Saturday, February 6, 2010

நிர்வாண முகம் - 3

பிப்ரவரி 4 - இதுவே பதினாலாக இருந்தால் பலருக்கு ஏதோ ஒரு மறக்க முடியாத அனுபவமாகயிருக்கும்.நேற்று இந்த நாளை எப்படி மறந்தேன் என்றே தெரியவில்லை.மதியம் வரை ஞாபகமில்லை.மேலாளர் வந்து "வாயேன் புது ஆபிஸில் ஒரு நடை போய் விட்டு வரலாம்.." என்று சொல்லவும்,போகவும் மனமில்லாமல் மறுக்கவும் முடியாமல் பைக்கில் பயணித்தோம்.

ஏதோ மனதில் மட்டும் சின்ன சஞ்சலம் உறுத்திக் கொண்டேயிருந்தது.கவனிக்காமல் முட்டியில் வைத்திருந்த கை ஏதோ ஒரு கம்பியில் மோத கையெல்லாம் கறுப்பு மை.முதல் குறுயீடு கவனிக்க மறந்து விட்டேன்.

ஹைவேஸில் செல்லும் போது ஒரு நாயை ரோடோடு ரோடாகத் தேய்த்திருந்தார்கள்.குறுயீடு இரண்டு.தம்பியை நினைத்து கொண்டேன்.ரோடோடு ரோட் அவன் மழலையில் சொன்ன வார்த்தைகளை என் வசமாக்கி கொண்டேன்.இன்னைக்கு ஏதோ இருக்கு என்று உள்மனது சொல்லியது.சர்வ நிச்சயமாக தெரிந்து விட்டது.அன்றும் அந்த விபத்து நடப்பதற்கு முன்னால் ஒரு பெண்ணை பார்த்திருந்தேன்.

திருப்பத்தில் தான் கவனித்தேன்.முன்னால் ஒரு பெண்.பைக்கில் எவனோ ஒருவனை கட்டிக் கொண்டிருந்தாள்.குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மனதிற்கு அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்ற உந்துதலே ஆறுதலாகயிருந்தது.காரணங்கள் கன்னாபின்னாவென இருந்தது.

முகத்தை அவள் துப்பட்டாவில் மறைத்திருந்த காரணம்.கண்ணையாவது பார்த்து விட இருந்த ஆர்வம்.

உடலோடு ஓட்டியிருந்த ஆடை அல்லது ஆடைக்கு ஏற்ப அளவுகள் இருந்த உடற்கட்டு.

கறுப்புமல்லாத சிவப்புமல்லாத நிறம் - சாக்லேட் நிறம்.

யாருமில்லாத அத்துவான காடு - குறிப்பாக பெண்கள்.

நினைத்தால் தான் ஒன்றுமே நடக்காதே.அவன் வளைந்து வளைந்து ஓட்டினான்.அவனை பின் தொடந்தோம்.திருப்பத்தில் எங்கு போவது என்று தெரியாமல் நிற்க,அவளை பார்த்தேன்.இரண்டாம் முறை பார்க்கத்தூண்டும் முகம் தான்.அல்லது பார்க்க பார்க்க பிடிக்கும் முகம்.குறுயீடு மூன்று.

மேலாளர் என்னை பார்க்க நான் வேறு பக்கம் திருப்பினேன் வண்டியை அல்ல பார்வையை.

"நீ ஐஐஎம் எக்ஸாம் எழுதேன்.." அவர் சொன்னது காதில் விழுந்து வழிந்து கொண்டிருந்தது.பார்வை அவள் சென்ற திக்கை நோக்கியிருந்தது.திரும்பி வந்தார்கள்.ஐஐஎம் பேச்சு தீவிரமாகயிருந்ததால் பார்க்க முடியவில்லை.

அலுவலகம் நன்றாகத்தானிருந்தது.பட்ஜெட் நூறு கோடிக்கும் அதிகம்.

போன் கால்ஸ்,அலைச்சல்,எரிச்சல்,இன்னும் இத்யாதி இத்யாதி குடிக்க மறந்த காபி கூட சூடாகயிருந்தது.

வீட்டுக்கு போகும் போது கல்லூரிக்கு நாட்களுக்குப் பிறகு கிடைத்த பேருந்து பயணம்.

வழக்கம் போல கடைசி சீட் தான்.

கண்ணை மூடிக் கொண்டேன்.தெரிந்தவன் எழுப்பினான்.

"ஹேய் படி..நாளைக்கு எங்கள் அணிக்கு எதிராக நீங்கள் விளையாட போறீங்க..ஆள் குறையுது.."

"நான் வரட்டுமா.."

"உங்கள் அணிக்கு எதிராகவா..பட் யூ ஆர் வெல்கம்.."

"ம்..எங்களுக்கு எதிரா நானே விளையாடுவேன்.." சொல்லும் போதே அவனுக்கு இப்படி சோடக்கு பால் போடணும்,இவனுக்கு ஸ்லோ பால் போடணும் என்று சென்னை 600028 படத்தில் ஜெய் சொல்வது நிழலாடியது.

திரும்பவும் தூங்கி விட்டேன்.யாரோ பக்கத்தில் அமர்வது தெரிந்தது.

"எப்பவும் கடைசி தானா.." அவன் கேட்டது என்னை கொஞ்சம் அதிகமாகவே சீண்டியது.

"ஆமா வாழ்க்கையிலும் கடைசி..இங்க சீட்ல உக்காருமிடமும் கடைசி.."

"அப்ப எப்பத்தான் முந்துவ.." அதிமாக சீண்டியது போலிருந்தது.

"அதுவா சாகும் போது.."

"எப்ப சாவே.." கலகலப்பாக பேசுகிறதா நினைப்பு.

"நீ சாவதற்கு ஒரு நாள் முன்னாடி.." என் பேச்சில் அனல் தெரித்தது.

"அப்ப நீ நூறு வயசு வரைக்கும் வாழணும்.."

"அப்ப உனக்கு நூத்திப்பத்து வயசு வரைக்கும் இருக்கணுமா.." பேச்சில் கொக்கி போட்டேன்.

"ஏதாவது பேசு..நேரத்தை கொல்வோம்.."

"இங்க இருந்து நாலு வரிசை முன்னாடி ஒரு சூப்பர் பிகர் இருக்கு..அவளுக்கு எதிரே ஒரு இடம் காலியா இருக்கு..அங்க போய் இரு..நேரம் போகும்.."

"அந்த பொண்ணு வரும் போது நீ தூங்கிட்டுல்ல இருந்த..அப்புறம் எப்படி..உன் இடத்துல இருந்து அவ தெரிய மாட்டாளே.."

"இது கடைசி கேள்வியாகயிருந்தால் பதில் சொல்கிறேன்.."

"ம்..சரி சொல்லு.."

"உன் கண் அடிக்கடி அங்க போச்சு..அவ பக்கத்தில் ஒருத்தன் இருக்கான்..அவன் தலை திரும்பவேயில்ல..ஒவராக கறுகுது..போய் நீயும் கொஞ்சம் கறுக்கு.."

"நீ என்ன ஒழுங்கா..உனக்கு ஆசையில்லையா.."

"சரி உன் மொபைல் குடு..ஏதாவது படம் இருந்தா பார்த்துட்டு தர்றேன்.."

"இப்ப வைக்கிறது கிடையாது.."

"ஏன் கல்யாணம் ஆனப்பிறகு நீ மிஸ்டர் க்ளீனா..நீ எப்படியோ அது மாதிரி தான் நானும்.ஒரு நாளைக்கு ஒரு பெண்ணை தான் சைட் அடிப்பேன்.."

"யார் அந்த பொண்ணு..நம்ம ஆபிஸா.."

"எந்திரிச்சு போடா சாலே.." கத்தியவுடன் எனக்கே ஆயாசமாகயிருந்தது.வெளியே தலையை நீட்டி வேடிக்கை பார்க்க தொடங்கினேன்.வழி தெரியாமல் அவள் திரும்ப எனக்கு தரிசனம் தர வருவாளா என்று.

பின் குறிப்பு :

அவன் இடம் வந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் இறங்கி விட்டான்.நான் இறங்கும் இடமும் அதுவே.நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி அவனை திட்டியிருக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே நடந்தேன்.

பிப்ரவரி நாலில் நடந்த சம்பவம் எந்த இடத்திலும் வரவில்லை.என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யோசித்து எனக்கு புது பிரச்சனை இருப்பதாக சொல்லலாம்.நானும் தெரிந்து கொள்வேன்.இது ஒரு புது முயற்சி.

நிர்வாண முகம் 2 இன்னும் எழுதிக் கொண்டிருப்பதால் அது வரவில்லை.அட இதுவும் புது முயற்சி.

இது என் தம்பிக்கு மிகவும் பிடித்த இரண்டு பதிவர்களுக்கு சமர்ப்பணம்.இருவரது பதிவிலும் மொழி விளையாடும்.அவர்கள் ஜ்யோவ்ராம்சுந்தர் மற்றும் நர்சிம்.

1 comments:

Raju said...

சமர்ப்பணமில்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்..! நீங்க இப்பிடி மொழிய பொலி போடுறீங்க பாஸ்..?
:-)