பத்தாவது படிக்கும் போது தசரதபுரத்தில் கிரிக்கெட் விளையாட செல்லும் போது பாலு மகேந்திராவின் கட்டி முடிக்கப்படாத வீட்டின் வழியாக தான் செல்வோம்.வீடு படத்திற்காக கட்டிய வீடு என்று பின்னர் தான் தெரிந்தது.பிறகு ஒரு நாள் அந்த படம் பார்க்க நேர்ந்த போது அதன் யதார்த்ததில் சற்று உறைந்து தான் போனேன்.வீடு படத்தில் அர்ச்சனாவும்,பானுசந்தரும் அந்த வீட்டை கட்டி முடிக்கப் போராடுவார்கள்.இறுதி வரை முடிக்கவே முடியாது.மைதானத்தில் ஒழுங்காக விளையாடுவனை கலாய்ப்பது,ஜெயிக்க வேண்டிய மாட்ச்சைத் தோற்றுக் கொடுப்பது - இதனால் கடுப்பாகி எங்களை அடுத்த மேட்ச்சில் சேர்க்க மாட்டார்கள்.மறுபடியும் பாலுமகேந்திராவின் வீடு வழியாக மெதுவாக நடந்து செல்வோம்.அந்த வீடு தான் பாலு மகேந்திராவின் பள்ளியாக உருவாகியிருக்கிறது.
பாலு மகேந்திரா - புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவில் தங்கப்பதக்கம்.(சினிமா மேல் உள்ள ஆசையால் தம்பியை இந்த கல்லூரியில் தான் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த கல்லூரியின் கட்டணத்தைப் பார்த்து பின் வாங்கியிருந்தோம்.பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் விஸ்காம் படித்து விட்டு சி.டி.எஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறான்.சினிமா கனவு அடுத்த தலைமுறைக்குத் தள்ளி வைக்கப்பட்டது).முதல் படம் மலையாளத்தில் அதற்கு மா நில அரசு விருது.படம் பெயர் நெல்லு.(இந்த பெயரில் நாம் இப்போது தான் படம் எடுக்கிறோம்.அதுவும் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று சொன்னப் பிறகு.பெயர் வைப்பதில் கூட நாம் எங்கே இருக்கிறோம் என்பதற்கு இது தான் நிதர்சனம்.அப்ப கதையில் - ?????)
ரவி.கே.சந்திரன் ஒரு முறை பாலு மகேந்திரா கேமிரா வைத்த இடத்தில் வைத்த கோணத்தில் நாங்கள் சின்னப் பிள்ளைகள் மாதிரி கேமிரா வைத்து சந்தோஷப்படுவோம் என்று சொன்னார்.காரணம் ஷோபாவை பாலு மகேந்திராவின் கேமராவைத் தவிர யாருடைய கேமிராவும் அவ்வளவு அழகாக காட்டவில்லை.உதாரணம் முள்ளும் மலரும் - செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்.அழியாத கோலங்கள்,மூடுபனி.காரணம் கேட்டப் போது பாலு மகேந்திரா சொன்னாராம் - "நான் ஷோபாவை காதலோடு பார்த்தேன்.."
தமிழில் முள்ளும் மலரும் படத்திற்கு பிறகு அவர் பிற இயக்குனர்களின் படங்களில் ஒளிப்பதிவு செய்யவில்லை.அவர் ஒளிப்பதிவு மட்டும் செய்ய ஆசைப்பட்ட இயக்குனர்கள் இருவர் தான் - மணிரத்னம்,கற்றது தமிழ் ராம்.
இயக்கிய முதல் படம் - கோகிலா.கன்னடத்தில் கமல்,ஷோபா,மோகன் நடித்தது.கமல் நடிப்பை விமர்சனம் செய்த மதனுக்கு கமல் இந்தப் படத்தை சிபாரிசு செய்தாராம்.கமல் நடிப்பின் உச்சம் தொட்ட படம் என்று சொல்லலாம்.காரணம் பாலு மகேந்திரா மற்றும் யதார்த்தம்.
இன்று அவர் சினிமா கற்றுக் கொடுத்த இயக்குனர்கள் வழியாக அந்த யதார்த்தம் தமிழ் சினிமாவில் தொலையாமல் இருக்கிறது.
இன்று பெரிதாக பேசப்படும் இயக்குனர்கள் பாலா,ராம்,வெற்றிமாறன் எல்லாரும் குறைந்தப் பட்சம் அவருடன் எட்டு ஆண்டுகள் இருந்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள்.
இளையராஜாவை விட்டு எல்லோரும் ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றாலும் விதிவிலக்கு பாலு மகேந்திரா,கமல் (அவர் இயக்கும் படத்தில் இளையராஜா இருப்பார்.அவர் இயக்க நினைத்த மர்மயோகியில் ஏ.ஆர்.ரகுமானோடு இணைய நினைத்தாலும் விதி அவரை செய்ய விடவில்லை.)
அவுட் ஹவுஸில் பாலா தங்க வைத்து காலையில் எழுப்பி ஆங்கில நாளிதழ்கள் படிக்க சொல்வாராம்.சத்தம் வீடு வரை கேட்க வேண்டும் என்று சொல்வாராம். பாலா தனியாக முதல் படம் செய்யும் போது பாலு மகேந்திராவின் குரு குடுத்த வியூ வைண்டரை குடுத்தாராம்.பாலா அதை அமீருக்கு பருத்தி வீரன் வந்த பிறகு கழுத்தில் மாலையாக போட்டாராம்.அந்த பரிசை எட்டி உதைக்கும் விதமாக யோகி வந்து விட்டது.
குருகுல வாசம் போல் அவர் அருகில் இருந்து பிள்ளைகள் போல் வளர்ந்து சினிமா கற்றுக் கொண்டதன் பயன் தான் யதார்த்தம் - பாலாவின் சீடர்களிடமும் கொஞ்சம் இருக்கிறது.அதற்கு பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம்(எனக்கு இந்த இரண்டு படங்களும் பிடிக்கவில்லை அது வேறு விஷயம்).
பொல்லாதவன் - வில்லனை கூட கம்பீரமாக சித்தரித்த படம்.கற்றது தமிழ் - சில் காட்சிகளும் பாடல்களும் எனக்கு பிடித்து இருந்தது.
பாடல் காட்சிகளை நடன இயக்குனர்களிடன் குடுத்து நடனம் அமைக்காமல்,காட்சிகள் மூலமாகவே நகர்த்த தெரிந்த இயக்குனர்கள் தான் முழுமையானவர்கள்.பிண்ணனியில் பாடல்கள் ஒலிக்கும் (சேது,பிதாமகன்,பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம்,பொல்லாதவன்,கற்றது தமிழ் - இப்படி எல்லாமே பாலு மகேந்திராவின் வாரிசுகள் தான் அல்லது அவரின் வாரிசுகளுக்கு வாரிசுகள்)
நிறைய வெளிபடங்களைத் தழுவி இருந்தாலும் அதில் நேடிவிட்டி இருக்கும்.ஒரு பெரிய அதிசயம் என்னவென்றால் சைக்கோ பார்த்துக் கொண்டிருக்கும் பாதியிலேயே அதை கண்டுப்பிடித்து விட்டேன் அதை தமிழில் மூடுபனியாக பார்த்து இருக்கிறேன் என்று.அதனால் பாதியிலேயே படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.மூடுபனி பாடல்கள் படத்தில் தவிர எதுவும் உருப்படி இல்லை.
1993ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதிற்காக தேவர் மகனும்,ரோஜாவும் மோதிக் கொண்டது.அதை முடிவு செய்யப் போவது பாலு மகேந்திராவின் ஒரு ஓட்டு.கமலும்,இளையராஜாவும் பாலு மகேந்திராவுக்கு நெருங்கிய நண்பர்கள்.ஆனால் அவர் ஓட்டுப் போட்டது ரோஜாவுக்கு. காரணம் முதல் படத்திலேயே சாதித்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அவர் கொடுத்த அங்கீகாரம்.மோதிர கைக்குட்டு.
கட்டணம் செலுத்தி அவரிடம் மாணவர்கள் படித்தாலும் இனி ஒரு பாலா உருவாவது கஷ்டம் தான்.முதலிலேயே குரு தட்சிணை குடுத்து படிப்பவர்களிலிருந்து யாரும் அவ்வாறு உருவாவது கிடையாது.
வாத்தியார் பிள்ளை மக்கு என்பது போல அவர் மகன் ஷங்கி பெரிய அளவு சாதிக்கவில்லை.ஷங்கியின் மகன் இன்னொரு பாலு மகேந்திராவாக வர வாழ்த்துக்கள். நிச்சயம் வருவார் என்று பாலு மகேந்திராவின் சந்தோஷத்தில் தெரிகிறது.
Tuesday, January 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
nice
Nalla pakirvu
:-)
Post a Comment