Sunday, April 24, 2011

உலூபியின் நாகமணியும்,காதலும்

அரக்கு மாளிகையில் தங்க செல்லும் பாண்டவர்களை விதுரர் வழியனுப்பி வைக்கிறார். "வயலில் தீப்பிடித்தால் எலிகள் வளையில் பதுங்கி விடும் என்று பூடகமாக சொல்கிறார். அவர் சொன்னபடியே சுரங்கம் வழியாக பாண்டவர்கள் தப்பிச் செல்கிறார்கள். இடும்ப வனத்தில் தங்குகிறார்கள். இடும்பன் தூங்கும் பாண்டவர்களைப் பார்த்து தங்கையிடம் அவர்களை கொன்று சமைத்து வைக்க சொல்கிறான். இடும்பியோ பீமன் மீது காதல் கொள்கிறாள். இடும்பனை வென்று இடும்பியின் காதலை ஏற்கிறான். குழந்தைப் பிறக்கும் வரை உன்னுடனே இருக்கிறேன்.அப்புறம் பிரிந்து விடுவேன் என்று சொல்லி இடும்பியோடு செல்கிறான்.கடோத்கஜன் பிறந்ததும் பாண்டவர்களுடன் சேர்ந்து கொள்கிறான். கடோத்கஜன் பிறந்ததும் பெரிதாக வளர்ந்து விடுகிறான். என்னால் உங்களுடன் இருக்க முடியாது. நீங்கள் என்னை நினைத்தால் எங்கு இருந்தாலும் வருவேன் என்று சொல்லி மறைகிறான்.

பாண்டவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொல்கிறார்கள். திரௌபதியை ஜெயித்து குந்தியிடன் அழைத்து செல்ல உணவு என்று நினைத்து ஐவரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்று குந்தி சொல்ல ஐவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்திரபிரஸ்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். திரௌபதியுடன் ஆளுக்கு ஒரு வருடம் வாழ்கிறார்கள். அந்த சமயத்தில் வேறு யாராவது அந்தபுரத்தில் நுழைந்தால் அவர்கள் ஒரு வருடம் வனவாசம் போய் விட வேண்டும் என்ற நிபந்தனையோடு .தர்மரோடு திரௌபதி வாழ்ந்து வரும் போது ஒரு அந்தணன் அர்ஜுனனிடம் உதவிக் கேட்டு வர ஆயுதம் எடுக்க அந்தபுரம் வழியாக போக வேண்டும். உதவி செய்ய நிபந்தனையை அர்ஜூனன் மீற வனவாசம் செல்கிறான்.

காட்டில் தவமிருக்கும் நேரத்தில் பலராமன் சுபத்ரையைத் தன்னுடைய சிஷ்யனான துரியோதனனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ய அர்ஜூனன் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறான். கிருஷ்ணன் உதவியோடு முனிவர் வேஷத்தில் போய் சுபத்திரையைத் திருமணம் செய்கிறான். அபிமன்யூ பிறக்கும் முன் வனவாசத்தை முடிக்காதது நினைவுக்கு வர கிருஷ்ணனிடம் சொல்லி விட்டு தேசாந்திரம் செல்கிறான்.மணிப்பூருக்கு செல்லும் போது சித்ராங்கதையுடன் காதல். வாரிசு பிறந்தால் அர்ஜூனன் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று சொல்லி திருமணத்திற்கு நடக்கிறது. பப்ருவாகணன் பிறக்கும் முன் அவளை பிரிந்து தவம் செய்து விட்டு களைப்பில் தடாகத்தில் நீர் அருந்தும் போது மயங்கி விழ முழித்து பார்த்தால் மெத்தையில் உறங்கிக் கொண்டு இருக்கிறான். எதிரே அழகான பெண் வேறு. நாக கன்னிகை உலூபி காதலைச் சொல்ல அர்ஜூனன் ஏற்க மறுக்கிறான். இறந்து விடுவேன் என்று உலோபி சொல்ல அர்ஜூனன் சம்மதம் சொல்கிறான்.அரவான் பிறக்கும் முன் அங்கிருந்து கிளம்புகிறான். நீர் நிலையிருக்குமிடத்தில் யாருடன் சண்டையிட்டாலும் உனக்கு தோல்வி கிடையாது என்று வாழ்த்தி அனுப்புகிறாள் உலூபி.

பாண்டவர்கள் சூதாடி விட்டு தோற்று வனவாசம் செல்கிறார்கள். அபிமன்யூவும்,சுபத்ரையும் விதுரர் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறார்கள். ரேவதி - பலராமர் மகள் வத்சலா அபிமன்யூ மீது காதல். பலராமர் துரியோதனின் மகன் லட்சுமனுக்கு வத்சலாவைத் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்ய கிருஷ்ணன் அபிமன்யூவிற்கு கொடுப்பது என்ற வாக்கைக் காப்பாற்றுவது தான் சரி என்று சொல்ல பலராமனோ அப்போது பாண்டவர்கள் அரசர்கள் இன்று அபிமன்யூ விதுரர் பாதுகாப்பில் இருக்கிறான் என்று மறுத்து விடுகிறான்.

பபாண்டவர்கள் அந்த சமயத்தில் விடார தேசத்தில் பதுங்கி இருக்கிறார்கள்.வெளிப்பட்டால் திரும்ப வனவாசம் போக வேண்டும். அபிமன்யூ வத்சலாவைத் திருமணம் செய்ய சுபத்ரையோடு கிளம்புகிறான். கடோத்கஜன் இருக்குமிடத்தைத் தாண்டி தான் போக வேண்டும். கடக்கும் போது இருவருக்கும் சண்டை வர அபிம்ன்யூவைக் கடோத்கஜன் கொன்று விடுகிறான்.தேவதைகளின் வரத்தால் உயிர் பெறும் அபிமன்யூ கடோத்கஜனைக் கொன்று விடுகிறான். உலூபி நாகமணியால் கடோத்கஜனுக்கு உயிர் தந்து இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறாள். துரியோதனன் பின்னாளில் போர் வந்தால் யாதவர் சேனை நமக்காக சண்டையிடும் என்று திருமணத்திற்கு சம்மதிக்கிறான்.கடோத்கஜன் மற்றும் அவனது படையினர் மணமகன் வீட்டார்களாக மாறி அவர்கள் அசந்திருக்கும் நேரத்தில் வத்சலாவைக் கடத்தி அபிமன்யூவிர்கு திருமணம் செய்து வைக்கிறான். கோபப்படும் பலராமனை கிருஷ்ணன் சமாதானனப்படுத்துகிறான்.

பாண்டவர்கள் கண்டுப் பிடிக்க முடியாத சோகம், கல்யாணம் நின்று போனது என்று பழ கவலையில் இருக்கும் துரியன் எப்படியும் போர் நடக்கும் என்று ஊகித்து படைத் திரட்ட அவன் மகளான லட்சுமனைக்கு சுயம்வரம் வைக்கிறான். அவளுக்கோ கிருஷ்ணன் மகன் சாம்பன் மீது காதல். சுயம்வரத்தில் தனியாளாக நின்று பெண்ணைக் கடத்தி கொண்டு வரும் சாம்பனை கௌரவப் படை சுற்றி வளைத்து தாக்க தனியனாக எல்லோரையும் சமாளிக்கிறான்.பீஷ்மர்,கர்ணன்,துரோணர் களமிறங்கிய பின்னே சிறைப் பிடிக்கப் படுகிறான். பலராமன் நம் நட்பை இப்படி செய்து கெடுக்காதே என்று ஆயுதத்தை எடுக்க அஸ்தினாபுரம் ஒரு ஆட்டம் ஆடி அடங்கியதாம். துரியனும் ஒன்றும் சொல்ல முடியாமல் சாம்பனை விடுதலை செய்கிறான்.

சமாதானமாக போகலாம் என்று பாண்டவர்கள் கிருஷ்ணனை தூது அனுப்ப தூது வந்தவனையே சிறைப் பிடித்து சண்டை தான் என்று சொல்லாமல் சொல்லி அனுப்புகிறான் துரியன். போருக்கு முன்னதாக சாமுத்திரிகா லட்சணமுடைய ஒருவனை பலி கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று சகாதேவன் கணித்து சொல்கிறான். பாண்டவர்கள் தரப்பில் எல்லா லட்சணமும் உடையவர்கள் இரண்டே பேர் தான். அர்ஜூனன் மற்றும் கிருஷ்ணன். அல்லியின் மகனைக் கேட்க முடியாது. பப்ருவாகணன் நினைவுக்கே வரவில்லை. உலூபி தான் நினைவுக்கு வருகிறாள். அரவானைக் கேட்டு அர்ஜூனன் செல்கிறான். உலூபியால் மறுக்க முடியவில்லை.

அரவானை பலியிட போகும் போது நான் இன்னும் திருமணமே செய்யவில்லை. ஒருநாள் ஒரு பெண்ணுடன் இருந்து விட்டு நாளை பலி கொடுக்கலாமே என்று அரவான் சொல்ல எந்த பெண் வேண்டும் என்று கிருஷ்ணன் கேட்க என் அப்பா மனைவியோடு இருந்ததை விட உன்னோடு தான் அதிகம் இருக்கிறார்.நீயென்ன அப்படி விசேஷம்.நானும் உன்னோடு தான் இருக்க வேண்டும் என்று அரவான் சொல்கிறான். கடைசி ஆசையை மறுக்க முடியாமல் கிருஷ்ணன் பெண்ணாக மாற திருமணம் முடிந்து காலையில் அரவானைப் பலியிட்டதும் கிருஷ்ணன் தாலியை அறுத்துக் கொண்டு மாரில் அடித்துக் கொண்டு கதறி அழுகிறான். உலூபி நாகமணியைத் தவற விடுகிறாள். சூரியன் இன்னும் எத்தனை பேர்களை இவர்கள் இருவரும் கொல்லப் போகிறார்களோ என்று நினைத்துக் கொண்டே மங்கிப் போகிறான்.

(தொடரும்.. சற்றே பெரிய சிறுகதை..)

1 comments:

வெள்ளிநிலா said...

be honest., i have no time to read short stories aravind!