Monday, March 28, 2011

சீதையின் இன்பீனிட்டி காதல்

பஸ்சில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் போது கூட காதலை அவளிடம் இன்றே சொல்லப் போகிறேன் என்று எனக்கு தெரியாது.

நான் டென்த் படிக்கும் போது ஒரு பையன் என் கிட்ட காதலிக்கிறேன்னு சொன்னான். அதுல இருந்து அவன் கூட நான் பேசுவதை நிறுத்தி விட்டேன். ரொம்ப நல்ல பையன் தெரியுமா என்று அவள் சொல்லி முடிக்கும் முன் நான் கூட உன்னை லவ் பண்றேன். நானும் நல்ல பையன் தான். என் கூட பேச மாட்டியா என்று அவள் கண்ணுக்குள் பார்க்க முயன்று தோற்று விட்டேன்.

அவள் கண்களை என்னால் சந்திக்க முடியவில்லை. என்னை நெருங்கி வருபவர்களை எல்லாம் நெருக்கடியில் தள்ளாமல் நான் இருந்ததேயில்லை. அதற்கு மேல் இருவரும் பேசவில்லை. எழுந்து முன்னாள் போய் விட்டேன். அவள் பார்வை என் முதுகைத் துளைத்துக் கொண்டிருந்தது. நான் நிலை கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தேன். முதுகில் ஓட்டை எதுவும் விழுந்து விட்டதா என்று அடிக்கடி தடவிக் கொண்டேன். அவ்வளவு கூர்மையாக என்னை அவள் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு தெரிந்தது.

அவளுடைய நிறுத்தம் வருவதற்கு முன்பே இறங்குவதற்கு வாட்டமாக எனக்கு எதிரே வந்து நின்றாள். தூங்குவதாய் நடித்துக் கொண்டிருந்தேன். அவள் கூப்பிடுவதாய் நண்பன் எழுப்பிக் கொண்டிருந்தான். தூங்கும் போது எழுப்பாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் என்று அவன் மேல் எரிந்து விழுந்தேன். தூங்குறவனை எழுப்பலாம் அப்படி நடிப்பவனை எழுப்ப முடியாது. அவனை விடுங்க என்று சொல்லி விட்டு விடுவிடுவென இறங்கி போய் விட்டாள்.

"என்னடா போயாச்சா.."

"பின்ன இன்னுமா மானங்கெட்டுப் போய் இங்க நிப்பா..ஒரு பொண்ணு கிட்ட ஒழுங்கா பேச தெரியுதா..எப்ப பாத்தாலும் பெரிய புடுன்கின்னு நினைப்பு..உன்ன கிட்ட இன்னும் பேசுறாலே அவளை சொல்லணும்.."

அவனிடம் எதுவும் சொல்லவில்லை.பஸ் அவள் நிறுத்தத்தைத் தாண்டி அங்கிருக்கும் முட்டு சந்தில் திரும்பி வரும். அவள் இன்னும் அங்கேயே நிற்கலாம் என்று வலது பக்க இருக்கையிலிருந்து இடது பக்கம் போய் அமர்ந்துக் கொண்டேன்.

"இப்போ எதுக்கு அந்த பக்கம் போறே.."

"வெயில் அடிக்குதுடா மச்சி.."

"எங்க உன் மனசுல தானே.."

ஒன்றும் சொல்லாமல் முறைத்துக் கொண்டிருந்தேன். அவள் அங்கு நிற்கவில்லை.

"மச்சி இந்த பக்கம் இருக்கா.." என்று கத்திக் கொண்டிருந்ததவனை விலக்கி பார்க்க முயற்சித்தேன். அவளும் சாலையைக் கடந்து வலதுபக்கம் நிற்பாள் என்று நான் நினைக்கவேயில்லை.

"இப்போ மனசுல மழை அடிக்குமே.." என்று சீண்டிக் கொண்டிருந்தான். எல்லா மாற்றங்களும் நண்பர்களுக்குத் தான் தெரிகிறது. மழை தூறலாக ஆரம்பித்து பெரு மழையாய் மாறிக் கொண்டிருந்தது.

தொடரும்

Tuesday, March 22, 2011

அன்பென்னும் அதீத வன்முறை

காலனி வீட்டிற்கு குடி போய் ரெண்டு நாள் கழித்து தான் பாரதியைப் பார்த்தேன். தெருவில் விளையாடி கொண்டிருந்தவள் என்னை பார்த்ததும் இங்க வாடா என்று சொன்னதற்கு சும்மா சிரித்து வைத்திருக்கலாம். என் நேரம் சரிதான் போடி என்று சொல்லி விட்டேன். விளையாடுவதை விட்டு விட்டு நேராக வந்து என்னை அடித்து விட்டு போனவள் பின்னாலே போய் தள்ளி விட்ட ஆரம்பித்த சண்டையின் நீட்சியாக எனக்கு முகத்தில் நகக்கீறல்களும்,அவளுக்கு கை முழுவதும் சிராய்ப்புமாய் இருந்தது. வீட்டிலிருந்து அவள் அம்மாவை கூட்டிக்கிட்டு வந்தால் என்ன செய்வது என்ற நினைப்பே நகக் கீறல்களின் மீது டிஞ்சர் தடவியது போலிருந்தது. வழக்கமாக செய்யும் எல்லா சேட்டையையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இழுத்து போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன்.

"என்ன புள்ளிக்காரன் இழுத்து மூடியிருக்கான்..என்ன விஷயம்.." என்று அப்பாவின் குரல் கேட்டதும் இன்னும் உதற ஆரம்பித்தது. போர்வையை விலக்கி முகத்தைப் பார்த்து விட்டு "யார் கூட இன்னைக்கு சண்டை.." என்று விசாரணை ஆரம்பித்ததும் "அப்பா பாரதி தான் முதல்ல அடிச்சா..இவன் அப்புறம் தான் அவளை கீழே தள்ளினான்.." என்ற தம்பியின் சாட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. அடுத்த நாள் தான் எதிர்பாராத காட்சிகள் அரங்கேறியது. பாரதியின் குரல் கனவில் கூட கேட்பது போல பிரமை. முழித்து பார்த்தால் கால்மாட்டிலே இருந்தவளைப் பார்த்ததும் வெளியே போடி என்று கத்தலாம் போலிருந்தது. போடி என்றால் அடிப்பாளே என்ற பயத்தை விடவும் அப்படி சொன்னால் வீட்டில் திட்டு விழுமே என்ற காரணத்தினால் வெளியே போடி என்று சைகையில் சொல்ல ஆரம்பித்தேன். அவள் கண்டுக் கொண்ட மாதிரி தெரியவில்லை. தம்பி எந்திரிச்சிட்டான் என்று சொன்னவளைப் பார்த்து கொலைவெறி வந்து போனது.

பாரதி அவள் வீட்டின் கடைக்குட்டி. அவளுக்கு தம்பி வேண்டும் என்ற ஆசை வீட்டில் நிறைவேறாத காரணத்தால் வெளியே புதிதாக பார்க்கும் பசங்களிடம் எல்லாம் சண்டையிழுப்பாளாம். அவளுடன் சண்டையிடும் பையனைத் தான் தம்பி என்று கூப்பிட வேண்டும் என்று சங்கல்பமே வைத்திருந்தாக பின்னாளில் வெளியே விசாரித்து தெரிந்து கொண்டேன். பாரதி உங்கிட்ட வம்பிழுத்தாளா என்று தம்பியிடம் கேட்டதற்கு ஆமாம் என்னையும் யாருடா நீ என்று கேட்டா.நான் ஒண்ணும் சொல்லவில்லை. அவ போயிட்டா என்று சொன்னதும் ஆகா நாம தான் மினியேச்சர் சனியனைப் பனியனுக்குள் போட்டு விட்டோமே என்று நினைத்துக் கொண்டேன்.

நான் அவள் தம்பி என்று பள்ளி முதல் சர்ச் வரைக்கும் சொல்லி வைத்திருக்கிறாள். எந்த பிரச்சனையும் பள்ளியில் செய்ய முடியாது. பாரதி தம்பி தானே நீ.அவ எப்படியிருக்கா.நீ ஏன் இப்படியிருக்க என்று சொல்லி விட்டு தான் அர்ச்சனையை ஆரம்பிப்பார்கள். இதை கூட தாங்கி கொள்ளலாம். என் கூட பேசக்கூடாது என்று வகுப்பு பொண்ணுங்களை எல்லாம் மிரட்டி வைத்திருக்கிறாள். இந்த தொல்லை போதாது என்று மச்சான் மச்சான் என்று தோளில் கையைப் போடும் பாரதியைக் காதலிப்பவர்கள். என் வாழ் நாளில் அவள் தவிர்த்து எந்த பொண்ணுக்கும் இந்த அளவுக்கு பயந்ததேயில்லை. அவ என் அக்காயில்லை என்பதை மட்டும் வன்மத்தோடு சொல்லியிருக்கிறேன்.

அவள் எனக்கு நாலு வருஷ சீனியர் என்பதால் கொஞ்ச நாளிலேயே பள்ளியில் அவள் தொல்லையில்லை. வகுப்பிலிருக்கும் பெண்கள் மட்டும் தான் பேச மாட்டார்கள். அவள் வாசமே இல்லாதயிடத்தில் சகவாசம் வைத்து கொள்ளலாம் என்று மனதை தேற்றிக் கொள்வேன். நான் கல்லூரியில் சேரும் போது வேலைத் தேடிக் கொண்டிருந்தாள். நான் கல்லூரிக்கு போகும் பஸ்ஸில் தான் முதல் முறையாக அந்த பெண் அறிமுகம் ஆனாள். அவளிருக்குமிடத்தைக் கண்டுப்பிடிக்க வேலை அவுட் சோர்சிங் செய்யப்பட்டது. எல்லா விஷயமும் மிக முக்கியமாக பாரதி தெரியாமல் ஒரே நாளில் சேகரிக்கப்பட்டது. பாரதி ஊரில் இல்லாத நாளாக பார்த்து கட்டடித்து விட்டு அவள் கல்லூரி முன்பு நின்றுக் கொண்டிருந்தேன். பாரதி வந்து விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன். கொஞ்சம் பதற்றமாகயிருந்தது. சிகரெட் பிடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.சிகரெட் பிடிப்பது முதல் முறை. கையில் வைத்தே சிகரெட் கொளுத்திக் கொண்டு திரும்பினால் பாரதி நின்று முறைத்து கொண்டிருக்கிறாள்.

"எத்தனை நாளாடா இந்த பழக்கம்..அம்மாட்ட சொல்லட்டுமா"

"பாரதி இதான் முதல் சிகரெட்..இன்னும் பிடிக்கல.."

"இந்த காலேஜ் என்ன பண்றே..ரெண்டு நாள் ஊர்ல இல்லன்னா என்னயெல்லாம் பண்றே.."

"பாரதி இன்னைக்கு காலேஜ் லீவ்.."

"பொய் வேற.."

"ஆமா எனக்கு அந்த பொண்ணைப் பிடிச்சிருக்கு..கட்டடிச்சிட்டு தான் வந்தேன்..அதே மாதிரி இன்னைக்கு தான் முதல் தம் பத்த வைச்சேன்..நம்புனா நம்பு..இல்ல நம்பாதே.."

"காலேஜ் வந்துட்டோம்னு திமிரா.."

"சரி உனக்கென்ன என்ன வேவு பாக்குறது தான் வேலையா..நீ இங்க என்ன பண்ற.."

"நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு..உனக்கென்ன வயசு..அதுக்குள்ள இதெல்லாம் தேவையா.." என்று ஆரம்பித்து எல்லாரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததும் தான் விட்டாள்.

"சரி உன்னை கேட்டே எல்லாம் பண்றேன்..ஆள விடு தாயீ..இங்க என்ன பண்றே.."

"காலேஜ்ல வேலை கிடைச்சிருக்கு..உன் கிட்ட சொல்லலாம்னு போன் பண்ண வந்தேன்..நீ நிக்குற.." என்று அவளே சமாதானப்படுத்தி பக்கதிலிருந்த பிரியாணி கடைக்கு போய் என்னை எதுவும் கேட்காமல் அவளே ஆர்டர் கொடுத்தது இன்னும் எரிச்சலை அதிகப்படுத்தியது.

"இந்தா இதை சாப்பிடு..பிச்சி சாப்பிடு.." என்று அவள் செய்வதெல்லாம் கோபத்தைக் கிளறிக் கொண்டிருந்தது.

"நல்லவேளை நீ என் அக்காவா பொறக்கல.." என்று முனங்கினேன்.

"என்ன சொன்ன.." அடுத்த சண்டைக்கு தயாராகி கொண்டிருப்பது தெரியாமல் "நல்லவேளை நான் உனக்கு தம்பியா பொறக்கலன்னு சொன்னேன் போதுமா.." சொல்லி வாயை மூடுவதற்குள் அவள் தட்டிலிருந்த பிரியாணி என் சட்டையிலும் முகத்திலும் வழிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று கண்ணை மூடி அங்கேயே அமர்ந்திருந்தேன். இவ மூஞ்சிலேயே இனி முழிக்கக்கூடாதுன்னு நினைத்து கொண்டு கண்ணைத் திறந்தால் அவள் எதிரில் இல்லை. எப்பவும் இன்னொரு சட்டை கூடவே வைத்திருப்பேன். முகத்தை எல்லாம் துடைத்து விட்டு அந்த சட்டையை அணிந்து கொண்டு கல்லாவில் பணம் கட்ட போனேன்.எல்லா கண்ணும் என்னையே பார்ப்பது போலிருந்தது.

"எவ்வளவு பில்.."

"அந்த லூசுப் பொண்ணு குடுத்திருச்சி.." என்று என்னை சமாதானப்படுத்திய அவரிடம் எரிச்சலோடு கத்தினேன்.

"அவ என் அக்கா.." என்று சொல்லி விட்டு வெளியே வந்தால் அங்கே நின்றுக் கொண்டிருக்கிறாள்.

"என்னை மன்னிச்சிரு..வா இன்னொரு பிரியாணி சாப்பிடலாம்.." என்று கண்ணீரோடு சொன்னவளைப் பார்த்து வேண்டாம் என் கிட்ட வேற சட்டையில்ல.இன்னொரு நாள் பாத்துக்கலாம் என்று சொன்னதும் என்னை இழுத்துக் கொண்டே நடந்தாள்.

"விடு வர்றேன்.." என்று சொல்லியும் விடவில்லை.

காலேஜ் விடும் நேரம்.எந்த பொண்ணு காட்டு என்று கேட்டுக் கொண்டிருந்தாள். நீயே கண்டுப்பிடி என்று சொல்லி விட்டேன். ரெண்டு நாளில் அவள் படத்தோடு வந்து இவதானே என்று கேட்டாள்.

"ஆமா எப்படி கண்டுப்பிடிச்ச பாரதி.."

"இவளை பார்த்தால் தான் எனக்கு கோபம் வந்தது.." என்று சொன்னவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன்.

"ஏன் சிரிக்கிற.." என்று கேட்டவளிடம்

"இல்ல அவ சொன்னா பாரதி உனக்குத்தான் அக்கா..எனக்கு மாமியார்க்காரி..இப்படி சொன்னதற்கு நான் அவ சண்டைப் போட்டேன்..ஆனா அது உண்மை தான் போல.." என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

"அவளை வர சொல்லு..போய் பிரியாணி சாப்பிடலாம்.."

சரி என்று சொல்லி விட்டு இரண்டு சட்டையை எடுத்து பையில் வைத்துக் கொண்டிருந்தேன்.

Monday, March 21, 2011

தலைமுறையாய் தொடரும் கனவு

வெளியாட்களுடன் சேர்ந்து தங்க நேர்ந்தால் தூங்குவதேயில்லை. விடிய விடிய இணையத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தேன். நானில்லாத இணையம் ஆர்டிக்கின் ஆழமில்லாத ஆழ்கடலில் ஆக்ஸிஜன் கிடைக்காத ஒரு நாளில் இறந்து போன பெங்குயினாய் போய் விடுமோ என்ற பயமும் ஒரு காரணமாயிருக்கலாம். அது தவிர என் பலவீனங்களை வெளியே தெரிய விடுவதேயில்லை.

குர்ரம்,குர்ரம் என்று தூக்கத்தில் புலம்புவது கூட தூங்காமல் இருப்பதற்கு இன்னொரு காரணம். குர்ரம் யார் பாஸ் உங்க ஆளா என்று கேட்பவர்கள் சுற்றியிருக்கும் பட்சத்தில் வலையைக் காய வைத்து விட்டு தூங்கி விடுவேன்.அந்த கனவு என்னை துரத்தும் முன் வரை நானும் குர்ரம் என் பூர்வ ஜென்ம காதலியாகயிருக்குமா என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.

குர்ரம் என் ஒன்று விட்ட தம்பி. என்னை விட ஐந்து வயது சிறியவன். அப்பா சலீமை விட தாத்தாவிற்கு என்னை பிடிக்கும். தாத்தா சாகவே மாட்டாரா என்று அப்பா உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்த காலம். தாத்தாவின் அருகாமையிலே இருந்ததால் என்னையும் பிடிக்காமல் போய் விட்டது போல. பட்டத்து யானைகள் மோதிய போட்டியில் என் யானை அப்பாவின் யானையை ஜெயித்திருந்ததின் நீட்சியாக நாங்கள் வாள் கலந்திருந்தோம். தாத்தா சொன்னதால் குர்ரம் வந்து தடுத்து விட்டான்.

தாத்தா இறக்கும் முன் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்த அப்பாவிற்கு தண்டனைகள் எதுவும் கிடைக்காமல் போனதிற்கு அந்தப்புர செல்லத்தினாலும் உயிரோடியிருக்கும் ஒரே பிள்ளை என்பதால் மட்டுமே. போதைப்பொருள் எல்லாம் குறைத்துக் கொண்டார் போல.அதற்கு பிறகு நானில்லாத ஒரு நாளில் தாத்தா இறந்து போகும் முன் உடைவாளை அப்பாவிடம் தந்து விட்டு இறந்து போனாராம். என்னை தேடியதாக பின்னொரு நாள் கிசுகிசுத்தார்கள். அப்பா பாணியில் அதிரடியாக அரியணையைக் கைப்பற்றலாம் என்றால் தாத்தா பாணியில் எளிதாக் முறியடித்து என்னை சிறைப்படுத்தி விட்டார்கள். இன்னொரு தப்பித்து மாட்டியதால் கண்ணைக் குடுடாக்கி விட்டார்கள். எல்லாம் ஒரு நாளில் போனது போலிருந்தது. தம்பியுடன் என்னை அனுப்பியிருந்தார்கள்.குருடனுக்கு வேட்டையாடும் இடத்தில் என்ன வேலை என்ற கேள்வி யாருக்கும் வராமல் போனது ஆச்சர்யமே. கழுத்து நெறிப்பட்டு நான் சாகும் போது குர்ரம் வேட்டைக்குப் போயிருந்தான். அவன் கை நீளம் தான். வேட்டையாடும் இடத்திலிருந்து நீண்டு என் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு நீண்ட கைகளை ஆராய்ச்சியாளர்கள் எதிலும் குறிப்பிடாமல் போனது வருத்தமே. திருத்தி எழுதுவது தான் வரலாறு என்று ஒரு பெண்குரல் கேட்டது. என் ஒரே மனைவியாகயிருக்கலாம். திருத்தி எழுதப்பட்ட வரலாறாகயிருந்தாலும் அவன் மகன் அவனுக்கு செய்த கைமாறை கேள்விப்பட்டப் போது திருப்தியாகயிருந்தது.

அன்று குடிக்குமிடத்திற்கு போயிருக்கக்கூடாது. நான் தங்கியிருக்குமிடத்திலிருந்து ரொம்பவே தூரம். குடித்தவன் அறையிலே தூங்க வேண்டிய நிர்பந்தம். தூங்காத இரவாகத் தொடங்கியது. அவன் தூங்கும் போது அக்பர் அக்பர் என்று சொல்ல ஆரம்பித்தான். அடிக்கடி கண்ணைத் தொட்டு தொட்டுப் பார்த்தான். திரும்ப குடிக்கலாம் என்று சொன்னான். விசாரிக்கும் போது அவன் ஹெமூ என்று சொன்னான். எப்போதிருந்து இந்த கனவு உனக்கு வந்தது என்று கேட்டால் ஒரு கலவரத்தின் போது அவனுடைய ஊரிலிருந்து தான் ஆயுதங்களை அனுப்பினார்கள். அன்றிலிருந்து இந்த கனவு என்று சொன்னான். ஹெமூ ஆரம்பத்தில் ஆயுத வியாபாரி என்று சொன்னதும் மெலிதாக புன்னகை செய்தான்.

அக்பர் இந்த தோல்விக்கு காரணமல்ல எவனோ பெயர் தெரியாதவன் விட்ட அம்பு தான் காரணம் என்று சொன்னதிலிருந்து அவனுக்கு அந்த கனவு வருவதில்லையாம். வந்தாலும் அம்பு எய்தவன் பெயர் தெரியாத காரணத்தால் கலைந்து விடுகிறதாம். எனக்கு கனவு விட்ட பாடில்லை.அவன் நிம்மதியாக தூங்குவதை கண்டு உன் தலையை வெட்டியது பைராம் கான் என்றாவது சொல்லியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே காய வைத்திருந்த வலையை எடுத்துக் கொண்டு இணையத்தில் மீன் பிடிக்கத் தொடங்கியிருந்தேன்.