Tuesday, August 17, 2010

பதினி,கள்,ஈச்சிக்கள்,கருப்பட்டி,அதிர்ச்சி வைத்தியம்

சின்ன வயதில் பாட்டி வீட்டிற்கு ஏதோ ஒரு விடுமுறைக்கு போன போது அங்கிருந்த ஆட்டைப் பிடித்து அதில் சவாரி செய்ய அது ஒரு சறுக்கத்தில் வேகமாக போக கீழே விழுந்து போட்டிருந்த சட்டையையும் மீறி வலது பக்க முதுகு முழுவதும் தோல் உரிந்து விட்டது. அழுகை வந்தாலும் அடக்கிக் கொண்டேன். என்னாச்சு என்று கேட்க சுற்று வட்டாரத்தில் யாருமேயில்லை. வீட்டிற்கு போனால் விழும் அடியை நினைத்து ஒரு மணி நேரம் கழித்து போனேன். அந்த ஒரு மணி நேரமும் வலியை மறக்க எதையாவது நினைக்கலாம் என்று பார்த்தால் வலி எதையும் நினைக்க விடாமல் செய்து விட்டது.

மற்ற வீடுகள் மாதிரி கீழே விழுந்தால் எல்லாம் அடிப்பதேயில்லை.மிரட்டல் தான்.அதிரடி வைத்தியங்கள் தான்.சின்ன வயதில் காசை முழுங்கி விட அப்பா தலைகீழாக ஒரு தூக்கு தூக்கி முதுகில் தட்டியவுடன் பழைய பத்து காசு வெளியே விழுந்ததாம். இறக்கி விட்டப்பின் தான் அடியே விழுந்ததாம்.அடி வாங்கும் வயது ரெண்டு.அந்த சம்பவத்தை எல்லோரும் சொல்லியிருப்பதாலும், அதிசயமாக அந்த விடுமுறைக்கு அப்பா கூட இருந்தாலும் பயம் அதிகரித்தது.பயத்தை வலி வென்று விட வீட்டிற்கு போய் கமுக்கமாக படுத்து கொண்டேன். இப்படி கமுக்கமாக படுத்தாலே தெரிந்து விடும் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஏதோ வில்லங்கம் நடந்திருக்கிறது என்று.

சட்டையைக் கழற்றி பார்த்தால் தோல் போன இடத்தில் சட்டை ஒட்டிக் கொள்ள வலியில் அழ "மூச் அந்த கருப்பட்டியைக் காச்சி ஊத்து அக்கா சரியாயிரும்.." என்று சொல்ல இதுக்கு வலியே பரவாயில்லை என்பது போலிருந்தது. சப்ராமைஷின் போட்டால் ஏற்கனவே பாதி காலியாயிருந்தது. மீதியும் காலியாகி விடும் என்று நினைத்து கொண்டேன்.முதுகில் அடிப்பட்டதால் முட்டியை கவனிக்கவில்லை.அதில் அடிப்பட்டு தொலைத்தால் காயம் ஆற இன்னும் நாள் ஆகும்.வலிக்குது என்று சொன்னால் கருப்பட்டியைக் காச்சி விடுவார்களே என்று பயத்திலேயே உறங்கிப் போனேன்.

(பனையில் இருந்து இறக்கி அதில் சுண்ணாம்பு கலந்திருந்தால் அது பதினி.சுண்ணாம்பு கலக்காமலிருந்தால் கள்.இன்னும் அதில் தேனீக்கள் சேர்ந்து கிடந்தால் இன்னும் போதையேறுமாம். கண்டிப்பா அதை அருந்த வேண்டும் ஒருவர் அழைப்பு மேல் அழைப்பு விடுத்திருக்கிறார். பதினியில் மாம்பழம் போட்டு சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான்.மிச்சம் இருக்கும் பதினியோடு என்னை விட உயரமான அகப்பையோடு நானும்,தம்பியும் முன்னால் செல்ல ஆச்சி பின்னால் வருவார்கள். பதினி காச்ச ஓலை எல்லாம் தயாராகயிருக்கும்.பதினி காச்ச காச்ச நாங்கள் ஓலையைத் தள்ளுவோம்.சுவைக்கு ஆமணக்கு போடப் போகும் ஆச்சியிடமிருந்து வாங்கி நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒன்றாக போடுவோம். சுத்தமான ஓலையில் காச்சிய கருப்பட்டியை எடுத்து தர நாங்கள் வீடு வரைக்கும் அதை வைத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டே வருவோம். வீட்டிற்கு வந்ததும் சிரட்டை கருப்பட்டியா பானை கருப்பட்டியா என்று விவாதம் நடக்கும்.பானை என்றால் மொத்தமாக அதில் ஊற்றி விடுவார்கள்.சிரட்டை என்றால் ஆறுபது சிரட்டையில் ஊற்றி வைப்பார்கள். அந்த உள்ளறையில் கோழி அடை காக்க வைத்திருப்பார்கள். கருப்பட்டியைப் பார்க்க போகிறேன் என்று சொல்லி விட்டு கோழி எத்தனை முட்டை அடை காக்கிறது என்று அதை பார்த்துக் கொண்டியிருப்போம். சிரட்டையில் இருந்து எடுத்தப்பின் வழுவழுப்பாக என்னுடையது தான் இருக்கிறது என்று நானும் தம்பியும் மாற்றி சொல்லிக் கொண்டிருப்போம். கள்ளை எடுத்து மதியம் வெயிலில் வைத்து விட்டு அதற்கு ஏற்ற மாதிரி கறி சாப்பிட்டால் ஜென்ம சாபல்யம் என்று நண்பர் ஒருவர் உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார்.நான் இன்னும் பதினியிலே நிற்கிறேன்.கிராமத்து வீட்டை கருப்பட்டியோடு,முட்டை சேர்த்து கட்டினார்களாம். காரை மட்டும் தான் பெய்ர்ந்திருக்கிறது.இன்னும் டபுள் ஸ்டாராங்க் தான்.)

அப்படி காயம்,சண்டை எல்லாவற்றிருக்கும் மிரட்டி மிரட்டி வளர்த்தாலே மும்பையில் ஒரு காய்ச்சலின் போது மூன்று நாட்கள் படுத்தபடியே கிடந்தேன்.மூன்றாவது நாள் எந்திரிக்க முடிந்ததும் நான் போய் ஆட்டுக்கறி சாப்பிட்டேன்."உனக்கு காய்ச்சல் அதை ஏன் சாப்பிட்ட.." என்று பயந்தபடியே நண்பன் சொல்ல ஒண்ணும் ஆகாது என்று வெளியே உதார் விட்டாலும் உள்ளூர எழுந்த பயத்தால் அம்மாவிடம் சொல்ல அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.காய்ச்சல் வந்தா நல்லா சாப்பிடணும்.பயந்தா தான் காய்ச்சல் வரும் என்று சொல்ல சரி என்று அடுத்த கோட்டாவிற்கு தயாராகி விட்டேன்.

அதில் ஒரு காய்ச்சலின் போது யாராவது கல்யாணம் பண்ணிக்கோ என்று சொன்னால் மனதிருக்கும் நிலையில் சரி என்று சொல்லி விடுவேன் என்ற பயத்தில் காய்ச்சல் வந்ததையே வீட்டில் சொல்லவில்லை. மனது சரியில்லாத போது உடம்பும், உடம்பு சரியில்லாத போது மனதும் பெண் அருகாமையை விரும்பி தொலைக்கிறது.அந்த சமயத்தில் என்ன நினைத்தாலும் கண்டுப்பிடித்து விடுகிறார்கள். அதற்குப் பிறகு கல்யாணப் பேச்சு எடுத்தாலே குழந்தை திருமணம் தப்பு என்று சொல்லியே தப்பிக்க வேண்டியிருக்கிறது..

நண்பருக்கு கல்யாணமாம்.கண்டிப்பாக வர சொல்லியிருக்கிறார்.பதினி,கள்,ஈச்சிக்கள் எல்லாம் தயாராகயிருக்கிறதாம்.நான் வந்து விழாவை சிறப்பிக்க வேண்டுமாம். இந்த நேரத்தில் நான் போனால் இங்கு என் விலாவை சிறப்பித்து புதுப்பித்து விடுவார்கள். போகும் போது காய்ச்சியது எதாவது வாங்கி போக வேண்டும்.விடுப்பட்டு போய் விட்டது.எனக்கு பதிமூன்று வயது தான் ஆகிறது.இந்த ப்ளாக்கர் தப்புத்தப்பா காட்டுது.

8 comments:

அகல்விளக்கு said...

///அதில் ஒரு காய்ச்சலின் போது யாராவது கல்யாணம் பண்ணிக்கோ என்று சொன்னால் மனதிருக்கும் நிலையில் சரி என்று சொல்லி விடுவேன் என்ற பயத்தில் காய்ச்சல் வந்ததையே வீட்டில் சொல்லவில்லை.//

பெரியவங்க சொல்றாங்க.... பண்ணிக்கங்க தல...... :)

இரும்புத்திரை said...

ஒரே ஒரு கன்டீசன் தான்.பொண்ணுக்கு தமிழ் படிக்க தெரிய கூடாது.

மதார் said...

பனைமரத்து ஓலையில் ஒரு படகு செய்து அதில் பதனி இட்டு அந்த பதனிக்குள் சில இள நொங்குகள் வெட்டிப்போட்டு பதனியோடு இள நொங்கையும் சேர்த்து சாப்பிட அப்படியே அந்த பன ஓலை வாசனையும் சேர்ந்து ...............சாப்பிட்டுகிட்டே இருக்கலாம் . இரண்டு மாதம் முன்னாடிதானே நான் சாப்டேன் .

sathishsangkavi.blogspot.com said...

சின்ன வயது சேட்டையே தனிதான்....

சங்கர் said...

படிக்க தெரிஞ்சாலும் பதிவுலகம்னு ஒன்னு இருக்குன்னு தெரியக்கூடாது

இரும்புத்திரை said...

ஐ வவ் யூ சங்கர் சாறு

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

:-)
///கள்ளை எடுத்து மதியம் வெயிலில் வைத்து விட்டு அதற்கு ஏற்ற மாதிரி கறி சாப்பிட்டால் ஜென்ம சாபல்யம் என்று நண்பர் ஒருவர் உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார்.///
இல்ல தல, காலை கள்ளு + இளநீர் இத வெயிலில் வைத்து, சாயந்தரம் இரக்கும் கள்ளையும் மிக்ஸ் பண்ணி பனங்கிழங்கை சுட்டு சாப்பிட்டால் அட! அட!!! ஜம்முன்னு இருக்கும்.

senthil velayuthan said...

மனது சரியில்லாத போது உடம்பும், உடம்பு சரியில்லாத போது மனதும் பெண் அருகாமையை விரும்பி தொலைக்கிறது.அந்த சமயத்தில் என்ன நினைத்தாலும் கண்டுப்பிடித்து விடுகிறார்கள். அதற்குப் பிறகு கல்யாணப் பேச்சு எடுத்தாலே குழந்தை திருமணம் தப்பு என்று சொல்லியே தப்பிக்க வேண்டியிருக்கிறது..

eppadinka eppadi ellam

பெரியவங்க சொல்றாங்க.... பண்ணிக்கங்க