Wednesday, December 8, 2010

கிருஷ்ண உபதேசம் ஆஃப்டர் ராமராஜ நந்தலாலா

நந்தலாலா - ராமராஜன் படங்கள் பொருத்திப் பார்த்தப்பின் நடு பகலில் தூக்கத்திலிருந்து ஸ்கைப்பில் எழுப்பிய நண்பன் நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிற.ஒழுங்காவே எதையுமே உனக்கு சொல்ல வராதா. எனக்காக எல்லா முகமூடிகளையும் கழற்றி வைத்து விட்டு சாதாரணமாக ஒரு முறை விமர்சனம் செய்ய வேண்டும் என்று சொல்ல. 

எனக்காக - இந்த வார்த்தைகளின் மீது எனக்கு நம்பிக்கையேயில்லை என்று அவனிடம் சொல்ல முடியுமா.எனக்காக செய் என்று யாராவது சொன்னால் கொலைவெறி வந்து விடுகிறது.அப்படியென்ன அடுத்தவன் சுயத்தைப் பாதிக்கும் அளவிற்கு அவன் மீது அன்பு,பாசம். எனக்கு எந்த நேரத்தில் எப்படி தோன்றுகிறதோ அப்படித்தான் செய்வேன் என்று சொல்ல ஆசை தான்.இனியும் அப்படித்தான்.பத்து வருட நட்பை ஒரே நாளில் உடைக்க மனசு வரவில்லை. 

அப்படி சொல்லாமல் இந்த கதையை சொல்லி வைத்தேன்.

கிருஷ்ணரிடம் தர்மன் சொன்னானாம் - "என்ன இந்த ஊரில் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள்.." துரியோதனன் சொன்னானாம் - "என்ன இந்த ஊரில் எல்லோருமே கெட்டவர்களாக இருக்கிறார்கள்..". எனக்கு நல்லவர்கள்,கெட்டவர்கள் என்று பிரித்து பார்க்கத் தெரியாது.ஆனால் அவனிடமிருந்த பதற்றம் தான்(அரியணை போய் விடுமே) அவன் கண்ணுக்கு அப்படி தெரிந்திருக்கிறது.

என்னை பொருத்தவரை நல்லவன் என்றால் இதுவரை சந்தர்ப்பம் கிடைக்காத கெட்டவன் என்று வைத்து கொள்வோம்.கெட்டவன் என்றால் சந்தர்ப்பம் கிடைத்த நல்லவன் என்றும் சொல்லலாம். தர்மருக்கு ஒரு அப்படி வாய்ப்பு வருகிறது.பதினைந்தாவது நாள் போர்.துரோணரைக் கொன்றே ஆக வேண்டிய கட்டாயம்.பீமன் அசுவாத்தாமா என்று யானையை கொன்று விட்டு அசுவாத்தாமாவை கொன்று விட்டேன் என்று கத்துகிறான்.துரோணர் நம்பாமல் தர்மனிடம் கேட்ட அவன் பூடகமாக "பீமன் கொன்றது அசுவாத்தாமா.." என்று இடைவெளி விட்டு "என்ற யானையை.." என்று மெதுவாக சொல்கிறான்.அப்படி சொன்னது துரோணர் காதில் விழாமலிருக்க கிருஷ்ணர் சங்கெடுத்து ஊதுகிறார். துரோணர் ஆயுதங்களை கீழே போட,இதற்கென்றே பிறந்த துருபதனின் மகன் துரோணரை சாய்க்கிறான்.அது வரை நிலத்தில் படாமல் இரண்டு அங்குலம் மேலே ஓடிய தேர் நிலத்தில் இறங்கிறது.

தர்மனுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வேணுமா நீயும் பதிவு எழுது. நந்தாலாலா அருமை என்று சொல்லு.நான் ஒரு கேள்வி கேக்குறேனான்னு பாரு.அப்புறம் சொல்லு.  அப்படி தர்மருக்கு நல்லவனாக தெரிந்தவர்கள் எனக்கு நந்தலாலா பார்க்கும் போது ராமராஜன் தெரிந்தார். ஆணாதிக்கம் தெரிந்தால் என்ன அர்த்தம் என்று கேட்டால் அதை நான் சொல்லாமல் சாய்ஸில் விடுகிறேன். 

கிருஷ்ணனிடம் பதினைந்தாம் நாள் போருக்குப்பின் தர்மன் கோபப்படுகிறான்."என்னையும் இதற்கு உடந்தை ஆக்கி விட்டாயே என்று.." கிருஷ்ணன் சொல்கிறான் - "அப்படியென்றால் நீ சண்டைக்கே வந்திருக்கக்கூடாது..எனக்கு வெற்றியோ,தோல்வியோ முக்கியமில்லை.என்னால் துரியோதனன் இறந்தாலும் நீ அரியணை ஏறினாலும் எனக்கு பிரச்சனையில்லை.எனக்கு நான் எப்படி யுத்தத்தை எப்படி நடத்துகிறேன் என்பது தான் முக்கியம்.எனக்கு இதனால் ஒரு பலனும் இல்லாவிட்டாலும் நாளை யுத்தத்தில் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதற்கு நானே உதாரணமாகயிருப்பேன்.."

"ஏன் இப்படி செய்கிறாய்.."

"தர்மா..உனக்கு உன் தேர் தரையில் இறங்கியது தான் பிரச்சனை.இதனால் நீ நரகத்தைப் பார்த்து விட்டு வருவாய்..பிம்பம் உடைந்ததால் நீ வருந்துகிறாய்.பீஷ்மர் சாய்க்கப்பட்ட சமயம் நீ இப்படி கதறவில்லையே..எனக்கு பிம்பமே ஏற்படுத்தாமல் இருப்பதால் நான் நானாகவே இருக்கிறேன்.. பதினெழாம் நாள் கர்ணனை சாய்க்க வேண்டும்.நீ போய் தூங்கு.." என்று அர்ஜூனன் இருக்கிமிடத்திற்கு நகர்கிறான்.

"கிருஷ்ணன் என்ன சொன்னாலும் கேள்வியே கேட்காத அர்ஜூனனாகத் தான் உன்னிடமிருக்கிறேன். நீ தர்மனாக மாறி அப்படி செய் இப்படி செய் என்று சொல்லி எனக்குளிருக்கும் கிருஷ்ணனை எழுப்பாதே.." என்று சொல்லி விட்டு பகல் தூக்கத்தைத் தொடர்ந்தேன்.

7 comments:

Vikram said...

எனக்கு பிம்பமே ஏற்படுத்தாமல் இருப்பதால் நான் நானாகவே இருக்கிறேன்..- liked the lines very much. I like your series of posts involving mahaabaaratham.. the one true epic according to me.

P.S. I was waiting for your reply to my comment on your post "மச்சான் தயவிருந்தால்"...

இரும்புத்திரை said...

will reply today

துளசி கோபால் said...

ரசித்தேன்.

சங்கர் said...

சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்

இரும்புத்திரை said...

//கௌரவர்கள் விருப்பப்பட்ட பெண்களை பாண்டவர்கள் தட்டி சென்றமைக்கு இன்னொரு சான்று சாத்யகி - பூரிசிவரசு... இவர்களின் தந்தையர். துரோணர் மறைவு நிகழும் தருணத்தில் நிகழும் இன்னொரு அநியாய இழப்பு பூரிசிவரசு என்ற கௌரவ மன்னனின் மரணம்.//

இது பற்றி நீங்க சொல்லணும்னு ஆசைப்படுறேன் விக்ரம்.

Vikram said...

பூரிசிவரசு-
கண்ணனைப் பெறுவதற்காக அவதரித்தாள் தேவகி. அவளுடைய சுயம்வரத்தில் சௌமதத்தனுக்கும் சினிக்கும் பெரிய யுத்தம் நடந்தது. வாசுதேவனுக்காக சிநியானவன் சௌமதத்தனை ஜெயித்து தேவகியை தன தேரில் ஏற்றி வைத்து சென்றான். அன்று முதல் இந்த இரு குலங்களுக்கும் ஜென்ம விரோதம் ஏற்பட்டு விட்டது. சீனியின் பேரன் சாத்யகி. சௌமதத்தன் மகன் பூரிசிவரசு.
அபிமன்யுவின் மரணத்திற்குக் காரணமான ஜயத்ரதனை வாதம் செய்ய அர்ஜுனன் வியூகங்களை கடந்து செல்லுகையில் இந்த செய்தி சொல்லப் படுகிறது. சாத்யகி - பூரிசிவரசு சண்டையில் சாத்யகி பலவீனம் அடையும் பொழுது அவ்வழியே வந்த அர்ஜுனன் கிருஷ்ணனின் உந்துதலால் பூரிசிவரசுவின் மரணத்திற்குக் காரணமாகிறான்.

ஆயுதம் இன்றி இருக்கும் சாத்யகியை பூரிசிவரசு கத்தியால் வெட்டப் போக, அந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனனன் ஒரு பானத்தின் மூலம் கத்தியைப் பிடித்திருந்த கையை வெட்டுகிறான். அதர்ம வழியில் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டும் பூரிசிவரசுவிற்கு அபிமன்யு வதம், தான் எடுத்த சபதம் ஆகியனவற்றை காரணம் காட்டுகிறான் அர்ஜுனன்.

இதன் பிறகு, யுத்தத்திலிருந்து விலகி, யோகா நிலையில் அமர்ந்து பிரம்மத்தை தியானிக்கும் பூர்சிவரசுவின் தலையை சாத்யகி அறுத்துத் தள்ளி அவனை வதம் செய்தான்.

மூலம்- இராஜாஜி எழுதிய 'வியாசர் விருந்து'.

பி.கு. உங்கள் இடுகைகளில் நீங்கள் மகாபாரததிலிருந்து கையாளும் கருத்துகளின் மூலம் என்ன? எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'உப பாண்டவம்' நூலைப் படித்ததுண்டா??

Vikram said...

பூரிசிவரசு-
கண்ணனைப் பெறுவதற்காக அவதரித்தாள் தேவகி. அவளுடைய சுயம்வரத்தில் சௌமதத்தனுக்கும் சினிக்கும் பெரிய யுத்தம் நடந்தது. வாசுதேவனுக்காக சினி சௌமதத்தனை ஜெயித்து தேவகியை தன தேரில் ஏற்றி வைத்து சென்றான். அன்று முதல் இந்த இரு குலங்களுக்கும் ஜென்ம விரோதம் ஏற்பட்டு விட்டது. சினியின் பேரன் சாத்யகி. சௌமதத்தன் மகன் பூரிசிவரசு.
அபிமன்யுவின் மரணத்திற்குக் காரணமான ஜயத்ரதனை வாதம் செய்ய அர்ஜுனன் வியூகங்களை கடந்து செல்லுகையில் இந்த செய்தி சொல்லப் படுகிறது. சாத்யகி - பூரிசிவரசு சண்டையில் சாத்யகி பலவீனம் அடையும் பொழுது அவ்வழியே வந்த அர்ஜுனன் கிருஷ்ணனின் உந்துதலால் பூரிசிவரசுவின் மரணத்திற்குக் காரணமாகிறான்.
ஆயுதம் இன்றி இருக்கும் சாத்யகியை பூரிசிவரசு கத்தியால் வெட்டப் போக, அந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனனன் ஒரு பாணத்தின் மூலம் கத்தியைப் பிடித்திருந்த கையை வெட்டுகிறான். அதர்ம வழியில் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டும் பூரிசிவரசுவிற்கு அபிமன்யு வதம், தான் எடுத்த சபதம் ஆகியனவற்றை காரணம் காட்டுகிறான் அர்ஜுனன்.
இதன் பிறகு, யுத்தத்திலிருந்து விலகி, யோக நிலையில் அமர்ந்து பிரம்மத்தை தியானிக்கும் பூர்சிவரசுவின் தலையை சாத்யகி அறுத்துத் தள்ளி அவனை வதம் செய்தான்.

மூலம்- இராஜாஜி எழுதிய 'வியாசர் விருந்து'.

பி.கு. உங்கள் இடுகைகளில் நீங்கள் மகாபாரததிலிருந்து கையாளும் கருத்துகளின் மூலம் என்ன? எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'உப பாண்டவம்' நூலைப் படித்ததுண்டா??