Saturday, February 26, 2011

மாய யதார்த்த புனைவு

சின்ன வயசுல நிறைய தடவை அப்பாகிட்ட அடி வாங்கியிருக்கிறேன். நல்லா விவரம் தெரிஞ்சு அடி வாங்கினதுன்னா காலேஜ் ரெண்டாவது வருஷம் படிக்கும் போதுன்னு நினைக்கிறேன். அதுக்கு காரணம் பாலகுமாரன் என்று இன்னைக்கு நினைக்கும் போது சிரிப்பு வருது. என் வாழ்வின் சிக்கலான கட்டத்தைக் கடந்து கொண்டிருந்தேன்.சரியா சாப்பாடு இல்ல.சரியா தூக்கம் இல்ல.வீட்ல பேசுறது இல்ல.சிரிக்கிறது இல்ல. சரியா சாப்பிடாம இருந்ததால அடிக்கடி வயிற்று வலி வேற. இனி என் குடும்பத்துல எவனும் இன்ஜினியரிங் படிக்கக் கூடாதுன்னு நினைச்சிக்கிட்டேன். அப்போ தான் அந்த பாலகுமாரன் நாவல் படிக்க கிடைச்சுது.கதையில வர்ற கதையின் நாயகியையும் அவள் அக்காவையும் என்னால் ரொம்ப நாளைக்கு மறக்க முடியல. அக்கா வாயிற்று வழியால் துடிச்சி கேன்சர் வந்து செத்து போவா. எனக்கும் அப்படி ஏதாவது இருக்குமோன்னு நேர்ல சொல்ல முடியாம அம்மா நான் செத்துருவேன்னு பயமாயிருக்கு.என்ன நடந்தாலும் என்னை காப்பாத்திருங்கன்னு எங்கையோ ஒரு பப்ளிக் பூத்ல இருந்து போன் பண்ணி சொல்லிட்டேன்.

வீட்டுக்கு போனா வரவேற்க என் குடும்பமே இருக்கு.யாரும் எதுவும் பேசல.அப்பா வந்து பளார்னு ஒரு அறையை விட்டுட்டு ஒண்ணுமே பேசாம போயிட்டார். அடுத்த நாள் எண்டோஸ்கோப்பி.இதுக்கு கேன்சரே பராவயில்லன்னு நினைச்சிக்கிட்டேன். டாக்டர் அப்பா கிட்ட நீங்க வேணா வெளிய இருங்க.நான் உங்க பையன் கிட்ட தனியா பேசணும்னு ஒரே அடம் பிடிச்சார். நான் தான் அவர் இருக்கட்டும் நீங்க கேளுங்க.சிகரெட்,தண்ணி பழக்கம் உண்டான்னு கேட்டார். இல்ல நானும் வேற எதோ கேக்கப் போறீங்கன்னு பயந்துட்டேன்னு சிரிச்சேன். அது ஆரம்ப நிலையில் இருக்கிற அல்சர்னு தெரிஞ்சது.

மியூசிக் அகடமிக்கு எதிர்ல நின்னுக்கிட்டு இருந்தோம்.அப்பா பெதுவா சொன்னார்."நீ மாய யதார்த்த உலகத்துல வாழாத..அது எங்களுக்கு நல்லதில்லை." புரியாத மாதிரி பாத்தேன். "பாலகுமரான் நாவல் எல்லாமே மாய யதார்த்த புனைவு தான்..எல்லோருக்கும் அது யதார்த்தமா தெரியும்.ஆனா அது மாயாஜாலம்..எவனாவது ஒருத்தனுக்கு தான் நடக்கும்..அந்த ஒருத்தன் நீயில்ல.." என்று சொல்லிட்டு புரிஞ்சுதா என்று கேட்டார்.தலையைக் குறுக்கு வெட்டாக வெட்டினேன். "கதையில அக்காவுக்கு கேன்சர்..உனக்கு வந்துருமோன்னு பயப்படுற..தங்கை என்ன பண்ணினா இந்த பாசம்,பந்தம் எல்லாம் தவிர்க்க லீவிங் டூகெதர் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறா. அப்படி வாழ முடிவு எடுத்திட்டு முதல் முதலா தனியறையில் பாக்கும் போது தாயம் விளையாடுறாங்க.. உனக்கு அதுவும் நடக்காது.இதுவும் நடக்காது.இது தான் மாய யதார்த்தம்" சொல்லிட்டு புரியுதான்னு அவர் கேக்கல.நானும் புரிஞ்சதுன்னு சொல்லல.அப்புறம் ரெண்டு பெரும் ஒண்ணுமே பேசிக்கல.அது தான் பாலகுமாரனை கடைசியா படிச்சது.

2004 செல்லமே ரீலிசாகியிருந்த நேரம்.முதல் நாள் முதல் ஷோ. விஷாலும்,ரீமா சென்னும் மும்பை போகும் முன்னாடி செஸ் ஆடுவார்கள். அப்பா சொன்னது காதுல கேட்டுது."இது மாய யதார்த்த புனைவு.. உனக்கெல்லாம் நடக்காது..". நான் பலமா சிரிச்சிட்டேன். எவ்வளவு சீரியஸா பேசுறாங்க இந்த பக்கி மட்டும் பல்லைக் காட்டுதுன்னு ரெண்டு ரோ என்னை திரும்பி பாக்குது. மாய யதார்த்த புனைவின் நீட்சியா தம்பி விஸ்காம் சேர்ந்திருந்தான்.எல்லா திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையில் ஏதாவது ஒரு தியேட்டர் வாசலில் நின்றுக் கொண்டிருப்பான்.

1 comments:

ப.கந்தசாமி said...

நல்ல புத்திமதி. உங்கள் அப்பா வாழ்க.