Monday, March 21, 2011

தலைமுறையாய் தொடரும் கனவு

வெளியாட்களுடன் சேர்ந்து தங்க நேர்ந்தால் தூங்குவதேயில்லை. விடிய விடிய இணையத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தேன். நானில்லாத இணையம் ஆர்டிக்கின் ஆழமில்லாத ஆழ்கடலில் ஆக்ஸிஜன் கிடைக்காத ஒரு நாளில் இறந்து போன பெங்குயினாய் போய் விடுமோ என்ற பயமும் ஒரு காரணமாயிருக்கலாம். அது தவிர என் பலவீனங்களை வெளியே தெரிய விடுவதேயில்லை.

குர்ரம்,குர்ரம் என்று தூக்கத்தில் புலம்புவது கூட தூங்காமல் இருப்பதற்கு இன்னொரு காரணம். குர்ரம் யார் பாஸ் உங்க ஆளா என்று கேட்பவர்கள் சுற்றியிருக்கும் பட்சத்தில் வலையைக் காய வைத்து விட்டு தூங்கி விடுவேன்.அந்த கனவு என்னை துரத்தும் முன் வரை நானும் குர்ரம் என் பூர்வ ஜென்ம காதலியாகயிருக்குமா என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.

குர்ரம் என் ஒன்று விட்ட தம்பி. என்னை விட ஐந்து வயது சிறியவன். அப்பா சலீமை விட தாத்தாவிற்கு என்னை பிடிக்கும். தாத்தா சாகவே மாட்டாரா என்று அப்பா உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்த காலம். தாத்தாவின் அருகாமையிலே இருந்ததால் என்னையும் பிடிக்காமல் போய் விட்டது போல. பட்டத்து யானைகள் மோதிய போட்டியில் என் யானை அப்பாவின் யானையை ஜெயித்திருந்ததின் நீட்சியாக நாங்கள் வாள் கலந்திருந்தோம். தாத்தா சொன்னதால் குர்ரம் வந்து தடுத்து விட்டான்.

தாத்தா இறக்கும் முன் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்த அப்பாவிற்கு தண்டனைகள் எதுவும் கிடைக்காமல் போனதிற்கு அந்தப்புர செல்லத்தினாலும் உயிரோடியிருக்கும் ஒரே பிள்ளை என்பதால் மட்டுமே. போதைப்பொருள் எல்லாம் குறைத்துக் கொண்டார் போல.அதற்கு பிறகு நானில்லாத ஒரு நாளில் தாத்தா இறந்து போகும் முன் உடைவாளை அப்பாவிடம் தந்து விட்டு இறந்து போனாராம். என்னை தேடியதாக பின்னொரு நாள் கிசுகிசுத்தார்கள். அப்பா பாணியில் அதிரடியாக அரியணையைக் கைப்பற்றலாம் என்றால் தாத்தா பாணியில் எளிதாக் முறியடித்து என்னை சிறைப்படுத்தி விட்டார்கள். இன்னொரு தப்பித்து மாட்டியதால் கண்ணைக் குடுடாக்கி விட்டார்கள். எல்லாம் ஒரு நாளில் போனது போலிருந்தது. தம்பியுடன் என்னை அனுப்பியிருந்தார்கள்.குருடனுக்கு வேட்டையாடும் இடத்தில் என்ன வேலை என்ற கேள்வி யாருக்கும் வராமல் போனது ஆச்சர்யமே. கழுத்து நெறிப்பட்டு நான் சாகும் போது குர்ரம் வேட்டைக்குப் போயிருந்தான். அவன் கை நீளம் தான். வேட்டையாடும் இடத்திலிருந்து நீண்டு என் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு நீண்ட கைகளை ஆராய்ச்சியாளர்கள் எதிலும் குறிப்பிடாமல் போனது வருத்தமே. திருத்தி எழுதுவது தான் வரலாறு என்று ஒரு பெண்குரல் கேட்டது. என் ஒரே மனைவியாகயிருக்கலாம். திருத்தி எழுதப்பட்ட வரலாறாகயிருந்தாலும் அவன் மகன் அவனுக்கு செய்த கைமாறை கேள்விப்பட்டப் போது திருப்தியாகயிருந்தது.

அன்று குடிக்குமிடத்திற்கு போயிருக்கக்கூடாது. நான் தங்கியிருக்குமிடத்திலிருந்து ரொம்பவே தூரம். குடித்தவன் அறையிலே தூங்க வேண்டிய நிர்பந்தம். தூங்காத இரவாகத் தொடங்கியது. அவன் தூங்கும் போது அக்பர் அக்பர் என்று சொல்ல ஆரம்பித்தான். அடிக்கடி கண்ணைத் தொட்டு தொட்டுப் பார்த்தான். திரும்ப குடிக்கலாம் என்று சொன்னான். விசாரிக்கும் போது அவன் ஹெமூ என்று சொன்னான். எப்போதிருந்து இந்த கனவு உனக்கு வந்தது என்று கேட்டால் ஒரு கலவரத்தின் போது அவனுடைய ஊரிலிருந்து தான் ஆயுதங்களை அனுப்பினார்கள். அன்றிலிருந்து இந்த கனவு என்று சொன்னான். ஹெமூ ஆரம்பத்தில் ஆயுத வியாபாரி என்று சொன்னதும் மெலிதாக புன்னகை செய்தான்.

அக்பர் இந்த தோல்விக்கு காரணமல்ல எவனோ பெயர் தெரியாதவன் விட்ட அம்பு தான் காரணம் என்று சொன்னதிலிருந்து அவனுக்கு அந்த கனவு வருவதில்லையாம். வந்தாலும் அம்பு எய்தவன் பெயர் தெரியாத காரணத்தால் கலைந்து விடுகிறதாம். எனக்கு கனவு விட்ட பாடில்லை.அவன் நிம்மதியாக தூங்குவதை கண்டு உன் தலையை வெட்டியது பைராம் கான் என்றாவது சொல்லியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே காய வைத்திருந்த வலையை எடுத்துக் கொண்டு இணையத்தில் மீன் பிடிக்கத் தொடங்கியிருந்தேன்.

1 comments:

nandhu said...

தேசத்தின் பாதையை மாற்றிய கனவு உன்னுடையது குஷ்ருள்.