாரணமாக எடுத்து கொண்டான்.ப்ளஸ் டூ பொது தேர்வின் நடந்த போது அவனை தவிர வீட்டில் எல்லோரும் முழித்துக் கொண்டிருப்பார்கள்.

"மச்சி முதல் நாளே கெட்டப் பெயர் வாங்க முடிவு பண்ணிட்டியா.." விக்ரமால் முடிந்த அளவு இவனுக்காக கவலைப்பட்டான்.

"எப்படியும் துணைக்கு ஆள் கிடைக்கும்..இ.டி வரையவே எனக்கு பிடிக்கல..பி.ஈ படிப்புல தமிழ் எல்லாம் ஒரு பாடமா வராதா.." அமர் அவன் கவலையை சொல்லிக் கொண்டிருந்தான்.

வகுப்பில் பார்த்தால் அவனைத் தவிர எல்லோரும் டிராப்டர் கொண்டு வந்திருந்தார்கள்.சுற்றும் முற்றும் குனிந்து நிமிர்ந்து பார்த்தால் அவனைத் தவிர எல்லோரும் டக் இன்,ஷூ என்று அமர்க்களப்படுத்தி கொண்டிருந்தார்கள்.இவர்களை மாற்ற ஒரு அமர் பத்தாது என்று நினைத்து கொண்டான்.

புதிதாக உள்ளே வந்தவன் "நான் அர்ஜூன்..உங்களுக்கு இ.டி எடுக்கிறேன்..உங்க பெயரை எல்லாம் சொல்லுங்க.."

ஒவ்வொருத்தியாக பீட்டர் விட்டுத் தள்ளினார்கள்.சுவாரஸ்யமில்லாத வழவழவென்ற அறிமுகம்.ஒருத்தி அதிபுத்திசாலி பி.ஈ படித்து விட்டு எம்.சி.ஏ படிக்க போகிறேன் என்று சொல்ல அமர் மட்டும் சத்தமாக சிரித்து வைக்க அர்ஜூனிடம் மாட்டிக் கொண்டான்.

"உங்க பெயர் என்ன சார்..ஏன் சிரிப்பு.."

"அமர்..இல்ல பி.ஈ படிச்சிட்டு எம்.சி.ஏ வா..இதுல படிக்கிறது தான் அதுலையும் வரும் என்று நினைக்கிறேன்.."

"உங்க லட்சியம் என்ன.."

"...."

"அரியர் இல்லாமல் கிளியர் பண்ணுவதா.." வகுப்பே அமரை பார்த்து பல்லைக் காட்டியது.

"இப்போ திருப்தியா..உக்காரட்டுமா.." அமர் பார்வையில் ஒரு முறைப்பு தெரிந்தது.

"நான் நடத்துறதை நல்லா புரிஞ்சுகிட்டா அது இன்புட்..பரிட்சையில் அதை கொண்டு வருவது அவுட்புட்.." அவன் பாட்டுக்கு அறுத்து கொண்டிருந்தான்.

அமர் மட்டும் கவனிக்காமல் இருப்பது போல் தெரிய வர அர்ஜூன் திரும்பவும் அவனை பிடித்து..

"ஆமர் நீங்க இன்புட் - அவட்புட் எக்சாம்பிள் சொல்லுங்களேன்.."

"நாம சாப்பிடுற சாப்பாடு இன்புட்..அதுவே அடுத்த காலையில் வேற வழியா.."

"போதும் நிறுத்து.." அர்ஜூன் கத்தினான்.

"வந்தா அவுட்புட்.." சொல்லி நிறுத்தவும் அர்ஜூன் முறைத்து கொண்டே "எல்லோரிடமும் டிராப்டர் இருக்குதா.." என்று அமரின் வீக்னெஸ்ஸில் கையை வைத்தான்.

"..."

"இதுக்கெல்லாம் வாய் திறக்க மாட்டீங்களே சார்..இல்லையா அது இல்லாமல் என் கிளாசிற்கு வராதே.." சொல்லி விட்டு போய் விட்டான்.

"மச்சி இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்..எதுவும் பேசாதேன்னு.." விக்ரம் சொல்லி வருத்தப்பட்டான்.

இண்டர்வெல்லில் பக்கத்து கிளாஸ் பையன் ஒருவன் வந்து அமரை விசாரித்து கொண்டிருந்தான்.

"நான் தான் அமர்.. என்ன வேணும்.."

"நான் சுமன்.."

"கோல்டியா.." நினைத்து கொண்டதை வெளியே கேட்கவில்லை.முதல் என்ன காரணமாக வந்திருப்பான் என்று தெரிந்து கொள்ளும் வாய் வரை வந்ததை அடக்கி கொண்டான்.

"அமர் இந்தா நேத்து டிராப்டரை பஸ்ஸில் விட்டு விட்டேன்..நீ வைத்துக் கொள்.." கொடுத்து விட்டு நன்றி சொல்வதற்குள் போய் விட்டான்.

இ.டி கிளாஸ்..

"அமர் எங்கே போற..பின்னாடி தானே வழக்கமாய் உட்காருவோம்.." விக்ரம் பக்கத்தில் இடம் போட்டு விட்டு அழைத்தான்.

"இல்ல மச்சி..இன்னைக்கு மட்டும் முன்னாடி..இல்ல அவன் வந்து என் பக்கத்தில் நிற்பான்.." என்று சொல்லி விட்டு ஒரு பெண் பக்கத்தில் காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டான்.

"என் பிரெண்ட் வரா.." அவள் இடத்திற்கு சொந்தம் கொண்டாட

"பின்னாடி என் பிரெண்ட் ஒரு இடம் போட்டு வச்சிருக்கான்..அங்க உக்கார சொல்.."

அர்ஜூன் அமரை ஆச்சர்யமாக பார்த்தான்.இவனுக்கு எப்படி டிராப்டர் கிடைத்தது என்பது போலிருந்தது அவன் பார்வை.

"எல்லோரிடமும் பென்சில் இருக்கா..அமர் உங்கிட்ட.."

அமர் ஒரு காந்தி காலத்து பென்சிலை காட்ட அர்ஜூன் கோபத்தில் முறைத்தான்.

"சரி சார்..நான் வெளியே போறேன்.." என்று போவது போல் அமர் பாவ்லா காட்ட

பக்கத்தில் இருந்த பெண்ணிடம் இருந்து ஒரு பென்சில் வாங்கி தந்து அம்ரின் ஆசையில் மண்ணைப் பாறாங்கல்லோடு சேர்த்துப் போட்டான்.

ஒரு வழியாக இ.டி கிளாஸ் முடிந்ததும்..

"அமர் நீ என் நண்பன்டா.." விக்ரம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

"என்ன விஷயம்..எலி ஏன் இப்போ அர்ஜண்டா டவுசரை கழற்றி கொண்டு நிற்கிறது.."

"இல்லடா நீ ஒரு பொண்ணு இடத்துல உக்காந்தயில்ல..இடம் இல்லாமல் என் பக்கத்தில் தான் இருந்தா..இந்த கிளாஸ்ல அவன் தான் டாப் பிகர்.." விகரம் சொல்ல சொல்ல வயிறு எரிய தொடங்கியது.

"யாருடா அந்த பொண்ணு.."

"அதை விடு..உன் பக்கத்தில் ஒரு பொண்ணு இருந்துதே.."

"ஆமாண்டா அது ஒரு டப்பா பிகர்..பென்சில் தர அழுவுது.." அமர் இயலாமையில் பொழிந்தான்.

"டேய் அவ யார்ன்னு தெரியுமா..அர்ஜூனோட தங்கச்சி.."

"..." அமருக்கு பேச்சே வரவில்லை.இனி என்ன நடந்தாலும் அந்த சூப்பர் பிகர் பக்கத்தில் உக்கார முடிவு செய்தான்.

(தொடரும்..)