Wednesday, April 14, 2010

பதின்மத்தின் கதவுகளை என்றோ தட்டியவள்

பள்ளி காலத்தில் என் ஆதர்ஷ ஹீரோக்களில் அவனும் ஒருவன்.ஏதோ ஒரு நாளில்,ஒரு நாளிதழில்,ஒரு பக்கத்தில் வந்த வரதட்சணை கொடுமை என்ற செய்தியின் விரிவாக்கத்தில் அவனுடைய பெயர் இருந்தது.குற்றம் சாட்டியது அவன் காதல் மனைவி.நாத்தனார் என்ற அவள் பெயர் இருக்கிறதா என்று ஒன்றுக்கு பல முறை படித்து பார்த்தும் அதில் அவள் பெயர் இருக்குமோ என்ற சந்தேகத்தில் திரும்ப திரும்ப படித்து கொண்டேயிருந்தேன்.

நான் அந்த பள்ளியில் ஆறாவது புதிதாக சேர்ந்திருந்தேன்.அவள் எட்டாவது படித்து கொண்டிருந்தாள்.அவளுடைய பெயர் ரொம்ப யூனிக்கான பெயர் என்று அடிக்கடி பீற்றிக் கொள்வாள்.அவளை சுற்றி அவள் அள்ளி விடும் பிரதாபங்களைக் கேட்க ஒரு ரசிகர் கூட்டமே அவளுக்கு உண்டு.காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல் அவள் எனக்கு என்னுடன் பயணிக்கும் தேவதையாகவே தெரிந்தாள்.மட்டம் தட்டலாம் என்று பார்த்தால் அவளுக்கு ஒன்றுக்கு இரண்டு அண்ணன்கள்.என் வேண்டுதல் பலித்ததோ என்னவோ தெரியவில்லை.ஒருவன் பாஸ்.ஒருவன் பெயில்.ஆக மொத்தம் இருவரும் அந்த வருடமே பள்ளியிலிருந்து வெளியேறியிருந்தார்கள்.அவள் ஊர்க்காரன் மட்டும் தான் பாக்கி.அவனுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது.போட்டு குடுத்து விட்டால் என்ன செய்வது. அந்த பயமே என்னை தடுத்து அவன் மேல் வன்மம் கொழுந்து விட்டு எரிய காரணமாயிருந்தது.

இப்படியாக அடுத்த ஒரு வருடம் முடியும் போது எனக்கு அவளுடன் நெருங்க ஒரு சந்தர்ப்பமாக அவள் ஊர்க்காரனும் அந்த ஆண்டு பள்ளியை விட்டு விலகியிருந்தான்.பள்ளி ஆண்டு விடுமுறைக்கு பின் அவள் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் அழகாய் தெரிந்து தொலைத்தாள்.அழகின் ரகசியத்தை எல்லோருக்கும் புகைப்படமாக காட்டினாள்.எனக்கும் மட்டும் காட்டவேயில்லை.என் ஊர்ப்பெண்ணிடம் அந்த போட்டோவில் என்ன இருந்தது என்று கெஞ்சிக் கூத்தாடியப் பின் தான் சொன்னாள்.அவள் பெரிய மனுஷியாகி விட்டாள் என்று.என்னிடம் காட்ட வெட்கப்பட்டாளா என்னவோ தெரியாது.அவள் மேல் ஒரு ஈர்ப்பு கூட அது இன்னொரு காரணமாகயிருந்தது.வசந்திடம் சுற்றி வளைத்து கேட்டு கொண்டிருந்தேன்.அவனுக்கு ஒரு பெண் அப்படி செய்தது போல் கதையை மாற்றி அவன் என்ன சொல்லுவான் என்று அவன் வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவன் எங்களுடைய வகுப்பில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்.பெண்கள் மத்தியில் அவனுக்கு அப்படி ஒரு கிரேஸ் இருந்தது.அப்ப அந்த பெண்ணுக்கு அவன் மேல் ஏதோ ஈர்ப்பு இருப்பதாக அவன் தீர்ப்பு எழுதியிருந்தான். அது எனக்கு சாதகமாக இருந்த காரணத்தால் அவன் சொன்னால் சரியாகயிருக்கும் என்று நினைத்து கொண்டேன்.

தேனெடுக்கும் போது பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு கல் எறிவோம்.மிஷன் என்றுமே தோல்வியைத் தழுவியதில்லை.அவள் நினைப்பிலேயே ரெக்கை கட்டி பறந்ததில் நான் தேனீக்கள் வராத இடத்திற்கு போக மறந்து விட்டேன்.பசங்களும் கல் எறிந்து கலைத்து விட்டார்கள்.வசமாக நின்று கொண்டிருந்த எனக்கு நிறைய கொட்டு கிடைத்தது.போதாத காரணத்திற்கு பசங்களுடன் சேர்ந்த பாவத்திற்காக வீட்டில் மொத்தும் கிடைத்தது.அதை ஏதோ போரில் விழுப்புண்கள் கிடைத்தது போல் அவளிடம் காட்டி கொஞ்சம் அவளிடம் நெருங்கியிருந்தேன்.அப்படி செய்தது தான் பிற்காலத்தில் உடையாத கை உடைந்த மாதிரி கட்டுப் போட்டுக் கொண்டு நிறைய பெண்களிடம் சீன் போட முடிந்தது.

அவள் பத்தாவதும் நான் எட்டாவதும் படித்து கொண்டிருந்தோம்.எனக்கு குண்டு வைக்க புதிதாக வேறு ஒருவன் வந்து சேர்ந்திருந்தான்.நான் அவள் பக்கத்தில் இருக்கும் போது அவன் நடுவில் வந்து தொல்லைகள் கொடுப்பான்.ஏதோ ஒரு காரணம் சொல்லி இதற்காக அவனை அடித்து விட்டேன்.அவனுக்கு சப்போர்ட் செய்ய வந்த அவள் வகுப்பு பையனை வசந்தை வைத்தே மிரட்டினேன்.பரிட்சையில் காட்டுகிறேன் என்று வாக்கு தந்திருந்தேன்.அவன் என்னை விட அதிகமாக மார்க் வாங்கி தொலைத்திருந்தான்.எனக்கு அதெல்லாம் பெரிய விஷயமாக தெரியவில்லை.

அவளுக்கு நாவல் படிக்கும் பழக்கமிருந்தது எனக்கு கொஞ்சம் வசதியாகயிருந்தது.அதுவே நான் அவளிடம் நெருங்க காரணமாகயிருந்தது. மற்ற வீடுகள் மாதிரி அதை படிக்காதே.இதை படிக்காதே என்று தடை எங்கள் வீட்டில் இருந்தது கிடையாது.பாலகுமாரன் எல்லாம் உச்சத்தில் இருந்த காலகட்டம்.அவளுக்கு ஒரு நாவல் குடுத்தேன்.கதை ஒரு சுவாரஸ்யமான மூடிச்சுகள் உடையது.கணினி பெரிதாக வெளியே தெரியாத காலத்தில் எல்லோரிடமும் கற்பனை வளம் கொட்டிக் கிடந்தது என்பதற்கு அது ஒரு சாட்சி.விவாகரத்தான கணவன் - மனைவி, விவாகரத்திற்கு பின் அவள் காதலிக்கும் ஒருவன் என்று சடுகுடு ஆடிய கதை. ஆங்கில வார்த்தைகள் நிறைய வரும்.தெரிந்தும் தெரியாமலும் படித்து விட்டு அவளிடமே அர்த்தம் கேட்டேன்.உன் அம்மாவிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி விட்டாள்.

அவளிடம் பிடித்த விஷயமே ஒரு நாள் கூட என்னை தம்பி என்று சொன்னதேயில்லை.எனக்கோ அக்கா என்று கூப்பிட வேண்டும் என்று தோன்றியதேயில்லை.இதுவே வயதுக்கு சின்னப் பெண்களாக இருந்தால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அண்ணா என்று சொல்லி அசிங்கப்படுத்துவார்கள்.அதனால் அவர்களுடன் சகவாசமே வைப்பதில்லை.

பத்தாவது படித்து கொண்டிருந்ததால் அவள் மாலையில் பள்ளி பேரூந்தில் வர மாட்டாள்.புதிதாக பள்ளியில் எனக்கு ஜூனியராக சேர்ந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தது.சர்வ நிச்சயமாக தெரியும்.அவளும் என்னை விட பெரிய பெண் என்று.சீனியரும் "ஜூனியரும்" சேர்ந்து இருந்தால் யாரிடம் பேசினாலும் பிரச்சனை என்று இருவரிடமும் பேசாமல் தூங்கி விடுவேன்.

நடுவில் ஜூனியரிடம் முட்டிக் கொண்டதால் நான் அவளிடம் பேசாமல் இருந்தேன்.வழக்கம் போல பத்தாவது படிப்பதால் அவளுக்கு ஸ்பெஷல் கிளாஸ்.நான் அமரும் ஜன்னலுக்கு கீழே நின்று என்னுடம் பேசிக் கொண்டிருந்தாள்.தீடிரென தண்ணீர் குடித்தாள்.தண்ணீர் சிந்தி அது கொட்டிய இடமெல்லாம் பார்வை போய் கொண்டிருந்தது.நானும் வேறு எங்கோ பார்த்து முடியாமல்.. அவளிடம் என் ஜூனியர் வில்லி போட்டுத் தர ஒரு வெறுமையான பார்வை பார்த்தாள்.தாங்க முடியாமல் பார்வையை எங்கோ திருப்பினேன்.அவளை அன்று தான் கடைசியாக பார்த்ததாக ஞாபகம்.

நான் சென்னை வந்து விட்டேன்.வெறுமையான பார்வையை மறக்க முடியாமல் அந்த வருடம் யாரும் என்னை ஈர்க்கவில்லை.பத்தாவது படிக்கும் போது அதை மறக்கடிக்கும் விதமாக இன்னொரு பிரதாபங்களை அள்ளி வீசும் பெண் என் பதின்ம கதவை தட்டத் தொடங்கியிருந்தாள். கொடுமையான விஷயம் அவளும் எனக்கு இரண்டு வருடம் சீனியர்.ஆறுதலான விஷயம் அவளுக்கு அண்ணன்களே இல்லை.

9 comments:

அகல்விளக்கு said...

நல்ல நடை தல...

அக்மார்க் சொந்த அனுபவம் மாதிரி இருக்கு...

நல்லாருக்கு...

:-)

Unknown said...

ம்ம்ம்...பார்ப்பது எல்லாம் பார்வையை ஈர்க்கும் பதின்மம் ஒரு புதிரான களம். வாழ்ந்தோம் என்ற பதத்துக்கான விளக்கம் அதுமேட்டுமே என்பது என் எண்ணம். மேலும் தொடருங்கள்.

Balamurugan said...

நான் கல்லூரியில் படித்த போது எனக்கும் ஒரு சீனியர் பெண் மீது ஈர்ப்பு.

என்ன செய்யறது பாஸ். எல்லாம் காலம் செய்யும் கோலம்.

மதார் said...

//அக்மார்க் சொந்த அனுபவம் மாதிரி இருக்கு...//

இதிலென்ன சந்தேகம் .

பாலாஜி சங்கர் said...

விண்ணை தாண்டி வருவாயா காசு கொடுக்காமல் பார்த்த மாதிரி இருந்தது

பனித்துளி சங்கர் said...

அருமையான எழுத்து நடை . மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

Anonymous said...

சுமாராகத்தான் இருந்தது அரவிந்த்,
நிறுத்தி சம்பவத்தை உணர்ந்து எழுதியிந்தீங்கன்னா இன்னும் உணர்வோட வந்திருக்குமோனு தோனுச்சி...

எல் கே said...

nalla iruku continue

செழியன் said...

இதுவே வயதுக்கு சின்னப் பெண்களாக இருந்தால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அண்ணா என்று சொல்லி அசிங்கப்படுத்துவார்கள்.அதனால் அவர்களுடன் சகவாசமே வைப்பதில்லை.

super thala