Thursday, October 29, 2009

இந்த கதைய சினிமாவாக எடுக்க முடியுமா

"அங்கன பாரு..உம் புள்ள தெருவுல கிடந்து உருள்றான்.." என்று மயினிகிட்ட எங்க அம்மா சொல்ல தார்சாவில்(திண்ணை) கொஞ்சமா மடங்கி கிடந்த நான் நிமிந்து உக்காந்தேன்.

"ம்..ம்..வம்பிழுக்க ஒருத்தன் வாட்டமா மாட்டுனான் டோய்.." இப்படி நினச்சது தான் தாமசம் காத்து கூட கொஞ்சம் வெரசா வீசுற மாதிரி தோணிச்சி..

எல்லாத்துக்கும் முன்னாடி அவன் அடிக்கற கூத்த பாக்கலாம்னு ஓடினா அவன் சுத்தி ஈசல் மாத்ரி ஒரு கூட்டம் அப்பி கிடக்கு.

"ஏல எந்திரி மூதி..இப்ப என்ன எளவுக்கு இப்படி இழுவுற..ஏதாவது புள்ளயோட அப்பன் பாத்தா பொண்ணு குடுக்க மாட்டான்.." மயினி கத்தினாள்.

"க்கும்..எனக்கே வழிய கணோம்..இந்த காப்புடி உலக்குக்கு அதுகுள்ள கண்ணாலமா.." அதிசயமா நான் வாய பொளக்க

"தம்பி..அவன நாலு சாத்து சாத்து..அப்பதான் சொல்றத கேப்பான்..கேடு கெட்டவன் என்னைய பதங்குலைக்கவே வந்து புறந்து இருக்கு இந்த சனியன்..இவனோட இளசு எல்லாம் எப்படி கட்டயிருக்கு..அந்தாளு வரட்டும்..இன்னைக்கு இவனுக்கு சாமக்கொட குடுக்கணும்..அப்போ தான் சரியா வருவான்.." மதினி கிடந்து குதிக்க,இடுப்புல இருந்த புள்ள கத்த..

"ஏல என்ன வேணும்..வாயத் தொற..முத்து எதுவும் வாய்குள்ள இருக்கா.." சமரசம் பண்ணி அவன தூக்க நான் குனியவும்

"டூப்பாக்கி..அந்த கருப்பு டூப்பாக்கி வேணும்.."

"இதுக்குதான் இந்த அழிச்சாட்டியமா..மூதி முழுக போச்சாம்..மூனு குளமும் பாழா போச்சாம்..எந்திரி நான் வாங்கி தாரேன்.." இப்படி சொன்னதுதான் தாமசம் பயபுள்ள ஒரு சிரிப்பு சிரிச்சு பாருங்க..அப்படியே வாயில ஒரு எத்து விடலாம்னு தோணிச்சி

"தம்பி இவன் கேட்டத வாங்கி கொடுதுரு என்ன நல்லப் புள்ளையா சித்தப்பன் கூட போ.." மயினி நழுவ பாக்க

"என்ன குசும்பா..இங்க சித்தப்பனே தோட்டா வாங்க வக்கில்லாம திரியிறான்..இவருக்கு துப்பாக்கி வேணுமாயில்ல துப்பாக்கி.." காச வாங்க கைய நீட்டினேன்.

"கள எடுத்த காசு..இவன் இருக்கானே..மிச்சம் கிச்சம் இருந்தா கொண்டு வாங்க பிள்ளைகளா.." இப்படி மூணு முழத்துக்கு நீட்டிட்டு(பேசிட்டு) முப்பது காச குடுத்தாக.

"தம்பி..வா..போவோம்.." கூட எந்தம்பியையும் கூட்டி கிட்டு அங்க போற வழியில..

"என்னல படிக்கிற.."

"ஏழாப்பூ.."

"என்ன பூ..வாழப்பூவா.." - இது என் தம்பி..

"ஏழாப்பூ..நீங்க மெட் ராஸுல என்ன படிச்சீங்க.."

நானே ராஜா நானே மந்திரி விஜயகாந்த் பாணியில விரல விட்டு எண்ணி ஒரு வழியா கணக்கு பண்ணி..

"நான் பதினாறாப்பூ..இவன் பதிமூனாப்பு.." இப்படி சொன்னா அவனுக்கு புரிஞ்சுரும் சொன்னா..

"ஆச்சி சொன்னாக..நீங்க ஏதோ காலேசி படிச்சி முடிச்சிடீங்கன்னு..நீங்க இன்னும் பூவுல தான் நிக்கிரீகளா.." அவன் லந்து குடுத்தா நான் விடுவேனா

"இன்னொரு பூ இருக்கு..அத சொல்லட்டுமா.." என்று கெட்ட வார்த்தைய உதுக்க முயற்சி பண்ண அதுகுள்ள துப்பாக்கி விக்கிறவன் கிட்ட வந்து நின்னோம்.

"டூப்பாக்கி..என்ன வெல.."

"தம்பி அது டூப்பாக்கி இல்ல துப்பாக்கி.." கடக்காரன் சொல்லிட்டு பெரிசா விட்டு(பகடி) அடிச்ச மாதிரி சிரிக்க..

"வேற கடயப் பாப்போம்..இங்கன எதுவும் சரியில்ல.." - இது அவனுக்கு கிடச்ச பதில் விட்டு

"டூப்பாக்கியா தம்பி..பதினாறு ரூபா..வேணா ஒரு ரூபா குறைக்கலாம்.." பதறிகிட்டு பதில் சொல்ல

"மிச்ச காசுக்கு ஐஸ் வாங்கி திங்கலாம்.." தம்பி எடுத்து விட

"நமக்கு கப் ஐஸ்..காசு குறைவா இருக்கிறதால இந்த பக்கிக்கு பால் ஐஸ்.." சொல்லி முடிக்கல அண்ணன் மவன் மூஞ்சி செத்து போச்சு

"சரி பக்கி சாவாத..ஐஸ் அஞ்சு ரூபா தான்..உனக்கும் கப் ஐஸ் தான்.." தம்பி சொல்லவும் அவனுக்கு சிரிப்பாணி பொத்துகிட்டு வந்துச்சு.

"ஐஸ் வேணும்னா துப்பாக்கிய குடு.." என்று வாங்கி ஒரு பெரிய கல்லா போட்டு சூடவும் அந்த துப்பாக்கி உடஞ்சு போச்சு.

ஐஸ் திங்குற அவசரத்துல அந்த பக்கி இந்த துப்பாக்கி உடஞ்சத பாக்கல.

வீட்டுக்கு வந்து துப்பாக்கிய குடுத்தா..அது இருந்த கோலத்த பாத்துட்டு நடு வீட்டுல கிடந்து புரள ஆரம்சிட்டான்.

"என்ன இவனோட ரோதனையா போச்சு..இப்ப என்ன ஆச்சி.." அம்மாவும்,மயினியும் ஓடி வர..

"எம் மவனுகளும் இருக்கானுக..என்னைகாவது ஏதாவது வேணும்னு இப்படி அழிச்சாட்டியம் பண்ணியிருக்காங்களா.." நேர காலம் தெரியாமல் ஐயா புகழை எடுத்து விட..

"அன்னிக்கே வாங்கி குடுத்திருக்காம்..கழுத வயசாகுது டூப்பாக்கிய உடச்சுட்டான்.." பக்கி புரண்டுகிட்டே குரல் குடுக்க

"உம் புராணம் பாடலாம்னு பாத்தா..எந்தான் இப்படி இருக்கியோ..என்னக்கு தான் திருந்துவியோ.." அம்மா புலம்ப பாக்க

"ஏய் சித்தப்பாவ அப்படில்லாம் சொல்லாத.." மயினி மட்டும் தான் எங்கட்சி

அப்பவே எனக்கு ஒரு பழக்கம் இருந்துச்சு..எல்லா பக்கியும் தின்ன பெறவு அதுங்கள பாக்க வைச்சு திங்குறது..அதுதான் என்னைய அன்னக்கு காப்பாத்துச்சு..திங்காம் வைச்சுருந்த கப் ஐசை அந்த பக்கி வாயில போட குடுத்துட்டேன்.

"ஏல ரொம்ப குணட்டாத..நீ மாட்டுவல அப்ப இருக்குல உனக்கு சாமக் கொட..கொட குடுத்து உரிச்சி உப்பு கண்டம் போடாம விட மாட்டேன்.." இப்படி மனசுக்குள்ள கருவிகிட்டு உக்காந்து கிடந்தேன்.முத தடவயா ஒரு பக்கி என்னைய பாக்க வைச்சு திங்குது.

மத்தியான கொட தொடங்குச்சு..அம்மாவும் என்னைய கூட்டிக்கிட்டு சாமியாடி பெரியப்பாவ பாக்க போனாவ.அவரு ஒரு ஒய்ஞ்சு போன குறிசொல்லி. அம்மா கால்ல விழுந்துட்டு என்னையும் விழ சொல்ல..சொன்னது எனக்கு கேக்காத மாதிரி நான் பராக்கு பாத்தேன்.

"அங்க என்ன வாய் பாக்குற..கால்ல விழு.." அம்மா வைய

"விடு தாயி..மவனே அடுத்து என்ன பண்றதா உத்தேசம்.." பெரியப்பா ஆரம்பிக்க

"பாளையங்கோட்டைக்கு போய் உள்ளம் கேட்குமே படம் பாக்கலாம்னு இருக்கேன்.."

"அப்ப வேல பாக்க உத்தேசம் இல்ல.."

இதுக்கு மேல தாங்காதுனு தோண படக்குனு கால்ல விழுந்துட்டேன்.

பூச முடிஞ்சதும்..குறிசொல்லி எல்லாம் ஆடுவாங்கா..நேத்தைக்கு பாப்பம்மாவா இருந்த சித்தியெல்லாம் இன்னைக்கு சாமி.

கூட்டம் அலைமோதுச்சு.மத்தியானம் நடக்கும் கொடய பாக்கவே உக்கிரமாக இருந்துச்சு.நானு,அம்மா,தம்பி எல்லாம் கோவிலுக்குள்ள மாட்டிகிடோம்.குறிசொல்லி எல்லாம் எனக்கு பக்கத்தில ஆடுனாங்க..அப்புறமா நிதானமா வெளிய போயி அவங்க மாதிரி ஆடி காட்டி விட்டு(சோக்கு) அடிக்கலாமுன்னு யோசிச்சுக்கிட்டு நின்னேன்.

கூட்டம் நெருக்க நெருக்க வழியில்லாம குறிசொல்லி முன்னாடி போயிட்டோம்.அங்க போன ஏதாவது கேக்கனும் நினப்பு எல்லாருக்கும்.

முதல்ல எங்க மதினி - "அவருக்கு எப்ப வேல கிடைக்கும்.."

குறிசொல்லி - "அடுத்த வருசம் கிடைக்கும்.."

இன்னொரு மதினி - அவியகளுக்கு பத்து வருசமா பிள்ளயில்ல.."எனக்கு எப்ப குழந்த கிடைக்கும்.."

குறிசொல்லி - "அடுத்த வருஷம்.."

எங்க அம்மாவும் சும்மா இருக்காம "மவனுக்கு எப்ப வேல கிடைக்கும்.."

"இதுக்கும் பதில் அடுத்த வருசம் தான்.." நான் மனசுகுள்ள இளிச்சு வைச்சேன்.

"சரியா ஒம்போது மாசம் கழிச்சி கிடைக்கும்.." - இப்படி பதில் வந்ததும் எம் மூஞ்சி செத்து போச்சி..

என்னைய சமாதானப்படுத்த அம்மா.."இது புதுசா ஆடுற சாமி..நாம அந்த சித்தி சாமிகிட்ட கேப்போம்.."

அங்க போக முடியல..அதுக்குள்ள சாமியெல்லாம் குளத்துல ஆட போயிட்டாங்க..

அது ஒரு பெரிய குளம்.வெயில் காலத்துல வத்தி கிடக்கும்.அதுல கால வைக்கவே முடியாது நம்மால..அம்புட்டு சூடு..குளத்த சுத்தி கூட்டம்.வேடிக்க பாக்க அவ்வளவு சனம்.ஊரே அங்கன கிடக்கும் போது விடல பசங்க எல்லாம் ஊருக்குள்ள இருப்பானுங்க..அவங்க சைட்ட பாக்க..

அதுவரைக்கும் மத்தியான கொட மேல ஆர்வம் காட்டாத நானும் எங்க அம்மாவ கூட்டிகிட்டு அங்க ஓடினேன்.

பெரியப்பா பையன் வந்து "எங்க போற..ஒருத்தி நல்லாயிருக்கா வாடே பாக்கலாம்.." சொல்ல.. அவனுக்கும் பதில் சொல்லாம ஓடி வழியில எங்க அண்ணன் அவரோட பழைய காதலியே தேட..அதுல கூட ஆர்வம் இல்லாம நடுகுளத்துல நான் பாய

உள்ளூர்காரன் வந்து தடுக்க..கோபத்தில் நான் அவன் மேல பாய..நான் அம்புட்டு கோவப்பட்டது அன்னிக்கு தான்.ஒரு வழியா எல்லாத்தையும் தாண்டி அந்த பழைய குறிசொல்லி கிட்ட போய் கேட்டா

"பையன் மாசாமாசம் ரெண்டாயிரம் ரூபா அனுப்புவான்.."

இதுக்கு அந்த புது சாமியே பரவாயில்லன்னு அம்மாகிட்ட புலம்பி தள்ளினேன்.நான் குறிகேட்க ஓடுன கத தான் சிரிப்பா சிரிச்சது எம் மாமாவால.

இன்போசிஸிசு,டி.சி.எஸ்சு,கேரிடாருன்னு பெரிய பெரிய கம்பெனி எல்லாம் கடைசி கட்டத்துல ஊத்த வேற வழியேயில்லாம நான் மும்பை வந்துட்டேன். எங்க அண்ணன் வேல பாத்த கம்பெனில சேந்தேன்.

ஒரு கணக்குக்கு ஒன்பது மாசத்துக்கு 270 நாள்னு வைச்சுபோம்.நான் 269ம் நாள்ல வேலக்கு சேர போனா..மனசுகுள்ள ரொம்ப சந்தோஷம் குறிசொல்லி வாக்க உடச்சுட்டோம்னு.ஆனா என்ன நடந்தது தெரியுமா.."நீங்க ரெண்டு நாள் கழிச்சி வாங்கன்னு.." ஒரு புள்ள என் வயித்துல டீசல ஊத்திரிச்சி.

ஆக வேலைக்கு போனது ஒன்பது மாசம் முடிஞ்ச பெறவு தான்..ஆமா நீங்க சந்தேகப்பட்டது சரிதான் வீட்டுக்கு சில மாசம் ரெண்டாயிரம் தான் அனுப்ப முடிஞ்சது.

எங்க அண்ணனுக்கு வேல கிடச்சுது..இன்னொரு அண்ணனுக்கு குழந்த பொறந்தது.

அதுல இருந்து நான் அந்த ஊர்பக்கமே போறதுயில்ல..அடுத்த வருசம் என் தம்பி போனான்.ஆனா நான் குறி கேக்க வேணாம்னு சொல்லிப்புட்டேன்.இப்படி இப்படி வருஷாவருஷம் மத்தியான கொடய பாக்குற ஆளுங்க குறைஞ்சுகிட்டே வராங்க..

உங்களுக்கு குறி கேக்க ஆசையா இருந்தா என்னைய தொடர்பு கொள்ளுங்க..

டிஸ்கி :

பொதுவாக எனக்கு ராசிபலனில் எல்லாம் நம்பிக்கை கிடையாது.நான் ரிஷப ராசியாக இருந்தாலும்,எதிர்பாராமல் தினமலரில் ராசிபலன் பார்க்க நேர்ந்தால் நன்றாக இருந்தால் அதை எடுத்து கொள்வது வழக்கம்.ஏடாகூடமாக இருந்தால் எந்த ராசிக்கு நல்லதாக இருக்கிறதோ உடனே அந்த ராசிக்கு மெல்ல மாறி(மொள்ளமாறி..) விடுவது உண்டு.பெரும்பாலும் பார்க்காமல் தவிர்ப்பேன்.தவிர்க்க முடியாத பட்சத்தில் அடுத்து வரும் அறுபது நாட்களுக்கு முன்னரே பார்த்து விடுவேன்.

இப்படி நடப்பதையெல்லாம் காமெடியாக எடுத்து கொள்ளும் எனக்கு இப்படி ஒரு உண்மை சம்பவம் நடந்தது அதிர்ச்சி தான்.

2005ம் வருடம் - பொறியியல் படித்து விட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் பொறித்து தருவதைத் தின்று விட்டு பொறிந்து கொண்டு அலைந்த நேரம்..கானல் நீராக தெரிந்த நாட்கள்..

எங்கள் குலதெய்வத்திற்கு கோவில் கொடை நடந்தது.நானும் படித்து விட்டு ஒரு மாதமே முடிந்துயிருந்ததால் கெத்தாக ஊர் போய் செர்ந்தேன்.இப்படி ஒரு கோவில் கொடை எந்த ஊரிலும் நடப்பதாக எனக்கு தெரியவில்லை.மூன்று வருடங்கள் தொடர்ந்து வருடாவருடம் நடக்கும்.அல்லது மூன்று வருடங்களுக்கு நடக்காது.

அந்த வருடம் நடந்த கூத்து தான் மேலே கதையாக வட்டார மொழியில் உள்ளது.

கடந்த சில வருடங்களாக படித்தவர்கள் கூட்டம் அதிகமானதால் மத்தியானம் நடக்கும் கொடையில் கூட்டம் கணிசமாக குறைந்து விட்டது.

இந்த கதையை சினிமாவா எல்லாம் எடுக்க வேண்டாம் அட்லீஸ்ட் நாடகம்..நோ பேட் வோர்ட்ஸ்..

இந்த கதை லவ்டேல் மேடிக்காக..

7 comments:

Unknown said...

விஜயிட்டட கேடடுப் பாருங்களேன்... ;)

துபாய் ராஜா said...

பைனான்சியர் நீங்களா இருந்தா முயற்சி பண்ணலாம்...

பிரபாகர் said...

அர்விந்த்... நல்ல ஒரு இடுகை உன்னிடமிருந்து. மிக நன்றாக இருக்கிறது. இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் நீளத்தை சுருக்கியிருந்தால். வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

சிம்புட் பறவை said...

அய்யா ...இரும்புதிரே!!!! ...வள்ளியூராயா? ....நமக்கும் அங்குனேகுள்ளேதான் ..

ஏல எந்திரி மூதி.....தார்சாவில்(திண்ணை) ..

உனக்கு சாமக் கொட..கொட குடுத்து உரிச்சி உப்பு கண்டம் போடாம விட மாட்டேன்

வட்டாரவார்த்தைகள் அருமை .....

--வள்ளியூரான்(மலேசியாவிலிருந்து)

அகல்விளக்கு said...

மாதேஸ் தலக்காகவா....?????????

புது மாப்ள பாத்தாரா.....?????

புலவன் புலிகேசி said...

நீங்க பணம் போட்டா நன் கூட இயக்குனராகத் தயார்........

தினேஷ் said...

:)