Saturday, December 26, 2009

சாணிக்குழி - கதை உருவான விதம்,சிமெண்ட் தரையில் உருளும் மிருகம்

இந்த கதைக்கு எருக்குழி அல்லது சாணிக்கிடங்கு என்று தான் பெயர் வத்திருக்க வேண்டும்.சின்னதாக இருந்தால் அது எருக்குழி.பெரிய பண்ணையாக இருந்தால் அந்த வீட்டில் சாணிக்கிடங்கு இருக்கும். இரண்டு வழக்கில் இருந்த சொல்லையும் திருடி புது பெயராக வைத்து விட்டேன்.எனக்கு பச்சை நிறம் தான் பிடிக்கும்.சாணி மெழுகிய வீடு கரும் பச்சையிலும் இளம் பச்சையிலும் கலந்து புது பச்சை நிறத்தில் இருக்கும்.பிள்ளையார் பிடித்து செம்பருத்தி பூவை வைக்க கூட பயன்படுத்துவோம்.

கதை ஆயிரத்தில் ஒருவன் மாதிரி சில நூற்றாண்டுகளுக்கு முன் செல்லப் போகிறது.பழைய காலத்தில் பெண்களுக்கான உரிமை எப்படி இருந்தது என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பெண்களுக்கான மறுமணம் சரி என்பதையே பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தான் ஏற்றுக் கொண்டோம். சமமான உரிமைகள் உண்டா என்று பார்த்தால் உணவில் கூட நாற்பது ஆண்டுகளுக்கு முன் கிடையாது.ஆண் பிள்ளைகளுக்கு முழு முட்டையும்,பெண் பிள்ளைகளுக்கு அரை முட்டையும் தான் கொடுத்தார்கள்.

அப்படி பணக்கார வீடுகளில் ஒரு பெண் விதவை ஆகி விட்டால் பிறகு எதிலும் பங்கேற்க முடியாது.அல்லது அந்த ஆணிடம் ஏதோ பிடிக்காமல் மனம் ஒப்பாமல் இருந்து அந்த வீடுகளில் வேலை செய்யும் வேற்று ஆண்களிடம் தொடர்பு ஏற்பட்டாலோ அல்லது வேலை செய்யும் ஆண்கள் தெரியாமல் பகடி செய்து விட்டாலோ ரத்தம் வரும் சாட்டையால் அடித்து வீட்டின் பின்புறம் இருக்கும் பத்தடி ஆழ சாணிக்குழியில் தள்ளி விட்டால் ரத்த இழப்பால் மயக்கம், கை கால்களில் கட்டு வேறு.சாணியில் உள்ள அமிலம் காயத்தில் பட்டு தாங்க முடியாத எரிச்ச்ல் மற்றும் மூச்சுத்திணறல் எல்லாம் சேர்ந்து துடித்து யாரும் பார்க்காமலே உயிர் அடங்கி விடும். பெண்ணை காதலித்து விட்டு வீட்டை விட்டு ஓட முயற்சி செய்து மாட்டிக் கொண்டால் இன்னும் பல நடக்கும்.அதில் ஒன்று தான் சாணிப்பால் மற்றும் சாணி அபிஷேகம்.

இப்படி ஒரு சித்ரவதை பிண்ணணியில் ஒரு கதை எழுத ரொம்ப நாளாகவே ஆசை.காதலும் அடிதடிகளும் கலந்தே இருந்த முன்னோர்களின் வாழ்வு முறை என்னைடம் வரும் போது காமமும்,பயமும் கலந்து கழிகிறது.

கதையில் வேகம் இருக்கிறது என்று துபாய் ராஜாவும்,லோகுவும் சொன்னார்கள்.ஒத்துக் கொள்கிறேன்.இருக்கும் இடம் அப்படி இங்கு வேகம் தான் பிரதானம்.நான் வேகமாக நகராவிட்டால் என் மேல் ஒரு கூட்டம் நடந்து போகும்.

பள்ளி மாண்வனுக்கு குடிக்க ஊத்திக் கொடுக்கும் சித்தப்பா - இது மாதிரி நடந்த உண்மை சம்பவங்கள் ஏராளம்.தீடிரென ஆடு மேய்க்கவோ.மாடு மேய்க்கவோ ஆள் இல்லாமல் போனால் படிப்பு நிறுத்தப்படும்.மீண்டும் அடுத்த வருடம் பள்ளிக்கு போவார்கள்.பனிரெண்டாம் வகுப்பைத் தொடும் போது இருபது வயதாகியிருக்கும் சிலருக்கு.பிறகு படித்த உடன் கல்யாணம் தான்.கள் இறக்க துணைக்கு பதினாறு வயது பையனை கூப்பிட்டு சென்று பனையில் ஏறிக் குடிக்கும் போது சமயம் பெரும்பாலும் இரவு நேரமாகயிருக்கும்.துணைக்கு சென்றவன் கெட்டுப் போய் பின் அவனே பனை ஏறுவான்.அதனால் குடியும் சாதாரணம் தான்.இந்த கதையில் வரும் மரணங்களைத் தவிர எல்லாமே உண்மை சம்பவங்கள் தான்.

நிறைய விஷயத்தில் நான் என் அம்மா மாதிரி.சின்ன வயதில் சாணி கூட்ட சொன்னால் அம்மா,மாமா எல்லாம் காளை மாட்டு சாணியை தான் எடுப்பார்களாம்.காரணம் அது கையில் ஒட்டாது.நானும் காளை மாட்டு சாணத்தை மட்டும் தான் தொட்டு இருக்கிறேன்.வீடு மெழுகவும் அதை தான் பயன் படுத்துவார்கள்.சாணி அபிஷேகம் நடத்த உதவுவது பெரும்பாலும் எருமை சாணிகளாக இருக்கும்.

சின்ன வயதில் நண்பனுடன் போட்டி போட்டுக் கொண்டு குறுக்கு வழியில் வீட்டுக்கு செல்ல சுவர் ஏறிக் குதித்து ஓடி வரும் போது வழியில் எருக்குழி இருந்தது.காய்ந்து இருப்பது போல் தெரிந்தது.நானும் குதித்து விட்டேன்.ஒரு கால் மட்டும் உள்ளே மாட்டிக் கொண்டது. நான் வெளியே வர உதவி செய்தவன் இன்று உயிரோடு இல்லை.அப்படி இருந்த நான் போன வருடம் தெரியாமல் சாணியில் கால் வைத்து விட்டு - "சிட்டிக்குள்ள எவண்டா மாடு வளர்க்கிறது.." என்று கத்தினேன்.நான் இப்போது சிமெண்ட் தரையில் உருளும் மிருகமாகி விட்டேன்.

அவனுக்காக இந்த கதை.

3 comments:

இரும்புத்திரை said...

ஒரு சின்ன விளக்கம் இரத்து மூன்றாம் பாகம் அல்ல.சின்ன வயதில் கேட்ட கதைகளின்,பார்த்த சம்பங்களின் பாதிப்பே.

Unknown said...

எப்போ தான் திரட் பார்ட் வரும்..,

துபாய் ராஜா said...

சிமெண்ட் தரையில் உருளும் மிருகங்களுக்கும் உன்னை மாதிரியே அடிக்கடி சிலிப் ஆகும் தம்பி....

நல்லா க்ரிப்பான (எழுத்து) நடை வேணும்கிறது தான் எங்க ஆசையெல்லாம்....

எழுத்து வேகம் கதையை இழுக்கிறது. எனவேதான் கதையோடு இழைந்து செல்.கதையை இழுத்து செல்லாதே என கூறினோம்.

சாணிக்குழி மணப்பதும்,மறப்பதும் உன் கையில்தான் இருக்கு ராசா...