Sunday, March 21, 2010

நைஜீரியப் படுகொலைகள் - ஜெயமோகனுக்கு ஒரு எதிர்வினை

எவ்வளவு நாளைக்கு தான் சின்ன வட்டத்திலேயே குதிரை ஓட்டுவது.ஒரு இலக்கில்லாத வாதியின் பரிமாண வளர்ச்சியின் ஒரு அங்கமாக இதை நினைத்து கொள்கிறேன்.முதலில் ஜெயமோகனின் பதிவு.கடைசியில் எதிர்வினை.

ஒரு சிறப்புக்கவனத்துடன் சிலகாலமாக நான் நைஜீரிய அரசியலைக் கவனித்து வருகிறேன். அதற்குக் காரணம் நைஜீரிய அரசியலும் தேசியப்பிரச்சினைகளும் பல வகைகளில் இந்தியாவுடன் ஒப்பிடத்தக்கவை. இந்தியவரலாற்றை ‘வேறுவகையில் அது சென்றிருந்தால்’ என்று கற்பனை செய்து ‘என்ன நடந்திருக்கும்’ என ஊகிப்பதற்கானச் சாத்தியங்களைக் காட்டும் நாடுகளில் ஒன்று நைஜீரியா. நைஜீரியாவை வைத்து ‘தேவதை’ என்று ஒரு கதையும் எழுதியிருக்கிறேன்.

பெயர்கள் மற்றும் நுண்தகவல்களுக்குள் செல்லாமல் ஒரு சித்திரத்தை அளிக்கிறேன்.நைஜீரியா நம்மைப்போலவே பல இனங்கள் கூடிவாழ்ந்த நிலப்பரப்பு. அவர்களுக்குள் இனப்பகையும் போர்களும் இருந்திருக்கின்றன. கூடவே சமரசங்களும் ஒத்துவாழ்தலுக்கான வழிமுறைகளும் ஆசாரங்களும் இருந்தன. நம்மைப்போலவே மிகமிகத் தொன்மையான ஒரு நாகரீகம் விளங்கிய மண் அது. தொல்பொருள்த் தடையங்கள் நைஜீரியாவின் பாரம்பரியத்தின் ஆழத்தை ஒவ்வொரு அகழ்வுக்கும் விரிவாகக் காட்டிக்கொண்டே செல்கின்றன.

நைஜீரியாவில் இருந்த தொன்மையான மதத்தையும் பண்பாட்டையும் எப்படி விவரிக்கலாம்? வைதிகம், வேதாந்தம்,சமணம்,பௌத்தம் போன்ற  பெருமதங்களால் மையத்தில் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டு, சமரசப்படுத்தப்படாத இந்துமதப்பிரிவுகள் எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்தது அது. அதாவது பல்வேறு வகையான பழங்குடிகள் அவரவர் தெய்வங்களை வழிபட்டுக்கொண்டு அவரவர் ஆசாரங்களின்படி வாழ்ந்தார்கள்.

அங்கே பலதெய்வக் கோட்பாடு வலுவாக திகழ்ந்தது. அவற்றில் பல இனக்குழுக்கள்  உயர்ந்த நாகரீகத்தை அடைந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் நடுவே  தத்துவப் பரிமாற்றம் நிகழவில்லை. ஒருசாராரின் தெய்வங்கள் இன்னொரு சாராருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. காரணம் தெய்வங்கள் குலதெய்வங்களாக இருந்தனவே ஒழிய  அவற்றுக்கு தத்துவார்த்தமான உயர் விளக்கம் அளிக்கப்படவில்லை. அப்படி அளிக்கப்பட்டால் மட்டுமே ஒரு தெய்வம் இன்னொரு இனக்குழுவுக்குச் செல்ல முடியும். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்  இந்தியாவில் நிகழ்ந்தது அதுவே.

இந்தச் சூழலில் அங்கே அரேபியாவில் இருந்து இஸ்லாம் வந்தது. இஸ்லாம் எல்லா பழங்குடி தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் அழித்து ஒற்றைநம்பிக்கையை முன்வைத்தது. நைஜீரிய வரலாற்றில் பத்தாம் நூற்றாண்டு முதல் எண்ணூறு வருடம் ஒவ்வொருநாளும் குருதி கொட்டியிருக்கிறது. அதுவும் இந்தியாவைப்போலவே.

நைஜீரியாவில் உள்ள மேய்ச்சல் சாதிகள் எளிதில் அரேபியர்களுடன் ஒத்துபோயின. இஸ்லாமை ஏற்றுக்கொண்டன. வேட்டைசாதிகளால் அதற்கு முடியவில்லை. ஆகவே வேட்டைச்சாதிகளை மதப்பகைவர்களாக அறிவித்து கொன்றே ஒழித்தது இஸ்லாம். மனிதவரலாற்றின் ஆகப்பெரிய மானுடவேட்டைகளில் ஒன்று சொல்லப்படும்  இந்தப் படுகொலைகள் தொடர்ந்து பலநூற்றாண்டுக்காலம் நடந்தன. வேட்டைச்சாதிமக்கள் ஒருகட்டத்தில் முழுமையாகவே அடிமைகளாக ஆக்கப்பட்டார்கள்.

இந்தியவரலாற்றில் என்ன வேறுபாடு? இங்குள்ள இஸ்லாம் அல்லாத பேரரசுகள் இஸ்லாமை கட்டுப்படுத்தி பேரழிவில் இருந்து இந்தியாவைக் காத்தன என்பதே. தங்குதடையிலா அதிகாரம் இஸ்லாமுக்கு எப்போதுமே கிடைத்ததில்லை. ராஜபுத்திரர்கள், அதன்பின் விஜயநகரம், அதன் பின் மராட்டியர்கள் என வலுவான எதிர்விசை எப்போதும் இருந்தது.  எந்நிலையிலும் போர் நிகழ்ந்துகொண்டே தான் இருந்தது. ஆகவே சமரசம் மூலமே இஸ்லாமியர் ஆளமுடிந்தது. நேரடி ஆட்சி அமையவில்லை, கப்பம் கட்டும் நாடுகளின் தொகையாகவே இஸ்லாமிய ஆட்சி நீடிக்க முடிந்தது.

அத்துடன் இந்திய ஞானமரபின் தாக்கம் கொண்ட அக்பர் போன்ற பேரரசர்கள் சமரசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தார்கள் என்பதும் ஒரு மாபெரும் ஆசியே ஆகும். அக்பரினால் மட்டுமே இந்தியாவை ஓரளவேனும் ஒருகு டைக்கீழ் ஆள முடிந்தது என்பது ஆச்சரியமல்ல. போர்க்குணம் கொண்ட ஆதிக்க இஸ்லாமில் ஞானத்தின் சமரசத்தின் ஒளியுடன் சூ·பி மரபு  ஊடுருவியதும் இந்தியாவில் நழ்லூழ்தான்.

அதன்பின் நைஜீரியாவில் காலனியாதிக்க காலகட்டம். இந்தியாவைப்போலவே முதலில் போர்ச்சுக்கல்காரர்கள். கடைசியில் பிரிட்டிஷார். இஸ்லாமாகாமல் எஞ்சிய மக்களை காலனியாதிக்க சக்திகள் கிறித்தவர்களாக ஆக்கினார்கள். நைஜீரியாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட சரிபாதியாகவே இஸ்லாமியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் ஆகியது. இரண்டுமே தங்களுடையது மட்டுமே மெய் என்ற ஒற்றை தரிசனம் கொண்ட மதங்கள். எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லாதவை.மரபான  மதநம்பிக்கை கொண்ட நைஜீரிய சாதிகள் இன்று உதிரிநாடோடிகளாக வரலாறே இல்லாமல் வாழ்கிறார்கள்.

இந்தியாவில் என்ன வேற்றுமை? இந்தியாவை கிறித்தவ மயமாக்கும் காலனியாதிக்க முயற்சிகளை இந்துமதம் அனுமதிக்காமல் எதிர்த்து நின்றது. இஸ்லாமின் ஆதிக்கத்தை வென்றதுபோலவே கிறித்தவ ஊடுருவலையும் அது வென்றது. அதற்கான காரணம் என்ன? மிக எளிய விடைதான் ஏற்கனவே இந்து,சமண,பௌத்த மதங்களால் இந்தியாவின் சிறுவழிபாட்டுமரபுகள் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டுவிட்டிருந்தன. ஆகவே அவை நைஜீரியா போல தனித்தனி வழிபாட்டுக்குழுக்களாக தேங்கி இருக்கவில்லை. ஒன்றுடன் ஒன்று உரையாடி வளர்ந்து ஒருங்கிணைந்த  சக்தியாக, வலுவான தத்துவ – வழிபாட்டு அடிபப்டையுடன் விளங்கின. ஆகவேதான் நைஜீரிய பழங்குடி மதங்களுக்கு நிகழ்ந்தது இந்துமதப்பிரிவுகளுக்கு நிகழவில்லை.

அவ்வாறு இந்து,பௌத்த,சமண மதங்கள் செய்தது பெரும் வரலாற்றுப்பிழை என்று இப்போது மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஆய்வேடுகள் உருவாக்குகிறார்கள். கருத்தரங்குகள் நிகழ்த்துகிறார்கள். இந்தியப்பண்பாட்டின் வேர்களை அழித்துவிட்டார்களாம். சொல்லாமல் இருப்பார்களா என்ன?  

1960ல் சுதந்திரம் பெற்ற நைஜீரியா நம்மைப்போலவே குருதியில் நனைந்துதான் அதை அடைந்தது. பிரிட்டிஷார் வெளியேறியபோது அதிகாரம் ஒருங்குதிரண்ட பெரும்பான்மையினரான இஸ்லாமிய மேய்ச்சல் சாதிகளிடம் சென்று சேர்ந்தது. அதற்கு எதிராக கிறித்தவ சாதிகள் கிளர்ந்தெழ அவர்கள் மீது மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. மக்கள் லட்சக்கணக்கில் கொன்றே குவிக்கப்பட்டார்கள். கிறித்தவர்களுக்காக பையா·ப்ரா என்ற தனிநாடு தேவை என்ற கோரிக்கை நைஜீரியாவில் எழுந்தது. அது நசுக்கப்பட்டது.

எண்பதுகளுக்குப்ப்பின்னர் பழைய காயங்களை ஓரளவு மறந்து நைஜீரியா முன்னேற ஆரம்பித்தது. முன்னேற்றமென்றால் சற்றே நகர்வு. பட்டினிச்சாவுகள் இல்லாத ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாக ஆகியது. இந்நிலையில்தான் உலகமெங்கும் பரவிய வகாபியம் நைஜீரியாவில் எழுந்தது. நைஜீரிய இஸ்லாமியர்களில் நடுநிலையாளர்கள் சிலர் தவிர பிறர் கடுமையான அடிப்படைவாதிகளாக ஆனார்கள். நைஜீரிய கிறித்தவர்கள் மீது மீண்டும் காழ்ப்பும் கசப்பும் உருவாக்கப்பட்டது.

அதன் மறுபக்கமாக நைஜீரிய கிறித்தவர்களை அமெரிக்காவும், ஐரோப்பாவும் தூண்டி விட்டன. அவர்கள் தங்கள் பிரிவினைக் கோரிக்கைகளை மீட்டு எடுத்தனர். இந்தன் விளைவே இன்று நிகழும் வன்முறை. இது மேலும் தொடரவே வாய்ப்பு. இங்கே உலகை கூறுபோட்டு வன்முறைக்களமாக ஆக்கியிருக்கும் மேல்நாட்டு ஆதிக்க சக்திகளும் அரேபிய  அடிப்படைவாத சக்திகளும் தங்கள் பிரதிநிதித்துவப்போரை நிகழ்த்துகின்றன. ஆகவே இது எளிதில் முடியாது. ஒன்றுமறியா மக்களின் குருதி ஓடும். அடைந்துவந்த சிறிய முன்னேற்றங்களைக்கூட நைஜீரியா இழக்கும். பெரும் பஞ்சம் நோக்கி நகரும். இதுவே நாம் எதிர்பார்க்கக் கூடியதாகும்.

சில வருடங்களுக்கு முன் ஸீமமெண்டா அடிச்சி என்ற நைஜீரியப் பெண் எழுத்தாளர்  எழுதிய ஒருநாவலை [Half Of A Yellow Sun ] அமெரிக்க இதழ்கள் போற்றிப்புகழ்ந்து துதிபாடின. அந்நாவலை வாசித்தேன். மேலைநாடுகளுக்குரிய தொழில்நுட்பத்தேர்ச்சியுடன் மொழி செம்மைசெய்யப்பட்ட நன்கு தொகுக்கப்பட்ட நாவல் அது. ஆனால் மிகமிக மேலோட்டமானது. நைஜிரிய இஸ்லாமியர்கள் நைஜீரிய கிறித்தவர்களுக்கு பையா·ப்ரா போராட்டத்தின்போது இழைத்த கொடுமைகளை அப்பட்டமாக விவரிக்கும் கதை அது. அந்த விவரிப்பு என்பது இம்மாதிரி நாவல்களை வாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் புதிதல்ல. அதில் மானுட எழுச்சியோ, உணர்வின் நுண் கணங்களோ இல்லை. போலியான உணர்வெழுச்சிகள் மட்டுமே இருந்தன.

அந்நாவல் மேலை ஊடகங்களில் புகழப்பட்டதும் நம்மூர் ஆங்கில நாளிதழ்கள் புகழ்ந்து முழுப்பக்க கட்டுரைகள் போட்டன. உடனே நம் சிற்றிதழ்களிலும் அதேபோல கட்டுரைகள் வந்தன. எஸ்.வி.ராஜதுரை அதை ஒரு கிளாசிக் என்று ஒரு நீளக்கட்டுரை எழுதினார். எஸ்.வி.ராஜதுரைக்கு இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது என்பது என் எண்ணம். அவரை தூண்டிவிடுவதற்கு ஒரேயொரு ஆங்கிலக் கட்டுரையே போதுமானது. அந்நாவலை முன்வைத்துப்பேசும்போது இதேபோல இந்தியாவிலும் ‘தேசிய இன’ போராட்டங்களின் வரலாறு எழுதபப்டவேண்டும் என்று ராஜதுரை அறைகூவுகிறார்!

அந்நாவல் அந்த அளவுக்கு மேலை ஊடகங்களால் தூக்கிப்பிடிக்கப்பட காரணம் வேறு என நான் ஊகித்தேன். அதைப்பற்றி நான் எழுதினேன். கடந்தகால புண்கள் காய்ந்து அமைதியாக வளரமுற்படும் நைஜீரியாவில் வன்முறையை மேலை ஊடகங்கள் தூண்டுகின்றன என்று ஐயப்பட்டேன். அங்கே அவர்கள் ஒரு பிரிவினை வாதத்தை  மீண்டும் ஊதி எழுப்புகிறார்கள் என்றேன். அதற்கு இந்தியாவில் அவர்கள் செய்வதே எனக்கு உதாரணமாக இருந்தது.

மேலைநாடுகளைப் பொறுத்தவரை எப்போதுமே  இதற்கு ஒரு பழகிய வழிமுறை உண்டு. முதலில் பல்கலைக்கழகங்கள் வழியாக ஆய்வேடுகள் உருவாக்கப்படும். அவை தேவையான கருத்தியலை போலி ஆதாரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் சமைக்கும். பின்பு இலக்கியவாதிகள் உருவாக்கபப்டுவார்கள். அவர்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுவார்கள்.

உதாரணமாக , ஸீமமெண்டா என்கோசீ அடிச்சி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்க பல்கலைகக்ழக தயாரிப்பு. அவருக்கும் நைஜீரியாவுக்கும் இடையேயான உறவென்பது மேலோட்டமான ஒன்று. பையா·ப்ரா கலவரம் குறித்த விஷயங்களை மேலைநாட்டு பல்கலைக்கழக ஆய்வேடுகளின் உதவியுடன் சேகரித்தே அவர் நாவல் எழுதியிருக்கிறார். அவர் பிறப்பதற்கு முந்தைய நிகழ்வுகள் அவை.

அதன்பின்னர் இதழியலாளர்கள் திரிபுசெய்திகளை உருவாக்குவார்கள். ஒருகட்டத்தில் மேலைநாடுகள் நினைப்பதை  ஆசிய ஆப்ரிக்க மக்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஒருவரை ஒருவர் கொல்வார்கள். தங்கள் நாட்டின் அரசியலைப்பை சமூகக் கட்டுமானத்தை தாங்களே அழிப்பார்கள்.  தங்கள் தேசத்தின் முன்னேற்றத்தை தாங்களே தடுத்து ஒழிப்பார்கள்.

நான் எழுதிய அக்கட்டுரைக்கு கடுமையான எதிர்வினைகள் பல வந்தன. நான் செயற்கையாக ஊகங்களை உருவாக்குகிறேன் என்று சொன்னார்கள். அவர்களிடம் நான் சொன்னேன், ‘ஸீமமெண்டா அடிச்சிக்கு அவர் தகுதிக்கு மீறிய விருதுகள் வழங்கப்படும் , அவரைப்போல பல எழுத்தாளர்கள் அதேபோல எழுதுவார்கள் . ஒருகட்டத்தில் நைஜீரியாவில் வன்முறை வெடிக்கும், பாருங்கள்’ என்று. அதுவே நடந்துகொண்டிருக்கிறது. எதிர்பார்த்தது நடந்ததில் கடுமையான மனவருத்தம் கொள்ளும் தருணம் இது.

இனி என்ன நிகழும்? இந்த அனலை ஊதி ஊதி பெருக்குவார்கள் அமெரிக்க ஐரோப்பிய ஊடகங்களும் பல்கலைக்கழகங்களும். மறுபக்கம் இஸ்லாமின் சமரசமில்லாத மதவெறி. ஆகவே அழிவு அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் கிழக்கு திமோர் போல ஒரு சுதந்திர கிறித்தவ நாடு நைஜீரியாவில் உருவாகக்கூடும். ஆனால் அதன் அழிவுகள் மிக அதிகமாகவே இருக்கும்.

அந்த வரலாற்றுக்கசப்பை வளர்த்து நம்மை மோதச்செய்ய எவர் முயன்றாலும் அதை மீறி நிற்கும் தேச ஒற்றுமை, சமூக இணக்கம் மூலமே நம் குழந்தைகளுக்கு ஒரு அமைதியான, வளமான தேசத்தை நாம் விட்டுச்செல்ல முடியும்.

இரண்டு, போலிஅறிவுஜீவிகள் போல ஆபத்தான, அழிவுசக்திகள் வேறில்லை. மிக எளிதில் விலைக்கு வாங்கக்கூடியவர்கள் அவர்கள். அகங்காரம் மூலமே அழிவை உருவாக்குபவர்கள். தங்கள் சொற்களால் உருவாகும் எந்த அழிவுக்கும் பொறுப்பேற்க மறுப்பார்கள். அந்த அழிவைப்பற்றி மேலும் விவாதிக்க ஆரம்பிப்பார்கள். சிறு காரணங்களுக்காகவே பிளவை, வன்முறையை, கசப்பை அவர்கள் தூண்டிவிடுவார்கள். மதம் இனம் மொழி எதன் பெயரிலும்.  பிளவுவாதத்தை முற்போக்குக் கருத்தாகக் காட்ட  அவர்களால் முடியும். எந்த நாசகார கருத்தும் முற்போக்கு முகமூடியுடன் மட்டுமே வரும்.

பிளவையும் வெறுப்பையும் உருவாக்கும் எந்த ஒரு அறிவுஜீவியையும் துரோகி என்றும் ஐந்தாம்படை என்றும் புரிந்துகொள்வோம். அவர் எந்த இலட்சியத்தைப் பேசினாலும்சரி எத்தனை முற்போக்காக பேசினாலும் சரி. தன்னை பிறர் பிளவுபடுத்த அனுமதிக்கும் சமூகம் அழியும்.

இனி எதிர்வினைகளை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு - இதை அவரே திரும்ப மீள்வாசிப்பு செய்து எனக்கு புரியும் விதமாக எழுதினால் எதிர்வினை வைக்க எதுவாகயிருக்கும்.இல்லை ஒரு கோனார் நோட்ஸ் கிடைக்கும் வரை பொறுத்திருக்கலாம்.இன்று தான் தெரிந்தது ஏன் சாருவுக்கு மட்டும் நிறைய எதிர்வினைகள் வருகிறது என்று.நான் நிறைய தடவை படித்ததில் புரிந்த ஒரே விஷயம் எந்த நாசகார கருத்தும் இப்படி சிக்கலான மொழியில் வந்து இருக்கும் குழப்பத்தை இன்னும் அதிகரிக்கும்.

தன்னை பிறர் பிளவுபடுத்த அனுமதிக்கும் சமூகம் அழியும்.இது அவர் சொன்னது.முதல் மற்றும் கடைசி பத்தியை தான் படித்தேன். அதிலேயே அவர் சொல்ல வந்த கருத்தின் தோனியை ஊகித்துக்  கொண்டேன். காலத்திற்கேற்ப மாறாத சமூகமும் அழியும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது.

இதை புரிந்து கொண்டு எதிர் வினையாற்றிய யுவகிருஷ்ணா தான் என் பதிவுலக குரு என்பதை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

14 comments:

இரும்புத்திரை said...

போல்ட் பாண்டில் இருப்பது நான் எழுதியது - என்னை மாதிரியே படிப்பவர்கள் நேராக கீழே வந்து விடலாம்.

இரும்புத்திரை said...

குரு குரு தான்.சிஷ்யன் சிஷ்யன் தான்.அவரைப் போலவே "முழுதாக படித்து புரிந்து கொண்டு" எதிர்கருத்து வைக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

// அதாவது பல்வேறு வகையான பழங்குடிகள் அவரவர் தெய்வங்களை வழிபட்டுக்கொண்டு அவரவர் ஆசாரங்களின்படி வாழ்ந்தார்கள் //

இன்றும் திருமணம், சாவு எதுவாக இருந்தாலும், அவங்க முறைப்படி எது செய்ய வேண்டுமோ அதை செய்தபின் தான் மற்றவை செய்ய முடியும்.

திருமணம் - அவர்கள் முறைப்படி செய்யப் படவில்லை என்றால், அந்த திருமணம் உறவினர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை..

இராகவன் நைஜிரியா said...

// மக்கள் லட்சக்கணக்கில் கொன்றே குவிக்கப்பட்டார்கள். கிறித்தவர்களுக்காக பையா·ப்ரா என்ற தனிநாடு தேவை என்ற கோரிக்கை நைஜீரியாவில் எழுந்தது. அது நசுக்கப்பட்டது. //

தவறான தகவல்... பையா.ப்ரா சண்டை தனி நாடு கேட்டுத்தானே தவிர... அது ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக அல்ல.

பையா.பரா வை நைஜிரியா விட்டு கொடுக்காததற்க்கான காரணம் .. நாடு பிளவு பட்டுவிடக்கூடாது என்பதும், எண்ணை வளமும்..

இராகவன் நைஜிரியா said...

நான் இங்கு இருக்கும் இரண்டு வருடத்தில் புரிந்து கொண்ட விஷயம்...

நைஜிரியர்கள் மிகவும் பொறுமைசாலிகள்... அவர்கள் குறிக்கோள் பணம் சம்ப்பாதிப்பது மட்டும்தான்... அதை எப்படி சம்ப்பாதிப்பது என்பதில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாமே தவிர... அவர்கள் ரொம்ப பொறுமைசாலிகள்.

இங்கு வந்து இருந்து பாருங்கள் ... தெரியும்..

இரும்புத்திரை said...

raghavannigeria: // . அதற்கு எதிராக கிறித்தவ சாதிகள் கிளர்ந்தெழ அவர்கள் மீது மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. மக்கள் லட்சக்கணக்கில் கொன்றே குவிக்கப்பட்டார்கள். கிறித்தவர்களுக்காக பையா·ப்ரா என்ற தனிநாடு தேவை என்ற கோரிக்கை நைஜீரியாவில் எழுந்தது. அது நசுக்கப்பட்டது.//
இது மிக மிக தவறான தகவல்


raghavannigeria: மேலும் இங்கு நடந்த இனப் படுகொலையில்... இது மதவாதிகள் செய்த்து என்பதை விட... ஒரு குழு கலகம் என்றுதான் நான் நினைக்கின்றேன்

raghavannigeria: இந்த கலகத்தில், என் ஸ்டூவர்டின் அம்மா, மாமா, தம்பி மகன் ஆகியோரும் கொலை செய்யப் பட்டனர்
மேலும் அவர் இதை எழுதும் போது, நைஜிரியா முழுவதும் கலகம் நடக்கின்ற மாதிரி எழுதுகின்றார்
அப்படி இல்லவே இல்லை

raghavannigeria: நைஜிரியாவின் வட பகுதியில் ஒரு 50 சதுர கி.மீக்குள் நடக்கும் கலகம்

raghavannigeria: விஷயம் தெரியாமல் விஷம் தடவியிருக்கார்

இராகவன் நைஜிரியா said...

// அக்பரினால் மட்டுமே இந்தியாவை ஓரளவேனும் ஒருகு டைக்கீழ் ஆள முடிந்தது என்பது ஆச்சரியமல்ல. //

இது வரலாறு தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

இரும்புத்திரை said...

அலாவுதீன் கில்ஜியும்(மதுரை வரை) ,அவுரங்கசீப்பும் அக்பரை விட நிறைய இடங்கள் ஆண்டார்கள்.இனி புரியவில்லை என்றாலும் அவரை படிக்க முடிவு செய்துள்ளேன்.நிறைய வடை அங்கே கொட்டிக் கிடக்குது.

நேசமித்ரன் said...

இதற்கு எதிர்வினை எழுதினால் நானும் ரௌடி ஆகி விடக் கூடிய சாத்தியம் இருப்பதால் தயங்கிக் கொண்டிருக்கிறேன்

(அரவிந்த் உங்களின் போல்ட் லெட்டருக்கு அல்ல :) )

ELIYAVAN said...

"நைஜீரியப் படுகொலைகள் - ஜெயமோகனுக்கு ஒரு எதிர்வினை" When I read your article,
"நான் நிறைய தடவை படித்ததில் புரிந்த ஒரே விஷயம் எந்த நாசகார கருத்தும் இப்படி சிக்கலான மொழியில் வந்து இருக்கும் குழப்பத்தை இன்னும் அதிகரிக்கும்."

அப்துல் சலாம் said...

//போல்ட் பாண்டில் இருப்பது நான் எழுதியது - என்னை மாதிரியே படிப்பவர்கள் நேராக கீழே வந்து விடலாம்.//

ஹி ஹி ஜெயமோகனின் முதல் பத்தியை படிபதற்குள் (!) மூச்சு முட்டியது.

சர்ரென்று ஸ்க்ரோல் செய்து உங்கள் "போல்ட் பான்ட்" பகுதிக்கு வந்துவிட்டேன்

Robin said...

இராகவன் நைஜிரியா அவர்களே,

ஜெயமோகன் போன்றவர்களைவிட உங்களை போன்றவர்களுக்குத்தான் நைஜீரியாவை பற்றி நன்கு தெரிந்திருக்கும். நீங்கள் ஏன் நைஜீரிய பிரச்சினை பற்றி விளக்கமாக ஒரு பதிவு எழுதக்கூடாது?

இரும்புத்திரை said...

ராபின்,

நானும் அதை தான் அவரிடம் சொன்னேன்.விரைவில் எழுதுகிறேன் என்று சொன்னார்.தப்பில்லாமல் வர கொஞ்சம் காலமாகும்.தப்பில்லாமல் வர கொஞ்சம் காலமாகும்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி ராபின்.

நானும் அரைகுறை தகவல்களை கொடுக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தினால்தான் நைஜிரியா பற்றி எதுவும் எழுதாமல் இருக்கின்றேன்.

சரியான தகவல்கள் கிடைத்தால் / கிடைத்ததும் எழுதுகின்றேன்.