Sunday, July 11, 2010

ஐஸ் காபி வித் ராஜி

விடுமுறைக்கு வீட்டில் எல்லோரும் திருநெல்வேலிக்கு போயிருந்தார்கள்.எனக்கு செமஸ்டர் மே மாதம் வரை நீண்டிருந்தது.எதிர் வீட்டில் சாப்பாடு சொல்லியிருந்தார்கள்.ஆனால் ராஜி சமைத்து கொண்டு வருகிறேன் என்று சொன்னதால் சாப்பிடாமல் காத்திருந்தேன்.அவளை வரவேற்க லேசாகத் சாறலோடு மழை அடிக்கத் தொடங்கியிருந்தது.அவள் உள்ளே நுழையவும் மழை வலுத்திருந்தது.உள்ளே வரும் அவசரத்தில் வலது காலை எடுத்து வைத்தாளா என்று தெரியவில்லை.வந்ததும் திட்டுதான்.

"வீடு எப்படி அலங்கோலமாக வைத்திருக்கிறாய்.."

"..."

"பாத்திரம் கழுவியிருக்க மாட்டாயே.."

"..."

"சரி நான் குத்து விளக்கு ஏத்துகிறேன்.." சொல்லும் போது லேசான வெட்கம் தெரிந்தது.தீப்பெட்டி ஜன்னலரோமாகயிருந்தது மழையில் நனைத்து பத்தவேயில்லை.அன்று அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.இன்று யோசித்தால் அர்த்தம் புரிகிறது.

"சார் பீர் பாட்டில் ஒண்ணும் காணோம்..அது மட்டும் ஒளிச்சிருப்பியே..எங்க ஊது.." வழக்கம் போல ஆரம்பித்திருந்தாள்.

சாப்பிட்டு முடிக்கவே நாலு மணி ஆயிருந்தது.

"காபி.." தலையை முடிந்து கொண்டு கேட்டது இன்னும் வசீகரமாக நினைவில் இருக்கிறது.

"நான் போடுறேன் என் செல்ல .." அவளை நகர்த்தி விட்டு சமையலறைக்குள் நுழைந்திருந்தேன்.

"என் செல்ல ராட்சஸியா..என்ன சொல்ல வந்த.."

"காபி தான்.. ஆனால் ஐஸ் காபி.." ஆச்சர்யத்தில் அவள் முகம் விரிந்தது பிடித்திருந்தது.

இங்கு வந்தப்பின் தான் தெரிகிறது.ஐஸ் காபி போடும் முறை வேறு என்று.அது தெரியாமல் ஃப்ரீஸரில் இருந்த பாலை எடுத்து சூட வைக்காமல் நேராக காபி பொடியைக் கலந்தால் அது கரையவேயில்லை. மிக்ஸியில் அடித்து சீனி கலந்து குடிக்க தந்தேன்.

"அமேசிங்..இனி எனக்கு சமையல் பிரச்சனையில்லை.." லேசாக கண்ணடித்து சிரித்தாள்.

நாளை வருவதாக சொல்லி விட்டு சென்றப்பின் எனக்கு காய்ச்சல் அடிக்கத் தொடங்கியிருந்தது.நிற்க முடியாமல் சரிந்து விட்டேன்.பிறகொரு நாள் தெரிந்து கொண்டேன்.மிக்ஸியில் அடித்தால் ஓத்துக் கொள்ளாதாம்.

சாவியை உள்ளே வைத்து அடிக்கடி பூட்டி விடுவதால் அவளிடம் ஒரு சாவியைக் குடுத்து வைத்திருந்தேன். அடுத்த நாள் சேலை கட்டி வருவதாக போனில் சொல்லியிருந்தாள்.

காலிங் பெல் சத்தம் தொடர்ந்து கேட்டது.எந்திரிக்க முடியாமல் சுருண்டியிருந்தேன்.ராஜி திறந்து வந்து நானிருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்திருந்தாள்.

"என்னாச்சு.." தொட்டுப் பார்த்து விட்டு கோபமாக ஏதோ சொன்னாள்.

"ஐஸ் காபி ஒத்துக்கல.."

"முட்டாள்..உனக்கெல்லாம் ஏன் வேண்டாத வேலை..வா டாக்டர் கிட்ட போகலாம்.."

"இல்ல..நீ ஏன் கூடவே இரு..உனக்கு ஒண்ணும் ஆகாததே எனக்கு சந்தோஷம் தான்.." கைகளை விடாமல் சொன்னேன்.

"நீ தந்ததால் என்னை விஷம் கூட ஒன்றும் செய்யாது.." அவள் சொன்னது இன்று நினைத்தாலும் உதட்டில் லேசாக சிரிப்பை வரவழைக்கிறது.

அவளே ஏதோ சமைத்து சாப்பிட வைத்து விட்டு ரொம்ப நேரம் கழித்து போகும் போது நெற்றியில் முத்தமிட்டாள்.என்ன நிறத்தில் சேலை கட்டியிருந்தாள் இன்று நினைத்தாலும் நினைவுக்கு வரவில்லை.

மறுநாள் மேக்ஸ் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்.எனக்கு வேறு சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. தூக்கம் வராமல் படித்த பாலகுமாரனின் நாவலில் தான் கவனமிருந்தது.போகும் போது முத்தமிட வந்தவளைத் தடுத்துக் கொண்டிருந்தேன்.

"உனக்கு உடம்பு சரியில்ல..அதனால சும்மா விடுறேன்..இனி குறுக்கே கை நீட்டின..கையிருக்காது.." என்று மிரட்டியது சிரிப்பாக இருந்தாலும் பாலகுமாரனின் தாக்கம் தான் என்று பெரிதாக தெரிந்தது.

செமஸ்டர் முடிவு வந்த போது அவள் மேக்ஸ் பேப்பரில் அரியர் வைத்திருந்தாள்.நான் கிளியர் செய்திருந்தேன். இருட்டு சந்தில் ரொம்ப அழுதாள்.என்ன சமாதானம் சொன்னாலும் தேற்ற முடியாது. அவள் அழகாகயிருப்பது போல் தெரிந்ததோடு முத்தமிடவும் மனது சொன்னது.

"உனக்கு இந்த நேரத்தில் கூட இதான் நினைப்பா.." என்று கேட்டு விட்டாள்.அந்த நினைப்பே என்னை கூனிக் குறுக செய்ய அவளை தோளில் சாய்த்துக் கொண்டேன்.போன முறை தான் கவனித்தேன். அந்த இடம் பெரிய அப்பார்ட்மெண்டாக மாறியிருந்தது.

வீட்டில் விட்டு வரும் போது தான் கவனித்தேன்.கண்ணீரோடு கண்மையும்,எச்சிலோடு உதட்டுச் சாயமும் வெள்ளை சட்டையில் ஓட்டியிருந்தது.துவைத்தால் போய் விடும் என பயந்து துவைக்காமல் யாருக்கும் தெரியாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

நடுவில் சில பிரச்சனைகளால் இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்திருந்தோம்.பிறகு நான் மும்பையில். அவள் என்ன செய்கிறாள் என்றே தெரியாமல் காலத்தை நகர்த்தி கொண்டிருந்தேன். அவள் தந்திருந்த மொபைல் நம்பரை ரோமிங் என்றாலும் மாற்றாமல் வைத்திருந்தேன்.

மழை நாளில் ஐஸ்கீரிம் சாப்பிட்டதில் கடுமையான சூரம்.தெரிந்து சிக்கன் சாப்பிட இன்னும் அதிகமானது.எழுந்திருக்க முடியாமல் படுத்தப் படுக்கையாகயிருந்தேன்.

"எனக்கு பயங்கர காய்ச்சல்..சரியாக நீ சேலையில் வர முடியுமா..ஒரு முத்தம்....." மேற்கொண்டு அடிக்க முடியாமல் மயங்கி சரிந்திருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து சரியானதுடன் முதல் வேலையாக அவளுக்கு அனுப்பாமல் வைத்திருந்த குறுஞ்செய்தியை அழித்ததும் தான் கொஞ்சம் நிம்மதியாகயிருந்தது.

கல்யாணம் செய்து கொண்டாள் என்று அது நடந்து வெகு நாட்கள் கழித்தே எனக்கு தெரிந்தது. மனதில் அவள் நினைவுகள் இருந்த இடமெல்லாம் தூசிப் படிந்திருந்தது.

வேறு வேலை.மலேசியா.ஐஸ் காபி,டீ என்று புதிய வாழ்க்கை. ஐஸ் காபியும்,டீயும் தூசியை விலக்கி அவள் நினைவுகளை தெரிய வைத்தது.எல்லோருக்கும் அதிர்ச்சி.வந்ததில் இருந்து ஐஸ் காபியும்,டீயுமாக வாழ்கிறானே என்று. ரொம்பவும் பிடித்து விட்டது என்று நினைத்து விட்டார்கள்.ஐஸ் காபி போடும் முறையே இங்கு வந்து தான் தெரிந்து கொண்டேன்.சூடாக காபி போட்டு விட்டு அதில் ஐஸ்கட்டிகளைப் போடுகிறார்கள்.

ஏனோ தெரியவில்லை. கனவில் அவளிடம் காதலை சொன்னது காட்சியாக விரிந்திருந்தது.

ஒரு மழை நாளில் அவள் வீட்டிற்கு போகும் போது தான் சொன்னேன்.யாருமில்லாத தெருவில் கையைப் பிடித்து சொன்னேன்.

"காதல் இருக்கிறது எனக்கு உன் மேல.." கோர்வையாக சொல்லாமல் எப்படியோ சொல்லி விட்டேன்.

"சொல்ல இவ்வளவு நாளா.." பதில் கிடைத்ததும் தான் தாமதம் அவளை இறுகக் கட்டிப் பிடித்தேன்.

"தெரியுமே க்ரீன் சிக்னல் விழுந்ததும் சீறிப் பாய்வீங்களே.." என்று கைகளைத் தட்டி விட்டாள்.

அதை கலைக்கும் விதமாக போன் அடிக்க ஆரம்பித்திருந்தது.

"பாஸ் நீங்க சொன்ன எஸ்.எம்.எஸ்..என் ஆளுக்கு அனுப்பினேன்..செம சந்தோஷம் அவளுக்கு..கடைக்கு வாங்க பார்ட்டி தான்.."

"நீ - திமிர்
நான் - புதிர்
நாம் - திமி(று)ரும் புதிர்.."
என்று அவள் நினைவாக எழுதியிருந்ததை எஸ்.எம்.எஸ்ஸாக அடிக்க கொடுத்திருந்தேன்.

கடைக்கு போனால் "என்ன வேணும்..டைகர்,கின்னஸ்.." என்று ஆரம்பித்து எல்லா சரக்கு பெயரையும் சொல்ல

"ஐஸ் காபி.." முகத்தை வேறு பக்கம் திருப்பியிருந்தேன்.

மலேஷிய எஃப்.எம் நம்பர்களைத் தேடிக் கொண்டிருந்தேன்.இன்னும் பத்து நாளில் வரப் போகும் அவள் பிறந்த நாளுக்காக இந்த பாட்டை போட வேண்டும்.

"உன்னோடு நானிருந்த ஓவ்வொரு மணித்துளியும்..
என் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே.."

"பாஸ் இந்தாங்க ஐஸ் காபி.." சிந்தனையைக் கலைந்ததும் அவள் கசப்பான நினைவை மறக்க அதை விட கசப்பான ஐஸ் காபியைக் குடிக்க ஆரம்பித்தேன்.

12 comments:

நீ தொடு வானம் said...

இப்படி எதையாவது கிறுக்கிறதை விட்டுப் போட்டு சின்னப்புள்ளத்தனமா சண்டை போடுறது ஆங் சொல்ல மறந்துட்டேன் இதை படிச்சப் பிறகு தான் தெரியுது உங்களுக்குள்ள மூணு சுஜாதா,ஆறு பாலகுமாரன், ஒன்பது ராஜேஷ்குமார், உங்க தலய விட்டுருவோமா என்ன பனிரெண்டு சாரு எல்லாம் தெரியுராங்க

இரும்புத்திரை said...

இதுக்கு என்ன கெட்ட கெட்ட வார்த்தை போட்டு திட்டியிருக்கலாம்..பனிரெண்டு சாரு இருந்தா கோபிநாத், ஞானி , இந்திரா ,ஆண்டனி என்று ஆளுக்கு மூன்று சாருவை அனுப்பி வைக்கலாம்.

a said...

கதை ரொம்ப நல்லா இருக்கு...

அத்திரி said...

ம்ம்ம்ம்........நல்லாயிருக்கு........உங்கிட்ட இருந்து இன்னும் இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன்

VJR said...

சந்தோசமாக இருக்கிறது மனது.

Cable சங்கர் said...

அரவிந்த் நைஸ் ட்ரை..

எம்.எம்.அப்துல்லா said...

ரொம்பப் பிடிச்சிருக்கு.

Rajan said...

repeating what Ganesh posted...
thats my first reaction when i read the blog just now... i have never posted any comment, but this time i felt like appreciating u as well as reminding u that the whole of last week's posts were irrelevant and waste of your time and health..

Joe said...

நல்லா இருக்கு, அரவிந்த்!

டைகர் வேணுமா-ன்னு கேட்கும் போது ஐஸ் காப்பி?!? :-(

பா.ராஜாராம் said...

nallaarukkunga.

ஆர்வா said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பதிவுல உங்க தனித்திறமை. அசத்துங்க.

சு.சிவக்குமார். said...

ரொம்ப நாளைக்கப்பறம்..ரொம்ப நல்லா இருக்கு..மேலும் தொடர வாழ்த்துக்கள்.