Monday, January 31, 2011

இளையராஜாவின் உருவல்

சொல்வனத்தில் பி.எஸ்.சுரேஷ்குமார் எழுதிய நந்தலாலாவின் பிண்ணனி இசைக்கு ஒரு எதிர்வினை.ஏற்கனவே சொன்னது மாதிரி ராமராஜன் படத்தில் கூட ராஜாவின் பிண்ணனி இசை நந்தலாலாவை விட அருமையாக இருக்கும். நந்தலாலாவே கிகுஜிரோவின் காப்பி என்று ஆகி விட்டப்பின் இசை மட்டும் டீயாகவா இருக்கும்.அதுவும் காப்பி தான். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல மிஷ்கினோடு சேர்ந்த இளையராஜாவும் ஆத்துகிறார்.

படத்தின் தொடக்கத்தின் வரும் பிண்ணனி இசை.



டாம் ஹேங்க்ஸ் படத்தின் முடிவில் வரும் பிண்ணனி இசை. (1.15லிருந்து - 2 வரை கேளுங்கள்). இதுக்குப்பேர் தான் திருப்பி போடுறது.

Saturday, January 29, 2011

மீனவர்களுக்காக காகித ஆயுதம் செய்வோம்

வரப்போற மூணு நாலு மாசத்துல ஒரு மீனவர் இறந்தாலும் எங்க குடும்பத்துல இருந்து ஒரு ஓட்டு கூட விழாது,யாருக்கும் ஓட்டுப்போட மாட்டேன்னு எல்லோரும் சொல்லுங்க. அது தான் சாத்தியமான வழி.மீனவர்களுக்காக டிவிட்டர்ல இத்தனை பேர் எழுதுறது சந்தோஷமா இருந்தாலும் இது எத்தனை நாளைக்கு இந்த கேள்வி தான் முன்னால வந்து நிக்குது. இன்னொரு சாவு வந்தா தான் அடுத்த கட்ட போராட்டம்னு நினைக்கக்கூடாது.

உங்களுக்கு ஓட்டு இல்லன்னா எதிர்ப்பைக் காட்ட வேறு வழியே இல்லையா.உங்க பேச்சைக் கேக்குற நாலு பேர் இருப்பாங்க. அவங்களுக்கு ஓட்டு இருந்தா கூட நீங்க சொல்லி எதிர்ப்பைக் காட்டலாம். அடிமடியில கை வைக்கணும்.அப்ப தான் கொஞ்சமாவது பயம் வரும்.

நாலு மாசம் கழிச்சி மீனவர் இறந்தா என்ன செய்யணும்னு கேட்டா அதுக்கு பதில் இது தான்.எந்த கட்சிக்கும் இல்லாமல் தேர்தல் புறக்கணிப்பு,49 ஓ,சுயேட்ச்சைக்கு ஓட்டு இப்படி ஏதாவது ஒரு வழியைத் தேர்வு செய்தால் கூட முடியும். இவன் இல்லன்னா அவன் ஆட்சிக்கு வரட்டும் இந்த நினைப்பை இப்படித்தான் அடிக்கணும். நாம போடுற அந்த நாலு ஓட்டால ஏதாவது சுயேட்ச்சைக்கு டெபாஸிட் போகாம இருந்தா கூட அது ஒரு பெரிய வெற்றி தான்.இப்போ நிருபமா எதுக்கு இலங்கைக்கு போயிருக்காங்க. தேர்தல் முடியிற வரைக்கும் ஒண்ணும் பண்ணாதீங்கன்னு சொல்வாங்க.அப்புறம் பழைய குருடி கதவைத் திறக்குற கதை தான். அதனால நாம முந்தணும். வைகோ ஆறாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொல்லியிருக்கார்.அதுக்கு பதிலா ஒரு தடவை கடல்ல போய் ஒரு சவுண்டு விட்டு மீனவர்கள் வாழ்க்கையைத் தெரிஞ்சிக்கிட்டா புண்ணியமா போகும்.

புறக்கணிப்பு நிச்சயம் நடக்கக்கூடியது தான்.எதுவுமே சாத்தியம் இல்லன்னு நினைச்சா சாத்தியம் இல்ல தான்.

Thursday, January 27, 2011

பா.ம.க எப்பவுமே க.மா.பா தானா ?

இந்த தலைப்பைக் கண்டவுடன் அவர்கள் சங்கீதம் படிக்கிறார்கள் என்று யாரும் நினைத்து, எச்சில் தெறிக்க சிரித்து யாரையும் நனைத்து விட வேண்டாம்.க.மா.பா - அதன் விரிவாக்கம் இது தான் கட்சி மாறும் பாட்டாளிகள்.இந்த பதிவைப் படித்து விட்டு யாரும் பெட்டியைத் தூக்க வர வேண்டாம்.என் அறையில் இருப்பது ஒரே ஒரு அட்டைப்பெட்டி தான்.அதுவும் என்னுடையது இல்லை.

நீங்கள் கூட்டணி மாறும் செய்தியைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு ஞாபகம் வரும் கேரக்டர் மனோரமா.சம்சாரம் அது மின்சாரம் படத்தில் யார் பேச்சையும் கேட்காமல் நீ கம்முன்னு கிட டைவர்ஸ் டைவர்ஸ் தான் என்று வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்ய வைப்பார்.அப்படித்தான் ஒவ்வொரு முறையும் சின்னப் பிள்ளைகள் மாதிரி "மிஸ் இவன் என்னை நுள்ளிட்டான்..,என்னை கிள்ளிட்டான்..,என்னை தள்ளிட்டான்.." என்று ஏதாவது காரணம் காட்டி கூட்டணியை ரத்து செய்கிறீர்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால் சி.வி.சண்முகம் என்ற அ.தி.மு.க உறுப்பினர் ஏதோ ஒரு கொலைவழக்கில் பா.ம.க கட்சி உறுப்பினர்கள் பெயரைச் சேர்த்து விடுகிறார்.அதை கொட நாட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் அந்த கட்சியின் தலைவி தட்டிக் கேட்கவில்லை என்பது தான் உங்களின் குற்றம்.மக்கள் பிரச்சனையே இரண்டாம் பட்சமாக இருக்கும் போது இது என்ன அவர்களுக்கு பெரிய சிக்கலா."டீச்சர் என் பையனை அந்த பையன் நுள்ளி,கிள்ளி,தள்ளி இருக்கான்..உங்க கிட்ட புகார் குடுத்தும் நீங்க ஒண்ணுமே கேட்கவில்லை..நாங்கள் இந்த பள்ளியை விட்டு வெளியேறுகிறோம்.." என்று சொல்லும் பெற்றோர்கள் போல் உள்ளது உங்கள் வாதம்.உடனே அந்த ஆசிரியர் சொல்கிறார் "ஏப்ரல் மாசம் தான் அந்த ஸ்கூல் சரியில்லன்னு இங்க வந்தீங்க..இப்போ இது சரியில்ல சொல்லிட்டு வெளியே போறீங்க..அப்போ நீங்க தான் சரியில்லை.." என்று சொன்னால் எப்படி இருக்கும் கொஞ்சம் யோசித்து பாருங்கள்."எங்கேயும் சேர்க்கவில்லை என்றால் உங்கள் நிலைமை என்ன.

வாய்சவடால் தான் பா.ம.க கட்சி அழிய காரணம்.கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும்.அது வரலாறு,புவியியல் என்று சொன்ன வரலாறு நோட்டு புத்தகம் என்ன இன்று பூகம்பத்தில் தொலைந்து விட்டதா.இல்லை மக்கள் உங்கள் கூட்டணியைத் துவைத்து விட்டார்களா?(அழுக்கு போயிருச்சா..போயிருச்சா அப்புறம் ஏன் இன்னும் தேய்க்கிறீங்க..)வரலாறு என்றுமே மாறுவதில்லை அது சொல்லும் பாடம் உங்களால் எங்கும் இருக்க முடியாது நிரந்தரமாக.

உங்களுக்கு ஏழு இடம் தந்தேன் ஒரு பலனும் இல்லை.ஆனால் ம.தி.மு.க கூட ஒரு இடத்தில் வென்று இருக்கிறது என்று அவர்கள் கேட்டால் என்ன செய்ய முடியும் (அட இதுவும் வரலாறு தான்).ஜெயித்தால் மக்கள் சக்தி காரணம்.தோற்று போனால் மக்கள் பணம் வாங்கி விட்டார்களா இல்லை வாக்கு இயந்திரம் வேலை செய்யவில்லையா ?

தி.மு.க கூட்டணி உடைந்த போது ஒரு தி.மு.க உடன்பிறப்பு சொன்ன காரணம் இதை நினைத்தால் இன்று கூட சிரிப்பு வருகிறது."மானாட மயிலாட" - இந்த நிகழ்ச்சியை அவர் விமர்சித்த விதம் தான் காரணம் என்று சொன்னார்.அப்படி என்ன சொன்னார் என்று கேட்டதற்கு வந்த பதில் "மானாட மயிலாட மார்பாட" என்று சொல்லி விட்டார்.கூட்டணி உடைந்து விட்டது.அதெல்லாம் இருக்காது என்று நான் சொன்னேன்.இன்று நீங்கள் சொல்லும் காரணத்தைப் பார்த்தால் அது உண்மையா என்று நினைக்கத் தோன்றுகிறது.

இப்படியே கூட்டணி மாறி கொண்டே இருந்தால் வரும் சட்டசபை தேர்தலிலும் உங்களுக்கு தோல்வி தான்.விஜயகாந்த் எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் தான் தெரியும் என்று சொல்லும் போது கேட்காத நீங்கள் இன்று யாருமே சேர்க்கவில்லை என்றதும் அதே கருத்தைச் சொல்கிறீர்கள்.யாராவது சேர்த்து கொண்டால் மறுபடியும் கூட்டணியாக தான் போட்டி இல்லை யாருமே கூட்டணி வைக்க கூடாது.(என்ன கொடுமையான கொள்கை பா.ம.க இது)

"நானோ ஏன் பிள்ளையோ கட்சியில் ஏதாவது பொறுப்பையோ இல்லை பதவி கிடைத்தாலும் வகிக்க மாட்டோம்" - இந்த வார்த்தைகள் யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா.சரி நானே ஞாபகப்படுத்துகிறேன்.இது ஆரம்ப கால பா.ம.க நிறுவனரின் கொள்கை முழக்கம்.அப்பொழுது அவர் மூன்று ரூபாய்க்கு ஊசி போடும் மருத்துவர்.இன்று அப்படியா.ஆட்சிக்கு ஆட்சி கொள்கையும் மாறும் கூட்டணியும் மாறும்.

யாருமே சேர்க்கவில்லை என்றால் அவர்களின் கோட்டையான விருத்தாசலத்தில் வெற்றி பெற்ற விஜயகாந்துடன் கூட்டணி வைப்பார்கள்.பிறகு ரத்து செய்து வருகாலத்தில் விசை கட்சி ஆரம்பித்தால் அவருடன் சேர்ந்து இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிப்பார்கள்.முடியவில்லை என்றால் வேறு கூட்டணி.

இனி வரும் ஒரு தேர்தலில் மட்டுமாவது அவர்களை எந்த கூட்டணியிலும் சேர்க்காதீர்கள். தயவு செய்து ஒரு அரசியல் அனாதையை உருவாக்குங்கள்.

Wednesday, January 26, 2011

பாணா காத்தாடியும் ஒரு காதலும்

இன்று வரை என் லட்சியங்களில் ஒன்றாகயிருப்பது வெறும் ஓட்டைக் காத்தாடியாவது விடுவது தான். கிராமத்தில் அந்த கனவு நிறைவேறாத சோகத்தில் இருந்த நான் சென்னை சி.ஐ.டி நகருக்கு வந்த பின் தான் லட்சியத்தில் பாதியை கடந்தது போலிருந்தது. மூன்றாவது மாடி டேங்கில் ஏறி கண்ணாம்மா பேட்டையில் இருந்து விடும் காத்தாடியை டீல் போடுவார்கள். யாருக்காவது லுங்கி அவிழ்ந்து விடாதா என்னையும் பிடிக்க சொல்ல மாட்டார்களா ஏக்கத்தோடு நான் பார்த்துக் கொண்டேயிருப்பேன். ஒருவருக்கும் அவிழாது.அப்படியே லுங்கி இறங்கினாலும் உள்ளே கொஞ்சம் பெரிதான டிராயரோடு இருப்பார்கள். இப்படியாக தொடர்ந்த ஒரு நாளில் ஏதோ காயப் போட வந்த பெண்மணி டிராயரோடு நின்ற பசங்களைப் பார்த்து எல்லார் வீட்டிலும் புகார் கொடுக்க எனக்கு மட்டும் ஸ்பெஷல் அர்ச்சனை. இனி எதையும் தொட மாட்டேன் என்று வாக்குறுதியோடு தான் என்னை அனுமதித்தார்கள். அதற்குப்பின் தான் என் மேல் பாசம் பீறிட்டு அடித்ததோ என்னவோ எனக்கு காத்தாடி விட சொல்லித் தர நிறைய குருமார்கள் முன்னுக்கு வர செய்த சத்தியத்தால் அதை தொடாமல் நின்றுக் கொள்வேன். எதிர்க்காற்றில் டீல் போட அது நாங்கள் விட்ட காத்தாடிக்கே பாதகமாக முடிந்தது. என்னை எவ்வளவோ கெஞ்சியும் பிடிக்காத காரணத்தால் நிறைய நூலோடு காத்தாடி போய் விட்டது.ஸ்ரீனிவாசா தியேட்டரில் பிடித்திருப்பார்கள் என்று பேசிக் கொண்டார்கள். அந்த நேரத்தில் கெட்ட வார்த்தைகளோடு சரளமாக சென்னை பாஷையும் பேசத் தொடங்கியிருந்தேன். திருநெல்வேலி நடையில் பேசி விட்டு புட்டுக்கிட்டான் நட்டுக்கிட்டான் என்று பேச இங்கேயிருந்தால் இன்னும் சோவாரியாக மாறி விடுவான் என்று சொல்லி காலம் என்று எதிரே வந்த காத்தாடி எங்களில் நூலை வெட்ட விருகம்பாக்கத்தில் போய் விழுந்தோம். சுற்றி கொஞ்சம் சொந்தங்கள்.கொஞ்சம் கொஞ்சமாக திருநெல்வேலி தலையைக் காட்ட நான் சி.ஐ.டி நகர் நண்பர்களை மறக்க தொடங்கியிருந்தேன்.என் சுயநலத்திற்காக அதே மாதிரி ஏதோ ஒரு பிரச்சனையில் பெரம்பூரில் இருந்து விருகம்பாக்கம் வந்தவனிடம் நான் நட்பு கொள்ள ஆரம்பித்தேன்.

ஏதோ ஒரு மழைநாளில் சோம்பேறித்தனப்பட்டு 12 பியில் வராமல் இறங்காமல் வீடு வந்து சேர ஆசைப்பட்டு 12 சியில் பயணம். மழையோடு பேசிக் கொண்டிருந்தவளை மீள்பார்வையில்லாமல் முதல் பார்வையிலே பிடித்து தொலைத்தது. அவளை பார்க்கவே 12 சியில் பயணம். ஒரு நாளாவது பார்த்து விட மாட்டாளா என்று நப்பாசை தான் அவள் பின்னால் அலைய வைத்தது. ஒரு நாளும் நடக்கப்போவதில்லை என்று மட்டும் தெரியும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தான் கவனித்தேன் அவள் கையிலிருக்கும் புத்தகம் வித்தியாசமாக தெரிய தொடர்ந்து கவனித்ததில் அவள் தாவணியும் வித்தியாசமாக இருந்தது. விசாரித்தால் அவள் ப்ளஸ் டூவாம். பள்ளியில் மாணவிகளின் தலைவியாம். பஸ்ஸில் ரவுடியாம். எவ்வளவு வித்தியாசம் நான் ரெண்டு வருடம் ஜூனியர் மற்றும் நெற்றியில் விபூதியோடு இருக்கும் பையனை அந்த வயதில் எவளுக்குத் தான் பிடித்திருக்கிறது. அவளிடம் பேச எப்போதாவது கிடைக்கும் சந்தர்ப்பதிற்காகவே அவனிடம் நட்பு கொள்ள ஆரம்பித்தேன்.அவன் அக்காவும் அவளும் ஒரே வகுப்பு.நட்பு என்றால் அப்படி ஒரு நட்பு.பள்ளியில் சாம்பியன் அணியான எங்கள் அணிக்கு எதிராக அவன் வகுப்பின் சார்பாக களமிறங்கும் அளவிற்கு நட்பு.

எங்கள் பள்ளியையும் பெண்கள் பள்ளியையும் ஒரே நேரத்தில் தான் விடுவார்கள். ரோமியோ ஜூலியட், சலீம் அனார்கலி மாதிரி சரித்திரத்தில் இடம் பிடிக்க நிறைய பேர் முயல அது தெரிந்து பெண்கள் பள்ளி எங்களுக்கு முக்கால் மணிநேரம் முன்னால் விட கடைசி வகுப்பை புறக்கணித்தால் மட்டுமே அவளை அல்ல எல்லோரையும் பார்க்க முடியும் என்ற நிலை. சுவர் குதிக்க ஆரம்பித்திருந்தோம். துரைசாமி சப்வேவில் காத்திருப்போம்.பர்கிட் ரோடு வழியாக பஸ் துரைசாமி சப்வேவிற்கு வரும். அடிக்கடி மாட்டிக் கொள்வோம்.ஆசிரியர்கள் பிடித்தாலும் பாதி நாள் அப்செண்ட் தான் தண்டனை.அடி எல்லாம் கிடையாது என்பதால் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் வேதாளத்தைப் பார்க்க காத்திருப்போம்.பழம் என்று சொல்லி விடுவாளோ தம்பி என்று சொல்லி விடுவாளோ என்று பயத்தில் வீட்டிலிருந்து வரும் போதே விபூதியை அழித்து விட்டு இன்சர்ட்டை வெளியே எடுத்து விட்டு வருவது வழக்கம். அன்று ஆரம்பித்த பழக்கம் இன்றும் விபூதி பூசிய ஐந்து நிமிடத்தில் அழித்து விடுகிறேன். அவளும் என்னை லேசாக கவனிக்க ஆரம்பித்தது தெரிந்தது. காரணம் கூடவே வருபவன் தோழியின் தம்பி. பிறகு வீட்டில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே விஷயத்தை அவனிடமிருந்து வாங்கியிருக்கிறாள். தெரிந்தப்பிறகும் யாரும் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.நான் மட்டும் பேக்கு மாதிரி பேக்கை எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பேன்.

அவளை பார்த்துக் கொண்டே இறங்கியதில் பஸ்சில் இருந்த தகரம் கிழிக்க சுண்டு விரல் முழுவதும் வொய் ஷேப்பில் கிழித்து விட அவள் பதற்றப்பட்டாளா என்று பார்க்கும் முன் வெளியேறிய ரத்தத்தில் தலையை சுற்ற ஆரம்பித்து. தம்பியைப் பிடித்து கொண்டு காயத்தைக் கழுவி ஆள் மாற்றி ஆள் விரலில் கைக்குட்டையைஸ் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நீலக்கலர் பேண்ட் கருநீலமாக மாறத் தொடங்கியிருந்தது. வீட்டிற்கு பக்கத்தில் உள்ள டாக்டரிடன் போன முதல் பேஷண்டே நான் என்பதால் அளவுக்கு மீறி பணமும்,பேண்ட் எய்டும் காதில் சுற்றத் தொடங்கியிருந்தார். பள்ளியில் நிறைய பசங்க செய்வது அடிபடாமல் கட்டுப் போட்டுக் கொண்டு பெண்களிடம் உதார் விடுவார்கள். என்னையும் அப்படி நினைத்து விடப் போகிறாள் என்று மறைத்துக் கொண்டே பயணிப்பேன். நண்பனுக்கு விஷயம் தெரிந்து உன் தம்பிக்கு கொஞ்சம் ஊட்டி விடேன் என்று கேலி செய்வானாம். காய்ச்சல் காரணமாக இரண்டு நாள் அவள் ஏறும் பஸ்சில் மட்டம் போட அவள் இவனிடம் கேட்டாளாம். உன் தம்பியா வீட்டுக்குப் போயிருப்பான் என்று கேலி செய்ய அவன் ஒண்ணும் என் தம்பியில்லை.இனி சொல்லாதே என்று சிடுசிடுத்தாளாம். அதை அவன் என்னிடம் சொன்னதும் மழை நாளில் அவள் பார்த்தாலே சாரலடிக்கும்.இப்படி சிடுசிடுத்தது காதல் சொல்லி விட்டு முத்தமிடாமல் கன்னத்தில் உரசி சென்றது போலிருந்தது.


கைகாயம் ஆறியிருந்தது.காதலா ஏதோ ஒரு ஏழவோ பெருகிப் பெருகி வழிந்தது. அணையப் போகும் விளக்கு போல அன்றைய தினமே பிரகாசமாயிருந்தது.கடைசி ஸ்டாப்பிங் கொஞ்சம் பெருசு. ரங்கராஜபுரத்தில் ஆரம்பித்து பனகல் பார்க்கில் முடியும்.கோடம்பாக்கத்தில் பஸ் நுழைந்தவுடன் கூட்டம் அம்ம ஆரம்பித்திருந்தது.அவளை பார்க்க முடியாமல் கடைசி ஸ்டாப்பிங் மட்டும் தொங்க முடிவெடுத்து முன் படிக்கட்டில் தொங்க ஆரம்பித்தேன்.இரண்டு நிறுத்ததிற்கும் இடையில் முக்கால் கிலோ மீட்டர் இருக்கும்.பாதி வழியில் கை வழுக்கி விட்டது.சாவு நிச்சயம் ஆகி விட்டது என்று நினைத்து கொண்டேன்.

கீழே பார்த்தால் விழுந்து விடுவேன் என்று பயம் வேறு.கண்ணை இறுக்கமாக மூடி கொண்டேன்.பயத்தில் அன்று உள்ளங்கையில் வேர்த்தது.இன்னைக்கு என் கதை முடிந்து விட்டது..டேய் பாடு பசங்களா என்னை பிடிங்க என்று கத்த நினைத்தாலும் வாயில் வார்த்தை வரவில்லை.சென் டர் போர்ட் (கால் வைக்காமல் இரண்டு படிக்கட்டுகளுக்கும் நடுவில் அடிப்பது) அடித்து அனுபவமே இல்லாததால் ஒரு கட்டத்தில் கை வழுக்கி விட்டது.கண்ணை திறந்து அது பனகல் பார்க்கின் வளைவு.வெளியே குதித்து விட்டேன்.சிறுகீறல் கூட இல்லாமல் தப்பி விட்டேன்.நம்பவே முடியவில்லை.அதற்குள் பின்னாடி வந்து பைக்காரன் என் சட்டையைப் பிடித்து "ஏண்டா ஸ்கூல் படிக்கிற பையனா நீ.." என்று ஏதோ கத்திக் கொண்டு இருந்தான்.பசங்க அதற்குள் பஸ்சில் இருந்து இறங்கி என்னை நோக்கி ஓடி வர..அவன் என்னை விட்டு விட்டான்.

என்னால் ஏத்து கொள்ளவே முடியவில்லை.ஒரு பெண்ணால் எனக்கு இப்படியா..அவளை தவிர்க்க ஆரம்பித்தேன்.என்னால் நம்ப முடியாத ஆச்சர்யம் அவள் 12 சி பஸ்சில் போகாமல் எனக்காக 12 பி பஸ்சில் வர ஆரம்பித்தாள்.அவளை நான் தவிர்த்தாலும் அவள் விடவில்லை.ஏதாவது சொல்லி வம்புக்கு இழுப்பாள்.தன் வினை தன்னை சுடும் என்று நினைத்து கொண்டேன்.அவளிடம் சொல்லாமல் சென்னை - 600028 இந்த முகவரிக்கு வந்து விட்டோம்.

பத்து வருடங்கள் கழித்து என் நம்பரைக் கண்டுப்பிடித்து பழைய நண்பன் பேசினான்.அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டதாம்.அவ புருஷன் வங்கி மேலாளர் என்றும் ஒரு பையன் இருப்பதாகவும் சொன்னான்.பையன் பெயரை சொல்ல வரும் போது.."மச்சான் வேல இருக்கு..அப்புறம் பண்ணு.." என்று அவன் பதிலுக்கு எதிர்பாராமல் வைத்து விட்டேன்.

இரவு ஒரு மணிக்கு பாணா காத்தாடி பார்க்க ஆரம்பித்திருந்தேன்.படம் போக போக வெளியில் அடை மழை.இப்படி ஒரு மழையை நான் பார்த்ததேயில்லை.எனக்காகவே யாரோ அழுதது போலிருந்தது. படம் முடிந்தும் மடிக்கணினியைக் கூட அணைக்காமல் சுருண்டிருந்தேன்.அன்று சொல்லாமல் விட்ட ரகசியம். எனக்கு பயம் ஏற்படும் போது மட்டும் பாட்டியை நினைத்து கொள்வேன்.அன்றும் அப்படித்தான் வேண்டிக் கொண்டேன். "என்னை எப்படியாவது காப்பாத்து..நான் அவப் பின்னாடி போறதை விடுறேன்.." என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் கீழே விழும் போதெல்லாம் யாரோ என்னை தாங்கிப் பிடிக்க என்னுடனே இருக்கிறார்கள்.

Tuesday, January 25, 2011

பாலுமகேந்திராவின் பள்ளி

பத்தாவது படிக்கும் போது தசரதபுரத்தில் கிரிக்கெட் விளையாட செல்லும் போது பாலு மகேந்திராவின் கட்டி முடிக்கப்படாத வீட்டின் வழியாக தான் செல்வோம்.வீடு படத்திற்காக கட்டிய வீடு என்று பின்னர் தான் தெரிந்தது.பிறகு ஒரு நாள் அந்த படம் பார்க்க நேர்ந்த போது அதன் யதார்த்ததில் சற்று உறைந்து தான் போனேன்.வீடு படத்தில் அர்ச்சனாவும்,பானுசந்தரும் அந்த வீட்டை கட்டி முடிக்கப் போராடுவார்கள்.இறுதி வரை முடிக்கவே முடியாது.மைதானத்தில் ஒழுங்காக விளையாடுவனை கலாய்ப்பது,ஜெயிக்க வேண்டிய மாட்ச்சைத் தோற்றுக் கொடுப்பது - இதனால் கடுப்பாகி எங்களை அடுத்த மேட்ச்சில் சேர்க்க மாட்டார்கள்.மறுபடியும் பாலுமகேந்திராவின் வீடு வழியாக மெதுவாக நடந்து செல்வோம்.அந்த வீடு தான் பாலு மகேந்திராவின் பள்ளியாக உருவாகியிருக்கிறது.

பாலு மகேந்திரா - புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவில் தங்கப்பதக்கம்.(சினிமா மேல் உள்ள ஆசையால் தம்பியை இந்த கல்லூரியில் தான் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த கல்லூரியின் கட்டணத்தைப் பார்த்து பின் வாங்கியிருந்தோம்.பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் விஸ்காம் படித்து விட்டு சி.டி.எஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறான்.சினிமா கனவு அடுத்த தலைமுறைக்குத் தள்ளி வைக்கப்பட்டது).முதல் படம் மலையாளத்தில் அதற்கு மா நில அரசு விருது.படம் பெயர் நெல்லு.(இந்த பெயரில் நாம் இப்போது தான் படம் எடுக்கிறோம்.அதுவும் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று சொன்னப் பிறகு.பெயர் வைப்பதில் கூட நாம் எங்கே இருக்கிறோம் என்பதற்கு இது தான் நிதர்சனம்.அப்ப கதையில் - ?????)

ரவி.கே.சந்திரன் ஒரு முறை பாலு மகேந்திரா கேமிரா வைத்த இடத்தில் வைத்த கோணத்தில் நாங்கள் சின்னப் பிள்ளைகள் மாதிரி கேமிரா வைத்து சந்தோஷப்படுவோம் என்று சொன்னார்.காரணம் ஷோபாவை பாலு மகேந்திராவின் கேமராவைத் தவிர யாருடைய கேமிராவும் அவ்வளவு அழகாக காட்டவில்லை.உதாரணம் முள்ளும் மலரும் - செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்.அழியாத கோலங்கள்,மூடுபனி.காரணம் கேட்டப் போது பாலு மகேந்திரா சொன்னாராம் - "நான் ஷோபாவை காதலோடு பார்த்தேன்.."

தமிழில் முள்ளும் மலரும் படத்திற்கு பிறகு அவர் பிற இயக்குனர்களின் படங்களில் ஒளிப்பதிவு செய்யவில்லை.அவர் ஒளிப்பதிவு மட்டும் செய்ய ஆசைப்பட்ட இயக்குனர்கள் இருவர் தான் - மணிரத்னம்,கற்றது தமிழ் ராம்.

இயக்கிய முதல் படம் - கோகிலா.கன்னடத்தில் கமல்,ஷோபா,மோகன் நடித்தது.கமல் நடிப்பை விமர்சனம் செய்த மதனுக்கு கமல் இந்தப் படத்தை சிபாரிசு செய்தாராம்.கமல் நடிப்பின் உச்சம் தொட்ட படம் என்று சொல்லலாம்.காரணம் பாலு மகேந்திரா மற்றும் யதார்த்தம்.

இன்று அவர் சினிமா கற்றுக் கொடுத்த இயக்குனர்கள் வழியாக அந்த யதார்த்தம் தமிழ் சினிமாவில் தொலையாமல் இருக்கிறது.

இன்று பெரிதாக பேசப்படும் இயக்குனர்கள் பாலா,ராம்,வெற்றிமாறன் எல்லாரும் குறைந்தப் பட்சம் அவருடன் எட்டு ஆண்டுகள் இருந்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள்.

இளையராஜாவை விட்டு எல்லோரும் ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றாலும் விதிவிலக்கு பாலு மகேந்திரா,கமல் (அவர் இயக்கும் படத்தில் இளையராஜா இருப்பார்.அவர் இயக்க நினைத்த மர்மயோகியில் ஏ.ஆர்.ரகுமானோடு இணைய நினைத்தாலும் விதி அவரை செய்ய விடவில்லை.)

அவுட் ஹவுஸில் பாலா தங்க வைத்து காலையில் எழுப்பி ஆங்கில நாளிதழ்கள் படிக்க சொல்வாராம்.சத்தம் வீடு வரை கேட்க வேண்டும் என்று சொல்வாராம். பாலா தனியாக முதல் படம் செய்யும் போது பாலு மகேந்திராவின் குரு குடுத்த வியூ வைண்டரை குடுத்தாராம்.பாலா அதை அமீருக்கு பருத்தி வீரன் வந்த பிறகு கழுத்தில் மாலையாக போட்டாராம்.அந்த பரிசை எட்டி உதைக்கும் விதமாக யோகி வந்து விட்டது.

குருகுல வாசம் போல் அவர் அருகில் இருந்து பிள்ளைகள் போல் வளர்ந்து சினிமா கற்றுக் கொண்டதன் பயன் தான் யதார்த்தம் - பாலாவின் சீடர்களிடமும் கொஞ்சம் இருக்கிறது.அதற்கு பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம்(எனக்கு இந்த இரண்டு படங்களும் பிடிக்கவில்லை அது வேறு விஷயம்).

பொல்லாதவன் - வில்லனை கூட கம்பீரமாக சித்தரித்த படம்.கற்றது தமிழ் - சில் காட்சிகளும் பாடல்களும் எனக்கு பிடித்து இருந்தது.

பாடல் காட்சிகளை நடன இயக்குனர்களிடன் குடுத்து நடனம் அமைக்காமல்,காட்சிகள் மூலமாகவே நகர்த்த தெரிந்த இயக்குனர்கள் தான் முழுமையானவர்கள்.பிண்ணனியில் பாடல்கள் ஒலிக்கும் (சேது,பிதாமகன்,பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம்,பொல்லாதவன்,கற்றது தமிழ் - இப்படி எல்லாமே பாலு மகேந்திராவின் வாரிசுகள் தான் அல்லது அவரின் வாரிசுகளுக்கு வாரிசுகள்)

நிறைய வெளிபடங்களைத் தழுவி இருந்தாலும் அதில் நேடிவிட்டி இருக்கும்.ஒரு பெரிய அதிசயம் என்னவென்றால் சைக்கோ பார்த்துக் கொண்டிருக்கும் பாதியிலேயே அதை கண்டுப்பிடித்து விட்டேன் அதை தமிழில் மூடுபனியாக பார்த்து இருக்கிறேன் என்று.அதனால் பாதியிலேயே படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.மூடுபனி பாடல்கள் படத்தில் தவிர எதுவும் உருப்படி இல்லை.

1993ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதிற்காக தேவர் மகனும்,ரோஜாவும் மோதிக் கொண்டது.அதை முடிவு செய்யப் போவது பாலு மகேந்திராவின் ஒரு ஓட்டு.கமலும்,இளையராஜாவும் பாலு மகேந்திராவுக்கு நெருங்கிய நண்பர்கள்.ஆனால் அவர் ஓட்டுப் போட்டது ரோஜாவுக்கு. காரணம் முதல் படத்திலேயே சாதித்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அவர் கொடுத்த அங்கீகாரம்.மோதிர கைக்குட்டு.

கட்டணம் செலுத்தி அவரிடம் மாணவர்கள் படித்தாலும் இனி ஒரு பாலா உருவாவது கஷ்டம் தான்.முதலிலேயே குரு தட்சிணை குடுத்து படிப்பவர்களிலிருந்து யாரும் அவ்வாறு உருவாவது கிடையாது.

வாத்தியார் பிள்ளை மக்கு என்பது போல அவர் மகன் ஷங்கி பெரிய அளவு சாதிக்கவில்லை.ஷங்கியின் மகன் இன்னொரு பாலு மகேந்திராவாக வர வாழ்த்துக்கள். நிச்சயம் வருவார் என்று பாலு மகேந்திராவின் சந்தோஷத்தில் தெரிகிறது.

Monday, January 24, 2011

கண்ணம்மா.. கம்முனு கிட..

திரும்பவும் அவள். கனவு மாதிரியும் தெரியவில்லை.அதுவும் குறிப்பாக சலனமற்ற அவளின் ஒரு பக்க முகம் கோபத்தை விட வேறு எதையோ தூண்டுவதாகயிருந்தது.அவள் பார்வையில் இருந்து விலகி என்னில்,என்னுள் அவள் விலகாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.இன்னும் அழகாகியிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

யாருக்காக காத்திருக்கிறேன் என்று தெரியாத அளவிற்கு எரிச்சல் காரணம் வெயிலாக இருக்குமோ என்று சூரியனை முறைத்தால் அதிகம் சுட்டது.காற்றில் கூட அனல் வீசியது.கெட்ட வார்த்தைகளை மனதுக்குள் தெளித்து கொண்டேன்.கொஞ்ச நேரத்தில் எல்லாம் மாறிக் கொண்டிருப்பது தெரிந்தது காரணம் வந்தவனுடன் ஒரு பெண்ணுமிருந்தாள்.அவள் கண்களில் என் முகம் தெரியுமளவிற்கு பார்வைகள் பரிவர்த்தனை நடத்தாதே என்று அவள் கவனிக்காத சமயம் காதில் அவன் சொன்னான்.

ரேகா என்று யாரோ என் பின்னால் இருந்தபடி கூப்பிட திரும்பியவள் கண்களில் கண நேர அதிர்ச்சி தெரிந்தது.எப்படி மறைவது என்று தெரியாமல் சிலையாகிருந்தேன்.

ரேகா....................அவன் சொன்ன குட்டிப் புராணத்தில் பெயர் தவிர ஒன்றும் கேட்காமல் அவளையே பார்த்துக் கொண்டு ஸ்தம்பித்து போயிருந்தேன்.காரணம் தெரிந்த புராணத்தைத் தெரிந்து என்ன பிரயோஜனம்.

ரேகாவும் நடுத்தரமும் கதை பேச தொடங்க,அவள் காதையும் வாயையும் அவளுக்கு கொடுத்து விட்டு கண்களால் என்னோடு பேசிக் கொண்டிருந்தாள்."போ..போ.." என்று கெஞ்சுவது போலிருந்ததால் இன்னும் கெஞ்சட்டுமே என்று போக மனமில்லாமல் நின்றேன்.

ரேகாவை பார்த்துக் கொண்டே இருவரும் பேசிக் கொண்டேயிருந்தோம்.சாலையின் அடர்த்தி அதிகமாக தொடங்கியது.அறுவை தாங்க முடியாமல் வீட்டுக்கு போகலாம் என்ற எண்ணத்தில் அவளை பார்க்க, கண்கள் விரிய "இன்னும் கொஞ்ச நேரம்.." கண்களால் கொஞ்சினாள். இன்னொரு முறை கொஞ்சலுக்கு இடம் கொடுக்காமல் கதற கதற அவன் அறுவையை பொறுத்துக் கொண்டேன்.

"முகமே சரியில்லையே..யாரு தெரிந்தவனா.." என்று நடுத்தரம் கேட்க முதலில் திடுக்கிட்டாலும் "இல்ல..தெரிஞ்சவங்க மாதிரி இருந்தது.." சமாளித்து விட்டாள்.நடுத்தரம் தான் நம்பியது போல் தெரியவில்லை.மாமியார்காரியாக இருக்கும்.அவர்களின் மாமியாரும் இதே கேள்வியை கேட்டிருக்கலாம்.

"ரெண்டு பேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்களா.." அவன் கேள்வியில் ஏமாற்றம் தெரிந்தது."பரவாயில்ல..அறிமுகம் செய்ய வேண்டியது மிச்சம்..ரொம்ப ராவிட்ட மாதிரி தெரியுது.." கிண்டல் செய்து கொண்டிருந்தேன்.இப்போ ரேகா முறை எப்படி சந்தித்தோம்.எப்படி எல்லாம் காதல் சொன்னேன் என்று அவள் பங்கிற்கு பழிக்கு பழியாக அறுக்க தொடங்கினாள்.அவனுக்கு தான் இன்னும் நம்பிக்கை வரவில்லை.எப்படி வரும்.எனக்கு இப்படி ஒரு தேவதையா என்ற சந்தேகமாகயிருக்கும்.

போன் பண்ணியிருப்பாள் போல .பத்துக்கும் அதிகமான மிஸ்டு கால்.சாப்பிடாமல் தண்ணியடித்தது மயக்கத்தில் ஆழ்த்தி விட்டது.இன்னும் ஞாபகபிருக்கிறதா யோசிப்பதற்குள் திரும்ப அழைத்து விட்டாள்."இன்னும் நம்பர் மாத்தலையா.." முதலில் கேள்வி சம்பிரதாயமாக ஆரம்பித்தது."நீ வாங்கி கொடுத்தது தானே..அதான் மாத்தல" அவளுக்கு ஞாபகப்படுத்தினேன்."டோன்ட் மீ சில்லி..அண்ட் டோன்ட் எவர் ட்ரை டூ கிரியேட் சீன்.." கோபம் கூட இங்கீலிஸ் பேசுனா தான் வரும் போல என்று நினைத்து கொண்டேன்.பிறகு அவளே சமாதானாமாகி "இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா என் மாமி கிட்ட மாட்டியிருப்பேன்..நான் வர்றேன்..".சமாதானம் தமிழில் செய்தாள். என்னோடு சேர்த்து தமிழும் ஞாபகம் இருக்கிறது என்று நினைத்து கொண்டேன்.

ஏர்டெல் ஜோடி கார்ட் வாங்கி தந்தாள்."கூட்டுத் தொகை உன் சைஸ் சொல்லுது.." என்று சொன்னவுடம் "இப்படி கூட்டி கழித்து பார் செருப்பு சைஸ் வரும்.." சொல்லி விட்டு அவளே சிரித்தாள்.அவள் கோபம் கானல் நீர் போல மறைந்தது.எல்லா செலவும் அவளே செய்வாள்."நீ கொடுத்து வைச்சவன்.." யாராவது சொல்லும் போது கடைவாய் வரை நீண்ட சிரிப்பு மட்டும் தான் பதிலாக இருந்தது.

அதே கடைவாய் சிரிப்பு பட்டம் தான் மாறி விட்டது."இளிச்சவாயன்.." என்று.வந்தவளை முழுதாக பார்த்தேன்.மூக்குத்தி குத்தியிருந்தாள்.இன்னும் அழகாகத் தெரிந்தது அழுக்கு அறை.எடுத்தவுடம் மூக்குத்தியைப் பற்றி அவளே சொன்னாள்.அவனுக்கு பிடிக்குமாம்."பெரிய பெண்ணாகி விட்டாய்.." மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

"மூக்குத்தி போட்டுக் கொள்..அழகாகயிருக்கும்.." வற்புறுத்தினாள் கூட மறுத்து விடுவாள்."பெரிய பெண் மாதிரி தெரிவேன்.." காரணம் கூட மெலிதாகயிருக்கும்.

கொஞ்சம் அதிகமாகவே பதற்றப்பட்டாள்.போனில் அவனாகயிருக்கும்.கொஞ்ச நேரத்தையும் யாராவது இப்படி கெடுத்து விடுவார்கள் என்று நினைத்து கொண்டேன்."சரி கண்ணம்மா.." என்பது மட்டும் கேட்டது.பிடிக்காத வார்த்தைகள் மட்டும் காதில் விழுவதேன்.பாரதி போல அவளுடைய அவனும் செத்து போனால் எப்படி இருக்கும் யோசிக்கும் போதே மனது இனித்தது.

"கண்ணம்மா.." கூப்பிட்டால் போச்சு கோபத்தில் பொறிவாள்."கால் மீ ரேகா.." காரணம் அப்படி கூப்பிட்ட பாரதி முப்பதுகளின் தொடக்கத்திலே இறந்து விட்டானாம்.

மடியில் படுத்திருந்தேன்.முத்தம் கொடுக்க முகத்தை நோக்கி முன்னேறினேன்.முகத்தை திருப்பி கொண்டாள் வலுக்கட்டாயமாகத் திருப்பியவுடன் உதட்டை மடித்திருந்தாள்."நான் இப்போ வேறொருத்தன் பொண்டாட்டி..தே... இல்ல..".எனக்கு எப்படி தெரியும் அடுத்தவன் பொண்டாட்டியோ தே...யோ இப்படித்தான் இருப்பாள் என.

உதட்டை குவித்து வைத்து கொண்டு "முத்தமிடேன் முட்டாளே.." சொல்லும் போதே உள்ளுக்குள் ஏதோ கிறங்கும்.அது தாங்க முடியாமல் "ஐட்டம் மாதிரி செய்யாதே.." தெரியாமல் வந்து விட்டது."அங்க எல்லாம் நீ போவியா.." என்று சண்டை.சமாதானம் செய்யவே கொஞ்ச நேரம் ஆனது.முத்தமிட நேரம் எடுத்துக் கொண்டேன்.

"இனிமே நான் இங்க வர மாட்டேன்..ஏதோ என்னால் தான் இப்படி இருக்கிறாய் என்று வந்தேன்..இது தான் கடைசி..என்னை தொல்லை பண்ணாதே..ப்ளீஸ்..இனிமே என்ன பாக்க வராதே.." அழுதவளை அணைத்து கைகளை சற்றே மேய விட்டேன்."ஆடைகளை அவிழ்க்காமல் என்ன வேண்டுமானாலும் செய்.." சொன்னதும் அசிங்கத்தை மிதித்தவனாய் அவள் நிர்வாண முகத்தில் கை வைத்து தள்ளினேன்.

எல்லாம் முடிந்திருந்த காலம்.அவ்வளவு நெருக்கம்.ஆடையில்லாத மேனியை விட தலையில் ஸ்கார்ப் போதை ஏற்றியது.ஒருநாள் அப்பா,அம்மா,நாய்க்குட்டி கதை.அழுத்தி கேட்டேன்."நான் காதலிக்க தான் லாயக்காம்..கல்யாணத்திற்கு இல்லையாம்.." எங்கே கை வைத்தேன் என்று தெரியவில்லை.கோபத்தில் கண் மண் தெரியவில்லை.

அவள் இருக்கும் போதே ஏமாற்றத்தில் கையை அறுத்து கொண்டேன்."செத்து தொலை..ஏன் என்னை இப்படி தொல்லை செய்கிறாய்.." என்று கத்தினாள்.முதல் முறையாக பிழைக்க ஆசைப்பட்டேன்..

வேகமாக பைக் ஓட்டி லாரியில் மோதி இரத்தமிழந்து சில பல எலும்புகள் உடைந்து ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்தேன்.வந்தவள் நிறைய அழுதாள்.எனக்காக ஒருத்தி அழும் போது சந்தோஷமாகயிருந்தது."வீணை அறுந்த உணர்வு.." என்றாள்.இன்னொரு முறை இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.எந்திரிக்க முடியவில்லை பின் எங்கிருந்து இறக்க முடியாமல் மடங்கினேன்.

பிழைத்தால் அவளை கொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.வீணை,அறுந்த தந்தி,பாரதி,கண்ணம்மா,தே..முத்தம்.ஐட்டம், ஸ்கார்ப் என்று கண்டபடி நினைவு ஓடி அறுந்து விடும் போலிருந்தது.

நாலாவது நாள் கல்யாணப் பத்திரிக்கை வைத்து கருணை கொலை செய்தாள்.வேறு வீணை கிடைத்து விட்டது போலும் நினைத்தவுடன் மயங்கி போனேன்.

பிழைத்தால் அவளை கொன்ற கதை சொல்கிறேன்

மயக்கத்தில் இருந்த மீண்டால் புது வீணை எப்படியிருந்தது என்று சொல்லவும்.

Thursday, January 20, 2011

இஃப் எல்ஸ் காதல் கல்யாணம்

பத்தாவது பொதுத் தேர்வின் போது ஏதோ ஒரு பரிட்சையை முடித்து விட்டு தேறுமா தேறாதா என்று எல்லோருமே பார்த்துக் கொண்டிருந்தோம்.நண்பன் ஒருவன் மட்டும் சோகமாக இருந்தான்."என்னடா சிவகுமார் பேப்பர் காட்ட மாட்டேன்னு சொல்லிட்டானா..அவனுக்கும் எனக்கும் ஒரு கணக்கு இருக்கு..இதையே காரணமா வைச்சு அடிச்சிரலாம்..பாஸ் மார்க் வந்துரும் தானே.." என்று ஆறுதல் படுத்தினேன்."அது இல்லடா..இது வேற.." இன்னும் சோகமாக சொன்னான்.

"என்ன அக்கா அடிச்சிட்டாளா..அவள எல்லாம் நீ தாண்டா சமாளிக்கணும்..அவள் அடிக்க எல்லாம் ஆள் செட் பண்ண முடியாது.." நிலைமையை மாற்ற அவனை கடித்து கொண்டிருந்தேன்.

"அதுவும் இல்ல..இது வேற.."

"_____ சொல்லித் தொலடா _____..நானும் பாக்குறேன்..அது இல்ல..இது இல்லன்னு உயிர வாங்காத.."

கெட்ட வார்த்தை வேலை செய்தது."சொன்னா அடிக்க கூடாது.." சொல்லும் போதே சட்டையை மடித்து விட்டு கொண்டேன்."எங்க வீட்டுக்கு ஒரு ஜோசியக்காரன் வருவான்..அவன் சொன்னான்.."

"என்னடா சொன்னான்..உனக்கு நாளைக்கு கல்யாணம் ஆயிரும்னு சொன்னானா..நல்ல விஷயம் தானே..நீயும் உன் பையனும் இன்னும் பதினைந்து வருஷம் கழிச்சி ஒண்ணா பிட்டடிச்சி டென்த் பாஸ் பண்ணலாம்.."

"இல்லடா டெண்டுல்கர் செத்துப் போயிருவான்னு சொன்னான்டா.."

"இந்த வருஷம் இங்கிலாந்துல வேர்ல்ட் கப் இருக்கு..அதெல்லாம் எப்படிடா நடக்கும்..அவன் சொன்னான்னு நீயும் ஏண்டா.." எனக்கு பரிட்சை பயம் போய் இந்த விஷயம் என்னை ஆக்ரமித்திருந்தது.

"நீ நம்பலையா..அவன் சொன்னது எல்லாம் நடந்து இருக்கு.."

"என்ன அவன் சொல்லி தான் ஆடு மாடு எல்லாம் நடக்குதா..ஒன்பதாம் தேதி படையப்பா ரீலிஸ்..பதிமூணு சோசியல்..இரண்டரை மணி ஷோ ஒகேவா.." பேச்சு படையப்பாவிற்கு மாறியிருந்தது.நானும் டெண்டுல்கர் விஷயத்தையும் மறந்து விட்டேன்.

முதல் போட்டி சவுத் ஆப்ரிக்காவிடம் மவுத் ஆகி விட்டோம்.காலையில் தூங்கி கொண்டிருக்கும் போதே போன்."அவன் சொன்ன மாதிரியே நடந்திரிச்சி..டெண்டுல்கர் இறந்துட்டானாம்..வயசுல மட்டும் தான் இடிக்குது.."

விசாரித்த போது தான் தெரிந்தது.அது ரமேஷ் டெண்டுல்கர் என்று.சச்சின் இந்தியா வந்து விட்டார்.ஜிம்பாபேயுடனான மேட்ச்சில் சச்சின் இல்லாத காரணத்தால் மூன்று ரன்னில் காலி.இப்படியே போனால் அடுத்த போட்டியிலும் கென்யாவுடன் தோற்று விடுவோம் என்ற நிலைமை.சச்சின் வந்து அடித்தவுடன் தான் வெற்றி.ஜிம்பாபேவுடன் தோற்றதால் சூப்பர் சிக்ஸில் எல்லா போட்டியையும் ஜெயிக்க வேண்டிய நிலைமை.அதோடு வெளியே வந்து விட்டோம்.

அதிலிருந்து ஜோசியம் பார்ப்பதென்றால் ஒரு அலாதி பிரியம் தான்.என்னைக்கு என் வேலை விஷயத்தில் குறி சொன்னார்களோ அதில் இருந்து ஒரு பயம் கலந்த வெறுப்பு.நல்லதாக சொன்னால் ஏற்றுக் கொள்ளும் மனதிற்கு கெட்டதாக சொன்னால் ஏற்க கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறது.பல வருடங்கள்,பல நாட்கள் ஆன நிலையில் என் கையை பார்ப்பேன் என்று அடம் பிடித்து சொன்னவை இங்கே.போல்ட் பாண்டில் அவர் சொன்னது.

"நீ ஒரு புத்திசாலி..ஆனால் அதை வெளியே சொன்னால் அது மற்றவர்களுக்கு தெரியும்.. ஏன் வெளியே சொல்வதேயில்லை.."

"நான் ஒரு புத்திசாலின்னு நானே சொன்னா மட்டும் தான் உண்டு.என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே.." - வெளியே சொல்லவில்லை.

"நீ இன்னும் ஐம்பது வருஷம் உயிரோடு இருப்ப.."

"இன்னும் அத்தனை நாள் பதிவு படிக்கிறவன் நிலைமை தான் மோசம் இல்ல மோஷன்.."

"உன் கையில பணம் தங்காது.."

"தங்கிட்டாலும்..சின்ன வயசிலேயே தெரியும் என் கை ஓட்டக்கை என்று.கையை குமித்து தண்ணீரை அள்ள சொல்வார்கள்.தண்ணீர் உள்ளங்கையில் தேங்கி நின்றால் பணம் நிற்கும் என்றும் இல்லை என்றால் நிற்காது என்றும் சொல்வார்கள்.."

"உன் இதயத்தை மட்டும் பத்திரமா பார்த்துக்கோ.."

"உண்மை தான்..அடிக்கடி துடிக்குது.." என் எண்ணம் அவருக்கு தெரிந்து விட்டது என்று நினைக்கிறேன்.உடனே

"உனக்கு இன்னும் ஒரு வருஷத்துல கல்யாணம் ஆயிரும்.."

"விளங்கும்..குழந்தை திருமணம் தப்பில்ல.." என்று நினைத்து கொண்டேன்.

"உனக்கு ஒரு காதல் இருந்தது.அதுவும் பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுகளில்..சற்றே யோசித்து விட்டு தீவிரமான காதல் நீயில்லாமல் நானில்லை என்று உருகி இருப்பீர்களே.."

சொல்லும் போது நான் இடைமறித்தேன்."அதி தீவிரமான காதல்.." என்று சொல்லி விட்டு நினைத்து கொண்டேன்."நான் அந்த சமயத்தில் மூன்று பெயரை காதலித்தேன்.ஜோசியத்துல எந்த பொண்ணு என்று சொல்ல முடிந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.மூணு பேர்ல ஒருத்திக்கு கல்யாணம் ஆகவில்லை.என்னை விட அதிக சம்பளம் வேற வாங்குறாளாம்.மனதிற்குள் இஃப் எல்ஸ் ஓடிக்கொண்டிருந்தது."

இஃப் (நான் காதலித்த பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தால்) தென்

இஃப் (அவள் கணவனிடம் கேட்டுப் பாக்கலாம்) தென்

இஃப் (அவள் தொல்லை பொறுக்காமல் சரி என்றால்) தென்

சும்மா சொன்னேன் என்று சமாளிக்கலாம்

எல்ஸ் இஃப் (என்ன கொழுப்பா என்றால்) தென்

வீட்டில் பெண் பார்க்க சொல்லலாம்.

எண்ட் இஃப்

எல்ஸ் இப் (அவளிடமே கேட்டுப் பாக்கலாம்) தென்

இஃப் (என் புருஷன் கிட்ட கேட்டு சொல்றேன் என்று சொன்னால்) தென்

வீட்டில் பெண் பார்க்க சொல்லலாம்.

எல்ஸ் இஃப் (சரி என்று சொன்னால்) தென்

சும்மா சொன்னேன் என்று சிரிக்கலாம்.இன்னைக்கு ஏப்ரல் ஒண்ணு இல்லையா என்று கேட்கலாம்

எண்ட் இஃப்

எண்ட் இஃப்

எல்ஸ் இஃப் (நான் காதலித்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகாமலிருந்தால்) தென்

இஃப் (அவளுக்கும் விருப்பமிருந்தால்) தென்

கிவ் மீ எ சான்ஸ் என்று சொல்லாம்.

எல்ஸ் இஃப் (திரும்பவும் நீயா என்று சொன்னால்) தென்

வீட்டில் பெண் பார்க்க சொல்லலாம்.

எண்ட் இஃப்

எண்ட் இஃப்

இதை அம்மாவிடம் சொன்னால் திட்டு விழும்."ஆமா எந்த வேலையை தான் ஒழுங்கா செஞ்சிருக்க..சாப்பிடும் போது படிச்சுக்கிட்டே டிவி பாக்குறது.எதுலையும் உருப்படி இல்ல.." அதே பதினெட்டு வயதில் அம்மா கத்தியது ஏனோ நினைவுக்கு வந்தது.

திரும்பவும் சோசியம் மீது லேசாக நம்பிக்கை வந்தது.

Tuesday, January 18, 2011

ஆடுகளம் அயூப் பேசுறேன்

நான் அயூப்.பேட்டைக்காரனுக்கு தெரிஞ்சது எல்லாம் சேவல் சண்டை மட்டும் தான். இந்த நாப்பது வருசத்துல எனக்கு தெரிஞ்சது பேட்டைக்காரனும், சேவலுக்கு போடுற நரம்புத்தையலும் தான். பேட்டைக்காரனுக்கு சேவல்களைக் கணிக்கத் தெரியும்.எனக்கு மனுஷங்களை. சேவல் சண்டையே ஒரு போர் தான். காதலுக்காவும்,போருக்காவும் என்ன செய்தாலும் தப்பேயில்ல. காதல்னு சொன்னதும் தான் இது ஞாபகத்துக்கு வருது.பேட்டைக்காரனைக் சேவல் சண்டையில பாத்த ஒரு சின்ன வயசுப் பொண்ணு அவரையே கல்யாணம் பண்ணிக்கிச்சி. கொஞ்சம் கொஞ்சமா சின்ன வயசுப்பசங்களும் எங்களுக்கு அடுத்து வர ஆரம்பிச்சாங்க. குறிப்பா சொல்லணும்னா இரண்டு பேரு.

ஒருத்தன் கருப்பு. சேவலைக் கணிக்க தெரிஞ்ச அளவுக்கு மனுஷங்களைக் கணிக்க தெரியாதவன். இல்லன்னா காதலிக்கிறேன்னு சும்மா சொன்ன பொண்ணை நம்பி ரோட்டுல டப்பாக்கட்டையும் அவுத்துட்டு ஆடுவானா. ஆனா எங்க தட்டுனா யார் விழுங்காங்கன்னு பயலுக்குத் தெரியும். அவனையே நம்பியிருக்கிற அவன் ஆத்தா.

இன்னொருத்தன் துரை. கொஞ்ச வசதியுள்ளவன். இவனுக்கும் ஆளுங்களைக் கணிக்கத் தெரியாது. ஆனா துரோகம்னு தெரிஞ்சா கொல்லாம விட மாட்டான். உதவி செஞ்சா எதிராளினாலும் நட்பு பாராட்டுவான்.

எங்களுக்கு எதிரா ரத்தினம்.லோக்கல் இன்ஸ். சேவல் சண்டையில என்னைக்காவது எங்களை ஜெயிக்கலாம்னு எண்ணத்தை அவனுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே சொல்லி வளத்த அவன் ஆத்தா. அவன் அப்பன் அளவுக்கு இல்லன்னாலும் கொஞ்சம் நேர்மையானவன்.

துரையால ரத்தினம் கிடா வெட்டுற இடத்துக்கு நான் போனேன். தண்ணியடிச்சேன். ஒரு பாட்டிலும் வாங்கிட்டுப் புறப்படலாம்னு பாத்தா பொண்ணு கல்யாணத்துக்கு வண்டி வாங்கித் தர்றேன்னு சொன்னதும் பாட்டில எறிஞ்சிட்டு வந்துட்டேன்.

வீட்டுக்கு சைக்கிள்ல வரும் போது லாரி இடிக்குறாப்ல வந்துச்சி. இடிக்கிறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி தான் நினைச்சிக்கிட்டேன். பேட்டைக்காரனை நான் விட்டுட்டு வந்திருந்தாலும் இது தான் நடந்திருக்கும். ஆனா வேற மாதிரி.காரணம் ரத்தினம் எங்களுக்கு எதிரி. பேட்டைக்காரனை சொன்னதுக்கு எதிரா நடந்தாலே அவன் துரோகியா மாறிடுவான்.

டொப்னு ஒரு சத்தம்.அப்புறம் எனக்கு நினைவேயில்ல. என் பொண்டாட்டி பிள்ளைங்களை துரை,கருப்பு ரெண்டும் பேரும் பாத்துப்பாங்கன்னு நினைப்பே என்னை கொன்னுப் போட்டுரிச்சி.

லாரி நிக்கவேயில்ல.

Wednesday, January 5, 2011

2009 - சாரு புத்தக விழா

முதலில் விழாவைத் தொகுத்து வழங்க வருகிறார் நிர்மலா பெரியசாமி.

கீழிருந்து "ஒஜாரி ஒயே.." அப்படி சத்தம் வருகிறது.யார் என்று பார்த்தால் மதன்பாப் முதல் முறையாக புத்தகம் வெளியீடுவதால் அசத்தப் போவது யார் நிகழ்ச்சியில் இருந்து ஒரு குரூப் கோய் சூட்டோடு முதல் வரிசையில் அமர்ந்து இருக்கிறார்கள்.

"வணக்கம்ம்ம்ம்ம்ம்.." என்று நிர்மலா பெரியசாமி ஆரம்பித்தவுடன் சுதாரித்து கடைசி வரிசையில் பம்மி விடுகிறார்கள்.

"அது உஷா இல்லடா.." கோவை குணா சோகத்துடன் சொல்ல அதை கவனிக்காமல் கோட் பட்டனை சரி செய்து கொண்டு இருக்கிறார் மதுரை முத்து.

"வழக்கம் போல நான் தான் முதல்ல..ஆனா என்ன ஒரே ஒரு குறை சிட்டி பாபு சார் தான் வரலை..அவருக்கு பதிலா பத்து ஜட்ஜ்.."

"வந்துட்டாலும்..சனிக்கிழமை ஆனாலே இப்படி கிறுக்குப் பிடிச்சி திரியிறானே.." குணா சோகத்துடன் மேலே பார்க்கிறார்.

"முதலில் விழாவைத் தொகுத்து வழங்குபவர் மனுஷ்யபுத்திரன்.." நிர்மலா பெரியசாமி அறிவிக்கிறார்.

"என்ன அண்ணே என்ன கூப்பிடவே இல்ல..இவரு என்ன விட நல்லா காமெடி பண்ணுவாரா.." இப்படி முத்து புலம்பியது நின்று கொண்டு விழாவைப் பார்க்கும் நர்சிம் காதில் விழுகிறது.

"என்ணங்கள் எழுத வேண்டிய கையால அடிச்சேன் கன்னம் பழுத்துரும்..ஒரே ஊர்காரனா போயிட்ட..அதனாலா சும்மா விடுறேன்.." நர்சிம் கோபத்தில் திட்டுகிறார்.

"இங்கேயும் ஊர்பாசமா..இதே திண்டிவனம் காரன் சொல்லியிருந்தா சும்மா விடுவீங்களா.." என்று ஒரு வளரும் பதிவர் கேட்கிறார்.

"இப்படி சொன்ன உடனே பாம்பேயில இருக்கிறவனுக்கு மூக்கு வேர்த்துரும்..சும்மாவே பாய்ந்து வருவான்.." நர்சிம் சமாதானமாக சொல்கிறார்.

குஜராத் மண்ணின் மோடி மஸ்தான் கேபிளுக்கு போன் போடுகிறார்.சரியாக எஸ்.ராமகிருஷ்ணன் பேச வருகிறார்.கேபிள் ஸ்பீக்கரில் போடுகிறார்.

எஸ்.ராவின் குரல் கேட்கிறது - "மலாவி தேசத்திற்கு போகாமலே அதை விவரித்த பாங்கு அருமையானது.."

குஜராத் மோடி மஸ்தான் கத்துகிறார் - "இது என்ன பிரமாதம்..அவரு சிஷ்யன் இல்ல இப்படி சொன்னா தான் சரியா இருக்கும் அடியாள் ஒருத்தன் ட்ரெயிலர் பாத்தே விமர்சனம் பண்ணுவான்.."

வளரும் பதிவர் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.("இவங்க ஊர்காரர் அமீரை அடிச்ச கோபம்..அதனாலத் தான் இந்த விமர்சனம் வெப்பம்..இல்லன்னா ஒண்ணா தான் திரிவாணுங்க..வெளியில என்னமா நடிக்கிறாங்க..உலக நடிப்புடா சாமி..பாசத்துல மதுரை நெல்லையை விண் பண்ணிரும் போல..")

நர்சிம் மனதுக்குள் நினைத்து சிரிக்கிறார்.("மைன்ட் வாய்ஸ் இங்க வரை கேக்குது..விஜய்யை விட நல்லா நடிக்க முடியுமா..")

கேபிள் - "ஆமா நான் கூட சாருவின் சிஷ்யனா சேரப் போறேன்..அப்பத்தான் நானும் இந்த வாரம் அப்படி தான் விமர்சனம் எழுதணும்.வேட்டைக்காரன் படத்தை வேற பாக்கணுமா..இப்பவே கண்ணக் கட்டுதே.."

மோடி மஸ்தான் - "இங்க வரைக்கும் விஷயம் தெரியும் போல..இன்"ஷூ"ரன்ஸ் கூட தர மாட்டேன் சொல்லிட்டாங்க.."

கேபிள் - "இதுல போலீஸ்காரங்களை எல்லாம் அடிக்கிறாரு..நடக்கிற விஷயமா..ஆனா போக்கிரியில் இவர் போலீஸா நடிச்சா ஒரு அடி கூடப் படாது.."

வளரும் பதிவர் - "ஹலோ..அவர் தமிழன் படத்துல கூட போலீஸை அடித்து இருக்கார்..அப்பவே கேக்க வேண்டியது.."

கேபிள் - "இப்போ நான் ஐ.பி.எஸ்.காந்தி கொலை கேஸ் எல்லாம் நான் தான் விசாரிக்கிறேன்..இந்த பதிவை எழுதியவன் தான் எனக்கும் அந்த பட்டம் குடுத்தான்.."

இரும்புத்திரை - "அண்ணா உங்களுக்கும் தெரிஞ்சிப் போச்சா..பதிவை எழுதியது நைனா தான்னு.."

நைனா - "ரைட் விடு.."

நிர்மலா பெரியசாமி - "இப்பொழுது மதன்பாப் பேசுவார்.."

மதன்பாப் - "ஹி..ஹி..இவரு ரொம்ப நல்ல எழுத்தாளர்..ஹி..ஹி..வேரைட்டி தான் இவரோட ஸ்பெஷல்..ஹி..ஹி..எப்பவும் அப்டூ டேட்டா இருப்பார்.. ஹி..ஹி..அதுலையும் ஸ்டாண்டப்..ஹி..ஹி.."

நர்சிம் - "பாப்பூ வைக்காதீங்க ஆப்பு.."

மதன்பாப் - "சாரு தான் நாலு வரி பேச சொன்னாரு.."

மதுரை முத்து - "என்னை மட்டும் திட்டுனீங்களே..எங்க ஜட்ஜ் கூட சனிக்கிழமை ஞாபகத்தில் தான் இருக்குறாரு.."

ஒரு வழியாக வந்து உக்காருகிறார்.

மிஷ்கினிடம் மதன்பாப் - "எப்படி சார் என் பெர்ஃபார்மன்ஸ்.."

வண்டு முருகன் வடிவேலுவை ஜட்ஜ் ஒரு பார்வை பார்ப்பாரே.அது மாதிரி மிஷ்கின் பார்க்கிறார்.மதன் பாப் திரும்பி கொள்கிறார்.

கடைசியாக சாரு பேச வருகிறார்.

சாரு - "யோகி படத்தில் மதுமிதா லுங்கி அணிந்து இருந்தார்..மூலப்படத்திலும் அது மாதிரி தான் இருந்தது.அது அப்பட்டமான காப்பி..ஆனால் நந்தலாலா அப்படி இல்லை..அங்கு நாயகன் சாதாரண உடையில் இருந்தார்.இங்கு மிஷ்கின் காவலாளி உடையில் இருக்கிறார்.."

மதன்பாப் - "நான் அப்பவே சொன்னேன்..நீங்க தான் கவனிக்கல..அங்கப் பாருங்க..ஸ்டாண்டப் காமெடி எப்படி பிச்சி உதறுறாரு.."

மிஷ்கின் அதை கவனிக்காமல் - "இங்கிட்டு மிஷ்கின்..அங்கிட்டு கமல் சாரா.."

மதன்பாப் - "இது கெஸ்ட் அசத்துற நேரம்..உங்க முதல் ரெண்டு படத்தில் உள்ள குத்துப்பாட்டு தான் பேசப்பட்டதுன்னு நீங்களே சொன்னீங்க..என்ன பண்ணப் போறீங்க..ஆடப் போறீங்களா..இல்ல பாடப் போறீங்களா..இல்ல நடிச்சி அசத்தப் போறீங்களா.."

மிஷ்கின் - "நடிச்சு தான் அசத்தப் போறேன்.." சொல்லி விட்டு அஞ்சாதே படத்தில் வருவது மாதிரி அந்த இடத்தை விட்டு ஓடி விடுகிறார்.

கடைசி வரிசையில் இருந்து "ஒஜாரி ஒயே.." என்று சத்தம் வருகிறது.பதிவர்கள் குரூப் பாய்ந்து வந்து அசத்தப் போவது யார் அணியை அள்ளிச் சென்று நன்றாக "கவனிக்கிறார்கள்".

பார்ட்டியில் ஒருவர் சாருவிடம் வந்து "நீங்க இதுக்கு வடிவேலுவையோ இல்ல கவுண்டமணியையோ கூப்பிட்டுக் கொண்டு வந்து இருக்கலாம்.."

கேபிள் ஓடி வருகிறார் - "அப்ப நீங்க தான் _வுச்சியா.."

கேள்வி கேட்டவர் இடத்தை விட்டு மெதுவாக நகர்ந்து விடுகிறார்.

கேபிள் - "உங்களை விமர்சனம் செய்த _வுச்சி கூட உங்களுக்கு நல்லது செய்கிறார்..உங்க ஜால்ரா என்று சொல்லிக்கிட்டு மும்பையில் இருக்கிறவன் அது அவரு விழாவுக்கு வடிவேலு வரட்டும் என்று பதிவு போடுகிறான்..அவனை நம்பாதீங்க.."

தெலுங்கானா பிரிவை கேள்விப்பட்டு நைனாவிற்கு போன் செய்கிறார் இரும்புத்திரை.

இரும்புத்திரை - "நீங்க நெல்லைக்கு முதல்வரா..எனக்கு துணை முதல்வர் பதவியாவது குடுங்க.."

நைனா - "நீ சென்னை கேளு..புரியுதா வெண்ணை.."

இரும்புத்திரை - "சென்னை என் தல சாருவுக்கு.."

நைனா - "உனக்கு சென்னை வேணுமா..நான் சொல்ற மாதிரி கேளு..சாரு கிட்டப் போய் அடுத்த ஆண்டு புத்தக வெளியீடு விழாவுக்கு குமரிமுத்து தான் வரணும்னு அடம் பிடி.."

இரும்புத்திரை - "ஏன் என் குரு நாதருக்கு கூட்டம் சேர்ந்தா உனக்குப் பொறுக்காதே.."

நைனா - "நான் இதை வச்சு ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்..உன் ப்ளாக்குல நீயே போட்டுக்கோ.."

இரும்புத்திரை - "எப்படியோ ஹிட்ஸ் ஏறினா சரி.."

பதிவுப் போட்டப் பிறகு அதை படித்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்."யோவ் நைனா நீங்க அனுப்புறேன்னு சொன்ன வைரஸ் இது தானா..". பதிவை அழிக்க மறந்து மயங்கி விழுகிறார்.

நைனா - "வழக்கமா டிஸ்கி போடுவானே..நாம போடலையே..இத வைச்சே கண்டுப்பிடிச்சுருவாங்களே.."

மயங்கி கிடக்கும் இரும்புத்திரையை இழுத்து செல்கிறார் நைனா.எதுக்கு தெரியுமா பதுங்குக் குழியில் ஒரு மாமாங்கம் தங்கி ஒளிந்துக் கொள்ளத் தான்.

Tuesday, January 4, 2011

முத்தத்தின் விலை முப்பது டாலர்

இந்தியாவை விட்டு வந்த இருபதாவது நாளில் அவளுடைய பிறந்த நாள்.நான்கு வருடங்களாக நினைவுக்கு வராதது இந்த வருடம் நினைவுக்கு வந்தது ஆச்சர்யமாக தெரியவில்லை.நியூசிலாந்தில் இன்னும் பக்கத்தில் அவளிருப்பதால் கூட நினைவுக்கு வந்திருக்கக் கூடும்.பழைய நினைவுகளால் கடும் தலைவலி. இந்திய உணவகத்திற்கு இன்னும் நடக்க வேண்டும் என்ற நினைப்பே கூடுதல் தலைவலியை உண்டாக்கியது. ஜப்பானிய ரெஸ்டாரண்டைக் கடந்து சீன ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தேன்.நான் என்ன சொன்னேனோ அவன் என்ன புரிந்து கொண்டானோ தெரியவில்லை.எதையோ கொண்டு வந்தான்.பிடிக்கவில்லை என்றாலும் சாப்பிட்டு தொலைத்தேன் காரணம் இந்திய மதிப்பில் அது தொன்னூறு ரூபாய்.வாந்தி வருவது போலிருந்தது.என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டு ஏற்கனவே இங்கிருந்த நண்பனுக்கு தகவல் அனுப்பினேன்.

"டேய் பீர் அடி சரியாகி விடும்.." பதிலுக்கு தகவலனுப்பி விட்டு போனை அமர்த்தி விட்டான்.அந்த நாய் தான் என்கிரிப்ட் முறையைக் கண்டுப்பிடித்தது யார் என்று வகுப்பில் கேள்வி கேட்ட போது ஏதோ பீர் பெயரை சொல்ல அதை நானும் வாந்தியெடுக்க பின் வந்த அவள் வகுப்புகளில் நான் மொத்தமாக வெளியேற்றப்பட்டிருந்தேன்.உண்மையா என்று கேட்க முடிவு செய்து காலடித்து காலடித்து நான் ஒய்ந்து விட்டேன்.இனி நாளை தான் பேசுவான் என்று தெரிந்து விட்டது.

"வாட் யூ வான்ட் சார்.." என்று சத்தம் கேட்டது.அட என்னைக் கூட சார் என்று சொல்ல ஆளிருக்கிறதே என்பது தலைவலியைத் தாண்டி இனித்தது.

"பீர்.." சொல்லி விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.ஆரவாரமில்லாத அழகு அவளிடத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.தமிழ்ப்பெண்ணாக இருக்குமோ என்று அவளை இன்னும் உற்றுப் பார்க்கத் தொடங்கிருந்தேன்.

"ஒன் ஆபர் இஸ் தேர் வார் ஹாட்..பை ஒன் கெட் ஒன் ப்ரீ.." அவளுக்காகவே அதை வாங்கலாம் போலிருந்தது.சரி என்று தலையாட்டி வைத்தேன்.காலையில் தான் நண்பர் சொன்னது நினைவுக்கு வந்து தொலைத்தது."இங்கே கொஞ்சம் உஷாரா இரு இல்ல..சூ அடிச்சி சுண்ணாம்பு தடவுவாங்க.." காதில் ஒலித்த வார்த்தைகளால் இருக்கும் சூழ்நிலை தெரிந்தாலும் அவள் பிறந்த நாளென்பதால் யார் என்ன சொன்னாலும் கேட்க முடிவு செய்திருந்தேன்.அவள் பேச்சைக் கேட்பதில்லை என்று சொல்லித் தான் பிரிந்தாள்.அதனால் இன்று யார் என்ன சொன்னாலும் கேட்க முடிவு செய்திருந்தேன்.

கொண்டு வரப் போனவளிடம் "தமிழா.." என்று கேட்டு வைத்தேன்.பதிலை எதிர்பார்த்து உதடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்."தட் இஸ் நாட் அவேலபிள் சார்.." என்று சொன்னவுடன் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும் அவள் கண்களில் லேசான சிரிப்பு தெரிவது போல் ஒரு உணர்வு.

கொண்டு வந்ததை எதுவும் கலக்காமல் கல்ப் கல்ப்பாக அடித்தேன்.எல்லோரும் என்னைப் பார்ப்பது போல் உணர்ந்தாலும் அவள் எந்த மேஜையில் இருந்தாலும் என்னைக் கவனிப்பது கூடுதல் உற்சாகத்தைத் தந்தது.

இந்தியா மாதிரி இல்லை இங்கு ஜக் அல்லது மக் தான்.அந்த ஜக்கை முடித்து விட்டு "ஹேய்.." அவளை அழைத்து "ஒன் மோர்.." என்று சொன்னேன்.கொண்டு பக்கத்தில் வைத்து விட்டு "என்ன லவ் பெயிலியரா..ஏன் இப்படி அடிக்கிறீங்க..உடம்பு.." என்று அவள் முடிப்பதற்குள் "தட் இஸ் நாட் அவேலபிள் சார்.." என்று சொல்லும் போது என் கண்களால் சிரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.கண்ணைத் திறக்கவே முடியவில்லை எங்கு சிரிக்க.

"சரி தப்பு செய்துட்டேன்..தமிழ் தான்.. அடிக்கிறதை நிறுத்தப் போறீங்களா இல்லையா.."

"தமிழ் செம்மொழியாக மாறினாலும் மாறிச்சி..இங்கே அது சரக்காக மாறி விட்டதா..தட் இஸ் நாட் அவேலபிள் சார்.." சொல்லி விட்டு பலமாக சிரித்தேன்.

"இப்போ அதுக்கு என்ன பண்ணனும்.."

"ப்ரீன்னு சொன்னீங்களே..அதை எடுத்துட்டு வாங்க..அடிக்கணும்.."

"நீங்க பாதி காசு தந்தா போதும்..சரக்கெல்லாம் தர முடியாது.."

"இல்ல அது தான் வேணும்.."

"அதில்ல..நீங்க காசே தர வேண்டாம் .வீட்டுக்குப் போங்க முதல்ல.."

"டேய் மானேஜர்..இங்க வாடா.." கத்தத் தொடங்கியிருந்தேன்.எழுந்து கேஷியர் இருந்த இடத்திற்கு போகலாம் என்று நினைப்பதற்குள் கால் தடுக்கி விட்டது.முழுதாக விழுவதற்கு முன் அவள் தாங்கியிருந்தாள். நினைவிழந்து கொண்டிருந்தேன்.

நினைவிருப்பதாக நினைத்துக் கொண்டு "சரி கொண்டு வரேன்..கூட என்ன வேணும்.."

"முத்தம்.."

"என்ன..ஆங்க் தர்ட்டி டாலர்ஸ்.." அங்கு யாருக்கோ பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

எனக்கு தான் என்று நினைத்துக் கொண்டு "ஒரு முத்தம் முப்பது டாலர்ஸா..ஜாஸ்தியா இல்ல.." அவள் பதில் சொல்லும் முன் மயங்கிருந்தேன்.

கண் முழித்து பார்த்தால் ஹோட்டல் அறையில் கூடவே யாரோ ஒரு பெண்ணுமிருந்தாள். "வாட் ஆர் யூ டூயிங் ஹியர்.." சொன்னது போலவே இது வேறு ஏரியா போல் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

"என்னமா நடிக்கிற..முப்பது ரிங்கெட் ஒரு முத்தத்திற்கு ஜாஸ்தி என்று சொல்லி அதுவும் அந்த கடை ஒனர் கிட்டேயே முத்தம் கேக்குற.."

பாஸ்போர்ட்,பர்ஸ் எல்லாமிருக்கிறதா என்று சரி பார்த்துக் கொண்டேன்.அதுவும் அவளுக்கு தெரிந்து விட்டது.

"என்ன கொழுப்பா..உன்னை எல்லாம் அப்பவே ரோட்ல தூக்கிப் போட்டு இருக்கணும்.. எல்லாம் சரியாதான் இருக்கு..ஒசியில சரக்கடிச்சிட்டுப் பண்ற வேலையெல்லாம் பாரு..என்ன லவ் பெலியரா.."

"இங்க இருந்து நியூசிலாந்து எவ்வளவு தூரம்.."

"நான் என்ன கேக்குறேன்..நீ என்ன சொல்ற.."

"அங்கப் போக விசா வாங்கணுமா.."

"டாக்ஸில போக முடியுமா..எவ்வளவு நேரம் ஆகும்.."

"ஆள விடு சாமி..இப்போ தான் தெரியுது ஏன் லவ் பெயிலியர்னு..சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னா எந்தப் பொண்ணு தான் கூட இருப்பா..எதுக்கு நியூசிலாந்து.."

"அவ என்ன காரணம் சொல்லி நிராகரிச்சாளோ அப்படி எல்லாம் இப்ப இல்ல , நானும் இங்கதான் இருக்கேன்னு அவளுக்கு சொல்லணும்.."

"ஆர்குட்,பேஸ்புக் இப்படி எதிலயாவது போட வேண்டியது தானே..அவ பாத்து தெரிஞ்சிட்டுப் போறா.."

"நேர்ல தான் சொல்லணும்..எதுல போனா சீக்கிரம் போகலாம்.."

"நடந்து போ..முதல்ல காசைக் கொடு..அப்புறம் எப்படி வேணாலும் போ.." அவள் பொறுமை இழந்திருந்தாள்.

காசோடு ஒரு துண்டுச் சீட்டில் என் எண்ணையும் கூடவே நியூசிலாந்து எதில் போனால் சீக்கிரம் போகலாம் என்றும் கேட்டு வைத்திருந்தேன்.

மொபைல் அலறியது "என் நெஞ்சிலே ஒரு பூ பூத்தது.." ஏதோ ஒரு புது எண்.

"ப்ளைட்டில் நியூசிலாந்து இங்கிருந்து ஐந்து மணி நேரம்.ப்ளைட் வேண்டாம்..என்னிடம் ஹெலிகாப்டர் இருக்கிறது..வருகிறாயா :-).." என்றிருந்தது.

"ஏற்கனவே நீ தர வேண்டியது ஒன்று பாக்கியிருக்கிறது.." பதிலனுப்பினேன்.

"என்ன முத்தமா..நீ தான் காஸ்ட்லி என்று சொல்லி விட்டாயே.." என்று பதில் வந்தது.

"நான் சரக்கை சொன்னேன்..சரி சரக்கு மட்டும் தான் ஒண்ணு வாங்கினால் ஒண்ணு ப்ரீயா..நான் கேட்ட இன்னொன்று இல்லையா.." அனுப்பியிருந்தேன்

"எது முத்தமா.."

"இல்லை சைட்டிஸ்.." உள் மனது நீ கூடிய விரைவில் அடுத்த பாருக்கு போக வேண்டும் என்று சொன்னாலும் பதிலுக்காக காத்திருந்தேன்.