Thursday, December 3, 2009

யாரோ ஒரு அப்பாவி(யி)ன் காதலியின் முகம்

"பச்.." என் மேல் சரிந்திருந்தவளை நகர்த்தி விட்டு வேறு பக்கம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

"என்ன..நான் அலுத்து விட்டேன்னா.." குரல் உயர்த்தி அடுத்த சண்டைக்கு தயாரானாள்.

பக்கத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த ஜோடி திரும்பி பார்த்தது."உன் வேலையப் பாருடா.." என்று அவனை நோக்கி கத்த எத்தனித்த நான் வாயை மூடிக் கொண்டேன்.இவள் மேல் இருக்கும் கோபத்தை அவன் மேல் காட்ட விருப்பம் இல்லை அப்படி சொன்னால் அதில் துளியும் உண்மையில்லை.அவன் ஆள் பார்க்க கொஞ்சம் என்ன நிறையவே தாட்டியாக இருந்தான்.

"நான் போறேன்.." என்று கிளம்பியவள் கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்தாள்.காத்திருந்தும் பார்த்தாள்.சாதாரணமாக அவளை சமாதானப்படுத்தும் நான் அவளை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

ஏதோ திட்டி விட்டு சென்று விட்டாள்.

அவள் காலடித் தடங்கள் நான் ஒருவரும் இல்லாத மனிதன் என்று கேலி செய்வது மாதிரி இருந்தது.மண்ணை அள்ளி அதை சமன் செய்து கொண்டிருந்தேன்.யாரிடமாவது வம்பிழுத்து அந்த காலடித் தடங்கள் மீது கட்டிப் புரண்டால் சீக்கிரம் அழித்து விடலாம் என்று தோன்றியது.

பக்கத்தில் இருப்பவனைத் திரும்பி பார்த்தேன்.அவள் அவனுடன் சண்டையிடுவதைப் பார்த்து சிரிப்பு வந்தது.பெண்களே இப்படித்தான்.பக்கத்தில் இருக்கும் பெண்ணைப் பார்த்து எல்லாம் செய்வார்கள்.சண்டையிலும் கூடவா.அவன் என்னை போல் இல்லாமல் அவளை சமாதானப் படுத்தினான். முதல் முத்தமாக இருக்கும் என்று ஊகித்துக் கொண்டேன்.

பிறகு அவர்கள் இருவரும் என்னை கடந்து செல்லும் போது பார்த்தேன்.என்னை பார்த்து சிரித்தான்.அதில் இருந்தது விரக்தியா,கேலியாக அல்லது நட்பா என்று அனுமானிக்க முடியவில்லை.

இவ்வளவு சோர்வுக்கும் காரணம் - ஊரில் நடக்கும் கொடை.அதற்கு செல்ல முடியாமல் தவிப்பது.என்னை விட அங்கு எனக்காக தவிக்கும் சிலர் கண்கள்.குறிப்பாக ஒரு ஜோடி கண்கள்.

ஊருக்கு போக முடிவு செய்து விட்டேன்.காலையில் குருவாயூரில் அன் ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்டில் பயணம்.அவளிடம் சொல்லவில்லை.கழிவறைக்கு அருகில் இருந்து பயணித்தாலும் மனம் என்னவோ திரு நெல்வேலியில் இருந்தது.

கடக்கும் ஊர்களையும் கம்பிகளையும் எண்ணிக் கொண்டே செல்வது கொஞ்சம் சிரமமாகயிருந்தது.அந்த கண்களை நினைக்காமல் இருக்க கண்டதையும் மனம் செய்ய சொல்கிறது.

சின்ன வயதில் கொடை பார்க்க அப்பா தோள்களிலும்,கையைப் பிடித்துக் கொண்டு அவரை விடாமல் அலைந்தது எல்லாம் ஞாபகம் வந்தது.சரகடிக்கும் இடத்துக்குப் போய் எனக்கும் ஒரு க்ளாஸ் வேண்டும் என் அடம் பிடித்தது,நீச்சல் தெரியாமல் அப்பா இருக்கும் தைரியத்தில் கிணற்றில் குதித்தது எல்லாம் கோர்வையாக நினைவுக்கு வந்தது.

ஆடு வெட்டும் போதெல்லாம் தொழில் நேர்த்தியுடன் வெட்டுபவர்களுக்கு தான் அதிக மவுசு.ஒரே வெட்டில் தலை துண்டாக விழுந்தால் தான் சாமி நேர்த்திக் கடனை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம்.எங்களுடைய ஆடு மருள மருள முழித்துக் கொண்டு இருந்தது.வெட்ட அருவாளை ஓங்கியவுடன் அப்பாவின் பின்னால் ஒளிந்து கொண்டேன்.ஏதோ விழுந்த மாதிரி சத்தம்.கண் திறந்து பார்த்தால் என் கால் அருகில் ஆட்டுத்தலை.புதுச் சட்டையில் ஒரு பொட்டு ரத்தம்.ஆட்டின் கண்கள் என்னைப் பார்ப்பது மாதிரியே இருந்தது.சட்டையில் உள்ள ரத்தக் கறையைத் துடைக்க முடியவில்லை. அம்மாவை நினைத்தால் பயமாக இருந்தது.

மூன்று வருடங்களுக்கு முன் அப்பா வரவில்லை.நான் மட்டும்.குருட்டு தைரியத்தில் கிணற்றில் டைவ் அடிக்க,கால் பிசகி விட்டது.தூக்கி தான் வந்தார்கள்.வயலுக்கு சொந்தகார பெண் கண்ணில் கண்ணீர் வந்தது மாதிரி தெரிந்தது.யாரோ எனக்காக அழுதது என் வலியை கொஞ்சம் குறைந்தது மாதிரி தெரிந்தது.

கொஞ்ச தூரம் வந்தவுடம் என்னை இறக்க சொல்லி கால்களை ஊன்றி நிற்குமாறு மாமா சொல்லவும்,அவருக்காக வலியைப் பார்க்காமல் நின்று விட்டேன்.

"யார் அவங்க..சொந்த வயலில் அசம்பாவிதம் நடந்து விட்டது என்று அழுதாங்களா.."

"இல்ல..வந்து உங்க அப்பாவுக்கு வேண்டியவங்க.."

"அப்படின்னா.."

"வேண்டப் பட்டவங்க..இதுக்கு மேல எதுவும் வேணாம்.."

"எனக்கு தெரியணும் மாமா.."

"அவங்க விரும்பினாங்க..ஊர்ல எல்லோரும் தடுத்து விட்டார்கள்..அவங்க வேற கல்யாணம் செய்து கொண்டார்கள்.."

ஏனோ அந்த ஆட்டின் கண்கள் ஞாபகம் வந்தது.

ஒரு துளி ரத்தமும்,ஒரு சொட்டு கண்ணீரும் தெரிந்தது.

ஆடு வெட்டும் போது என்னை மறைத்து கொண்ட அப்பாவின் மீது எத்தனை சொட்டு ரத்தம் தெறித்திருக்கும்.காதலை வெட்டும் போதும் எத்தனை சொட்டு கண்ணீர் வழிந்திருக்கும்.

வயலில் வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி விட்டதாம்.அவர்களைப் பாக்க தான் இந்த அவசர பயணம்.

ஊர் போய் சேர்ந்ததும் அந்த வீட்டை நோக்கி நடந்தேன்.

"அம்மா எங்கே.."

"வயலுக்கு.." என்று அந்த சிறுவன் சொல்லி விட்டு போனான்.அம்மாவை கூப்பிட சென்று இருப்பான்.

வெளியில் கிடந்த கட்டிலில் இருந்து கொண்டு வீட்டை அளந்து கொண்டு இருந்தேன்.

"எப்போ வந்தீங்க.." சத்தம் கேட்டுத் திரும்பி பார்த்தேன்.

"இன்னைக்கு தான்.."

"வயல்ல கடலப் போட்டு இருக்கோம்..மாடு மேயாம முழு நேரமும் அங்கேயே கிடக்குறேன்.."

"எப்போ ஊருக்கு.."

"இன்னைக்கு கிளம்ப வேண்டியது தான்.."

கேட்டு விட்டு வெளியே வந்தவர்கள் கையில் ஒரு பை நிறைய கடலை.குடுக்க வந்தவர் ஏதோ நினைத்து நானே கொண்டு வருகிறேன் என்று உடன் வந்தார்.

ஆடு அறுத்து முடித்திருந்தார்கள்.தெரு முழுக்க ரத்தம்.ஒரே வெட்டில் கொல்லும் விற்பனர்கள் குறைந்து போனதால் ஆடு துடிக்க துடிக்க அறுத்து கொல்லத் தொடங்கி விட்டார்கள்.வெட்டும் போது சட்டை,வேட்டியில் கொண்டு போகும் ரத்தமெல்லாம் தெருவில் தேங்கி இருந்தது.

"இந்த தெருவை சுத்திப் போகலாம்.." ரத்தத்தை தவிர்க்கும் பொருட்டு சொன்னேன்.

"நான் பாக்காத ரத்தமா.." சொல்லும் போதே சிறிது கண் கலங்கி இருந்தது.

நான் அவர்களிடம் இருந்து விலகி கோவிலைச் சுற்றி நடக்க தொடங்கினேன்.அவர் ரத்ததில் நடந்து வந்தார்.ரத்தச் செருப்பு அணிந்தது போய் ஒரு பிரமை.

அவர்கள் வழியனுப்பி வைக்க ஊர் திரும்பி இருந்தேன்.வரும் வழியில் மொபைல் எடுத்து பார்த்தால் நிறைய தவறிய அழைப்புகள். அவளிடம் சொன்னேன்.கார் எடுத்து வந்திருந்தாள்.பொருளை எல்லாம் டிக்கியில் ஏற்றினோம்.

"என் எங்கிட்ட சொல்லாம போயிட்ட..கோபமா.."

"கல்யாணம் செஞ்சுக்குவோமா.."

"என்ன தீடிர்ன்னு.."

"ரத்தச் செருப்பு அணிய வேண்டாமே.."

"என்ன அ.." அவள் முடிப்பதற்குள் வாயை பொத்தினேன்.

"ரத்தச்சரித்தரம் முடிந்து போனதாகவே இருக்கட்டும்.." என்று அவளை பார்த்தேன்.காரின் பின் விளக்குகளின் இருந்து வந்த சிகப்பு வெளிச்சத்தில் அழகாக தெரிந்தாள்.

டிஸ்கி :

இது அக்மார்க் 420% கற்பனையே.அந்த அ - யார் என்று ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம்.அது ஈரோடை சேர்ந்த அகல்விளக்காவும் இருக்கலாம்.இல்லை அமெரிக்காவில் இருக்கும் அர்னால்டாகவும் இருக்கலாம்.

13 comments:

எறும்பு said...

ஏண்ணே,,, சலிக்காம எதையாவது போஸ்ட் பண்றீங்களே..... எப்படி?? ஹி ஹி சும்மா ஒரு ஜெனரல் நாலஜ் டீவலோப் பண்ணலாம்னு தான்.... காலைல தமிழ்மணம் பார்த்தேன்... உங்க போஸ்ட் இருந்தது ...
மத்தியானம் வந்தேன் அப்பவும் உங்க போஸ்ட் இருந்தது...
சரி சாயங்காலம் வந்த அப்பவும் உங்க போஸ்ட் இருக்கு....

எறும்பு said...

me the first & second

அகல்விளக்கு said...

நல்ல கதை தல...

ஆனா டிஸ்கில ஏன் இந்த கொல வெறி...

அகல்விளக்கு said...

//"என்ன அ.." அவள் முடிப்பதற்குள் வாயை பொத்தினேன்.//

இதுக்கு அர்த்தம் 'என்ன அவசரம்'...

தப்பா புரிஞ்சிக்காதீங்க மக்களே...

நையாண்டி நைனா said...

நல்லா இருக்கு கதை...
ஆனா போட்டிக்கு எழுதும்போது......

சரி.. வேணாம் விட்டுரு...

தினேஷ் said...

என்னதிது ? ஏன்யா இந்த ரெத்த வெறீ

thamizhparavai said...

நல்லா இருக்கு தலைவரே...
சாரு,விஜய் இவங்களையெல்லாம் விட்டுட்டு இப்படிக் கதை எழுத ஆரம்பிங்க...
//ஆனா போட்டிக்கு எழுதும்போது......//
:-)

ஈரோடு கதிர் said...

//ஈரோடை சேர்ந்த அகல்விளக்காவும் இருக்கலாம்.//

சரி சரி.... தம்பிய கவனிக்கிறோம்

பெசொவி said...

நல்ல கதை

Unknown said...

நல்லாருக்கு, ஆனா படிக்கும் போது அவர்களுக்கும் அவளுக்கும் குழப்பம் வந்துவிட்டது..

Unknown said...

ரெண்டாவது தடவ படிக்கும் போது தான் புரிஞ்சது..,நல்லாருக்கு தல.., போட்டிக்கு அனுபுரிங்களா..,

sathishsangkavi.blogspot.com said...

Very Interesting story......

லெமூரியன்... said...

ஏ மக்கா......கத தூள் கெளப்புது.....பின்னிஎடுதுடீங்க மக்கா...