Wednesday, November 11, 2009

கிராமத்து காமன் மேன் கதைகள்

சில மாதங்களுக்கு முன் குங்குமத்தில் ஒரு கதை படித்ததாக ஞாபகம்.பிழைக்க வந்தந்தவர்களுக்கு எடுபிடி வேலை செய்த ஒருவருக்கும்,வெள்ளைகார அதிகாரியின் மனைவிக்கும் உள்ள தொடர்பை விவரித்த விதம் அந்த கதையை கண் முன்னால் நிறுத்தியது.இறுதியில் அந்த மாளிகையின் புகை வெளியேறும் குழாயில் அவன் உயிரோடு புதைக்கப் படுகிறான்.பல ஆண்டுகள் கழித்து அந்த மாளிகைக்கு செல்லும் ஒரு விளம்பரப் படம் எடுக்கும் கதயின் நாயகனுக்கு "துரை என்னை கொல்லாதீங்க.." என்று அலறும் குரல் மற்றும் காதல் செய்த நேரங்களில் மெல்லிய முனங்கல் சத்தமும் கேட்கிறது..அது மாதிரி ஒரு கதை கைவசம் இருந்தாலும் மொக்கையாக(தற்சமயம் அடிவாங்கும் அளவிற்கு தெம்பு இல்லாத காரணத்தால்) எழுதி அதை சிதைத்து விட கூடாது என்பதால் வேறு கதைகள்(அது மாதிரி ஆனா இல்ல)..

கதை 1 : சின்ன வயதில் எனக்கு சொன்ன கதைகள்..

பக்கத்து ஊரில் ஒரு பெரிய குளம் உண்டு.நியாயமாக அதை ஏரி என்று தான் சொல்ல வேண்டும்.இருபது கிலோ எடையுள்ள மீன் எல்லாம் கிடைக்கும்.கரையில் ஒரு பெருமாள் கோயில்.எந்த மன்னன் கட்டியதோ தெரியவில்லை.

பல வருடங்களுக்கு முன்..ஒரு மழை நாளில் குளம் நிரம்பி வழிந்தது.இது மாதிரி பெரிய குளங்களின் கரைகள் எல்லாம் பெரிதாக இருக்கும்.மாட்டு வண்டிகள் கூட கரை மேல் போகலாம்.உடைப்பெடுத்தால் சில ஊர்கள் இருக்காது.மடை உடைந்து தண்ணீர் வழியும் நிலையில் இருந்து இருக்கிறது.காலை ஆறு மணிக்கு நடமாட்டம் இல்லாத காரணத்தால் யாருக்கும் தெரியவில்லை.

எண்ணெய் விற்கும் செட்டியார் அந்த வழியாக எண்ணெய் விற்க போயிருக்கிறார்.உடைப்பை அவர் பார்த்தாலும் எண்ணெய் விற்று விட்டு வரும் போது சொல்லி விட வேண்டும் என நினைத்து அவர் வேலையை முடிக்க போய் விட்டார்.

பகல் ஒரு மணி அளவில் குளம் உடைந்து விட்டது.மாடு மேய்க்கும் சிறுவர்கள் அதை பார்த்து விட்டு ஊரில் சொல்ல,மடையை அடைக்க பெரும் பாடுப் படுகிறார்கள்.மாலை ஆறு மணியளவில் செட்டியார் எண்ணெய் விற்ற காலியான பாத்திரங்களுடன் வருகிறார்.மடையை அடைக்க படும் பாட்டைக் கண்டு பரிதாபத்துடன் "ஐயோ மடை உடைந்து விட்டதா..நான் உடையாது என்றல்லவா நினைத்தேன்..காலையில் பார்க்கும் கசிந்து கொண்டு தான் இருந்தது..அதனால் சொல்லாமல் போய் விட்டேன்.." எண்டு சொல்லி முடிக்கவும்

அடைத்து கொண்டிருந்த கூட்டமே கொதித்து விட்டது.பார்த்து விட்டு சொல்லாமல் போனவனை விடுவதா என்ற கோபம்,மடையை அடைக்க முடியாத இயலாமை எல்லாம் சேர செட்டியாரை பிடித்து மடையில் இறக்கி உயிரோடு புதைத்து விட்டார்கள்.அவர் மேல் மண்ணைத் தள்ளும் போது கத்தியிருக்கிறார்."கண்ணு எரியுதே..கண்ணு எரியுதே.."

அந்த குரல் இன்றும் கேட்கிறதாம்.அதை கேட்க எனக்கு ஆசை.ஒரு நாள் கோயிலில் மாவிளக்கு போட்டு விட்டு குளத்தில் கைகால் அலம்ப போனோம்.கரையின் உச்சியை அடையவே இருபது படி ஏற வேண்டியிருந்தது.மடைக்கு போக ஆசை இருந்தாலும் சொல்ல பயம்.காரணம் - எங்கள் ஊரில் இருக்கும் சின்ன குளத்தில் மூழ்கி உயிர் பிழைத்ததால் வந்தது.ஆசையைக் குழி தோண்டி மனதில் புதைத்து விட்டேன்.இன்னும் என் மனதில் அந்த கதை விடாமல் கேட்கிறது.அந்த குரலை கேட்க வேண்டும்.

கதை 2: எனக்கு ஓட்டு விழவில்லையே..பின்னூட்டம் கிடைக்கவில்லையே..யாரும் படிக்கவில்லையே.. என்று மனதுக்குள் குரல் கேட்கும் போதெல்லாம் ஆச்சி சொன்ன இந்த கதையை நினைத்து கொள்வேன்..

செட்டியார் தான் இதிலும் கதை நாயகன் ப்ளஸ் காமெடியன்.வில்லன் கடைசியில் வருவான்.

செட்டியார் எண்ணெய் விற்று விட்டு வரும் போது மரத்தடியில் தங்கம் கொட்டிக் கிடப்பதை பார்க்கிறார்,உடனே எடுக்க ஓடுகிறார்.

ஒரு அசரீரி கேட்கிறது.. "தொடாதே..அது மூளிக் காதனுக்கு சொந்தம்.."

தங்கத்தின் மேல் உள்ள ஆசையால் காதை அறுத்து கொள்கிறார்."இப்போ நானும் மூளிக்காதன் தான்.." என்று சொல்லி பானை முழுவதும் நிரப்பி கொள்கிறார்.

இருள் சூழவே பயணம் மேற்கொள்ள முடியாமல் ஒரு வீட்டில் தங்க இடம் கேட்கிறார்.முன்யோசனை முனுசாமியாக பானையில் எண்ணெய் இருப்பதாக சொல்கிறார்.

அந்த வீட்டில் மருமகளுக்கு தலை பிரசவம்.வைத்தியர் எண்ணெய் கேட்க மாமியார் செட்டியார் பானையில் கை விடுகிறாள்.தங்கம் இருப்பதைப் பார்த்து விட்டு ஊர் முழுக்க ஒரு கிண்ணம் எண்ணெய் வாங்கி பானையை நிரப்பி விடுகிறாள்.குழந்தையும் பிறக்கிறது

காலையில் செட்டியார் பானையை எடுத்து பார்க்க அவருக்கு அதிர்ச்சி...குழந்தையைப் பார்க்க வந்த கூட்டத்தில் ஒருத்தி கத்துவது இவருக்கு கேட்கிறது.."பையனுக்கு மூளிக்காது..அதிர்ஷ்டகாரனா இருப்பான்.."

அவன் தான் இவருக்கு வில்லன்.அவனுக்கு சுமைக்கூலி மிச்சம்.இவருக்கு மிச்சம் - அறுந்த காது தான்.

டிஸ்கி :

உண்மையாக எழுத நினைத்த கதை விரைவில்...படிங்க,பின்னூட்டம் போடுங்க,ஓட்டு போடுங்க..இல்ல உங்க கனவுல இரண்டாவது கதையின் வில்லன் வந்து வில்லங்கம் செய்வான்..

மராத்திய மண்ணில் முதல் முறையாக தேர்வாகி இருக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சொத்து - 1536 ரூபாய், பதினைந்து கிராம் தங்கம்.அடுத்த ஐந்து வருடத்தில் அவர் மூளிக்காதன் ஆவாரா இல்லை நம்மை ஆக்குவாரா..பொறுத்திருந்து பார்ப்போம்..

6 comments:

அகல்விளக்கு said...

//
மராத்திய மண்ணில் முதல் முறையாக தேர்வாகி இருக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சொத்து - 1536 ரூபாய், பதினைந்து கிராம் தங்கம்.அடுத்த ஐந்து வருடத்தில் அவர் மூளிக்காதன் ஆவாரா இல்லை நம்மை ஆக்குவாரா..பொறுத்திருந்து பார்ப்போம்.. //

நம்ம ஊர் கிளைமட்ல அவரு மட்டும் எப்படி தப்புவாரு தல.

பொறுத்திருந்து பார்ப்போம்...

காலம் காதறுக்கும்...

இரும்புத்திரை said...

நன்றி அகல் விளக்கு

Unknown said...

//.. குங்குமத்தில் ஒரு கதை படித்ததாக ஞாபகம்.பிழைக்க வந்தந்தவர்களுக்கு எடுபிடி வேலை செய்த ஒருவருக்கும்,வெள்ளைகார அதிகாரியின் மனைவிக்கும் உள்ள தொடர்பை ..//

லதானந்த் அவர்களின் இடுகையில் படித்த ஞாபகம்..

Unknown said...

http://lathananthpakkam.blogspot.com/2009/01/blog-post_01.html

துபாய் ராஜா said...

செட்டியார் கதை ரெண்டும் நல்லாருக்கு தம்பி. நம்ம ஊருக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு... :))

Hai said...

நல்லத்தான்யா கதை உடுர.
அருமை அறவிந்த்