பஸ்சில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் போது கூட காதலை அவளிடம் இன்றே சொல்லப் போகிறேன் என்று எனக்கு தெரியாது.
நான் டென்த் படிக்கும் போது ஒரு பையன் என் கிட்ட காதலிக்கிறேன்னு சொன்னான். அதுல இருந்து அவன் கூட நான் பேசுவதை நிறுத்தி விட்டேன். ரொம்ப நல்ல பையன் தெரியுமா என்று அவள் சொல்லி முடிக்கும் முன் நான் கூட உன்னை லவ் பண்றேன். நானும் நல்ல பையன் தான். என் கூட பேச மாட்டியா என்று அவள் கண்ணுக்குள் பார்க்க முயன்று தோற்று விட்டேன்.
அவள் கண்களை என்னால் சந்திக்க முடியவில்லை. என்னை நெருங்கி வருபவர்களை எல்லாம் நெருக்கடியில் தள்ளாமல் நான் இருந்ததேயில்லை. அதற்கு மேல் இருவரும் பேசவில்லை. எழுந்து முன்னாள் போய் விட்டேன். அவள் பார்வை என் முதுகைத் துளைத்துக் கொண்டிருந்தது. நான் நிலை கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தேன். முதுகில் ஓட்டை எதுவும் விழுந்து விட்டதா என்று அடிக்கடி தடவிக் கொண்டேன். அவ்வளவு கூர்மையாக என்னை அவள் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு தெரிந்தது.
அவளுடைய நிறுத்தம் வருவதற்கு முன்பே இறங்குவதற்கு வாட்டமாக எனக்கு எதிரே வந்து நின்றாள். தூங்குவதாய் நடித்துக் கொண்டிருந்தேன். அவள் கூப்பிடுவதாய் நண்பன் எழுப்பிக் கொண்டிருந்தான். தூங்கும் போது எழுப்பாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் என்று அவன் மேல் எரிந்து விழுந்தேன். தூங்குறவனை எழுப்பலாம் அப்படி நடிப்பவனை எழுப்ப முடியாது. அவனை விடுங்க என்று சொல்லி விட்டு விடுவிடுவென இறங்கி போய் விட்டாள்.
"என்னடா போயாச்சா.."
"பின்ன இன்னுமா மானங்கெட்டுப் போய் இங்க நிப்பா..ஒரு பொண்ணு கிட்ட ஒழுங்கா பேச தெரியுதா..எப்ப பாத்தாலும் பெரிய புடுன்கின்னு நினைப்பு..உன்ன கிட்ட இன்னும் பேசுறாலே அவளை சொல்லணும்.."
அவனிடம் எதுவும் சொல்லவில்லை.பஸ் அவள் நிறுத்தத்தைத் தாண்டி அங்கிருக்கும் முட்டு சந்தில் திரும்பி வரும். அவள் இன்னும் அங்கேயே நிற்கலாம் என்று வலது பக்க இருக்கையிலிருந்து இடது பக்கம் போய் அமர்ந்துக் கொண்டேன்.
"இப்போ எதுக்கு அந்த பக்கம் போறே.."
"வெயில் அடிக்குதுடா மச்சி.."
"எங்க உன் மனசுல தானே.."
ஒன்றும் சொல்லாமல் முறைத்துக் கொண்டிருந்தேன். அவள் அங்கு நிற்கவில்லை.
"மச்சி இந்த பக்கம் இருக்கா.." என்று கத்திக் கொண்டிருந்ததவனை விலக்கி பார்க்க முயற்சித்தேன். அவளும் சாலையைக் கடந்து வலதுபக்கம் நிற்பாள் என்று நான் நினைக்கவேயில்லை.
"இப்போ மனசுல மழை அடிக்குமே.." என்று சீண்டிக் கொண்டிருந்தான். எல்லா மாற்றங்களும் நண்பர்களுக்குத் தான் தெரிகிறது. மழை தூறலாக ஆரம்பித்து பெரு மழையாய் மாறிக் கொண்டிருந்தது.
தொடரும்
Monday, March 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
nenbarku thana matram theriym.. Arumai
Post a Comment