Wednesday, September 22, 2010

ஓடுற நரியில ஒரு நரி நொண்டி நரியாம் சஜாங் சஜாங்

சின்ன வயசில எங்க ஆச்சி அடிக்கடி இந்த கதைய சொல்லுவாங்க.வளர வளர அதோட டைமென்ஷன் தான் மாறுது.

ஒரு ஊர்ல ஒரே ஒரு பனையேறி இருந்தாராம்.அவரு தினம் தினம் பனையேற காலங்காத்தாலே யோயிருவாராம்.ஒரு ஒன்பது மணி வாக்குல அவுக வீட்ல இருக்கிற கடைக்குட்டி தூக்கு வாளியில சாப்பாடு எடுத்திட்டு வருவானாம்.இதை ரொம்ப நாளா ஒரு நரிக்கூட்டம் ஒளிஞ்சு கிடந்து பாத்திருக்கு. அவன் தினமும் தூக்கு வாளியக் பனைக்குக் அடியில வைச்சிட்டு விளையாட போயிருவானாம். ஒரு நா அவசரமா முட்டிக்கிட்டு வர, வர்ற வழியில கீழ வைச்சிட்டு ஒதுங்க நரிங்க அதை ஏப்பம் விட்டுப் போட்டு எட குறைஞ்சது தெரியாம இருக்க வாளி முழுக்க இருந்து வைச்சிருச்சாம்.அதை தூக்கிட்டுப் போய் பனைக்குக் கீழ வைச்சிட்டு விளையாட போயிட்டானாம்.

அப்பாரு பசியில பனையில இருந்து இறங்கி அதை திறந்து பார்த்து கிறங்கிப் போயிட்டாராம்.பையனத் தேடிப் போய் தூக்கிப் போட்டு நாலு மிதி மிதிச்சவுடனே தான் கோபம் அடங்கிச்சாம்.பையன் நான் செய்யலன்னு சொல்லியிருக்கான்.ஆனா அப்பாரு நம்பல.

அடுத்த நாளும் சாப்பாடு எடுத்திட்டு வந்த பையனுக்கு பழக்கத்துல அவசரமா வர அப்பாவை நினைச்சிக்கிட்டு வந்ததை எல்லாம் அடக்கிட்டு ஓடி வந்திருக்கான்.பனைக்கு அடியில வைச்சிட்டு அப்பா அவசரம்னு சொல்லிட்டு ஓடிட்டான்.பையன் என்ன பண்றான்னு பாத்துக்கிட்டே இருந்திருக்காரு அப்பாரு. நரிங்க தின்னு ருசி கண்டுப் போய் பனைக்கே வந்திருச்சாம்.வழக்கம் போல வேலை நடந்திருக்கு.அவரும் மேல இருந்து பார்த்துட்டாரு.

அடுத்த நாளு பையன் வெறும் வாளியக் கொண்டு வந்திருக்கான்.திறந்து பாத்துட்டு ஏமாந்து போன நரிங்க அப்படி திகச்சி நிக்க அப்பாரு சொன்னாராம்.விருந்துலா சமச்சி வைச்சிருக்கேன் என்ன அவசரம் இப்ப வாங்கன்னு சொல்லியிருக்காரு.நரிங்களும் மண்டய ஆட்டிக்கிட்டு போக, போற வழியிலே பனங்கறுக்கு மட்டைய நல்லா செதுக்கி இருக்காரு.நரிங்களும் எதுக்குன்னு கேக்க உங்களுக்கு பாயாசம் செய்ய விறகு இல்ல அதான்னு சொல்லியிருக்காரு.

வீட்ல எல்லாருக்கும் இலயப் போட்டு உக்கார சொல்லியிருக்காரு.நரிங்களும் உக்கார கதவப் பூட்டிட்டு வந்து கறுக்கு மட்டையால வெளு வெளு வெளுத்திருக்காரு. கொஞ்சம் சுதாரிச்ச நரி எல்லாம் ஓடி போயிருச்சி.ஒரே ஒரு நொண்டி நரி மட்டும் மாட்ட  அதுவும் தப்பே செய்யாத நரி மட்டும் மாட்ட எல்லா கோபத்தையும் அது மேல காட்டு காட்டுன்னு காட்டியிருக்காரு.பிறகு அந்த பையன் அவங்க அப்பா இல்லாத நேரத்துல திறந்து விட்டுருக்கான்.

அப்புறமும் பழைய ருசியில மயங்கி நரிங்க வரும் போதெல்லாம் ஏலே அந்த கறுக்கு மட்டைய செதுக்குன்னு சொல்லியிருக்காரு.அந்த வார்த்தையிலே எல்லாம் பயந்துருமாம்.

இந்த கத நான் சின்னப் புள்ளையா இருக்கும் போது சொல்லிட்டு இதோட நீதி என்னலேன்னு கேக்க "தப்பு செய்ற நரியாயிருந்தாலும் நொண்டி நரியா மட்டும் இருக்கக்கூடாதுன்னு சொன்னேன்."

பத்து படிக்கும் போது ஒரு சண்டையிலே எங்க எல்லாத்துக்கும் சட்ட கிழிய ஆனந்த் வந்து யாருடா அடிச்சான்னு சொல்லி அந்த கூட்டத்துல புகுந்து அடிச்சி ஒருத்தனுக்கு தக்காளி சாஸை வழிய விட்டுட்டான். அப்பத்தான் தெரிஞ்சது நொண்டி நரிய வெளுத்தா போதும்னு.

காலேஜ் முடிச்சப்பின்ன தான் தெரிஞ்சது.நொண்டி நரிய எல்லாம் அடிக்கக்கூடாது.நல்ல கதியா இருக்கிற நரி காலைத் தான் நொண்டி ஆக்கணும்னு.

இன்னும் வருங்காலத்துல இந்த கத என்ன டைமென்ஷன்ல சொல்லப் போகுதோ தெரியல.

3 comments:

Unknown said...

மணிரத்னம் ஸ்டைல்ல கொஞ்சம் உல்டா பண்ணா இன்னொரு மெக்ஸிகன் அல்லது லெக்சிகன் அவார்ட் ரெடி...

நாந்தான் பர்ஸ்ட்...பர்ஸ்ட்....
என்னே ஒரு பாக்கியம்

ஆ.ஞானசேகரன் said...

கதை நல்லாயிருக்கு நண்பா.... நீண்ட நாட்களுக்கு பின் வணக்கம் நண்பா

ராவணன் said...

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டிவச்சேன்..ஒன்னு பாழு.ரெண்டுல தண்ணியே இல்ல....இது போன்ற பாட்டைப் பாடிக்கொண்டு சிலர் அலைகின்றார்கள்.அட வெண்ணை என்னடா சொல்றா என்று கேட்டால்...
முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டிவச்சேன்ன்..திரும்பவும்...

இது தேவையா?