Sunday, December 5, 2010

ரத்த தரித்திரம்

கம்பெனி,ஒன்ஸ் அபான் அ டைம் இன் இந்தியா(ராம் கோபால் வர்மா இயக்கவில்லை) - இந்த மாதிரி அரைச்ச மாவையே அரைச்சி அரைவேக்காடாக தருவதை என்று தான் நிறுத்தப் போகிறாரோ தெரியவில்லை.

ஒரே பாணியிலான டெம்பிளேட் கதையில் இரு நாயகர்கள்.இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டும் வேலை பார்த்துக் கொண்டும் தம்தமது காதலியோடும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.ஈகோ பிரச்சனையாலும், பழி வாங்குதலாலும் இருவரின் தந்தையும் கொல்லப்படுகிறார்கள்.  அதை தொடர்ந்த பழி வாங்குதல் கதையை தான் காதில் பூ சுற்றுகிறார்கள்.

முதல் பாகத்தை தமிழுக்காக இருபது நிமிடங்களாக குறைத்திருக்கிறார்கள். அதில் தான் எத்தனை குழப்பங்கள். எடிட்டிங்,ஒளிப்பதிவு,இசை,பாடல்கள்,கதை சொல்லி கௌதம் மேனன் என்று முடிந்த வரை பாடாய் படுத்துகிறார்கள்.புரிகிற கதையில் இந்த கௌதம் மேனன் கதை சொல்லியாய் எதுக்கு அதை இன்னொரு முறை சொல்கிறார் என்று தெரியவில்லை.ரொம்ப வெட்டியா இருக்கார் போல. பழி வாங்குவது பரிசுத்தமானது என்ற மகாபாரத கேப்ஷனையே அசிங்கப்படுத்திட்டேங்களே பாவிகளா.

ராம் கோபால் வர்மா நீங்க பேசாம நித்யானந்தா கதையை எடுக்க போறீங்க தானே அதை எடுங்க. தமிழ்ல வசனம் எழுத கூட ஆள் நாங்களே தர்றோம்.அதை விட்டுப் போட்டு இப்படியா துரத்தி துரத்தி படம் பாக்குறவனை சாத்து சாத்துன்னு சாத்துறது.

மகாபாரதத்தில் வரும் பீஷ்மர் கதாபாத்திரம் மாதிரியே விவேக் ஒபராய் அணியில் ஒருவர். இப்படி எல்லாம் மகாபாரதத்தை ஞாபகப்படுத்தினாலும் கதை என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ககிட்டி,ஆஷிஸ் வித்யார்த்தி,கோட்டா சீனிவாசராவ்,சுதீப்,அபிமன்யூ சிங், சத்ருகன் சின்கா என்று பெரும் தலைகளை எல்லாம் வைத்து அணிவகுப்பு நடத்தியிருக்கிறார்கள்.

அரசியலில் இறங்கியப்பின் பழிவாங்குதலை தற்காலிகமாக நிறுத்தும் விவேக் ஒபராயை சூர்யா சுட்டுக் கொன்று விட்டு அவர் அரசியலில் இறங்குகிறார். கதையில் எத்தனை வருடத்தில் இந்த கொலைகள் நடக்கிறது என்று குழப்பமாகவே உள்ளது.ராதிகாவை விட்டு விட்டு வரும் விவேக் ஒபராய் அரசியலில் இறங்கும் முன் புதிதாக குடி வரும் வீட்டில் ராதிகா இருக்கிறார்.ஆனால் சாகும் போது கைக்குழந்தை தானிருக்கிறது.பிரியா மணி கையில் இருந்த குழந்தையை வாங்கி தந்திருப்பார்கள் போல.

குழந்தை பழி வாங்கும் என்று சிம்பாலிக்காக காட்டுகிறார்கள் போல.இதை தான் கிழக்கு கரை படத்தில் பி.வாசு குழந்தை கையில் துப்பாக்கியைக் கொடுத்து இனி கிழக்கு கரை இவன் கையில் என்று சொல்லி இயக்கம் பி.வாசு என்று போட்டது ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.பர்ஸ்ட் பார்ட் பார்த்ததுமே பொத்திக்கிட்டு இருக்க வேண்டியது தானே என்று கனவில் ராம்கோபால்வர்மா வந்து சொல்வார் என்று நினைக்கிறேன்.வரட்டும் ஏ காவ் மே இந்தியைப் பேசி விட வேண்டியது தான்.

2 comments:

Rettaival's Blog said...

அவ்வளவு சத்தமாவா கேட்டுச்சு!

நீ தொடு வானம் said...

காக்க காக்க