Wednesday, August 5, 2009

நாடோடியான நானும்,கிழிந்த பனியனும்

நாடோடிகள் படம் பார்த்து முடிந்த பிறகு என் கால்களையும்,காதுகளையும் நன்றாக தடவி பார்த்து கொண்டேன். பத்து வருடங்களுக்கு முன்பே தீர்மானம் செய்து கொண்டேன். செயல் படுத்தியும் விட்டேன். "காதலிக்கும் நண்பர்களுக்கு மட்டும் உதவி செய்ய கூடாது என்று". அதற்கு பிறகு நான் சேர்ந்த நண்பர்களிடம் வழக்கமாக சொல்வது - யோசனை மட்டும் தான் உதவி கிடையாது.

அதற்கு காரணம் யாராவது கொசுவர்த்திய நல்லா சுத்துங்க

பத்து படிக்கும் பொழுது நானும்,வினோத்தும் நெருங்கிய நண்பர்கள். பள்ளியில் இரண்டு மாதம் ஒரு சச்சரவால் அடைக்கப்பட்ட பொழுது சுல்தான் எங்களுடன் சேர்ந்து கொண்டான். வினோத்துக்கு அவனை பிடித்ததால் எனக்கும் பிடித்து தொலைத்தது. அந்த காலகட்டத்தில் சேர்ந்து பார்த்த படம் நட்பு (கருமம்! படம் அல்ல அவன்).

சுல்தான் வற்புறுத்தவே அவன் படித்த டியுசனிலே நானும் சேர்ந்தேன் ஆனால் படிக்கவில்லை.அங்கு படித்து வந்த சயீதா மேல் இவனுக்கு காதல் (அப்படி சொல்லி கொண்டு திரிந்தான்).அந்த ஏரியா பையனும் அவள் பின்னால் திரிய அவனை நான் மிரட்ட அவன் என்னை மிரட்ட அடித்து மட்டும் கொள்ளவில்லை. (அப்பவே நாங்கள் எல்லோரும் வடிவேலு மாதிரி தான்). தவிர பெண்களுக்காக சண்டை போடுவது எனக்கு பிடிக்காது.

அவளை மடிக்க அவன் என்னிடம் கேட்க நான் சொன்ன ஐடியாப்படி அறிவியல் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கதிலும் தமிழ்,தெலுங்கு,இந்தி,ஆங்கிலம் என்று எல்லா மொழிகளிலும் "நான் உன்னை காதலிக்கிறேன்" என்று எழுதி உள்ளே வைத்து அவளிடம் கொடுத்து விட்டோம். (சும்மாவே அறிவியல் புத்தகம் ஒரு எருமை மாதிரி இருக்கும் இதை வைத்த பிறகு கர்ப்பமான எருமை மாதிரி இருந்தது).அவள் ஒத்து கொண்ட சந்தோஷத்தில் அந்த துண்டு சீட்டுகளை எடுத்து வடபழனி ஆற்காடு ரோட் சிக்னலில் போட்டி போட்டு கொண்டு எறிந்தோம்.

ஒருநாள் வந்து "வா ஒரு இடத்திற்க்கு போவோம்" என்று இடத்தை சொல்லமல் இராயபேட்டைக்கு அழைத்து சென்றான்.பார்த்தால் அந்த பெண் படிக்கும் பள்ளி.அந்த ஏரியா பையன் வந்து எங்களை துரத்தவே

"மச்சான் அவன் ஒருத்தன் தான். நாம இரண்டு பேர். அவனை புரட்டி எடுக்க போரேன்" - இது நான்.

"அவசரபடாதே .." என்று சுல்தான் சொல்லி முடிக்கும் முன்பே எங்களை சுற்றி ஒரு நால்வர் அணி நின்று கொண்டிருந்தது.

அவர்களை சமாளித்து அனுப்பிய பிறகு (நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன்). வாட்ச்மேன் வந்து எங்களை விசாரிக்க..எங்கள் பதிலில் திருப்தி அடையாமல் ப்ரின்சி கிட்ட சொல்லுவேன் என்று மிரட்ட..சுல்தான் அவனை அடிக்க போக..எப்படியோ சமாளித்து அவனை இழுத்து வந்தேன்.

வரும் வழியில்

"இனிமே இது மாதிரி வேலைக்கு என்னை கூப்பிடாதே..எனக்கு பிடிக்கவில்லை..பிடிக்கவும் பிடிக்காது பெண்களுக்காக காத்து கிடப்பது.." என்று நான் சொல்லவும்

"ஏன் உனக்கு ஆள் இல்லாத பொறாமை..அதான் இப்படி பேசுற.." - இது சுல்தான்

"அன்னைக்கு புக்க மட்டும் மாத்தி கொடுத்து இருந்தா அது யார லவ் பண்ணிருக்கும் தம்பி..இனிமே இது விசயமா எங்கிட்ட வராதே.." என்று சொல்லி கூடவே நாலைந்து கெட்ட வார்த்தைகளை போட்டு அவனுக்கு வாயில் வயலின் வாசித்து காட்டினேன்.

இரண்டு வாரங்கள் கழித்து வினோத்திடம் பேசி கொண்டிருந்த பொழுது

"மச்சான் புதன் கிழமை ஏண்டா வரல.."

"இல்ல உடம்பு சரியில்ல.." - இது வினோத்

"பொய் சொல்லாத.. உன்னை வடபழனில நான் பாத்தேனே.." என்று சும்மா பிட்ட போட்டு பார்த்தேன்.

"ஸாரிடா..நான் சுல்தான் கூட இராயபேட்டைக்கு அந்த பொண்ண பாக்க போனேன்..அவன் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்"

"என்ன அங்க திரும்பவும் எதுவும் சண்டையா.. யார் கிட்டயாவது வம்பு இழுத்து இருப்பானே.."

"நாங்க அங்க போனப்போ போலிஸ் இருந்தாங்க.."

"தெரியும்..அவன் கூட போகாத உனக்கு அடி நிச்சயம் விழும்.. அவன் ஒடிருவான்.." அவன் வாட்ச்மேனிடம் வம்பு இழுத்த கதையை சொன்னேன்.(போலிஸ் வந்தததும் இதனால் தான்).

நான் அந்த டியுசனை விட்டு நின்று விட்டேன்.ஒரு மாதம் கழித்து என் வீட்டுக்கு வந்து மச்சான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும் என்று கூட்டி போய் என் காலில் விழுந்து அழ ஆரம்பித்து விட்டான்.உதவி செய்ய சொல்லி ஒரே தொல்லை.

"இப்போ மனி 8.00 அவ டியுசன் இருக்கிறது கே.கே.நகர்ல..நாம விருகம்பாக்கத்துல இருக்கோம்.. நாம போனா கூட அவள பிடிக்க முடியாது.." என்று நான் சொல்லவும்

"உங்க அப்பா வண்டில போவோம்.."

"எனக்கு வண்டி சரியா ஒட்ட வராது..எதுவா இருந்தாலும் நாளைக்கு பாக்கலாம்.."
"ப்ளிஸ்டா.."

"இதுதான் கடைசி.." என்று வண்டி கொடுக்க மறுத்த அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி வண்டியை வாங்கி கொண்டு அவளை பார்க்க போனோம்.

கே.கே.நகர் போய் அங்கு அவளை பிடிக்க முடியாமல்,அவள் இருக்கும் வளசரவாக்கதிற்கு போய் கடிதத்தை வாங்க சொல்லி கெஞ்சி எல்லாம் செய்து விட்டு வீட்டுக்கு வரும் பொழுது மனி 9.30. பயத்தில் வண்டியை நிறுத்த முடியாமல் சுவரில் மோதி கொண்டேன். அப்பா பார்த்து கொண்டிருப்பது தெரியாமல்.

"ஏன் லேட்.." என்ற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் "போலிஸிடம் மாட்டி கொண்டேன்.." என்று பொய் சொன்னேன்.

அப்பா கோபத்தில் பனியனை போட்டு உலுக்க பனியன் கிழிந்தே விட்டது.அவரை சமாளிக்க குட்டி பொய்,குட்டி குட்டி பொய் சொல்லி வாயே வலித்து விட்டது.அதில் இருந்து உண்மையே சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

மூன்று நாட்கள் கழித்த பிறகு

"அவள் பதில் என்ன ?.." என்று நான் கேட்கவும்

"அவளுக்கு தமிழ் தெரியாதுன்னு சொன்னா.." என்று சுல்தான் சொல்லி முடிக்கும் முன் அவன் முதுகில் இரண்டு அறை விழுந்தது.(உங்க போதைக்கு நான் ஊறுகாயா)

சில பல காரணங்களால் அவன் நட்பை நானும் வினோத்தும் உதறி இருந்தோம்.சுல்தான் அந்த பெண்ணை விட்டு விலகி இன்னொரு பெண்ணை பார்ப்பதாக கேள்விப்பட்ட உடன் அவனை அடிக்க முடிவு செய்தோம்.அவனுக்கு ஆதரவாக ஒரு கும்பல் அதற்குள் உருவாகி இருந்தது.அவன் தனியாக மாட்ட காத்து கிடந்தோம்.

சுல்தான் எங்க ஸ்கூல் வாசலில் ஒரு பெண்ணை இடித்து விட(இங்கு சென்சார் செய்யப்பட்டுள்ளது).இது தான் சாக்கு என்று நானும் வினோத்தும் அவனை அடித்தோம் (அவன் காதில் அடிப்பதற்கான காரணங்கள் சொல்லப்பட்டது).

மூன்று வருடங்கள் கழித்து சலீம் வீட்டில் சுல்தான் என்னிடம் பேச வந்தான்.அவனை தவிர்த்து விட்டு சலீமிடம் "சுல்தானிடம் உஷாராக இரு.." என்று மட்டும் சொன்னேன்.

உடனே சலீம் புலம்ப ஆரம்பித்து விட்டான்."மச்சான் என் காதல கெடுத்ததே இவன் தான்.அந்த பொண்ணு கிட்ட பேச இவன கூட்டிகிட்டு போனா அங்க வந்து அந்த பொண்ண பார்த்து நீ சலீம தான் காதலிக்கனும் மிரட்டி காரியத்தையே கெடுத்துட்டான். பஞ்சாயத்து பண்ண வந்தவன் அவளை பிக்கப் பண்ணிட்டான்..நான் தப்பு செஞ்சுடேன்.. அவனுக்கு பதிலா உன்னை கூட்டிக்கிட்டு போய் இருக்கனும்.."

நான் பேசவே இல்லை.நினைத்து கொண்டேன் இப்படி.(மறுபடியும் முதல்ல இருந்தா..ஏம்பா என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கு..)

பின் குறிப்பு:(அடித்தற்கான காரணங்கள்)

1.ஒரு சப்ப பிகர காட்டி இத நீ பிக்கப் பண்ணு நான் வேணா உதவி செய்யவா என்று சுல்தான் கேட்டதற்கு

2. என் வீட்டில் பணத்தை திருடியதால்.

மகிழ்ச்சியான பின் குறிப்பு:

சயீதாவின் தம்பி சொறி நாய்குட்டிகளை நல்ல ஜாதிநாய்கள் என்று சுல்தான் தலையில் கட்டி 1500 ரூபாய் பிடிங்கி கொண்டான்.

5 comments:

துபாய் ராஜா said...

கொசுவத்தி அருமை.

நாலு நாள் முன்னாடி போட்டிருந்தா நண்பர்கள் தின பதிவாயிருக்கும்.
பரவாயில்லை இந்த வாரம் முழுதும் நண்பர்கள் வாரம்தான்.

Nathanjagk said...

இந்த இடுகைக்கு குறைஞ்சது 10 ஓட்டாவது போடணும்னு நினைக்கிறேன். ஆனால் தமிழ்மணம் அனுமதிக்காதே?

Nathanjagk said...

இந்த இடுகைக்கு குறைஞ்சது 10 ஓட்டாவது போடணும்னு நினைக்கிறேன். ஆனால் தமிழ்மணம் அனுமதிக்காதே?

இரும்புத்திரை said...

nandri dubai raja

nandri jeganathan

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சிறப்பான கருத்துக்கள் நட்பை சொல்ல ....