Saturday, September 11, 2010

நேர்மை

படித்து முடித்த இளம் வக்கீல் அவன்.சீனியர் லாயரிடம் ஒருவரிடம் வேலை செய்கிறான்.அவர் அளவிற்கு சம்பாதிக்க தனியே பிரிந்து வருகிறான்.கோர்ட் செல்ல ஏதுவாக பெரிய ஊரில் அறை எடுக்கிறான்.அந்த ஊரில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் வேடிக்கை பார்க்கிறான்.

கள்ளச்சாராயம்,கட்டப்பஞ்சாயத்து என்று எல்லா வித பிரச்சனைகளும் அந்த ஊரில் இருக்கிறது. வருமானமே இல்லாதவனுக்கு பயமும் இருக்காது.முதலில் கள்ளச்சாராயத்தை எதிர்க்கிறான்.மரண அடி வாங்குகிறான்.மருத்தவமனையில் சாக கிடந்து பிழைத்து வருகிறான். திரும்ப எதிர்க்கிறான். அவன் நேர்மையை பார்த்து ஒரு சிறு கூட்டம் சேர்கிறது. இந்த முறையும் அடி விழுகிறது.நிறைய ஆட்கள் இருந்ததால் அடி பங்கு பிரிந்து விழுந்து சின்ன சின்ன காயங்களோடு போகிறது.மக்கள் மத்தியில் மவுசு ஏறிக் கொண்டே வருகிறது.

திரும்ப திரும்ப முயற்சி செய்து கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறான்.அடுத்து கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க கிளம்பும் போது ஒரு பெருங்கூட்டம் அவன் பின்னால் வருகிறது.எல்லாம் சட்டம் தான் செய்ய வேண்டும் நீங்கள் செய்யக்கூடாது என்று பேசியே அடிதடி இல்லாமல் கட்டப் பஞ்சாயத்து ஒழிக்கப்படுகிறது.

எந்த பிரச்சனை என்றாலும் அவன் இல்லாமல் தீர்வே கிடைக்காது என்று மக்கள் நம்பத் தொடங்கிறார்கள்.கொஞ்ச கொஞ்சமாக அசைக்க முடியாத சக்தியாக மாறியப்பின் மக்கள் கொஞ்சமாக கொடுக்கும் காசை வாங்க ஆரம்பிக்கிறான்.

ஒருமுறை பங்காளிகளுக்குள் பிரச்சனை வருகிறது.இவனைத் தேடி வருகிறார்கள்.

அண்ணனிடம் பத்தாயிரம் தாங்க கோர்ட்க்கு எல்லாம் போக வேண்டாம் நிறைய செலவு ஆகும் பேசித் தீர்த்துகலாம் என்று சொல்கிறான்.

தம்பியிடம் கொஞ்சம் கூடுதலாக கேட்கிறான்.தம்பிக்கு சாதகமாக முடித்து கொடுக்க பணம் கேட்டவுடன் தம்பிக்காரன் - என்ன அண்ணே புதுசா பணம் எல்லாம் வாங்குறீங்க.

தம்பி கோர்ட்டுக்கு போனால் இன்னும் அதிகம் ஆகும்.நானும் கொஞ்சம் சம்பாதிக்க வேண்டாமா என்று சொல்கிறான்.

அடுத்த கட்டப்பஞ்சாயத்து இவன் தலைமையில் நடக்கிறது.ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள் என்ன இருந்தாலும் படிச்சவன் படிச்சவன் தான்யா.

கள்ளச்சாராயம் காய்ச்சும் ஆட்கள் இவனிடம் வந்து கேட்க ஊருக்கு வெளியே காய்ச்சுங்க.பக்கத்து ஊர்ல வித்துருங்க.நம்ம ஊருக்குள்ள கொண்டு வராதீங்க.பாதி பணம் எனக்கு தந்துரணும் என்று சொல்கிறான்.

அவர்களும் சொல்கிறார்கள் என்ன இருந்தாலும் படிச்சவன் படிச்சவன் தான்யா.

இவன் குமாஸ்தாவிடம் சொல்லி சிரிக்கிறான். முதல்ல காசு கேட்டிருந்தா எவனாவது தருவான்னு நினைக்கிற.

குமாஸ்தா மனதுக்குள் நினைத்து கொள்கிறான் இது குரங்கு அப்பம் பங்கு வைச்ச கதை மாதிரி இருக்கு.

2 comments:

நீ தொடு வானம் said...

சிட்டிவேஷன் சாங் எப்படி போடுவாங்க.

Sri said...

you are good :-)

Srini