"ஒரே ஆம்பிளை வாசனை..இன்னும் கொஞ்ச நாள் தான்..இந்த வீட்ல பெண் வாசனை தான் அடிக்கும்.. நமக்கு பெண் குழந்தையா பிறக்கணும்.."
"ம்.. கேக்க நல்லாதானிருக்கு.."
பக்கத்து வீட்டிலிருந்து தான் சாப்பாடு கொண்டு தருவார்கள். "என்னடா நல்ல வாசனையா வருது.. யாராவது பொண்ணுங்க வந்தாங்களா.."
"இல்லையே..நான் இப்போ தான் குளிச்சேன்.."
"ம்..நானும் பாக்கத்தானே போறேன் எந்த பொண்ணு உன்னை கட்டிக்கிட்டு முழிக்கப் போகுதுன்னு.."
அவள் பிறந்த நாள் பரிசாக மெட்டி பரிசளித்திருந்தேன்.
"என்ன ஒண்ணு தானிருக்கு..இன்னொன்னு எங்கே.."
"அதான் இது.."
"என்ன ஜோக்கா..உதை வேணுமா.."
"இல்ல ஒண்ணு எங்கிட்ட இருக்கு..நீ தான் சமயுரிமை பேசுற பெண் போராளி ஆச்சே..அதான் ஒண்ணு என் செயின்ல டாலரா தொங்குது.."
"கால்ல போட முடியாதே.."
"மோதிரமாக போட்டுக்கோ.."
எத்தனை நாள் மறைத்திருந்தாளோ தெரியவில்லை.அவள் வீட்டில் எப்படியோ பார்த்திருக்கிறார்கள். அவன் தான் வேணும் என்று அவள் சுயேட்சையாக நின்று டெபாஸிட் இழந்திருந்தாள். வீட்டில் யாருமே பேசாமல் மௌனமாக போராட்டம் தொடங்கியிருக்கிறார்கள். அமைதி போரின் முடிவில் அவள் தற்கொலைக்கு முயன்றிருந்தாள்.கடைசி செமஸ்டர் என்பதால் வெளியே யாருக்கும் தெரியவில்லை. நான் பயந்து போய் எங்காவது பதுங்கியிருந்தால் அது வெளியே தெரிந்திருக்கும். குற்றப் பத்திரிக்கையின் பக்கங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருந்திருக்கும்.
இயல்பாக இருக்க முயற்சித்து கொண்டிருந்தேன். நடிக்க முடியாமல் உள்ளுக்குள் நொறுங்கி கிடந்தேன். இதோடு ஒரு முடிவிற்கு கொண்டு விட வேண்டும். வீட்டிற்கு நேராக போய் பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினாள்.
வாசலிலே அவ சின்ன வயது ஆதர்ஷம் என்னை எதிர்ப்பார்த்து இருப்பது போல தெரிந்தது.
"நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.."
"நானும்.."
"யாருக்கோ உங்க பொண்ணைக் கட்டிக் கொடுக்கப் போறீங்க..ஏன் எனக்கு தந்தா என்ன.. நான் நல்லா பாத்துப்பேன்.."
"முடிச்சிட்டியா..அடி வாங்குறதுக்கு முன்னாடி போயிரு.."
"நீங்க அடிச்சாலும் பரவாயில்லை.. எனக்கு அவ வேணும்.."
"உன்ன அவ கூட பாத்த முத நாளே அடிச்சிருப்பேன்..அடிக்கல காரணம் அவ கண்ல நீ தெரிஞ்ச.. உன்ன அடிச்சிருந்தா நீ வேணும்னு சூசைட் செஞ்சி என்னை மிரட்டியிருக்க மாட்டா..உன் கூட வந்திருப்பா.."
என்ன செய்வது என்றே தெரியவில்லை. கொஞ்சம் புத்திசாலித்தனமான அப்பனாக இருக்கிறான்.அவ கிட்ட பழகும் போது இந்த ஆளை எடை போடாமல் விட்டது தப்பாய் போய் விட்டது.
கையில் வெட்டுக்காயத்தை மறைக்க கை உடைந்தது போல கட்டுப் போட்டிருந்தாள். எல்லோரும் கேட்டதற்கு ஓடும் ரயிலில் இருந்து விழுந்து விட்டேன் என்று சொல்கிறாள். உங்க அப்பன் தான் அந்த ரயில் என்று கத்த வேண்டும் போலிருந்தது.
"எப்படியிருக்க.."
"ம்..உயிரோடு தானிருக்கேன்.."
"என் மேல என்ன கோபம்.."
"ஒரு தடவையாவது என்ன பாக்க வரணும்னு தோணலையா..நான் இருக்கேன்னா செத்துட்டேன்னா கூட தெரியாம இப்போ வந்து கேக்குற.."
"நான் வந்தேன்..உங்க வீட்ல தான் விடல.."
"அப்ப எங்க அப்பா சொல்றது பொய்னு சொல்லுவ போல.."
"ஆமா உங்க அப்பா சொல்றது தான் உண்மை..நான் சொல்றது பொய்..போ போய் உங்க அப்பா பார்த்து வச்சிருக்கிறவனைப் போய் கல்யாணம் பண்ணிக்கோ.."
"தேர் யூ ஆர்..உனக்காக போய் சூசைட்..ச்சீய்..நல்லவேளை நான் சாகல.."
"செத்து தொல..நானாவது நிம்மதியாயிருப்பேன்.." கோபத்தில் வார்த்தை வந்து விட்டது."ஸாரி.." சொல்லி சமாதானப்படுத்தலாம் என்பதற்குள் மொத்தமாக போயிருந்தாள். மெட்டியை என் ஜூனியர் ஒருவனிடம் கொடுத்து என்னிடம் கொடுக்க சொல்லியிருக்கிறாள். அதற்கு முன்பே நான் செயினில் இருந்து வெட்டி எறிந்திருந்தேன்.
"இனி என் வீட்டில் எப்போவுமே ஆண் வாசனை தான் அடிக்கும்னு போய் அவ கிட்ட சொல்லு.." என்று சொல்லியிருந்தாலும் அந்த வாசனை இன்னும் வீட்டிலிருப்பதாக நினைத்து நச்சரித்து வேறு இடத்திற்கு குடி போயிருந்தோம். இருந்தாலும் மழை நாளில் அந்த வாசனை இன்னும் நிரடுகிறது. கனவில் எத்தனை குழந்தை வேண்டுமென கேட்கிறாள். பதில் சொல்வதற்குள் முழிப்பு வந்து விட்டது.வெளியே விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது.
கண்ணீர் துளிகளைத் தந்தது யார்..
பூக்கள் தானே யாசித்தோம்..
கூழாங்கற்களை எறிந்தது யார் யார்..
2 comments:
ம்
ம்
Post a Comment