Sunday, November 14, 2010

அர்ஜூனனின் முட்டாள்த்தனம்

சுபத்ரை அபிமன்யூவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள்.அர்ஜூனன் சுபத்ரையுடன் மாலை பொழுதில் மகிழ்ச்சியாக இருக்கிறான்.யட்சன் ஒருவன் பதற்றத்துடன் ஓடி வருகிறான்.அர்ஜூனா என்னை நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல அர்ஜூனனும் பிரச்சனையை கேட்காமல் மாளிகைக்குள் அழைத்து செல்கிறான்.அந்த நேரத்தில் கிருஷ்ணன் வந்து "அர்ஜூனா நீ அடைக்கலம் குடுத்து வைத்திருப்பது என் எதிரிக்கு..அவனை வெளியே அனுப்பு.." என்று கத்த

"வா கிருஷ்ணா..உள்ளே வா.." அர்ஜூனன் ஆரத்தழுவ வருகிறான்.

"எதிரி இருக்கும் வீட்டில் என் பாதம் படாது.." தழுவ வந்த கைகளை கிருஷ்ணன் தட்டி விடுகிறான்.

"கிருஷ்ணா அவர்கள் என் விருந்தினர்கள்..அனுப்ப முடியாது.." என்று அர்ஜூனன் சொல்ல

"என் எதிரியை ஒளித்து வைப்பனும் என் எதிரியே..வா சண்டைக்கு..நீ ஜெயித்தால் அவனை நான் விட்டு விடுகிறேன்..நான் ஜெயித்தால் நீ அவனை வெளியே அனுப்ப வேண்டும்.." என்று கிருஷ்ணன் சொல்ல

"சுபத்ரா..என் காண்டீபத்தை எடுத்து கொண்டு வா.." என்று மனைவியிடம் சொல்ல

"அண்ணா என்ன விளையாட்டு இது.." சுபத்ரை கிருஷ்ணனைப் பார்க்கிறாள்.

ஒன்றுமாகாது என்பது போல கிருஷ்ணன் தலையை ஆட்ட காண்டீபத்தோடு வருகிறாள் சுபத்ரை.

துவந்த யுத்தம் நடக்கிறது.சுற்றியிருக்கும் மாடமாளிகையின் காரை எல்லாம் பெயர்ந்து விழுகிறது.மூன்று நாட்கள் விடாமல் வெற்றி தோல்வி என்று முடிவே வராமல் கொஞ்சம் கொஞ்சமாக சண்டை போராக நடக்கிறது.இருவர் மேனியும் அம்புகள் பாய்ந்து குருதியின் நிறமாக மாறியிருக்கிறது.

"அண்ணா போதும் விளையாடியது.." என்று சுபத்ரை குறுக்கே வர சண்டை முடிவுக்கு வருகிறது.

"என்ன விளையாட்டா..உன் விளையாட்டை என்னிடமும் ஆரம்பித்து விட்டாயா கிருஷ்ணா.." அர்ஜூனன் பொய்க்கோபத்துடன் கேட்கிறான்.

"அண்ணன் பலராமனிடமே விளையாடுபவன்..உன்னிடம் விளையாட மாட்டேனா.." கிருஷ்ணன் சிரிக்க

"எதற்காக இந்த சண்டை.."

"அர்ஜூனா இது வெறும் முன்னோட்டம்..நாளை நானே உன்னை எதிர்த்து நின்றாலும் நீ மனம் கலங்கி விடக்கூடாது..அதற்காகவே இந்த விளையாட்டு.."

"கிருஷ்ணா புரியவில்லையே.."

"புரியும்..நாளையே உன் உறவுகளை எதிர்த்து போர் புரிய வேண்டி வரும்..அதற்குத்தான் இந்த ஒத்திகை.."

விருந்துண்டு விட்டு நடந்த விளையாட்டு போரில் அர்ஜூனன் செய்த தவறுகளை பட்டியலிடும் கிருஷ்ணன் அப்படி பத்ம வியூகம் பற்றி சொல்கிறான். சுபத்ரை லேசாக கண்ணயர, அர்ஜூனன் அவளை எழுப்பாமலிருக்க வெளியே செல்ல முயல்கிறான்.

"அர்ஜூனா..எதையும் பாதி கதையில் விடக்கூடாது..முழுதாக கேள்.." கிருஷ்ணன் அர்ஜூனன் கையைப் பிடித்து இழுக்கிறான்.

"அவள் தூங்கட்டும்..பத்ம வியூகத்தை உடைக்க எனக்கு தெரியும் கிருஷ்ணா..வா வெளியே செல்லலாம்.." என்று கிருஷ்ணரை அழைத்து செல்கிறான்.

கிருஷ்ணன் புன்னகை செய்கிறான்."எதற்கும் தினமும் பயிற்சி எடு..ஒரு ஆண்டு காலம் வெளியே போய் வா..தவமிரு.."

"சுபத்ரா கர்ப்பமாகயிருக்கிறாள்..அவளை நான் விட்டு செல்வதா.." போக மறுக்கும் அர்ஜூனனிடம் "என் மருமகனை நான் பார்த்துக் கொள்கிறேன்..போய் வா.." என்று கிருஷ்ணன் சொல்ல போக அர்ஜூனன் மறுக்கிறான்.கிருஷ்ணன் விஷமமாக சிரிக்கிறான்.

தர்மர் சூதாட போகிறார்.எல்லாம் தோற்று காட்டிற்கு போகிறார்கள்.அர்ஜூனன் விடாமல் பயிற்சி எடுக்கிறான்.கர்ணனை நினைத்து கொள்கிறான்.இலக்கை அம்பால் அடிக்கும் போது இலக்கே இல்லாமல் செய்கிறான்.

சமாதானம் தோற்றுப் போய் மகாபாரத யுத்தம் தொடங்குகிறது. பீஷ்மர் தலைமையில் கௌரவ சேனை. அவருக்கு வலப்பக்கம் துரோணர்.இடப்பக்கம் கிருபர்.அர்ஜூனன் தயங்குகிறான். கர்ணன் பீஷ்மருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் பீஷ்மர் இருக்கும் வரை களமிறங்க மாட்டேன் என்று சபதம் எடுக்கிறான்.

"அர்ஜூனா அன்று நாம் செய்தோமே முன்னோட்டம் அதன் முடிவு தானிது..சண்டையிடு அர்ஜூனா.."

"என்னால் முடியாது கிருஷ்ணா..தாத்தா,குரு,நண்பர்கள்,சகோதரர்கள் எல்லோரும் இருக்கிறார்கள்.. என்னால் முடியாது.."

"அவர்கள் நீங்கள் துரியனின் அரசவையில் அவமானப்படும் போது எங்கே போனார்கள்..உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இடத்தை தர மறுத்த எங்கே போனார்கள்.சண்டையிடு அர்ஜூனா..நீ சண்டையிடாவிட்டால் உன் சகோதர்களும் தயங்குவார்கள்..முதல் அம்பை விடு" என்று கிருஷ்ணன் சொல்கிறான்.

"முடியாது கிருஷ்ணா..நீ எத்தனை சமாதானம் செய்தாலும் என் கால்களிலும்,கைகளிலும் பலமில்லை.." அம்பை நழுவ விடுகிறான்.

"இப்போது அங்கே பார்.." என்று எல்லோரும் கர்ணனாக தெரிகிறார்கள்.பீஷ்மர் வெண்தாடி கர்ணனாக, துரோணர் குடுமி வைத்த கர்ணனாக என்று எல்லோரும் கர்ணனாக தெரிகிறார்கள்.

"கிருஷ்ணா..உன் விளையாட்டை நிறுத்து..கர்ணன் பீஷ்மர் இருக்கும் வரை களமிறங்க மாட்டான்..அவன் பாசறையில் இருக்கிறான்.."

"நீ கர்ணனை காணாமல் தயங்குகிறாய்..அதனால் எல்லோரையும் கர்ணனாக காட்டினேன்..அம்பை விடு.." என்று கிருஷ்ணர் சொன்னதும் முதல் அம்பை விடுகிறான்.அது பீஷ்மர் காதோரமாக போய் வணக்கம் வைக்கிறது.

பத்தாம் நாள் முடிவில் பீஷ்மர் சாய்க்கப்படுகிறார்.கர்ணன் பீஷ்மரை காண போர்க்களத்திற்கு ஓடோடி வருகிறான்.

"நீ என்னை விட சிறந்த வீரன்..எப்படியும் துரியோதனன் தோற்று விடுவான்..எனக்கு பிறகு அவனை பாதுகாக்கவே உன்னிடம் வாக்குவாதம் செய்து உன்னை ஒதுங்க செய்தேன்..நீ தான் அவனை இனி காப்பாற்ற வேண்டும்.." என்று உறுதிமொழி வாங்குகிறார்.கர்ணன் களமிறங்குகிறான்.

பதிமூன்றாவது நாள் போர்.பத்ம வியூகம் அபிமன்யூ அதை உடைத்து பாதி வரை மீதி பாதியை உடைக்க முடியாமல் உள்ளேயே கௌரவ சேனையை கலங்கடித்து சூழ்ச்சியால் கொல்லப்படுகிறான். போர்க்களத்தின் வேறு மூலையில் இருக்கும் கிருஷ்ணன் சங்கேடுத்து ஊதுகிறான். அர்ஜூனன் அந்த சங்கின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு யார் என்று கேட்க கிருஷ்ணன் அர்ஜூனைப் பார்க்காமலே ஊதிக் கொண்டிருக்கிறான்.தோளைத் திருப்பினால் கிருஷ்ணனின் கண்கள் கலங்கியிருக்கிறது. "யார் அபிமன்யூவா.." என்று அர்ஜூனன் கேட்கிறான்.பேச முடியாமல் தலையை அசைக்கும் கிருஷ்ணனிடம் "நீ பார்த்துக் கொள்வாய் என்று நம்பினேனே..நான் ஒரு முட்டாள்.." என்று கிருஷ்ணனிடம் கோபம் கொள்ளும் அர்ஜூனனிடம் "உன் முட்டாள்தனத்தால் அபிமன்யூ இறந்தான்..நான் அன்றே சொன்னேனே..எதையும் முழுதாக கேள் என்று..இன்று பத்ம வியூகத்தில் சிக்கிக் கொண்டு அபிமன்யூ இறந்ததிற்கு நீ ஒரு காரணம் என்றால் ஜயத்ரதன் இன்னொரு காரணம்..இனி ஒரு முட்டாள்தனமும் செய்யாதே.." என்று சொல்லி முடிக்கும் முன் "நாளை சூரியன் மறைவதற்குள் ஜயத்ரதனை கொல்வேன்..இல்லை நாளை நெருப்பில் பாய்ந்து உயிரை விடுவேன்.." என்று சொல்லி மயக்கமாகிறான்.அர்ஜூனனின் மூடத்தனத்தை எண்ணி கிருஷ்ணன் திரும்ப சங்கேடுத்து ஊதுகிறான்.கண்கள் கலங்கியிருக்கிறது. பதிமூன்றாவது நாள் போர் முடிவடைகிறது

இந்த சங்கோலியைக் கேட்டு கௌரவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.ஜயத்ரதனை கௌரவர்கள் ஒளித்தாலும் கிருஷ்ணன் சூழ்ச்சியால் ஜயத்ரதன் மற்றும் அவனது தந்தையும் சாய்க்கப்படுகிறார்கள். கிருஷ்ணர் திரும்ப சங்கு ஊதிய காரணம் புரியாதவர்களுக்கு இரவு போரில் முடிவில் கடோத்கஜன் கொல்லப்பட்டதும் காரணம் புரிகிறது.கடோத்கஜனின் மரணத்தோடு அன்றைய போர் முடிவடைகிறது.அர்ஜூனை காக்க இன்னும் எத்தனை பேரை பலி வாங்குவானோ என்று நினைத்துக் கொண்டே சூரியன் உதிக்கிறான்.

4 comments:

bandhu said...

very well written! thanks

துளசி கோபால் said...

அருமை.

நடை அழகாக வந்துருக்கு.

சிலநாள் முன்பு குருக்ஷேத்ரம் போயிருந்தேன்.

மாலோலன் said...

அரவிந்
உங்களிடமிருந்து குழப்பமில்லாத (:)-)
நடையில் இப்படி ஒரு பதிவா? ஆச்சர்யம்!!

அருமையான நடை.தெரிந்த கதையென்றாலும் வாசிக்கத்தூண்டும் நடை

த.கிருஷ்ணகுமார் said...

அருமையான தெளிவான உரைநடை ...நன்றாக இருக்கிறது ...வாழ்த்துக்கள்