Friday, October 30, 2009

தமிழ் மொழி செய்யும் சித்து விளையாட்டு - ரணம்

ரணம் - இந்த வார்த்தை தரும் அர்த்தம் தான் எத்தனை,எத்தனை,இதோடு சில எழுத்துகளை கோர்த்தால் வேறு ஒரு அர்த்தம்.அப்படி முதலில் வரும் ரணம் தான் மரணம்.

மரணம் - மறக்காத ரணம் அல்லது மறந்து போன ரணம்.அது இயல்பாக நடந்து இருந்தால் நாம் மறந்து இருப்போம்.அப்படி இல்லாமல் இருந்தால் அது என்றுமே மறக்க முடியாமல் இருக்கும்.

இப்படி இன்னும் சில வார்த்தைகள் காரணம்,தோரணம்,சூரணம்,சாதாரணம் இதிலும் சில கதைகள் ஒளிந்து கிடக்கும்.

பார்த்திபன் கிறுக்கள்களில் இருந்து ஒரு கிறுக்கல்

காதல் சாதாரணம்..
காதல் சதாரணம்..

இப்படி இரண்டே வரியில் அவர் காதலை சொல்லியிருப்பார்.விரிவாக வேண்டுமென்றால் நேற்று வெண்ணிற இரவுகள் கார்த்திக் எழுதிய கவிதையை படிக்கலாம்.

பார்த்திபனின் கிறுக்கல்களில் மூன்றாவது வரியாக நான் இப்படி எழுதினேன்.

காதலே சரணம்..

எப்படி என்று கேட்ட ஒருவ_க்கு நான் சொன்ன பதில் "சில பேருக்கு முதல் காதல் பல்ப் வாங்கியிருக்கும்..சோகத்தைப் பங்கு போட யாராவது வந்தா மனசு ஐ'ம் இன் லவ் என்று குதிக்கும்.."

கிடைத்த பட்டம் - கிறுக்கா..சரி இதுக்கெல்லாம் மனம் தளருவோமா என்ன முன்னாடி ஒரு ஞான என்று போட்டு ஞானகிறுக்கன் ஆகி விட வேண்டியது தான்.

பலியாடுகளுக்கு எல்லா ரணங்களும் சாதாரணம் தான்.

எல்லா ரணங்களையும் விட மரணம் தான் அதிகம் என்னிடம் விளையாடி இருக்கிறது.

ஏழு வயது வீட்டில் கீழே கிடந்த மாத்திரையை எடுத்து தெரியாமல் வாயில் போட்டு விட்டேன்.கொஞ்ச நேரத்தில் தலை சுத்த ஆரம்பித்து விட்டது. வீட்டில் சொல்ல பயம்.கமுக்கமாக இருந்து விட்டேன்.கொஞ்சம் உஷாரா மாத்திரையை முழுங்காமல் துப்பி விட்டேன்.

ஒன்பது வயதில் குளத்தில் குளிக்க போனோம்.அம்மாவும் மாமாவும் நடந்து வர,சொல்ல சொல்ல கேட்காமல் நான் குளத்தில் குதித்து அவர்களுக்கு முன்னால் ஆர்வத்தில் சேற்றில் மாட்டி மூழ்கும் நேரத்தில் என் மாமாவால் மீட்கப் ப்ட்டேன்.முதலும் கடைசியுமாக மாமா என்னை அடித்து விட்டார்.அதை விட அம்மா பேசாமல் இருந்தது தான் வலித்தது.

பதினாலு வயதில் முதல் முறையாக பெண்ணின் மீது ஈர்ப்பு.இதுல என்ன கொடுமை என்று பார்த்தால் அவள் எனக்கு ரெண்டு வருடம் சீனியர். கவிதையாக சிரிப்பாள்,கவிதையாக பேசுவாள் அப்ப எனக்கு அப்படிதான் தெரிந்தது.அவளுடைய நிறுத்ததில் ஏறும் ஒருவனை நண்பனாக்கி கொண்டேன்.அவனுடைய அக்காவும்,இவளும் தோழிகள்.நான் அப்போ தி.நகர் இராமகிருஷ்ணா மிஷன் மெயின் (பனகல் பார்க் எதிரில்) இருக்கும் பள்ளியில் படித்தேன் என்று சொல்லலாம்.அவள் பர்கிட் ரோட் சாரதா வித்யாலயா.எங்கள் பள்ளி விடும் முன் அவர்களுக்கு பள்ளி முடிந்து விடும். பாதுகாப்பு என்ற நினைப்பு.கடைசி ப்ரீயட் ஆசிரியர் பெரும்பாலும் வர மாட்டார்.உடனே சுவர் ஏறி குதித்து விடுவோம்.12 சி பஸ் அவள் பள்ளி வழியாக வந்து உஸ்மான் ரோடில் வந்து துரைசாமி சப்வேயில் நுழையும்.அவளுக்காக நான் அங்கு நிற்பேன்.கூட துணைக்கு ஒருத்தன்.

இப்படி ஒருமுறை சுவர் ஏறி குதித்து விட்டு நிமிர்ந்தால் எங்கள் பள்ளியின் ஆசிரியர் அங்கு நிற்கிறார்.ஒன்றும் சொல்லாமல் உள்ளே போங்க என்று துரத்தி விட்டார்.இப்படி என்ன செய்தாலும் பேச மட்டும் பயம்.

பஸ் படிக்கட்டில் நிற்காமல் சாலிகிராமத்தில் இருந்து பனகல் பார்க் வரை அவளை பார்த்து கொண்டே வருவேன்.அன்று அதிகபடியான கூட்டம்.அவளை பார்க்க விடாமல் மறைத்து விட்டார்கள்.அவளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பனகல் பார்க்கின் முந்தைய நிறுத்ததில் இறங்கி முன் படிக்கட்டில் தொங்க ஆரம்பித்தேன்.இரண்டு நிறுத்ததிற்கும் இடையில் முக்கால் கிலோ மீட்டர் இருக்கும்.பாதி வழியில் கை வழுக்கி விட்டது.சாவு நிச்சயம் ஆகி விட்டது என்று நினைத்து கொண்டேன்.

கீழே பார்த்தால் விழுந்து விடுவேன் என்று பயம் வேறு.கண்ணை இறுக்கமாக மூடி கொண்டேன்.பயத்தில் அன்று உள்ளங்கையில் வேர்த்தது.இன்னைக்கு என் கதை முடிந்து விட்டது..டேய் பாடு பசங்களா என்னை பிடிங்க என்று கத்த நினைத்தாலும் வாயில் வார்த்தை வரவில்லை.சென் டர் போர்ட் (கால் வைக்காமல் இரண்டு படிக்கட்டுகளுக்கும் நடுவில் அடிப்பது) அடித்து அனுபவமே இல்லாததால் ஒரு கட்டத்தில் கை வழுக்கி விட்டது.கண்ணை திறந்து அது பனகல் பார்க்கின் வளைவு.வெளியே குதித்து விட்டேன்.சிறுகீறல் கூட இல்லாமல் தப்பி விட்டேன்.நம்பவே முடியவில்லை.அதற்குள் பின்னாடி வந்து பைக்காரன் என் சட்டையைப் பிடித்து "ஏண்டா ஸ்கூல் படிக்கிற பையனா நீ.." என்று ஏதோ கத்திக் கொண்டு இருந்தான்.பசங்க அதற்குள் பஸ்சில் இருந்து இறங்கி என்னை நோக்கி ஓடி வர..அவன் என்னை விட்டு விட்டான்.

என்னால் ஏத்து கொள்ளவே முடியவில்லை.ஒரு பெண்ணால் எனக்கு இப்படியா..அவளை தவிர்க்க ஆரம்பித்தேன்.என்னால் நம்ப முடியாத ஆச்சர்யம் அவள் 12 சி பஸ்சில் போகாமல் எனக்காக 12 பி பஸ்சில் வர ஆரம்பித்தாள்.அவளை நான் தவிர்த்தாலும் அவள் விடவில்லை.ஏதாவது சொல்லி வம்புக்கு இழுப்பாள்.தன் வினை தன்னை சுடும் என்று நினைத்து கொண்டேன்.அவளிடம் சொல்லாமல் சென்னை - 600028 இந்த முகவரிக்கு வந்து விட்டோம்.

பத்து வருடங்கள் கழித்து என் நம்பரைக் கண்டுப்பிடித்து பழைய நண்பன் பேசினான்.அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டதாம்.அவ புருஷன் வங்கி மேலாளர் என்றும் ஒரு பையன் இருப்பதாகவும் சொன்னான்.பையன் பெயரை சொல்ல வரும் போது.."மச்சான் வேல இருக்கு..அப்புறம் பண்ணு.." என்று அவன் பதிலுக்கு எதிர்பாராமல் வைத்து விட்டேன்.பிறகு இருவரும் இன்று வரை பேசவில்லை.பின்ன என்ன என் பெயராக இருந்தாலும் ரணம் இல்லாவிட்டாலும் ரணம்.

பதினெட்டு வயதில் ஒரு விபத்து.நடந்து வந்த என் மேல் ஒரு பைக்காரன் மோதி விட்டான்.ஒரு பெரிய பள்ளத்தில் விழகிருந்த என்னை ஒருவர் பிடித்து விட்டார்.அவர் கேட்ட முதல் கேள்வி..

"என்ன குடித்தாயா.."

"அந்த பழக்கம் கிடையாது.."

"வீடு வரைக்கும் வரட்டுமா.."

"போயிருவேன்னு நினைக்கிறேன்.."

வீட்டிற்கு வந்து சொன்னால் அது யார் உன்னை தூக்கியது என்ற கேள்வி வந்தது.

"இப்போதான் முதல் தடவையா பாக்குறேன்.."

"கடவுளாக இருக்குமோ.."

"விடுமுறைக்கு வந்தவராக இருக்கும்.." இப்படி சொல்ல நினைத்தேன்.முடியவில்லை காரணம் தாங்க முடியாத ரணம்.

டாக்டரிடம் போனால் வலியை மறக்க அவர் ஒரு கொடூரமான கதை சொன்னார்.வலியில் கத்தி விட்டேன்.."உங்க வேலைய மட்டும் பாருங்க.." காரணம் இது காட்ட முடிந்த ரணம்.

டிஸ்கி :

மும்பை வந்த பிறகு மரணபயம் தான் இருக்கிறது.விளைவு எல்லோரையும் பார்க்கும் போது சந்தேகம் தான் முதலில் வருகிறது.நான் இந்த ஊருக்கு லாயக்கு இல்லை என்று என் அத்தான் முத்திரை குத்தி விட்டார்.

7 comments:

பிரபாகர் said...

சாதாரணமா எழுதி, ரணகலப்படுத்தியிருக்க!

ரொம்ப நல்லாருக்கு தம்பி.

பிரபாகர்.

இரும்புத்திரை said...

உதாரணம் விட்டு விட்டேன் இன்னும் இருந்தா சொல்லுங்க

மணிஜி said...

தம்ப்ரீ..நீ எல்லாத்துக்கு “apart"பட்டவன்

ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
ரொம்ப நல்லாருக்கு தம்பி//

agree

புலவன் புலிகேசி said...

தல இதே போலத் தான் நானும்...எனக்கு நீச்சல் தெரியாது. பாட்டி இறந்த பொழுது குளத்தில் குளிக்க வேண்டிய கட்டாயம். மாட்டிக் கொண்டேன். என்னையும் மாமா தான் காப்பாற்றினார்.

அகல்விளக்கு said...

அந்த ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு இருக்கு தல.........

உங்க ரணகளமும் கிளுகிளுப்பும் சூப்பரு........

same feelings........

இரும்புத்திரை said...

நன்றி பிரபாகர் அண்ணா

நன்றி தண்டோரா அண்ணா இப்படி உசுப்பேத்தியே...

நன்றி கதிர் அண்ணா

நன்றி புலிகேசி உங்களுக்கு அடி கிடைச்சுதா

நன்றி அகல் விளக்கு சேம் ப்ளேட்