Thursday, April 29, 2010

வானவில்லின் மங்காத நடு நிறத்தில் அமர்ந்த பட்டாம்பூச்சி

மூன்று பெண்களிருக்கும் வீட்டில் நடுவில் பிறந்தவளை காதலித்து இருக்கீர்களா.படிக்க முடியாமல்(பிடிக்காமல்) தூங்கிய ஒரு மழைநாள் அது. யாரோ எழுப்பியது போலிருந்தது.

"என்ன..தூங்கும் போது எழுப்பாதேன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டாயா.." அம்மாவாக இருக்கும் என்று கண்ணைத் திறக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

"வானவில் பார்க்க வருகிறாயா.." தம்பி நின்றுக் கொண்டிருந்தான்.

"அஞ்சு நிமிஷம்.." படிக்க எழுப்பினால் கூட இதே பதில் தான் வரும்.அந்த அளவிற்கு அது ரெடிமேட் பதிலாக மாறியிருந்தது.

கிராமத்தில் இருக்கும் போது அடிக்கடி வானவில் பார்த்திருக்கிறேன். சென்னை வந்தப்பின் பார்த்ததேயில்லை.பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற குறுகுறுப்பில் மூன்றாவது நிமிடம் மேலேயிருந்தேன்.நான் பார்க்கும் போது நடு நிறமான பச்சையைத் தவிர எல்லாம் மங்கியிருந்தது.வானவில்லை பார்க்காமல் எதிர் திசையில் திரும்பியிருந்தேன்.இரண்டு பெண்களுக்கு நடுவில் அவள் நின்றிருந்தாள். வான்வில்லின் எல்லா நிறத்திலும் அவள் பரிமளிப்பது போல் தெரிந்தது.கண் இமைக்காமல் திரை விழும் வரை அவளை பார்த்தேன். ஏதோ ஒரு கணத்தில் என்னை கவனித்தாள்.அவள் பார்த்த சமயம் இருந்த வானவில்லின் மங்காத முதல் நிறமாக நான் இருந்திருக்கலாம்.




மூன்று பெண்களில் வித்தியாசமாக அவள் இருந்தாள்.நிறம் குறைவாக,படிப்பு வராதவளாக,நன்றாக சமைப்பவளாக,பொறுப்புமிக்கவளாக,இன்னும் எது செய்தாலும் எனக்கு பிடிப்பவளாக பல்வேறு நோட்டமிடுதலில் மாறியிருந்தாள்.அவளிடம் கேட்டிருந்தால் அவள் காதலித்த மூத்த மகனின் குணாதியங்களைப் பட்டியல் இட்டிருப்பாள்.

நான் உருப்படவே மாட்டேன் என்று எல்லோரும் சொல்லி கொண்டிருந்த காலம். என்னை தவிர யாருக்கும் என் மேல் நம்பிக்கையில்லை.அவள் மட்டும் நம்புவது போல் தெரிந்தது.

இயற்கையாகவே அவள் அழகாயிருந்தாள்.சூரிய வெளிச்சத்தில் மின்னிய பொழுது,காற்றில் கலைந்த கேசத்தைச் சரி செய்த பொழுது,முகத்தில் இரைத்த நீரோடு, கேஸ் தீர்ந்த அடுப்படியில் சமைத்த நெருப்போடு இப்படி ஒவ்வொரு கணமும் கனன்று என்னுள் எரிய தொடங்கியிருந்தது.

அவளுக்கும் என்னை பிடித்திருந்தது போலிருந்தது பின்னாளில் பிரமையாக மாறும் என்று நான் நினைக்கவேயில்லை. எல்லாத் தேர்வையும் முடித்து விட்டு திரும்பிய நாளில் அவள் வீடு பூட்டிக் கிடந்தது. என்னை அவள் கண்கள் தேடியிருக்கலாம்.

மூன்று வருடங்களுக்குப் பின்..

பொழுது போகாமல் மொட்டை மாடியில் உலாத்த முடிவு செய்து போன போது தம்பியும் எதிர் வீட்ட்டுப் பெண்ணும் காற்றில் கிறுக்கிக் கொண்டிருந்தார்கள். மங்காத வானவில்லின் முதல் இரண்டு நிறமாக தெரிந்தார்கள்.

இன்னும் மூன்று வருடங்கள் கழித்து

ஒரு இரயில் பயணத்தின் போது மூன்று பெண்களிருந்த குடும்பத்தோடு பயணித்த போது வித்தியாசமான அழகோடு இருந்த நடுப்பெண்ணின் பெயர் சாரதா என்று தெரிந்து கொண்டேன்.

டிக் டிக் டிக் படத்தில் பெரிய கண்களோடு கமலை காதலித்த மாதவியின் பெயர் கூட சாரதா தான்.அட அதிலும் மூன்று பெண்கள்.இப்படி எல்லா இடத்தில் அவளை பொருத்திப் பார்த்துக் கொண்டேன்.வானவில்லை அதற்கு பின் பார்த்ததாக ஞாபகமில்லை.வானவில்லில் அமர பட்டாம்பூச்சியாய் திரிகிறேன்.

3 comments:

Anonymous said...

அரவிந்த் உங்களுக்கும் கொஞ்சம் எழுத வருகிறது என்று நினக்கிறேன்.

//அவள் பார்த்த சமயம் இருந்த வானவில்லின் மங்காத முதல் நிறமாக நான் இருந்திருக்கலாம்//

இப்படி வெகுகுறைவாகத்தான்
அதற்காக வாழ்த்துக்கள்
தொடருங்கள்...

பத்மா said...

நினைவுகள் நினைவுகள் .அவைதான் எத்தனை ஜாலம் செய்கின்றன .
அழகான புனைவு .

மதார் said...

@indra unga alavuku yarukume elutha varathuthan.