Wednesday, December 29, 2010

கர்ணபாரதம்

குருஷேத்திர யுத்ததிற்கு திட்டம் போட கௌரவர்கள் கூடியிருக்கிறார்கள். பீஷ்மர் தான் தலைமை என்பதை எல்லோரும் முடிவு செய்து ஒத்துக் கொள்கிறார்கள்.அப்போது நடக்கும் வாக்குவாதத்தில் கர்ணன் பீஷ்மர் இருக்கும் வரை களமிறங்க மாட்டேன் என்று கோபித்து கொண்டு கர்ணன் செல்கிறான். கர்ணன் இல்லாத களத்தில் அம்பை விடவே அர்ஜூனன் யோசிக்கிறான். கிருஷ்ணன் எல்லோரையும் கர்ணனாக நினை என்று யோசனை சொல்கிறான். போர் தொடங்குகிறது. பத்தாம் நாள் பீஷ்மர் சிகண்டியால் சாய்க்கப்படுகிறார். கர்ணன் களமிறங்குகிறான்.

"உன்னை பார்த்தாலே விஜயன் உக்கிரமாக போர் புரிந்திருப்பான். துரியனைக் காக்க நீ வேண்டும் என்பதாலே உன்னை களம் இறக்காமல் நான் பார்த்துக் கொண்டேன்..நீ மாபெரும் வீரன் கர்ணா.." என்று பீஷ்மர் சொல்ல

"தெரியும் தாத்தா..அர்ஜூனனை அழித்து விட்டு தான் மறுவேலை.." என்று கர்ணன் சொல்ல

"கிருஷ்ணன் இருக்கும் வரை அது நடக்காது..அவனை சாய்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.. அவனை சேர்ந்தவர்களைக் கொன்று விடு..அவன் தானாக சோர்ந்து விடுவான்.."

பதிமூன்றாவது நாள் யுத்தத்தில் அபிமன்யூம், பதிநான்காவது நாளில் கடோத்கஜனும் சாய்க்கபடுகிறார்கள். அர்ஜூனை அழிக்க வைத்திருந்த ஆயுதம் கடோத்கஜனை அழிக்க உதவுகிறது. கர்ணனும், அர்ஜூனனும் துக்கத்தில் இருக்கிறார்கள்.

குந்தியைச் சந்திக்க வருகிறான் கிருஷ்ணன்.

"என் பேரன்களைக் கர்ணன் கொல்லும் போது பார்த்துக் கொண்டாயிருந்தாய் யசோதா மைந்தா..ஏன் கர்ணனை நீ கொல்லவில்லை.."

"என்னால் கர்ணனைக் கொல்ல முடியாது அத்தை.."

"என்ன காரணம்.."

"அவன் உன் மகன் அத்தை..சூரியனுக்கும் உனக்கும் பிறந்தவன்..என்னால் எப்படி அவனை கொல்ல முடியும்.."

"நான் அவனை உடனே பார்க்க வேண்டும்.." என்று குந்தி அடம் பிடிக்க கண்ணன் மனதுக்குள் சிரித்து கொள்கிறான்.

கர்ணன் பாசறையில் தூங்காமல் அமர்ந்திருக்கிறான்.

"மகனே.." என்ற சத்தம் கேட்டு வெளிச்சமாக்குகிறான். "அம்மா அர்ஜூனன் பாசறை அங்கே இருக்கிறது..வழி தெரியாமல் வந்து விட்டீர்களா.."

"வழி தவறவில்லை..தகர்த்த வழியை நேர் செய்ய வந்தேன்.. நீ என் பிள்ளை.." என்று குந்தி சொல்ல

"நான் தேரோட்டியின் மகன்.."

"கர்ணா.. நீ என் மூத்த மகன் என்று தெரிந்தால் துரியனும்,தர்மனும் சந்தோஷப்படுவார்கள்.. நீ அரியணையில் ஏறலாம்.."

"அரியணை..எனக்கு துரியன் தந்த அங்க தேசமே போதும்..அர்ஜூனன் அம்மாவாக இருங்கள் போதும்.."

"நான் உன் அம்மா தான்.." பாசறையில் இருக்கும் சால்வையை அணிந்து காட்டுகிறாள். "இந்த சால்வையைத்தான் நான் உன்னை ஆற்றில் விடும் போது அணிந்திருந்தேன்.. வேறு யாராவது அணிந்தாலும் எரிந்து போவார்கள்..ஏன் தொடக்கூட முடியாது.." என்று குந்தி சொல்ல அதை தொட்டுப் புண்ணாக்கி கொண்ட பெண்கள் எல்லாம் கர்ணன் நினைவில் வந்து மறைந்தார்கள். "என்னோடு வந்து விடு..பாண்டவர்கள் உன் தம்பிமார்கள்.." என்று குந்தி சொல்ல

"நீ எங்கே அம்மா இத்தனை நாளாக இருந்தாய்..எனக்கு துரியன் தான் எல்லாம். அரண்மனை,அதிகாரம் எல்லாம் அவன் போட்ட பிச்சை..அவனை விட்டு வர முடியாது.."

"சரி வர வேண்டாம்..உன் தம்பிகளைக் கொன்று விடாதே.."

"அர்ஜூனனைத் தவிர.." என்ரு திருத்தம் சொல்கிறான்.

"அர்ஜூனன் மீது நாக அஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது..இது மட்டும் போதும்.."

"சரி அம்மா..நான் உன் பிள்ளை என்று போர் முடியும் வரை வெளியே சொல்லாதே.. நான் இறந்து விட்டால் உன் மடியில் போட்டு இவன் என் மூத்தப்பிள்ளை என்று சொல்வாயா.."

"இப்போதே சொல்கிறேன்..என்னோடு வந்து விடு.."

"நான் இறந்தால் மட்டும் சொன்னால் போதும்..உயிர் உள்ள வரை துரியன் தான்.." கர்ணன் வழியனுப்பி வைக்கிறான்.

பதினெழாவது நாள் போர் நடக்கிறது.கிருஷ்ண,சல்லிய சூழ்ச்சியால் நாகாஸ்திரம் அர்ஜூனனை உரசி செல்கிறது. தேர் சேறில் சிக்கிக் கொள்ள கர்ணன் கொஞ்ச நேரம் அவகாசம் கேட்கிறான்.

"அர்ஜூனா அவனை கொல்.."

"கிருஷ்ணா அவன் நிராயுதபாணியாய் நிற்கிறான்..அவன் ஆயுதம் எடுக்கட்டும்.."

"அபிமன்யூ,கடோத்கஜன் எல்லாம் ஆயுதத்தோடு நின்றார்களா..நீ கொல்கிறாயா நான் கொல்லட்டுமா.." என்று கிருஷ்ணன் சொல்ல அர்ஜூனன் கர்ணனை அம்புகளால் துளைக்கிறான்.கடைசி நாள் போரில் ஒருவரையும் கொல்ல முடியாமல் அர்ஜூனன் தடுமாறுகிறான். கிருஷ்ணனுக்கு போர்க்களத்தில் அவனை காப்பாற்றுவதே பெரும்பாடாய் இருக்கிறது. என் குறி தவற என்ன காரணம் என்று கிருஷ்ணனிடம் கேடுக் கொண்டேயிருக்கிறான்.கேள்வியின் போதெல்லாம் கிருஷ்ணன் முகத்தில் மாறாத புன்னகை வந்த வண்ணமேயிருக்கிறது.

பதினெட்டாவது நாள் போர் முடியும் வரை குந்தி எல்லாவற்றையும் அடக்கி வைத்து கொள்கிறாள். ஈமச்சடங்குகள் நடக்கும் போது கர்ணனை மடியில் போட்டு அழுகிறாள்.
"என் மூத்தப்பிள்ளையைக் கொன்று விட்டாயே கண்ணா.." என்று கண்ணனிடம் கோபப்படுகிறாள்.

"கர்ணன் என் அண்ணனா..இது உனக்கு முன்னரே தெரியுமா அம்மா.." என்று குந்தியிடம் அர்ஜூனன் கேட்கிறான்.

"தெரியும்..கண்ணன் தான் சொல்ல வேண்டாம் என்று சொன்னான்.." என்று குந்தி சொல்ல

"முதல் நாள் போரிலேயே எல்லோரையும் கர்ணனாக நினைத்து கொள் என்று கண்ணா சொன்னாயே..உன்னை கர்ணனாக நினைத்துக் கொண்டு உன்னை கொன்றிருந்தால் என் அண்ணன் இறந்திருப்பானா..நீ தானே அவன் மேல் அம்பு விட சொன்னாய்.." என்று அர்ஜூனன் கோபபடுகிறான்.

" இருவரில் யாராவது ஒருத்தர் தான் இருக்க முடியும்..அவனை கொல்லவில்லை என்றால் அவன் உன்னை கொன்றிருப்பான்..துக்கம் தாளாமல் உன் சகோதர்களும், அம்மாவும் இறந்திருப்பார்கள்..ஒன்றை விட ஐந்து பெருசு அர்ஜூனா.." என்று கண்ணன் சமாதானப்படுத்தினாலும் அர்ஜூனனுக்கு மனசு ஆறவில்லை.

"அவன் என்னை விட வீரன் என்று நீ முன்னர் சொன்ன போது ஒத்துக் கொள்ள முடியவில்லை..இன்று ஒத்துக் கொள்கிறேன்..அவன் என்னை விட வீரன்..என் அண்ணன்..நடந்தது மகாபாரதப் போர் அல்ல..கர்ண பாரதம்..நான் கொன்ற எல்லோருமே எனக்கு கர்ணனாக தெரிந்தார்கள்..கர்ணன் இறந்தப்பின் ஒருவரையும் என்னால் கொல்ல முடியாமல் போனதற்கு இன்று தான் காரணம் தெரிந்தது" என்று சொல்லிக் கொண்டே கர்ணன் சிதைக்கு நெருப்பு வைக்கிறான்.

3 comments:

ஆதி said...

அருமை

இரும்புத்திரை said...

நன்றி ஆதி

a said...

இதன் மூலம் ஏதோ சொல்ல வர்றீங்க.