Saturday, September 25, 2010

காமினியீயீயீயீ (சவால் சிறுகதை)

பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி மைதானத்தில் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தோம். எதிரணியினர் இரண்டு கோல் போட்டு விட்டதால் பந்தை அவர்களுக்குள்ளே கடத்தி எங்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்ச தூரத்தில் பெண்கள் ஹாக்கி விளையாடுவதை நிறுத்தி விட்டு ஏதோ சொல்லி சிரித்து கொண்டிருந்தார்கள்.பெட் மேட்ச் முடிந்ததும் காசு எண்ணிக் கொடுக்கும் போது வந்த எரிச்சலில் கோல் கீப்பிங் செய்தவனிடம் போய் எகிறிக் கொண்டிருந்தேன்.

"என்ன _யித்துக்கு விளையாட வந்த..பொண்ணுங்கள வேடிக்கை பார்க்கணும்னா அவளுங்க கூட விளையாட வேண்டியது தானே..ரெண்டு கோல் உன்னால தாண்டா போச்சு.."

"ஏலே என்ன வாய் ரொம்பத்தான் கிழியுது..சிவா சொந்தகாரன்னு பாக்குறேன்..அடிச்சி மூஞ்சத் திருப்பிருவேன்.."

"திருப்பலாம்..பெட் காசைத் தந்துட்டு திருப்பு.." என்று காசு கேட்டு அவன் வாயை அடைத்தேன்.ஹாக்கி விளையாடும் பெண்கள் கூட்டம் எங்களைத் தாண்டி போனதால் இந்த சண்டை நிற்க இன்னொரு காரணமாக இருக்கலாம்.

"என்ன காசு போச்சா..எங்க கூட விளையாடினாலே தோத்துருவீங்க..அது டிஸ்ரிக்ட் சேம்பியன் டீம் அவங்க கூட ஆடினா ஜெயிக்க முடியுமா.." கூட்டத்தில் மறைந்திருந்தவர்களில் ஒருவள் சத்தம் மட்டும் கேட்டது.

"ரொம்ப பேசாதீங்கடி..முடிஞ்சா எங்க கூட விளையாடிட்டு அப்புறம் பேசுங்க.." கோல்கீப்பர் பரந்தாமன் திருவாய் மலர்ந்திருந்தான்.

"எவ்வளவு பெட்.." கோரஸாக சத்தம் வந்தது.

"எவ்ளோ வைக்கலாம்..அம்பது ரூபா" பரந்தாமன் குரல் எனக்கு கிணற்றில் இருந்து ஒலிப்பது போலிருந்தது.

"பரந்தாமா விளையாடாத..என் கிட்ட அம்பது ரூபா தானிருக்கு..அப்புறம் சிக்கன் பக்கோடா சாப்பிட முடியாது.." என்னால் முடிந்த மட்டும் சொல்லிப் பார்த்தேன்.விதி வலியது.

சரி விளையாடலாம் என்று தயாரான போது எனக்கு சாதகமாக அவர்கள் அணியில் பத்து பேர் தானிருந்தார்கள்.இதை வைத்தே குட்டையைக் குழப்ப முடிவு செய்து "அதெல்லாம் சரி வராது.." என்று சொல்லவும் காமினி வரவும் சரியாக இருந்தது.

"சரி காமினி எங்க டீம்..இப்போ விளையாடுவோமோ.." என்று சொல்லி முடிக்கும் அதெல்லாம் முடியாது என்று என் மிச்சமிருக்கும் ரூபாயைக் காப்பாத்துவதிலே நான் குறியாய் இருந்தேன்.காரணம் காமினியை எனக்கு ஏற்கனவே தெரியும்.சிவா இருக்கும் தெருவில் தான் காமினி வீடு.காமினி விளையாடினால் நிச்சயம் நாங்கள் தோற்றுப் போவோம் என்று தெரிந்த காரணத்தால் நான் கூடுதலாக மறுத்தேன்.

"அப்ப தோத்தாங்களின்னு ஒத்துக்கோங்க..விளையாட வேண்டாம்.." அடுத்த கோரஸ்.

காமினி அந்த டீமில் ஆட சிவா கோல் கீப்பராக இருந்தான்.அப்படியும் காமினி ஒரு கோல் அடித்து விட ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் அவர்கள் முண்ணனியில் இருந்தார்கள்.ஆக்ரோசமாக ஆட முடிவு செய்யும் போது மழை லேசாகத் தூற ஆரம்பித்திருந்தது. ஜெயிக்க வேண்டும் என்ற வெறி தான் பிரதானமாக இருந்தது.சாதாரண போட்டிகளில் அனுமதியில்லாத ஸ்கூப் ஸாட்டை அடித்தேன்.பந்தில் இருந்த பிசிறு காமினியின் புருவத்தைக் கிழித்து விட்டது.எல்லார் கவனமும் அங்கே திரும்ப நாங்கள் கோல் அடித்திருந்தோம்.

"ஏய் இது தப்பாட்டம்..இப்படி எல்லாமா ஆடுவீங்க.." கோரஸ் இல்லாமல் தெளிவாக ஒருத்தியின் குரல் கேட்டது.

"அடி எதுவும் படாம இருக்க பல்லாங்குழி தான் ஆடணும்.." பரந்தாமன் கத்தி சொன்னான்.எனக்கும் சிவாவுக்கும் கைகால் உதற ஆரம்பித்தது.சிவாவை நினைத்தால் தான் பாவமாக இருந்தது. எனக்கு பாளையங்கோட்டையில் தங்க நிறைய வீடு இருந்தது.

"டேய் ஆச்சி வீட்டுக்கு போயிரலாம்..கேட்டா நாளைக்கு வர்றோம்னு சொன்னா அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.." அவனுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

கோச் வந்து காமினியைப் பார்த்து விட்டு "யார் செய்தது.." என்று சத்தம் போட ஆரம்பித்தார்.

"இதோ இவன் தான்.." என்று கோரஸ் குரலோடு கைகளும் சேர்ந்திருந்தது.

"யார் நீ..உன்ன பார்த்தேயில்லையே.."

"அமர்..சித்தப்பா பையன்..சென்னையில் ஐ.சி.எப் டீம்ல சப்ஸ்டிடூட்டா இருக்கான்.." என்று சிவா சொல்ல இதை எல்லாமா சொல்வ என்று அவனை முறைத்தேன்.பெண்கள் பக்கமிருந்து சிரிப்பு சத்தம் கேட்டது.

"சிவா..இன்னும் ஒரு வாரத்துக்கு கோச்சிங் வர வேண்டாம்..அதான் உனக்கு பனிஷ்மெண்ட்..தம்பி அமர் ஐ.சி.எப் டீம் தான் உனக்கு லாயக்கு..இங்க விளையாட வராதே.." என்று சொல்லும் போது ஒரு குரலில் நக்கல் தெரிந்தது.

"நீ இல்லாம அவங்க ஜெயிச்சிருவாங்களா..வாடா போகலாம்.." சிவாவை சமாதானப்படுத்தி கொண்டிருந்தேன்.

"டேய் நீ எப்போ ஊருக்கு போவ..இப்படித்தான் டைப்பிங் கிளாஸ்ல எனக்கு வேட்டு வைச்சே..அந்த ஏரியா பக்கமே தலை வைக்க முடியல.." சிவா அலுத்து கொண்டான்.

நன்றாக இருட்டியப்பின் வேர்கடலை வாங்கி சாப்பிட்டு விட்டு நிலவரத்தைத் தெரிந்து கொள்ள வீட்டிற்கு போகாமல் காமினி வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த காமினியின் தம்பிக்கு பபிள்கம் வாங்கி தந்து

"என்ன வீட்ல செம திட்டா..இப்போ பரவாயில்லையா..போய் நாங்க வந்திருக்கோம்னு சொல்றியா.."

"அப்பா கிட்ட சொல்லட்டுமா.."

"அப்ப பபிள்கம்மைக் கொடு.." சிவா பிடுங்க போக அவன் உள்ளே போய் காமினியை அழைத்து வருவதாக போய் விட்டான்.

நேரமாகி கொண்டேயிருந்தது.வேர்கடலையும் முடிந்திருந்தது.பொழுது போகாமல் அந்த பேப்பரில் இருந்ததை படிக்க ஆரம்பித்தேன்.

"டேய் அமர்..இருட்டுல படிக்காதே..கண்ணு போயிரும்.." சிவா சொல்ல சொல்ல படித்து கொண்டிருந்தேன்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

"சிவா இப்போ அவங்க அப்பா போனதும் பேண்ட்டேஜ் எல்லாம் கழட்டிட்டு ஜன்னல் வழியா காமினி வரப் போறது நடக்க போவுது பாரேன்.." சொன்னவுடன் முறைக்க ஆரம்பித்தான்.

சிவாவை பொருட்படுத்தாமல் மேலே படிக்க ஆரம்பித்தேன்.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"அடப்பாவி சிவா..இந்த கதையிலையும் நீதான் வில்லனா.." என்று நான் சொல்லவும்

"டேய் சும்மாயிரு செஞ்சது எல்லாம் நீ..அப்புறம் என்ன.."

"நான் சொல்லலை..கதையிலே போட்டு இருக்கு.."

"எங்க காட்டு.." என்று குடுத்ததும் அதை படிக்காமலே கிழித்து எறிந்தான்.

காமினி இன்னும் வராத காரணத்தால் கீழே கிடந்த பேப்பரைத் தேடி எடுத்தேன்.பாதி கிடைக்கவில்லை. கிடைத்தவரை லாபம் என்று படிக்க ஆரம்பித்தேன்.

 “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"பரந்தாமனும் இதில் உடந்தையா..அது என்னடா வைரம்..புதுசாயிருக்கு.."

"வைரம் கேசட்..ஜெய்சங்கர் நடித்தது..அவங்கப்பா போலீஸ்.. ஏண்டா எப்பவும் இப்படித்தான் பேசுவியா.."

"பரந்தாமனைப் போய் அவர்னு மரியாதையா கதையிலே சொல்லியிருக்கான்.." எல்லா பிரச்சனைக்கும் அவன் தான் காரணம் வந்த எரிச்சலில் இனி எடுக்க முடியாத மாதிரி அநத துண்டு காகிதத்தை சாக்கடையில் எறிந்து விட்டேன். 

காமினி ஜன்னல் பக்கம் வர "நாளைக்கு ஹாக்கி டோர்ணமென்ட் இருக்கு..டிக்கெட் இருக்கு வர்றியா.." சிவா பேசிக் கொண்டிருந்தான்.

"சரி சீக்கிரம் போங்க..அப்பா பார்த்தா அடி விழும்.."

ஹாக்கி ஸ்டேடியம் அசுர விளக்கு வெளிச்சத்தில் மினுங்கியது.காமினி வந்ததும் டிக்கெட் கொடுத்து விட்டு வந்து உட்கார்ந்து கொண்டோம். காமினியின் அப்பா பந்தோபஸ்திற்கு வந்திருந்தார்.நானும், சிவாவும் பின் வரிசையில் பதுங்கி கொண்டோம்.

முதல் பாதி முடிந்ததும் பெண்கள் அமரும் இடத்தில் ஏதோ சத்தம் கேட்க அங்கு பார்த்தால் காமினியை அப்பா பார்த்து அடித்து கொண்டிருந்தார்.

"ஏண்டா நாயே..ஹாக்கி விளையாடி இப்போ தான் அடிப்பட்டு ரத்தம் போயிருக்கு..மறுபடியும் இங்க என்ன வேலை..பொண்ணுங்க கூட உட்கார்ந்திருந்தா கண்டுப்பிடிக்க முடியாதா.." தொடந்து அடி விழுந்தது. அவர் அடித்ததைப் பார்த்தால் வேறு ஏதோ காரணமிருப்பதாகவே பட்டது. அடுத்த நாளே காமினி காணாமல் போயிருந்தான். காமேஸ்வரன் காணவில்லை என்று பத்தாவது நாள் காமினியின் படம் பாளையங்கோட்டை தெருக்களில் ஒட்டப்பட்டிருந்தது.

பெண் மாதிரி நடை உடை பாவனை இருந்ததால் காமேஷ்கரனை நண்பர்கள் வட்டாரத்தில் காமினி என்று அழைப்பார்கள்.அது தான் காமினிக்கும் பிடித்திருந்தது.

ஹாக்கி விளையாடி ஏறக்குறைய எல்லோரும் பேங்க் உத்தியோகம் என்று ஆரம்பித்து கொஞ்சம் செட்டிலாகி இருந்தோம்.பேங்களுக்கு இடையில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிக் கோப்பையோடு சென்னை மெயிலில் திரும்பி கொண்டிருந்தோம்.

ஏதோ ஒரு ஸ்டேஷனில் தபதபவென கூட்டம் ஏறும் சத்தம் கேட்டது.

"மச்சான் அதுங்க..தூங்கிற மாதிரி பாவ்லா பண்ணுங்க.." என்று அனுபஸ்தன் சொல்ல அதே மாதிரி நானும் திரும்பி படுத்துக் கொண்டேன்.

சைட் அப்பரில் படுத்திருந்த காரணத்தால் அவர்கள் என்னை எழுப்ப தொடங்கினார்கள்.எரிச்சலில் காசு எல்லாம் தர முடியாது என்று சொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டு திரும்பினால் அது காமினி.
புருவத்திலிருந்த வெட்டுக்காயம் தான் அடையாளம் காட்டியது.காமினிக்கும் அந்த அதிர்ச்சி இருந்திருக்கும்.

"இந்த கோச்சில் யார் கிட்டேயும் காசு வாங்க வேண்டாம்..அடுத்த கோச் போங்க.." என்று என்னை தவிர்ப்பதிலே காமினி குறியாய் இருக்க

"இந்தாங்க அம்பது ரூபா..வைச்சுக்கோ.." என்று காமினியின் கையில் திணித்தேன்.

மறுக்காமல் வாங்கி கொண்ட காமினியிடன் கூட்டத்திலிருந்த அரவாணி "யார் கிட்டேயும் காசு வாங்க வேண்டாம்னு சொன்ன..அவன் தந்ததை மட்டும் வாங்குற.." என்று கேட்க

"பழைய கணக்கு.." என்று காமினி சொன்னது எனக்கு காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

"பிச்சைக்காரனுக்கு கூட ஒரு ரூபா போட்டா திட்டுவான்..இப்போ அம்பது ரூபா கொடுக்கிறான்.கலரப் பாத்து கொடுத்திட்டானா...என்ன நடக்குதுன்னே புரியல.." என்று சொல்லிக் கொண்டிருந்தவன் பக்கம் திரும்பாமல் வாய் முணுமுணுத்தது.

"அது பழைய பாக்கி.."

7 comments:

புரட்சித்தலைவன் said...

அட........

Paleo God said...

சவால் சிறுகதைன்னு ப்ராக்கெட்ல போட்டாதான் செல்லும். :))

நீ தொடு வானம் said...

காமினி மேல பாலை அடிச்சிட்டு மன்னிப்பு கேக்கல. ஆணாதிக்கவாதி. லேபிள்ல சொற்பேதி வைச்சிருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்.

Anonymous said...

Good..

Tirunelveli na summa vah...

Mannipulam kekkamatom..

Vikram said...

டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசு வென்ற "ஒஒஒஒ" என்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது.. என்ன அதில் train கிடையாது. hockey கிடையாது. அதே சமயம் முகத்தில் உள்ள தழும்பின் மூலம் நண்பர்கள் சந்தித்துக் கொள்வதும், hockey விளையாடும் பெண் தோழியும் "துணையெழுத்து" தொகுப்பில் உள்ள இருவேறு கதைகளை நினைவூட்டுகின்றன... நீங்கள் படித்திருந்தீரா எனத் தெரியவில்லை..

இரும்புத்திரை said...

விக்ரம் நான் டிவிஆர் கதை படித்ததில்லை. துணையெழுத்து படித்திருக்கிறேன்.தவிர இங்கு காமினி என்பது ஆண்.இது என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது. என்னுடைய கதை சில கதைகளை ஞாபகப்படுத்தினால் அது என்னுடைய வெற்றி என்றே எடுத்து கொள்வேன்.இது பற்றி இரண்டு பதிவுகள் கூட எழுதியிருக்கிறேன். என்னை கூர்ந்து கவனிப்பதற்கு நன்றி.

vinu said...

ada nalla irrrukkupaa unga twist, oru arthanareeswararaiyum payan paduththi irrukeenga......



good pa.