Saturday, January 6, 2024

பங்குசந்தையில் பயணிக்கும் ஒருவனின் சுவாரஸ்ய வாழ்வு

ஏன் சமூக வலைத்தளங்களில் இயங்குவதில்லை. அதற்கான பதிலே பாட்ஷா மாணிக்கமாய் இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தான். வலையுலக வழக்கமே எதிர்வினையும், எதிர்கவுஜையும் தான். அதே பாணியில் இது அண்ணன் டீக்கடையாருக்கு ஒரு எதிர்வினை தான். நாற்பது வயதில் என்ன செய்ய முடியும் என்பது தான்.

கணிப்பொறியியல் படிக்கும் போது கணக்கு சம்பந்தமான வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளில் குப்புறப்படுத்து கொள்ளும் வழக்கம் தான் எனக்கு.

பணம் சம்பாதிக்கும் முறையை என்றாவது கண்டுப்பிடித்து விட முடியும் என்று திடமாக நம்பி கொண்டிருந்த எனக்கு மும்பையில் ஒரு பெரிய பங்குச்சந்தையை சார்ந்து இயங்கும் நிறுவனத்தில் வேலை .அலுவகத்தில் காரோட்டும் நபர் கூட பங்குச்சந்தையை பற்றி தான் பேசுவார். என்னுடைய லட்சியமே ஆறு இலக்க பணத்தை சம்பாதிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி பங்குச்சந்தை தான் என்று நினைத்து கடன் வாங்கி முதலீடு செய்தது தான் தாமதம். நான் உள்ளே வருவதற்கு காத்திருந்தது போல பங்குசந்தை சரிந்து விட்டது.

தோல்வியை மறக்க வந்த இடம் தான் சமூக வலைத்தளம். சாரு நிவேதிதா தான் ஆரம்பம்.இன்றும் என் எழுத்துப் பாணி அவர் பள்ளியை சேர்ந்தது தான். எதை எழுதினாலும் சுவாரசியமாக படிக்க வைக்க முடியும். அங்கிருந்து நான் கண்டடைந்த நட்பு தான் லக்கி, அதிஷா, நர்சிம், கென், அப்துல்லா, மதார்.

சமூக வலைதளத்தில் நான் எழுதி வெற்றியை அடைந்தால் பங்குசந்தையில் வெற்றி பெற்றால் பெற்று விடுவேன் என்பதாக நம்பினேன். எழுதும் போது தொலைநோக்காக பார்க்க முடியும் என்று கண்டுயுணர்ந்தேன். ஈழப் போர் உச்சத்தில் இருந்த நேரம். இரண்டாவது பதிவே கலைஞர் ராஜதந்திரி கிடையாது.அப்படியிருந்தால் காங்கிரசை கூட்டணியிலிருந்து கழற்றி விட வேண்டும் என்று தான். இப்படி எழுதியதால் திமுகக்காரன் கூட என்னை மிதிக்கவில்லை.

காங்கிரஸ்காரன் சஞ்சய் காந்தி தான் என்னை வறுத்து எடுத்தது.திமுகக்காரர்கள் ஏன் என்னை திட்டவில்லை என்று தானே நினைக்கீர்கள். அவர்கள் இப்போது தான் கலைஞரைப் புரிந்து கொண்ட திராவிடன் ஸ்டாக். அப்போது அவர்கள் ஈழப் போராளிகளாக மாறியிருந்தார்கள்.

இப்படி எதை எழுதினாலும் சர்ச்சை. சாரு நிவேதிதா பள்ளியில் வழக்கப்படி அவர் தான் சிஷ்யர்களை மிதித்து வெளியே அனுப்புவார். வழக்கத்துக்கு மாறாக அவரையும், மிஷ்கினையும் பகடி செய்து விட்டு வெளிநாட்டு வந்துவிட்டேன். அடுத்த ஆறு மாதத்தில் பகடி உண்மையாகி இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள்.

இந்த களேபரத்தில் நான் ஒரு லட்சம் சேர்த்திருப்பதை பார்க்க மறந்து விட்டேன். இருபத்தியாறு வயதில் செலவு போக முதல் ஒரு லட்சரூபாய்.

இப்போது மறுபடியும் பங்குசந்தை. என்ன வேண்டும் என்று கேட்டது. எட்டு இலக்கம் சம்பாதிக்க வேண்டும் என்றேன். ஈடாக என்ன வைப்பாய் என்று கேட்டது. நான் சமூகவலைத்தளங்களில் ஒரு பிரபலம். என் எழுத்தை வைக்கிறேன். எட்டு இழக்க பணத்தை அடைந்தபின் தான் எழுதுவேன்.

அப்படியும் தோல்வி தான். இதற்கு நடுவில் திருமணம், குழந்தை. பங்கு சந்தை சூட்சுமத்தை கற்று தேர்ந்திருந்தாக நினைத்தேன். ஏன் என்னை வெற்றி அடைய விட மறுக்கிறாய் என்று கேட்டால், நீ என்ன சாருவா வேறு ஏதாவது ஈடு வை. என்ன வைக்கணும் சொல் என்று காலத்திடம் கேட்டேன்.

நட்பு,உறவு, பழக்கவழக்கம், சொகுசு, சம்பளம், வெளிநாடு இப்படி ஒவ்வொன்றாக ஈடு வைத்தேன். அப்போதும் வெற்றி வரவில்லை. வேறன்ன ஈடு வைப்பாய் சொல் என்று காலம் கேட்டது. உயிரைத் தவிர என்ன வேண்டும்.

குடும்பம் என்றது. தரமுடியாது என்றேன். காரணம் அவர்கள் என்னை சேர்ந்தவர்கள் அல்ல. நான் தான் அவர்களை சார்ந்து இருக்கிறேன்.

மானத்தை ஈடு வை. எனக்கு என்ன அவமானம் வந்தாலும் நான் கொந்தளிக்க மாட்டேன். என்னை சேர்ந்தார்களை இது தான் சாக்கு என்று அவமானப் படுத்தலாம் என்று நினைத்தால் நான் அதற்கு கொந்தளிப்பேன்.

மனைவிடம் சொன்னேன். நாம் வெளிச்சமே இல்லாத கிணற்றை பாதி தான் கடந்துயிருக்கிறேன். திரும்பி போனாலும் இன்னும் பாதியை கடக்க வேண்டும். முன்னாடி தான் போக வேண்டும். என்னை கையாலாகாதவன் கூட என்று நினைத்துக் கொள்.

ஒருநாள் இந்த மாதம் ஐநூறு ரூபாய் சம்பாதித்திருக்கிறேன் என்று சொன்னபோது நீங்கள் ஒருநாளில் இருபதாயிரம் சம்பாதித்த காலமும் உண்டு. ஐநூறு கோடி சம்பாதிக்கும் காலமும் வரும். எனக்கு எல்லாமுமே ஒன்று தான் என்ற போது என் பைத்தியம் அவரையும் பிடித்து விட்டது என்றே நினைத்தேன். அப்படி ஒரு பித்தடைந்த தோழி அவர். ராஜ்ஜியம் இல்லையாலும் ராஜா ராஜா தான் என்ற ராணி அவர்.

அம்மாவோ யானை படுத்தாலும் குதிரை மட்டம்பா. யானை விழுந்தா எந்திருக்க நேரம் ஆக தான் செய்யும். எந்திருக்கும் போது தெரியும் யானையுடைய உயரம்.

அப்பா மனுஷன் எப்போ வேணாலும் மேலே போவான்.அவன் விலை மதிப்பில்லாதவன். இப்படி சொல்வார்கள்

அடுத்து ஒரு பெண் குழந்தை. சிறிதும், பெரிதுமாக பணம் வந்து கொண்டிருந்தது. கோவிட் வந்து எல்லோரும் முடங்கிய போது என்னுடைய வழிமுறை பங்கு சந்தையில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. ரேஸில் எல்லோரும் ஒன்றாக ஓடிக் கொண்டிருந்தோம். எல்லோரும் எதிர்த்தும் எவ்வளவு சீக்கிரம் கோவிட் ஊசி கிடைத்ததோ அவ்வளவு சீக்கிரம் செலுத்திக் கொண்டோம். கிணற்றை தொண்ணுறு சதவீதம் தாண்டியிருந்தோம். வீழ்ந்து விடக்கூடாது அல்லவா.

என் நம்பிக்கையை இன்னும் வலுவாகியிருந்தது என்னுடைய காலம் கடந்த கணிப்பு தான். 2010லில் மாரி செல்வராஜ் மூன்று தவிர்க்க முடியாத சினிமாவை தருவார் என்று சொன்னது. மாரி செல்வராஜின் கமலுக்கு ஒரு கடிதம் போல மாரியை கடுமையாக விமர்சித்த பதிவும் காலம் கடந்து இருக்கும்.

கலைஞர் காலத்திலேயே திமுக - காங்கிரஸ் கூடடணி முறிவு. ஜோ பிடன் வெற்றி, மு.க. ஸ்டாலின் வெற்றி.

சமூக வலைத்தளங்களில் சரவணன் சந்திரன். ஒவ்வொரு நாவலையும் விடாமல் படித்திருக்கிறேன். வியாபாரம் செய்யும் ஒவ்வொருவரையும் அவர்களுக்கே தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன், சஞ்சய் காந்தி சரவணவேல், கருணா, சவுக்கு (இப்போது பிசினாரி விட்டது). வியாபாரம் என்ற யானையில் ஏற வேண்டுமானால் முதலில் பாகனாய் இருக்க வேண்டும். பிறகு அது ராஜாவை போல சுமக்கும்.

லக்கி பத்திரிகைக்கும், அதிஷா சினிமாவுக்கும் , அப்துல்லா அரசியலுக்கும், கென் வெளிநாட்டிலும், நர்சிம் சினிமாவுக்கும், இலக்கியத்திருக்கும் போனானார்கள்.

நானும், மதாரும் பங்குச்சந்தையை நோக்கி சென்றோம். மதார் பங்குசந்தையில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டப் போது குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்க வேண்டும் என்று மட்டும் தான் ஆரம்பத்தில் சொன்னேன். ஆரம்பத்தில் இருவரின் பாணியும் வேறு. ரங்கா படத்தில் வரும் நல்லவன் ரஜினியும், கெட்ட கராத்தே மணியும் ஒரு சந்திப்பிறகு பிறகு கெட்டவனாகவும், நல்லவர்களாவும் மாறி போவார்கள்.நான் என்றாவது அவர் முறையை நோக்கி சென்றால் அவருடனான விவாதத்திற்கு பிறகு தான். அவருடைய வெற்றியும் என்னுடைய வெற்றி தான். எனக்கு உத்வேகம் தரும் எவருடைய வெற்றியும் என்னுடைய வெற்றி தான்.

என்னை கொஞ்ச காலம் அடைகாத்து காப்பாற்றியது நர்சிமின் காது தான். ஒருநாள் நடுசாலையில் நின்று கொண்டு இந்த முறை வெற்றி பெறாது என்று சொல்கிறார்கள். இன்னைக்கு வேண்டுமானால் இது வெற்றி பெறாமல் இருக்கலாம். ஒருநாள் நான் உலக சந்தையும் வெல்வேன். அது வரை என் புலம்பல்களையும், வெற்று கூச்சல்களையும், வெற்றி முழக்களையும் நீங்க கேட்கணும் என்று சொன்னேன். அவர் செய்து கொண்டே இருந்தார். அவருடைய காது நான் சொல்வதை கேட்க்கும் அளவிற்கு பெரிதாகி கொண்டே செல்ல வேண்டும்.

26 வயதில் ஆறு இலக்கத்தை அடைந்த நான் இன்று நாற்பது வயதுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நேரத்தில் எட்டு இலக்கத்தை அடைந்திருக்கிறேன். மூன்று நாடுகளில் இந்த முறையில் இன்வெஸ்ட் செய்கிறோம். வெற்றியை அடைந்திருக்கிறோம்.

பங்குசந்தையில் பயணிக்கும் ஒருவனின் சுவாரஸ்ய வாழ்வு இப்படியாக இன்று மாறியிருக்கிறது.

அடுத்த இலக்கு பத்து இலக்கம் பணம். பெஸ்ட் செல்லராக ஒரு புத்தகம் எழுத வேண்டும். எழுதுவேன். நட்பு,உறவு, பழக்கவழக்கம், சொகுசு, சம்பளம், வெளிநாடு இதெல்லாம் வேறு ஒருவரிடம், வேறிடத்தில் கிடைத்திருக்கிறது.

காற்றாராய் பயணித்தவனை காலம் ஒரு கோப்பையில் அளவேயுள்ள தண்ணீராய், மெலிதான ஓடையாய் , ஒரு துளி கண்ணீராய் பயணிக்க வைத்திருக்கிறது. இன்று திரும்பவும் அருவியாய் பயணிக்க வைக்கிறது. பெரும் சமுத்திரமாக மாறவும் வைக்கும்.

டீக்கடையாருக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

சினிமாவில் 2007க்கு பிறகு எழுத்தாளர் இடம் காலியாகத்தானிருக்கிறது . அதை நோக்கி போங்கள். அதற்கு தேவை நீண்ட ஆயுளும், நம்பிக்கையும், கொஞ்சம் திறமையும்,ஒரு வாய்ப்பு தான். நாற்பத்திறகு பிறகு தான் வாழ்க்கைத் தொடங்கும் . வாய்ப்பை தான் அடைய நிறைய காத்திருப்பும், தைரியமும் வேண்டும்.

இதை படித்து விட்டு இதில் திமிரும், அங்காரமும் இருக்கிறது யாரவது நினைத்தால் படித்த உடன் மறந்து விடவும். இது யாராவது ஒருவருக்கு உத்வேகம் அளித்தாலும் இந்த பதிவு அதனுடைய வேலையை சரியாக செய்து விட்டது என்று அர்த்தம்.