ராஜியுடன் இருக்கும் போதா அந்த போன் வந்து தொலைக்க வேண்டும்.சும்மாவே துருவித் துருவி கேட்பாள். சத்தம் குறைத்து பேச ஆரம்பித்ததும் பார்வையாலே எரிக்க ஆரம்பித்தாள்.
"அமர்.. எல்லா கருமத்தையும் விட்டாச்சின்னு சொன்ன..இப்போ பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா.." கண்களில் கொதிப்பு தெரிந்தது.
"இதுதான் கடைசி..இனி யார் கூப்பிட்டாலும் போக மாட்டேன்.." அவளை சமாதானப்படுத்தவே முடியாமல் போனுக்கும் பதில் சொல்ல முடியாமல் கெஞ்சிக் கொண்டிருந்தேன்.
"இப்ப போன..என் மூஞ்சிலே முழிக்காத.." குரல் பிசிறடித்தது.
"வர்றேன்..இதான் கடைசியா இருக்கணும்.." அவளிடம் பேசினால் அழுதே கரைத்து விடுவாள் என்பதால் அவளை பார்க்காமலே கிளம்பினேன்.
"ஐ ஹேட் யூ.." மொபைல் வெளிச்சத்தில் மொழிந்தது.லேசாக கோபம் வந்தாலும் சிரித்துக் கொண்டேன்.
காரை விட்டு இறங்கியதும் வாசலிலே காத்திருந்த விமல் கட்டிக் கொண்டான். என்னை விட ரெண்டு வருசம் பெரியவன். சின்ன சின்னதாக கேடித்தனங்கள் செய்ய ஆரம்பித்த சமயம் உண்டான நட்பு. பிளான் மட்டும் நான் போடுவேன்.அவன் காரியத்தில் இறங்குவான். காதலிக்க ஆரம்பித்தில் இருந்து பயத்தோடு புத்தியும் தடுமாற ஆரம்பித்திருந்தது. அவன் பெரிதாக வளர்ந்து விட்டிருந்தான். அவனால் செய்ய முடியாத காரியங்களுக்கு என்னை கூப்பிடுவான்.செய்து தருவது வழக்கம். சின்ன வயதில் என்னை காட்டித் தராமல் அவன் ஜெயிலுக்கு போனதால் காதலை விட அவன் பெரிதாகயிருந்தான்.
"வா அமர்..நம்ம கூட்டத்தில் எவனோ கருங்காலி இருக்கிறான்..தொழில் எதிரியைப் போட முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கோம்..அவன் தப்பிச்சி விடுறான்.." சொல்லும் போதே அனலடித்தது. எப்படியும் ஏத்தியிருப்பான்.
"சரி பிரச்சனையில்லை..அவனை இன்னைக்கு போடப் போறோம்னு சொல்லு..ஹோட்டல் போய் அங்கயிருந்து ஆரம்பிப்போம்..ஆனா இதுதான் கடைசி.." சொல்லி விட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தோம்.
ராஜியைப் பற்றி கேட்டான்.மழுப்பிக் கொண்டிருந்தேன்.
ஹோட்டலில் வெளியே நடப்பதைப் பார்த்துக் கொண்டே வதந்திக்கானப் புள்ளியை ஆரம்பித்திருந்தோம். எல்லோரையும் மிக கவனமாக கவனித்தோம். கேஷியர் மட்டும் மொபைலையும், கணினியையும் நோண்டிக் கொண்டிருந்தான். மாற்றி மாற்றி திரிகளைக் கொளுத்த அவன் மேல் மட்டும் சந்தேகம் வருமாறு நடந்து கொண்டிருந்தான். எல்லா கதையின் முறைப்படி அவனை விசாரித்ததில் உண்மையைத் துப்பிக் கொண்டிருந்தான்.
ராஜா வரும் இடம் தெரிந்தது. அவன் கருப்பு பென்ஸில் வந்திருந்தான். அதே போல ஆறு பென்ஸ் நிறுத்தி எல்லா வண்டியிலும் ஆர்.டி.எக்ஸ் வைக்க சொல்லி விட்டு அங்கேயே ஒரு அறை எடுத்திருந்தேன். மீண்டும் வந்து பார்த்ததில் காரின் எண்ணிக்கை கூடியிருந்தது. அதை அங்கிருந்து எடுப்பதற்குள் அவன் அதை எடுத்து கொண்டு போய் விட்டான். சிகரெட்டில் விஷம் இன்னும் இத்யாதி இத்யாதி முறைகளை முயற்சித்தும் அவன் தப்பித்துக் கொண்டேயிருந்தான்.பணம் மட்டும் செலவாகிக் கொண்டேயிருந்தது.
விமல் நக்கல் அடிக்க ஆரம்பித்து விட்டான். "இதுக்குத்தான் பொண்ணுங்க கூட பழகக் கூடாதுன்னு சொல்றது.என்ன ஃபார்ம்ல இல்லையா..வித்தியாசமா ஒரு ஆள் இருந்தா போதும்டா..உன்னால ஒண்ணும் செய்ய முடியாது.."
அடுத்த நாள் போன் பண்ணி சொன்னேன்.ராஜா இறந்து விட்டான்.விமலால் நம்ப முடியவில்லை. "எப்படிடா.."
" நீ சொன்னது தாண்டா..வித்தியாசம்.. அதுல தான் தெரிஞ்சது..ஒரே மாதிரி பொருளிருந்தா அவன் எடுக்க மாட்டான்.எல்லா சிகரட்லையும் விஷம் வச்சோம்.அவன் எடுக்கவேயில்லை.."
".."
"அப்புறம் அன்னைக்கு புதுசா வந்த கார்ல மட்டும் பாம் இல்ல..அவன் அதை எடுத்து தப்பிச்சிட்டான்.. அதனால இந்த தடவை அவன் கார்ல மட்டும் பாம் வச்சேன்..மத்த கார்ல இல்ல..அவன் அதை எடுத்தான். ஆள் காலி.."
"சாரிடா அமர்..உன் மேல சந்தேகப்பட்டு உன் கார்ல பாம் வச்சிட்டேன்டா..போய் சேருடா..எப்படியும் இனி எனக்கு வேலை செய்ய மாட்ட..அப்புறம் இருந்தா என்ன..இல்லன்னா என்ன.."
"விமல் என்னையுமாடா.." அதிர்ச்சி என் குரலில் தெரிந்தது.
"ஆமாண்டா..நீ குடுத்த பாம்ல நீயே சாகப் போற..ரிமோட்டை அழுத்தப் போறேண்டா..இன்னும் ஒரு நிமிஷம் தாண்டா..ராஜா நரகத்துல உனக்காக காத்திருப்பான்.."
"வேணாம்டா.." சொல்ல சொல்ல எதிர்முனையில் ரிமோட் அழுத்தும் சத்தம் கேட்டது.
"மன்னிச்சிருடா.." குரல் தழுதழுத்தது.
பாம் வெடிக்கும் சத்தம் எனக்கு கேட்டது. விமல் செத்தது எனக்கு வருத்தமாகயிருந்தது. அவன் கண்ணில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.அடிக்கடி என் கார் இருக்கும் இடத்திற்கே அவன் கண் அலைந்து கொண்டிருந்தது. ரிமோட் கன்ட்ரோலில் தான் வெடிகுண்டு இருந்ததை சொல்ல மறந்தது எனக்கு சாதகமாக முடிந்து விட்டது.
வருத்தத்தில் கண்ணை மூடிக் கொண்டேன்.மொபைல் அடிக்கும் சத்தம் கேட்டு அதை அழுத்தவும் திருப்பத்தில் ஹெட்லைட் இல்லாத லாரி வரவும் சரியாகயிருந்தது.
கண் முழித்து பார்க்கும் போது தோள்பட்டை வலித்தது.ராஜி நின்றுக் கொண்டிருந்தாள்.பக்கத்தில் வர வர அவள் பின்னாலிருந்த வாசகம் பளிச்சென்று தெரிந்தது.
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை
யோசு.1:5
Friday, August 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அதானே அமர் சாக மாட்டானே.இப்படி எல்லாம் கதை விட்டா மத்த ஜொள்ளு கதையெல்லாம் புனைவுன்னு நம்பிருவோமோ.இது மட்டும் தான் புனைவு.மத்தது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
கதை பரவாயில்லை.தேறும்.
Athu yaruya yosu?
இதுவும் புனைவுன்னா அதுவும் புனைவு தான்.இது உண்மைன்னா அதுவும் உண்மை தான்.
முகிலன் பைபிளில் அப்படி சொல்லியிருக்காங்க.அமர் கிறிஸ்டையன் பெண்களை உடனே காதலித்து விடுவதால் ராஜியும் மதம் மாறி அடிப்பட்டிருந்தாலும் தேடிப் பிடித்து கிறிஸ்டியன் மருத்துவமனையில் சேர்த்து விட்டாள்.இதுவும் புனைவு தான்.நீளம் கருதி பின்னூட்டத்தில்.
Post a Comment