பத்து வருடங்களுக்கு முன் பெப்சி உங்கள் சாய்சில் ஒரு நேயர் உமாவிடம் அவருடையக் குடும்பப்பாட்டை ஒளிப்பரப்பச் சொன்னார். அந்த பாடல் "பொன்மேனி உருகுதே". நண்பர் குழாம் பாட்டு முடியும் வரை நக்கல் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்படி ஒரு பாடல் "நாளை நமதே - அன்பு மலர்களே" மாதிரி குடும்பப் பாடல் நமக்கும் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். அது தான் நீங்கள் கேட்டவை படத்தில் வரும் - "பிள்ளை நிலா" பாடல்.
ஐந்து வயதில் என் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படிக்க மாட்டேன் என்று அடம் பிடித்ததால் நான் வள்ளியூரில் உள்ள பள்ளியில் தங்கி படித்தேன்.(விடுதி என்ற சிறையில்).சிரிப்பையே மறந்து விட்டிருந்த காலமது.
இப்படியே இருந்தால் நான் ஒரு குணா கமல் போல மாறி விடுவேன் என்று பயந்து என் அம்மாவும்,தம்பியும் வள்ளியூருக்கே வந்து விட்டார்கள்.
என் அப்பா அந்த சமயம் மும்பையில் இருந்தார். சொந்த ஊரில் இருந்த வீடு,நிலம் எல்லாம் விட்டு விட்டு ஆங்கிலத்தில் கல்வி கற்க விலாசம் இல்லாத நிலையில் இருந்தோம்.
வீடு எதுவும் கிடைக்காதக் காரணத்தால் மின்சார வசதியே இல்லாத வீட்டில் இருந்தோம். பாம்பு வந்து விடும் என்பதால் அம்மா இரவு முழுவதும் தூங்காமல் இருப்பார்.
"பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா" - இந்தப் பாடலைப் பார்க்கும் போதெல்லாம் என் பால்யம் தான் என் ஞாபகத்திற்கு வரும்.
ஒருமுறை நான் படித்த பள்ளி தீப்பற்றி எறிந்தப் போது சின்ன இடைவெளியில் எல்லா மாணவர்களும் உயிர்சேதம் இல்லாமல் தப்பினோம். (கூரையில் வெள்ளை பாஸ்பரஸ் போடப்பட்டது).
வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட போதும் நாங்கள் தப்பிக்க காரணம் படிக்க வைக்க வேண்டும் என்ற என் அம்மாவின் வைராக்கியமும், எங்களிடம் இருந்த வெறியும் தான்.
அப்படி பார்க்கும் போதெல்லாம் அந்த பாடலால் நான் வைராக்கியத்தாலும், வெறியாலும் நான் நிரப்பப்படுகிறேன்.
பாலு மகேந்திராவைப் பிடிக்க இது முதல் காரணம். நிஜவாழ்க்கைக்கு மிக அருகில் அவர் படம் பயணிக்கும். அதனால் தான் நல்ல சீடர்களை உருவாக்க முடிந்தது.(பாலா,வெற்றிமாறன்,நா.முத்துகுமார்,ராம்).
வீடு படத்தில் கடைசி வரை கட்டி முடியவே முடியாது அந்த வீட்டை.அந்த கட்டி முடிக்காத வீட்டை நிறைய நாள் கிரிக்கெட் விளையாடப் போகும் போது நான் பார்த்திருக்கிறேன் (தசரதபுரத்தில்).
ஞானிக்கு நீங்கள் கேட்டவை படம் பிடிக்கவில்லை என்று சமீபத்தில் சொல்லியிருந்தார். என்னை போல எதையுமே போராடி பெறுபவனுக்கு அந்த படம் மிகவும் பிடிக்கும்.
அப்படி ஒரு பாடலை தந்த பாலு மகேந்திராவிற்கு என் நன்றிகள்.
டிஸ்கி :
5,10,15,20௦ -௦ வயதுகளில் விதி என் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறது.
இருபத்தைந்தாவது வயதில் விதி என் ரூபத்தில் மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது. (நான் எழுதி தொல்லை கொடுக்கிறேன் என்பதால்).
Wednesday, August 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ரொம்ப உருக்கமா இருக்கப்பா! //ஞானிக்கு நீங்கள் கேட்டவை படம் பிடிக்கவில்லை என்று சமீபத்தில் சொல்லியிருந்தார். என்னை போல எதையுமே போராடி பெறுபவனுக்கு அந்த படம் மிகவும் பிடிக்கும்.
//
நீங்கள் கேட்டவை படம் முழுக்கவும் காமடியாக பார்க்கப் படவேண்டியது. இது மற்ற திரைப்படங்களை பகடி செய்யும் பதிவு. பகடி படத்தின் தலைப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது. Om Shanti Om, Scary Movie, Naked Gun போன்ற படங்களைப் போன்றதுதான் நீ.கே. ஏதாவது புரியுதா?
ரசிகர்கள் கேட்டதற்காகவே.." நீங்கள் கேட்டவை" யைக் கேமராக் கவிஞர் எடுத்ததாகக் கூறுவார்கள்.
உண்மை தான் தல ஆனா அந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
நன்றி டக்ளஸ்
பிள்ளைநிலாப் பாட்டு மிகவும் பிடிக்கும். படம் பார்த்ததில்லை.
அன்பான் அம்ம. இரு குழந்தைகள்.
சமயத்தில் தொண்டையை நெருடிக் கண்கலங்கவைக்கும் பாடல்.
அழகிய கண்ணே பாட்டைப் போல்.
தங்கை இருப்பவர்களுக்கு அந்த பாட்டு மிகவும் பொருத்தமாக இருக்கும்
அந்த சின்ன குழந்தை இப்போ பெரிய சைஸ் அஞ்சு
//இருபத்தைந்தாவது வயதில் விதி என் ரூபத்தில் மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது. (நான் எழுதி தொல்லை கொடுக்கிறேன் என்பதால்).\\
:))
நன்றி நாஞ்சில் நாதம்
//வீடு எதுவும் கிடைக்காதக் காரணத்தால் மின்சார வசதியே இல்லாத வீட்டில் இருந்தோம். பாம்பு வந்து விடும் என்பதால் அம்மா இரவு முழுவதும் தூங்காமல் இருப்பார்.//
//வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட போதும் நாங்கள் தப்பிக்க காரணம் படிக்க வைக்க வேண்டும் என்ற என் அம்மாவின் வைராக்கியமும், எங்களிடம் இருந்த வெறியும் தான்//
நெகிழ்ச்சியான பதிவு அரவிந்த்.
//ஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தால்.......//
//உங்களால்தானே உயிர் வளர்த்தேனே....//
எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.அந்த பாடலின் கலவையான காட்சிகளும் அழகாக இருக்கும்.
நன்றி துபாய் ராஜா
Post a Comment