Thursday, May 27, 2010

அவழ் ஒளு லேவலை

நாலாயிரத்தி எழுநூற்றி சொச்சத்திற்கு வேலைக்கு சேர்ந்திருந்தேன்.சென்னையில் இருந்து நண்பர்கள் காறித் துப்பிக் கொண்டிருந்தார்கள்."என்ன ______க்குடா அங்க போன..எங்க கூட இருந்தா என்ன..அதை விட கூட முன்னூறு ரூபாய் வாங்குறோம்.." என்று ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் வறுத்து எடுத்தார்கள்.இதற்கு பயந்தே அவர்களுக்கு மெயில் கூட அனுப்புவதில்லை. சி.டி.எஸ் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளாமல் போனது இன்னும் கோபத்தைக் கிளறியிருந்தது.பட்டமளிப்பு விழாவில் கூட கலந்து கொள்ளாமல் இருந்து விட்டேன் என்னை விட திராபையானவர்கள் எல்லாம் நல்ல வேலையில் இருந்ததோடு மட்டுமில்லாமல் "நீ எவ்வளவுடா வாங்குற.." என்று எல்லார் முன்னால் கேட்டு வைப்பார்கள்.ஒரு காலத்தில் மதித்த சாதாமணிகள் கூட அலட்சியம் செய்வது போலிருக்கும்.இதெல்லாம் தேவையா.

நாற்பத்தி ஜந்து நாட்கள் வேலை பார்த்தால் அந்த நாலாயிரத்தி சொச்சத்தை கண்ணிலே பார்க்க முடியும்.அப்படி பார்த்தால் என் தினக்கூலி நூறு ரூபாய் தான்.தினமும் கிடைத்திருந்தால் பத்தாவது நாளில்அடுத்த வண்டி பிடித்து எங்காவது என்ன எங்காவது சென்னைக்கே ஓடி வந்து விடலாம் என்று விடாமல் தோன்றும்.தம்பி படித்து கொண்டிருந்தான்.நான் வாங்கும் சம்பளம் வீட்டிற்கு தேவையாகயிருந்தது.வெறுப்பின் விளிம்பில் இருந்த காலத்தில் தான் அவள் வந்தாள்.

தற்காலிகப் பணியாளர்களுக்கு எல்லாம் பயிற்சி தருகிறேன் என்று மூன்று நாட்கள் உயிரை வாங்குவார்கள்.நான் வழக்கம் போல கடைசி இருக்கை.அங்கு இருந்தால் தான் மொபைலில் விளையாட முடியும்.திடீரென ஏய்ஹோ ஒரு சத்தம்.ஒரு பையனை அவள் அடி வெளுத்துக் கொண்டிருந்தாள்.அவள் இடத்தில் உட்கார்ந்து விட்டானாம்.அவள் சண்டையிடும் பாணி மொபைலை விட சுவாரஸ்யமாகயிருந்தது.அவள் இருந்த இடம் என்ன செய்தாலும் மற்றவர்களுக்குத் தெரியும்.நான் கேம் விளையாடுவதைக் கவனித்திருக்கிறாள்.அடுத்த நாள் நான் இருந்த இடத்தைப் பிடித்திருந்தாள்.நான் போனவுடன் "உட்காருகிறாயா.." என்று கேட்டாலும் அவளுக்கு விட மனமில்லை."ம்..ம்.." தலையாட்டிய எனக்கு நேற்று அடி வாங்கிய பையனின் முகம் ஞாபகம் வந்து சிரித்து விட்டேன்.காரணம் தெரிந்தவுடன் இருவருக்குமிடையில் ஒரு நட்பு இருந்தது.

மெயில் அனுப்பி கொண்டேயிருப்பாள்.எல்லாம் பார்வேர்ட் மெயிலாகத்தானிருக்கும்.முதலில் நானும்,அடுத்து அவளும் நிரந்தரப் பணியாளர்களாக சேர்ந்திருந்தோம்.அவள் பீருடன் வோட்காவும் அது இல்லாத பட்சத்தில் பீரையோ வோட்காவையோ அடிப்பவளாக மாறியிருந்தாள்.அதுவும் அவள் மேல் ஈர்ப்பு மட்டுமில்லாமல் பயமும் வர காரணமாயிருந்தது.வாங்கி கொடுத்தே எனக்கு மாளாதே என்று நினைத்து கொண்டேன்.ஆறு மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியிருந்தேன்.அருள் படம் ஓடிக் கொண்டிருந்தது.ஜோதிகாவும் விக்ரமும் பிரியாணி கணக்குப் போட்டுப் பார்ப்பார்கள்.வடிவேலு அதை கட்டிக்கப் போறவன் தானே பீல் பண்ணனும் இவன் ஏன் பண்றான் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.நான் மட்டும் சிரித்துக் கொண்டிருந்தேன்.தம்பி நினைத்திருப்பான்."இங்கு இருக்கும் போது நல்லாத்தானே இருந்தான்..".அம்மாவிற்கு மட்டும் வீட்டிற்கு வந்தால் தான் உனக்கு சிரிக்கவே தெரிகிறது என்று சந்தோஷம்.அம்மாகளுக்கு மட்டும் எப்பவுமே குழந்தைகள் தான்.

அவள் மேல் ஈர்ப்பு ஏற்பட அது மட்டும் காரணமாக இருக்காது என்று உள்மனது அடிக்கடி சொல்ல எதையோ எங்கோ கிண்டிக் கிளறி அவள் பிறந்த தேதியைக் கண்டுப்பிடித்திருந்தோம்.என்னை விட கொஞ்சம் பெரியவள்.அதெல்லாம் அப்போது தெரியவில்லை. இந்த விஷயத்தில் சச்சினோடு மகேஷ் பாபுவையும் சேர்த்துக் கொண்டது.ஆணிகள் - சின்னது,பெரியது என்று வித்தியாசமில்லாமல் பிடுங்க வைத்தார்கள்.நேரமின்மை,எரிச்சம்,கோபம் எல்லாம் சேர்த்து அவளை மறக்கடித்திருந்தன.ஏதோ ஒரு மழை நாளில் அவளிடம் பேசிக் கொண்டிருந்த சமயம் ஏதேச்சையாக அவள் ஆடையை சரி செய்ய நம்மை போய் தப்பாக நினைத்து விட்டாளே என்று கோபத்தில் பேசுவதேயில்லை.கல்லூரி கால வீராப்புகளும் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.காதல் எங்கே இருக்கிறது மனதிலா இல்லை வேறு எங்குமா என்று கேட்டு கேட்டே காதலித்தவனை எல்லாம் சாகடித்த காலம். அப்படியிருந்தவன் இப்படி ஆகி விட்டானே என்று மன்சாட்சி எல்லாம் தனியாக பிரிந்து கேள்வி கேட்காத வரை தப்பித்தேன்.

எங்காவது பார்த்தால் காற்றில் பெரிதாக கை ஆட்டுவாள். அப்போதெல்லாம் நீர்க்குமிழி போல வைராக்கியங்கள் எல்லாம் பட்பட்டென உடையும்.கடைசி வைராக்கியம் உடைவதற்குள் அவள் பார்வையில் இருந்து மறைந்திருப்பேன்.அவளிடன் பேசுவதற்கு பின்னாடியே அலைந்து கொண்டிருந்த ஒருவன் அவளுடன் இருக்கும் போது அதை போல காற்றில் ஏதோ வரைய என் முதுகே புண்ணாகி விடும் அளவிற்கு முறைத்தான்.ரொம்ப நாள் கழித்து ஒரு பேரூந்தில் தான் அவளை பார்த்தேன்.

உடனே ஆயிரம் வயலின்,கிதார் கொண்டு வாசித்தது போல "தேவதை தேவதை தேவதை..அவள் ஒரு தேவதை.." என்று பிண்ணனியில் பாடல்கள் கேட்பது போல ஒரு பிரமையிருந்தது.ஒரு வில்லன் வரும் வரை.எந்த நேரத்தில் காதல் கொண்டேன் பாடல் ஒலித்ததோ அவன் வந்தவுடன் இருவரும் அந்த படத்தில் வருவது போல இயர்போன்களை ஆளுக்கொன்றாக மாற்றிக் கொண்டு கேட்க ஆரம்பித்தார்கள்.பிண்ணனியில் இசைத்த ஆயிரம் வயனின்,கிதார் இழைகளும் ஒன்றாக அறுந்து பாடலே மாறி விட்டது."அவழ் ஒளு லேவலை.." இப்படி கேட்க ஆரம்பித்து விட்டது.நல்லவேளை "அவள் தேவையில்லை.." என்று கேட்பதற்குள் வயலின் வாசித்தவர்களை எல்லாம் துரத்தி விட்டேன்.

எப்போது பார்த்தாலும் அவள் அப்படியே இருக்கிறாள்.காற்றில் படம் வரைகிறாள்.வோட்காவோடு பீர் கலந்து அடிக்கிறாள்,மேக்கப் எட்டு கோட்டிங் அடிக்கிறாள்.அடுத்த வேலை கிடைத்ததும் அவளிடம் சொன்னேன்.ஏதோ அவளுக்கே கிடைத்தது போல் ஒரு சந்தோஷம்.

ஊருக்கு வரும் முன் சேனலை மாற்றி கொண்டேயிருந்தேன்.சிவசந்திரன் ஸ்ரீபிரியாவிற்காக பாடிக் கொண்டிருந்தார்.

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்..

திரும்பவும் அடுத்த வேலை,ஆரம்பகால எண்ணிக்கை போல ஏதோ ஒரு சம்பளம்,நண்பர்கள்,திட்டு,தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்று தெரியாத வேலை,தம்பி,அம்மா,இன்னொரு அவள்,ஆணி,வயலின்,அறுந்த இழை,தேவதை,புனைவு,புண்ணாக்கு,ப்ளாக்,பிராடு பட்டம் என்று போகும்.

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்..

14 comments:

இரும்புத்திரை said...

தமிழ்மணத்தில் யாராவது சேர்த்து விடவும் .அப்பட்த்தான் என்னை நட்சத்திரம் ஆக்குவார்களாம்.

Unknown said...

செஞ்சாச்சி.. விரைவில் நட்சத்திரம் ஆக வாழ்த்துகள்

எம்.எம்.அப்துல்லா said...

class

அகல்விளக்கு said...

ரொம்ப நாளாக ஆளக் காணோம் தல..
:-(

அ.முத்து பிரகாஷ் said...

தொடரும் என்ற நம்பிக்கயை என்னுள் விதைக்கிறது உங்கள் வார்த்தைகள் ...
நீங்கள் இரும்புத் திரை அல்ல தோழர்...
கரும்புத் திரை!

பத்மா said...

நல்ல புலம்பல்

மதன் said...

Best of luck.
If you write like this you will be a star. I like your writing with lot of humour and reality.

மதன் said...

உங்க தேவதை எங்கெ.

அத்திரி said...

அன்பு உடன்பிறப்பே இவ்ளோ நாளும் நிமதியாக இருந்தேன் உன் பதிவை பார்க்காமல்........எப்போது சென்னை வருகிறாய்??

துரோகி said...

one of the fab from you, வாழ்த்துகள் "அவழ்" இல்ல "அவள்" !

Paleo God said...

ழூப்பழ்..:-)

cheena (சீனா) said...

அவள் ஒரு தேவதையா - ம்ம்ம்ம் - நல்லாத்தான் இருக்கு - அரவிந்த் - ஆமா நீயும் ராஜூவும் மதுரையில் இருக்கீங்கன்னு ஒரு குருவி சொல்லுது - உண்மையா

நல்வாழ்த்துகல் அரவிந்த்
நட்புடன் சீனா

Unknown said...

ஒரு கதை என்றும் முடியலாம்..
முடிவிலும் ஒன்று தொடரலாம்...

இனியெல்லாம் ..... சுகமே ...

க ரா said...

என்னங்க ரொம்ப நாளா ஆளக் கானோம். நெரயை எழுதுங்க.