Monday, August 23, 2010

பாணா காத்தாடியும் ஒரு காதலும்

இன்று வரை என் லட்சியங்களில் ஒன்றாகயிருப்பது வெறும் ஓட்டைக் காத்தாடியாவது விடுவது தான். கிராமத்தில் அந்த கனவு நிறைவேறாத சோகத்தில் இருந்த நான் சென்னை சி.ஐ.டி நகருக்கு வந்த பின் தான் லட்சியத்தில் பாதியை கடந்தது போலிருந்தது. மூன்றாவது மாடி டேங்கில் ஏறி கண்ணாம்மா பேட்டையில் இருந்து விடும் காத்தாடியை டீல் போடுவார்கள். யாருக்காவது லுங்கி அவிழ்ந்து விடாதா என்னையும் பிடிக்க சொல்ல மாட்டார்களா ஏக்கத்தோடு நான் பார்த்துக் கொண்டேயிருப்பேன். ஒருவருக்கும் அவிழாது.அப்படியே லுங்கி இறங்கினாலும் உள்ளே கொஞ்சம் பெரிதான டிராயரோடு இருப்பார்கள். இப்படியாக தொடர்ந்த ஒரு நாளில் ஏதோ காயப் போட வந்த பெண்மணி டிராயரோடு நின்ற பசங்களைப் பார்த்து எல்லார் வீட்டிலும் புகார் கொடுக்க எனக்கு மட்டும் ஸ்பெஷல் அர்ச்சனை. இனி எதையும் தொட மாட்டேன் என்று வாக்குறுதியோடு தான் என்னை அனுமதித்தார்கள். அதற்குப்பின் தான் என் மேல் பாசம் பீறிட்டு அடித்ததோ என்னவோ எனக்கு காத்தாடி விட சொல்லித் தர நிறைய குருமார்கள் முன்னுக்கு வர செய்த சத்தியத்தால் அதை தொடாமல் நின்றுக் கொள்வேன். எதிர்க்காற்றில் டீல் போட அது நாங்கள் விட்ட காத்தாடிக்கே பாதகமாக முடிந்தது. என்னை எவ்வளவோ கெஞ்சியும் பிடிக்காத காரணத்தால் நிறைய நூலோடு காத்தாடி போய் விட்டது.ஸ்ரீனிவாசா தியேட்டரில் பிடித்திருப்பார்கள் என்று பேசிக் கொண்டார்கள். அந்த நேரத்தில் கெட்ட வார்த்தைகளோடு சரளமாக சென்னை பாஷையும் பேசத் தொடங்கியிருந்தேன். திருநெல்வேலி நடையில் பேசி விட்டு புட்டுக்கிட்டான் நட்டுக்கிட்டான் என்று பேச இங்கேயிருந்தால் இன்னும் சோவாரியாக மாறி விடுவான் என்று சொல்லி காலம் என்று எதிரே வந்த காத்தாடி எங்களில் நூலை வெட்ட விருகம்பாக்கத்தில் போய் விழுந்தோம். சுற்றி கொஞ்சம் சொந்தங்கள்.கொஞ்சம் கொஞ்சமாக திருநெல்வேலி தலையைக் காட்ட நான் சி.ஐ.டி நகர் நண்பர்களை மறக்க தொடங்கியிருந்தேன்.என் சுயநலத்திற்காக அதே மாதிரி ஏதோ ஒரு பிரச்சனையில் பெரம்பூரில் இருந்து விருகம்பாக்கம் வந்தவனிடம் நான் நட்பு கொள்ள ஆரம்பித்தேன்.

ஏதோ ஒரு மழைநாளில் சோம்பேறித்தனப்பட்டு 12 பியில் வராமல் இறங்காமல் வீடு வந்து சேர ஆசைப்பட்டு 12 சியில் பயணம். மழையோடு பேசிக் கொண்டிருந்தவளை மீள்பார்வையில்லாமல் முதல் பார்வையிலே பிடித்து தொலைத்தது. அவளை பார்க்கவே 12 சியில் பயணம். ஒரு நாளாவது பார்த்து விட மாட்டாளா என்று நப்பாசை தான் அவள் பின்னால் அலைய வைத்தது. ஒரு நாளும் நடக்கப்போவதில்லை என்று மட்டும் தெரியும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தான் கவனித்தேன் அவள் கையிலிருக்கும் புத்தகம் வித்தியாசமாக தெரிய தொடர்ந்து கவனித்ததில் அவள் தாவணியும் வித்தியாசமாக இருந்தது. விசாரித்தால் அவள் ப்ளஸ் டூவாம். பள்ளியில் மாணவிகளின் தலைவியாம். பஸ்ஸில் ரவுடியாம். எவ்வளவு வித்தியாசம் நான் ரெண்டு வருடம் ஜூனியர் மற்றும்  நெற்றியில் விபூதியோடு இருக்கும் பையனை அந்த வயதில் எவளுக்குத் தான் பிடித்திருக்கிறது. அவளிடம் பேச எப்போதாவது கிடைக்கும் சந்தர்ப்பதிற்காகவே அவனிடம் நட்பு கொள்ள ஆரம்பித்தேன்.அவன் அக்காவும் அவளும் ஒரே வகுப்பு.நட்பு என்றால் அப்படி ஒரு நட்பு.பள்ளியில் சாம்பியன் அணியான எங்கள் அணிக்கு எதிராக அவன் வகுப்பின் சார்பாக களமிறங்கும் அளவிற்கு நட்பு.

எங்கள் பள்ளியையும் பெண்கள் பள்ளியையும் ஒரே நேரத்தில் தான் விடுவார்கள். ரோமியோ ஜூலியட், சலீம் அனார்கலி மாதிரி சரித்திரத்தில் இடம் பிடிக்க நிறைய பேர் முயல அது தெரிந்து பெண்கள் பள்ளி எங்களுக்கு முக்கால் மணிநேரம் முன்னால் விட கடைசி வகுப்பை புறக்கணித்தால் மட்டுமே அவளை அல்ல எல்லோரையும் பார்க்க முடியும் என்ற நிலை. சுவர் குதிக்க ஆரம்பித்திருந்தோம். துரைசாமி சப்வேவில் காத்திருப்போம்.பர்கிட் ரோடு வழியாக பஸ் துரைசாமி சப்வேவிற்கு வரும். அடிக்கடி மாட்டிக் கொள்வோம்.ஆசிரியர்கள் பிடித்தாலும் பாதி நாள் அப்செண்ட் தான் தண்டனை.அடி எல்லாம் கிடையாது என்பதால் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் வேதாளத்தைப் பார்க்க காத்திருப்போம்.பழம் என்று சொல்லி விடுவாளோ தம்பி என்று சொல்லி விடுவாளோ என்று பயத்தில் வீட்டிலிருந்து வரும் போதே விபூதியை அழித்து விட்டு இன்சர்ட்டை வெளியே எடுத்து விட்டு வருவது வழக்கம். அன்று ஆரம்பித்த பழக்கம் இன்றும் விபூதி பூசிய ஐந்து நிமிடத்தில் அழித்து விடுகிறேன். அவளும் என்னை லேசாக கவனிக்க ஆரம்பித்தது தெரிந்தது. காரணம் கூடவே வருபவன் தோழியின் தம்பி. பிறகு வீட்டில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே விஷயத்தை அவனிடமிருந்து வாங்கியிருக்கிறாள். தெரிந்தப்பிறகும் யாரும் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.நான் மட்டும் பேக்கு மாதிரி பேக்கை எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பேன்.
 
அவளை பார்த்துக் கொண்டே இறங்கியதில் பஸ்சில் இருந்த தகரம் கிழிக்க சுண்டு விரல் முழுவதும் வொய் ஷேப்பில் கிழித்து விட அவள் பதற்றப்பட்டாளா என்று பார்க்கும் முன் வெளியேறிய ரத்தத்தில் தலையை சுற்ற ஆரம்பித்து. தம்பியைப் பிடித்து கொண்டு காயத்தைக் கழுவி ஆள் மாற்றி ஆள் விரலில் கைக்குட்டையைஸ் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நீலக்கலர் பேண்ட் கருநீலமாக மாறத் தொடங்கியிருந்தது. வீட்டிற்கு பக்கத்தில் உள்ள டாக்டரிடன் போன முதல் பேஷண்டே நான் என்பதால் அளவுக்கு மீறி பணமும்,பேண்ட் எய்டும் காதில் சுற்றத் தொடங்கியிருந்தார். பள்ளியில் நிறைய பசங்க செய்வது அடிபடாமல் கட்டுப் போட்டுக் கொண்டு பெண்களிடம் உதார் விடுவார்கள். என்னையும் அப்படி நினைத்து விடப் போகிறாள் என்று மறைத்துக் கொண்டே பயணிப்பேன். நண்பனுக்கு விஷயம் தெரிந்து  உன் தம்பிக்கு கொஞ்சம் ஊட்டி விடேன் என்று கேலி செய்வானாம். காய்ச்சல் காரணமாக இரண்டு நாள் அவள் ஏறும் பஸ்சில் மட்டம் போட அவள் இவனிடம் கேட்டாளாம். உன் தம்பியா வீட்டுக்குப் போயிருப்பான் என்று கேலி செய்ய அவன் ஒண்ணும் என் தம்பியில்லை.இனி சொல்லாதே என்று சிடுசிடுத்தாளாம். அதை அவன் என்னிடம் சொன்னதும் மழை நாளில் அவள் பார்த்தாலே சாரலடிக்கும்.இப்படி சிடுசிடுத்தது காதல் சொல்லி விட்டு முத்தமிடாமல் கன்னத்தில் உரசி சென்றது போலிருந்தது.


கைகாயம் ஆறியிருந்தது.காதலா ஏதோ ஒரு ஏழவோ பெருகிப் பெருகி வழிந்தது. அணையப் போகும் விளக்கு போல அன்றைய தினமே பிரகாசமாயிருந்தது.கடைசி ஸ்டாப்பிங் கொஞ்சம் பெருசு. ரங்கராஜபுரத்தில் ஆரம்பித்து பனகல் பார்க்கில் முடியும்.கோடம்பாக்கத்தில் பஸ் நுழைந்தவுடன் கூட்டம் அம்ம ஆரம்பித்திருந்தது.அவளை பார்க்க முடியாமல் கடைசி ஸ்டாப்பிங் மட்டும் தொங்க முடிவெடுத்து முன் படிக்கட்டில் தொங்க ஆரம்பித்தேன்.இரண்டு நிறுத்ததிற்கும் இடையில் முக்கால் கிலோ மீட்டர் இருக்கும்.பாதி வழியில் கை வழுக்கி விட்டது.சாவு நிச்சயம் ஆகி விட்டது என்று நினைத்து கொண்டேன்.

கீழே பார்த்தால் விழுந்து விடுவேன் என்று பயம் வேறு.கண்ணை இறுக்கமாக மூடி கொண்டேன்.பயத்தில் அன்று உள்ளங்கையில் வேர்த்தது.இன்னைக்கு என் கதை முடிந்து விட்டது..டேய் பாடு பசங்களா என்னை பிடிங்க என்று கத்த நினைத்தாலும் வாயில் வார்த்தை வரவில்லை.சென் டர் போர்ட் (கால் வைக்காமல் இரண்டு படிக்கட்டுகளுக்கும் நடுவில் அடிப்பது) அடித்து அனுபவமே இல்லாததால் ஒரு கட்டத்தில் கை வழுக்கி விட்டது.கண்ணை திறந்து அது பனகல் பார்க்கின் வளைவு.வெளியே குதித்து விட்டேன்.சிறுகீறல் கூட இல்லாமல் தப்பி விட்டேன்.நம்பவே முடியவில்லை.அதற்குள் பின்னாடி வந்து பைக்காரன் என் சட்டையைப் பிடித்து "ஏண்டா ஸ்கூல் படிக்கிற பையனா நீ.." என்று ஏதோ கத்திக் கொண்டு இருந்தான்.பசங்க அதற்குள் பஸ்சில் இருந்து இறங்கி என்னை நோக்கி ஓடி வர..அவன் என்னை விட்டு விட்டான்.

என்னால் ஏத்து கொள்ளவே முடியவில்லை.ஒரு பெண்ணால் எனக்கு இப்படியா..அவளை தவிர்க்க ஆரம்பித்தேன்.என்னால் நம்ப முடியாத ஆச்சர்யம் அவள் 12 சி பஸ்சில் போகாமல் எனக்காக 12 பி பஸ்சில் வர ஆரம்பித்தாள்.அவளை நான் தவிர்த்தாலும் அவள் விடவில்லை.ஏதாவது சொல்லி வம்புக்கு இழுப்பாள்.தன் வினை தன்னை சுடும் என்று நினைத்து கொண்டேன்.அவளிடம் சொல்லாமல் சென்னை - 600028 இந்த முகவரிக்கு வந்து விட்டோம்.

பத்து வருடங்கள் கழித்து என் நம்பரைக் கண்டுப்பிடித்து பழைய நண்பன் பேசினான்.அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டதாம்.அவ புருஷன் வங்கி மேலாளர் என்றும் ஒரு பையன் இருப்பதாகவும் சொன்னான்.பையன் பெயரை சொல்ல வரும் போது.."மச்சான் வேல இருக்கு..அப்புறம் பண்ணு.." என்று அவன் பதிலுக்கு எதிர்பாராமல் வைத்து விட்டேன்.
 
இரவு ஒரு மணிக்கு பாணா காத்தாடி பார்க்க ஆரம்பித்திருந்தேன்.படம் போக போக வெளியில் அடை மழை.இப்படி ஒரு மழையை நான் பார்த்ததேயில்லை.எனக்காகவே யாரோ அழுதது போலிருந்தது. படம் முடிந்தும் மடிக்கணினியைக் கூட அணைக்காமல் சுருண்டிருந்தேன்.அன்று சொல்லாமல் விட்ட ரகசியம். எனக்கு பயம் ஏற்படும் போது மட்டும் பாட்டியை நினைத்து கொள்வேன்.அன்றும் அப்படித்தான் வேண்டிக் கொண்டேன். "என்னை எப்படியாவது காப்பாத்து..நான் அவப் பின்னாடி போறதை விடுறேன்.." என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் கீழே விழும் போதெல்லாம் யாரோ என்னை தாங்கிப் பிடிக்க என்னுடனே இருக்கிறார்கள்.

7 comments:

நீ தொடு வானம் said...

எங்க கதையிலே அமர் வரல.தோழர் சொன்னதால பயமா.

இரும்புத்திரை said...

அனானியாக வந்து திட்டலாம் என்று பார்த்தால் பள்ளியில் படிக்கும் மொட்டைக் கடிதம் எழுதுபவர்களை என் வாத்தியார் இப்படி தான் திட்டுவார்.கும்பலுக்கு பிறந்தவன்,விருந்தாளிக்குப் பிறந்தவன் என்று திட்டுவார்.அதன் அர்த்தம் அப்பன் பெயர் தெரியாதவன் என்பதாம்.அப்படி அந்த பெயரை வாங்க விரும்புவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

பழைய பதிவிலிருந்து எடுத்தது நல்லா பொருந்ததுதே.

இரும்புத்திரை said...

நான் அனானியை தான் சொன்னேன்.வேறு யாரையும் சொல்லவில்லை.மன்னிப்பு எல்லாம் கேக்க முடியாது.

கார்க்கிபவா said...

வாவ்!!!

RAVI said...

Dear sir pls visit my blog known as www.avasaramda.blogspot.com
It has more big bangs in Tamil.
It is a very useful blog for whom?
Thanking you,
Ravi.
@kalkey

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்

இரும்புத்திரை said...

இளா நீங்க விவேகானந்தா காலேஜ் போல.

பாணா காத்தாடி முக்கால் வாசி எழுதி திரும்ப படித்து பார்க்கும் போது ஏற்பட்ட அயற்சியில் அப்படியே போடாமல் விட்டு விடலாமா என்று நினைத்தேன்.முடிவை கூட அதனால் டைப் செய்யாமல் முன்பு எழுதிருந்த பதிவிலிருந்து எடுத்தேன்.

எனக்கு பிடிக்காமல் போனால் நிறைய பேருக்கு பிடிக்கும் போல.இனி எனக்கு பிடிக்காமலே எழுத வேண்டியது தான்.

இந்த பதிவு பிடிக்கவில்லை என்று சொன்ன இன்னொரு ஆள் டிவிட்டர் நான்மணி. இன்னொரு நன்றி அவருக்கு.அவருக்கு பிடிக்காததும் எல்லோருக்கும் பிடிக்கும் போல.